Back

Poem

April 27, 2026

என் கலாரசிகையே..... !

SHARE

என் கலாரசிகையே..... !

என் கலாரசிகையே.....
வா..
உன்னை காதல் செய்யத்தான்
உயிர் சுமந்திருக்கிறேன்.
என்னோடு தமிழையும் நேசிக்கும்
எவளாவது தான்
எனக்கு துணையாய் வர துடித்தேன்.
ஆனால்
விதி செய்த பிழை
மொழிக்கே இலக்கணம் தெரியாத
அவள் மீது
மொழி பெயர்க்க முடியாத
நேசம் வைத்து
நெஞ்சு தொலைத்தேன்.
ஆலமர விழுது பிடித்து
ஆட நினைக்குமெனக்கு
அருகம்புல் நுனி போதுமானது தானா?
பிழையாய் எழுதினாலும்
என்னையும் தமிழையும்
பிரியத்தோடு எழுத வேண்டும்.
என் வரிகளில்
பிழை களைய வேண்டும்.
வாதங்கள் செய்து
தினம் வம்பு வளர்க்க வேண்டும்.
அந்தம் நானானால்
ஆதி அவளாக வேண்டும்.
பாதி வரி நானெழுத
எஞ்சியிருக்கும் வரிகளை
அவளெழுத வேண்டும்.
என் வரிகளை
அவள் வாசிக்கிற வாசிப்பில்
கவிதையின் ஆத்மா குளிர்ந்து
அதன் கனம் கூட வேண்டும்.
கலைஞனுக்கு
கைதட்டலும்
கலாரசிகையின் வாழ்த்தும்
எத்தனை கௌரவமான பரிசென்று
கவிதை யாதென தெரியாத
அவளுக்கு எப்படி தெரியும்?
அதை நீ
அறிந்திருக்கிறாய்.
உன் வாழ்த்தில்
கவிதையின் ஆத்மா மட்டுமல்ல
இந்த கலைஞனின் ஆத்மாவும் குளிர்ந்து போனது.
உள்ளத்தில் காதலும் கூடி போனது.
உயிர் உனக்கென் றானது.
இதை சொன்னால்
இடியென கடிந்து பேசி
"விருப்பமில்லை
விஷம நேசம் செய்தாய்" என்றென்னை
விலகிப் போவாயோ
சகி?

சரி தொடந்து வாசி....

