Poem
April 26, 2026
மூன்று முக்கிய கொலைகள்
SHARE

விற்று தீர்ந்த முத்தங்கள்
முடியாமல் படுத்து கிடக்கிறேன்.
முத்தம் கேட்டு வந்தவன்
விற்றுத் தீர்ந்த முத்தங்கள் என
என் கதையை கவிதையாக்கி கொண்டிருக்கிறான்.
யாருமற்றிருந்தேன்.
விற்கவும் வாங்கவும் ஒன்றுமில்லை.
பசி.
எதை விற்று எதை வாங்குவதென யோசித்தேன்.
தொடையிடுக்கிலும்
தொடப் பருக்கும் முலைக் காம்பிலும் தான்
கற்பிருப்பதாக எனக்கு கற்பிக்க பட்டிருந்தது.
நானும் அதை நம்பினேன்.
பெண் உதடு மிக மிருதுவானது.
என் உதடு பெண் உதடு.
உதட்டை விற்றேன்.
முத்தங்களை சந்தை படுத்தினேன்.
முத்தமிடும்
இடத்தை பொருத்து
பணத்தை வாங்கினேன்.
சிலர் கன்னம்
சிலர் உதடு
சிலர் கால்
சிலர் தொடை
சிலர் கை விரல்
சிலர் நெற்றி
சிலர் அடி வயிறு
சிலர் குறி.
அவ்வப்போது
முத்தம் கேட்டு பெண்களும் வருவதுண்டு.
கணவரின் நாக்கு நீளம் போதாமையால்
நாய் வளர்க்கிறார்கள்.
நாய் நாக்கு வத வதவென எச்சிலை ஒழுக்குவதால்
என்னிடம் வருகிறார்கள்.
நாய் வளர்க்க நன்றியுணர்ச்சி மட்டுமல்ல
அதன் நாக்கு நீளமும் ஒரு காரணம் என்பதை
அப்போது தெரிந்து கொண்டேன்.
இப்படியாக
முத்த விற்பனை
முதலில் மந்தமாய் இருந்து
பின் அமோகமாய் போனது.
பின்பொரு நாளில்
என்னிந்த நாளைக்கு முன்பொரு நாளில்
என்னோடு என் முத்த விற்பனையும் படுத்து கொண்டது.
எனக்கும் அதற்கும் வேறொன்றுமில்லை
வாய் வழி உறவால் வருகிற
பால் வினை நோய்.
முத்தங்கள் தீர்ந்து போயின.
மீண்டும் நோயோடு சேர்ந்து
என்னில் பசி ஆட்சி.
அவ்வளவு தான்.
கடைசியாய்
புண் பட்ட என் வாயிலிருந்து வந்த
சீழ் ஒழுகும் வார்த்தைகளை
சீர் படுத்தி
கவிதையாக்கிய இவனுக்கும்
இதை வாசிக்கப் போகிற உங்களுக்கும்
என் முத்தங்கள்.
பயப்பட வேண்டாம்.
இது எழுத்து முத்தம்.
அவளும் பூனாத்தியும்
அந்த வீட்டில்
இந்த இருவர் மட்டும் தான்
இருந்தார்கள்.
அந்த பூனாத்தியின் மேல்
அவளுக்கு அரக்க பிரியம்.
அவள் மீது
அந்த பூனைக்கு
புலியின் கோபம்.
அதை பார்க்கும் போதெல்லாம்
ஒரு நாய் தன் குட்டியை கவ்விச் செல்வதை போல்
லாவகமாய் கழுதை பிடித்துயர்த்துவாள்.
மீசை முடிகளை
இருகை விரல்களாலும்
இறுக பற்றி இழுப்பாள்.
மீயாவ் மீயாவ் என்றலறவிட்டு
முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுவாள்.
வெறியேறிய பூனை
அவள் வெளிறிய மூகக்கை
வெறிக்க வெறிக்க கடிக்கும்.
அவளுக்கு வலிக்காது.
அவளை பார்த்தாலே
பூனை துரத்தும் எலியென
புயல் வேகத்தில் ஓடும்
அந்த பூனை.
எப்படியேனும் அவளிடமிருந்து
தப்ப முயன்று
தப்பு செய்ததை போல் மாட்டிக் கொள்ளும்.