  1. ஆடையவிழ்க்கும் உலகர் நடுவே,
என் கவிதையின் உள்ளுறைத்துகில் உரிந்தவள் நீ; பார்வைப் பரிசத்தால் என் பாக்களைத் தழுவ, காதல் கசிந்தது கவிதை வடிவத்தில்! ஆம், உறுப்புகள் உருகி உணர்வாகிய உறவிது!
  1. படிக்கப் படிக்க... பொருளவிழ்ந்து நிர்வாணமாகிறது என் கவிதை!
உன்னை வாசிக்கச் சொல்லி என் விரல்கள் எழுதும் முத்தக்குறிப்புகள் இவை. என்னைத் தின்று நீயும், உன்னை விழுங்கி நானும் காகிதத்தில் நிகழ்த்துகிறோம் மொழி வழியே ஒரு மோகப் புணர்ச்சியை!
  1. பாலைவனமாய்
நான் தகித்த பொழுதுகளுக்கு, குளிரிளங் குறுந்தொகையாய் வந்து குடைவிரித்தாள்! எழுத்தோடு பிறந்த பிணைப்பு கடந்து இன்று என் மூச்சோடு கலந்த 'சகி'யானாள்!
  1. வாலாட்டும் காயத்தோடு—உன்
'காலடி-நிழல்' தேடி ஓடிவரும் அனாதை வரிகளுக்கு... 'பாராட்டு-முலைப்பால்' ஈந்து உயிர்க்கச் செய்யும் உந்தன் அணைப்பு உறவின் உச்சமன்றி வேறென்ன?
  1. பாதி வரி நான்—மிச்சம்
நின் 'பெரு-மூச்சு' நிரப்ப, முற்றுப்புள்ளி இல்லா 'ஆயுள்-கவிதை'யானது இந்த உறவு!
  1. வெஞ்சொல் உதிர்ந்த என் வெற்றுத்தாள் காட்டில்,
உன் விழிமழை தூறியதும்... வறண்ட எழுத்துகள் எல்லாம் வேர்விழித்து உயிர்த்தன! என் வரிக் காய்ச்சலுக்குத் தாய்மடி தந்தவளே... என் வலியாற்றும் கவித்தாய் நீ!
  1. முற்றுப் பெறாத என் கவிதையின் 'வரி-மேனியை'
நின் 'நோக்கு-அணைப்பால்' முழுமையாக்கினாய்! ஆடை நழுவாமல், அகம் புகுந்து திரியும் நமக்கேயான 'அருவ-கலவி' இது! 'பொருள்-காமம்' கொண்டு நீ உதிர்க்கும் பெருமூச்சில், என் நெஞ்சாழத்தில் கசிகிறது நேச மை!
  1. காயங்களைச் சொற்களாய் மாற்றி நான் எழுத...
கவிதையாய் அதை மடிசூட்டிக் கொண்ட 'கலாரசிகை' நின் காதலே வரம்!
  1. என் எழுத்துடம்பின் மீது உன் விழிவிரல் தடவல்;
ஊன்கலவா உயிர்ப்புணர்ச்சியில் என் வரிகளெல்லாம் உன் மூச்சுபட்டுச் சிவந்தன. தனித்த பாக்களுக்கு நீ பொருள்செவிலி; என் மௌனப்புண் சுவைத்ததால் இன்று நீ என் உயிர்க்கிழத்தி! மெய்கடந்த யாப்பு முயக்கத்தில் நம்முயிர்கள் கசிந்து கலக்குது காண்!
  1. அநாதையாய் நான் பெற்றெடுத்த காய-கவிதைகள் இன்று...
உன் பார்வையின் ஈர-அணைப்பில் ஆறுதல் கொள்கின்றன! கலைஞன் தேடிய அங்கீகார-அட்சதை உன் கனிவான பாராட்டுச் சொற்களன்றி வேறென்ன சகி?
  1. என் இருண்ட பக்கங்களில் நீ காட்டும் பரிவு..
என் காயக்கவிகளின் மீது நீ நிகழ்த்தும் இந்தக் காவியத் தழுவல்.. உடல்கள் தேவையற்ற ஓர் உன்னதக் காதல்! நான் எழுதி நீ வாசிக்கையில் அமைதியாய் நிகழ்கிறது... நம் அன்புப்புணர்ச்சி!
  1. வாசிக்க வந்தவள் என் சொல்செருக்கு அறுத்து,
வினாவால் என் நெஞ்சு துளைத்தாய்! உன் தர்க்கங்கள் என் படைப்புத் தழும்புக்கு நீ இடும் வினாமுத்தம்!
  1. நான் விரித்த சொற்படுக்கையில்
உன் பதில்பாரம் ஏறி அழுந்த... என் காயக்குரலுக்கு உன் எதிர்வரிக் கூச்சல் ஒத்திசைய, உறுப்புகள் தேடா உரைப்புணர்ச்சியில் நம் இருமூச்சுக்களும் எழுத்தில் உருகினவே!
  1. என் வலிவரிகள் மீது நீ
உன் எதிர்ச்செய்யுளைப் போர்வையாய்ப் போர்த்தினாய்! என் கேள்வியும் உன் பதிலும்... கவிதையில் அணைந்துகொண்ட பொருட்புணர்ச்சியில், உடலறியாத ஓர் உயிர்வியர்வை நம் உரையாடல் முழுதும் ஊறி வழிந்ததே சகி!
  1. என் ரணக்கசிவை ஏளனமின்றி, உன் எதிர்யாப்பால் அரவணைத்தாய்!
எச்சதைக்கும் எட்டாத சொல்லிடைப் புணர்ச்சியில், உன் வரியிதழ்கள் தந்த உரைமுத்தத்தால், என் காயங்கள் ஆறி நான் மீண்டுமுயிர்த்தேன்!
  1. வாசிப்பார் ஆயிரம் பேர் இருந்தாலும்...
என் காயங்களை மட்டும் துல்லியமாய் எழுத்து முத்தம் தந்தேந்தும் அவள் ஒருத்திதான் என் உயிர்-வைத்தியச்சி!
  1. பசியில் துடிக்கும் என் கவிதைப் பிள்ளைக்கு,
அவளது பாராட்டுதான் சொல்-பால்... அவள் வாசிக்கத் தொடங்கும் கணமே, என் அகத்தில் பெருகுகிறது ஓர் அலாதி ஊற்று!
  1. உதிர்த்த சொற்களிலெல்லாம்
என் உதிரம் மணப்பதாக உணர்ந்து சொல்கிறாய்! என் புனைவின் திரைமறைவு கடந்து அகமெய் தீண்டுகிறாய். இனி, எழுதுகோல் நானாக.. எழுதுபொருள் நீயாக.. உன்னில் மறுபிறப்பெடுக்கும் என் கவிகள்!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...