மாட்டி கொண்ட பூனையின்
வாலை நீவி விட்டு
முன்னங் கால்களை பிடித்து
நடனமாட்டுவாள்.
அதன் கால் நகங்களுக்கு
வண்ணப் பூச்சிடுவாள்.
அவள் அலங்காரம் செய்யும் போதெல்லாம்
அதற்கும் அலங்காரம் செய்து
அழகு பார்ப்பாள்.
ஈரமாயிருக்கும் அதன் மூக்கோடு
மூக்கு வைத்து
முட்டி விளையாடுவாள்.
பாவமாய் தான் இருக்கும்.
அவள் பாசப் பைத்தியம்.
உறங்கும் போது கூட
மார் மீது கிடத்தியே உறங்குவாள்.
ரத்தம் வழிய
அது செய்யும்
நகக் கீறலில்
கிறு கிறுத்து போவாள்.
இன்றும்
மார் மீது உறங்க ஏறிய பூனை
ரத்த வெள்ளத்தில் உறங்கி கிடந்த அவளை ரணப்படுத்தி
மேலும் ரத்தம் காயம் செய்கிறது.
கோபமாகவே இருக்கும்
அந்த பூனையிடத்தில்
இப்போது அன்பு இருந்தது
ஆனால் அவளிடத்தில் அசைவோ
எந்த வித எதிர் வினையோ இல்லை.
அழத் தெரியாத அந்த பூனைக்கு
அவளை காயம் செய்வதை தவிர
வேறு வழி தெரியவில்லை.
பாவம்
இத்தனை நாள் அவளோடு
இருந்த அந்த பூனைக்கு தெரியாதா ஒன்று
இரண்டு நாள் முந்தி
அந்த வீட்டை கடந்து போன சில
ஆண்களுக்கு தெரிந்திருக்கிறது
அவள் பெண் என்று.
கைப்பட்டமால் கசங்கிய பூ
என் முன்னழகும் பின்னழகுமாய்
வயசும் அழகும்
எதிரெதிரே ஓடின.
வயசு கூட கூட
அழகு குறைந்தோடியது.
வரன் தேடி வருவோரெல்லாம்
வாய் நிறைய
குறைகளை சுமந்து வந்தனர்.
சிரிப்பு அழகென்றவன்
சிறிய மூக்கென்றான்
கரு உதடு ரசித்தவன்
கண்ணில் உயிரில் லை என்றான்.
கன்னக்குழியில் விழுந்தவன்
கர கரப்பான குரலென்றான்.
சங்கு கழுத்து பிடித்ததென்றவன்
சற்று பெருத்த உடம்பென்றான்.
காலுக்கு கீழாடும் கூந்தல் கட்டி இழுத்ததென்றவன்
காதோரம் சிறு நரை என்றான்.
முழுதும் பிடித்து போனவன்
இவ்வளவு அழகிருந்தும்
இன்னும் உன் கல்யாணம்
இழுபறியாய் இருப்பதேன்?
பெண் மையில் ஊனமோ என
உயிர் சுட்டான்.
பத்து பவுன் நகைக்கு
பல்லை இழித்து கொண்டு
பேசாமல் சம்மதித்தவன்
பெண்ணுக்கு செவ்வாதோஷம் என
பெருஓட்டம் எடுத்து விட்டான்.
இப்படி வருவோர் போவோர்க்கெல்லாம்
காட்சி பொருள் போல
கால நதிக்கரையில்
கண்ணாளன் வருவானென
கன்னி நான்-இல்லை
முதிர்ந்த கன்னி நான்
முந்தானை ஏந்தி நின்றேன்.
கண்ணாளன்
வரும் வழியும் தெரியவில்லை.
நான் கன்னி கழிய
ஒரு வழியும் தெரியவில்லை.
கட்டாயமாக எவனேனும்
கற்பழிக்க முயன்றால்
சம்பிரத்தாயத்துக்கு சற்று முரண்டு பிடித்தாலும்
நிச்சயம் சம்மதித்து விடுவேன்.
உணர்ச்சிக்கு வசப்பட்ட
உயர்திணை சாதியில் பிறந்தவள்
எனக்கும் உணர்விருக்காதா? என்ன.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...