Short story
July 8, 2021
வெறுமனே ஒரு காதல் கதை.
SHARE

வெறுமனே ஒரு காதல் கதை.
எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதுவும் இந்த அதிகாலையில் இவ்வளவு பயமும் பதட்டமும் ஏன் என்று தெரியவில்லை. அதுவும் காலை 5 மணிக்கே. கொடுமை. நான் ஏன் இத்தனை
மென்மையாக இருக்கிறேன் என்பது புரிபடவே இல்லை. கழுத்தறுபட்டவனின் காலாக இதயம் ஏன் இத்தனை வேகமாக துடித்துத் தொலைக்கிறதோ. நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கிறது. காலம் ஏன் இத்தனை வேகமாய் ஓடுகிறது.
அதற்குள் மணி ஏழாகி, ஏழுக்கே வெயில் இப்படி சுள்ளென்று அடிக்கிறதே.
இதை எல்லாம் யோசித்தபடியே எழுந்து பல் தேய்த்து குளித்து தயாராகிக் கொண்டிருந்தான். ஆனால் எது செய்த போதும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மட்டும் மனதை ஏதோ செய்து கொண்டே இருந்தது. இப்போது பேருந்தில்
போய் கொண்டிருக்கிற போதும் அதே பயம் தான்.
வெளியிலும் உள்ளும் ஒரே இரைச்சல். எக்கச்சக்கமான பயம் பதட்டம். வாழ்க்கையில் ஒரு நாளும் இத்தனைப் பதட்டத்தை உணர்ந்ததே இல்லை அவன். இப்படி நினைக்கும் போதே எதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயம்
அவனைத் தொற்றிக் கொண்டது.
" வெற்றி வேல் வீர வேல் வீர வேல் வெற்றி வேல்" என்று வேலும் கூச்சலுமாய் போய் கொண்டிருந்தது ஒருக்கூட்டம்.
இன்னும் இப்படியான முட்டாள்கூட்டம் இருக்கத் தானே செய்கிறது. டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து எங்கெங்கோ போய் விண் துளைத்து மண் துளைத்து போய் கொண்டிருக்கிற இந்த நூற்றாண்டிலும் கடவுளை நம்பிக் கோசம்
போய்டுக் கொண்டு போகிறவர்களை பார்த்ததும் அவனுக்கு சிரிப்பாக வந்தது. இது போன்ற அறியாமையால் இன்னும் எவ்வளவு சிரழியப் போகிறதோ இந்த நாடு என்று பாவப்பட்டான். இப்போது இதயத்தின் துடிப்பு
மட்டுப்பட்டிருந்தது.
அப்படியே பேருந்துக்குள் பார்வையைத் திருப்பினால் வித விதமாய் ரக ரகமாய் உடையணிந்த சீமாட்டிகள். எல்லாம் கல்லூரிக்கும் வேலைக்கும் போய் கொண்டிருக்கிற கலாப மயில்கள். சேலையும்ம் சுடிதாரும் டீ
சர்ட்டும் அணிந்த மென்மையான - திருமூலர் பானியில் சொன்னால் - காற்றுப் பைகள். அதற்குத் தான் எத்தனை விதமான அலங்காரங்கள். இருக்கட்டும்.
கால் வலித்தது. அவனைத் தவிர அந்தப்பேருந்தில் யாரும் நின்று கொண்டிருக்கவில்லை. சற்று முன் கடந்த KIT கல்லூரி நிறுத்தத்தில் நிறைய பேர் இறங்கி விட்டதில், இவ்வளவு நேரம் நெரிசலாய் இருந்த பேருந்தில்
இப்போது கூட்டம் குறைந்திருந்தது. உட்காரலாம் என்று பார்த்தால் எல்லா இருக்கையிலும் ஆள் இருந்தது. கண்களைச் சுழற்றித் துழாவியதில் ஒரு காலி இருக்கை அகப்பட்டது. ஆனால் அதன் பக்கத்து இருக்கையில் ஒரு
பெண் இருந்தாள்.
முதலில் உட்காரலாமா வேண்டாமா தயங்கினான். பிறகு, அந்தப் பெண் அவன் நிற்பதைப் பார்த்து விட்டு அவனுக்கு இடம் விட்டு கொஞ்சம் நகர்ந்தொடுங்கி அமரவும், இவன் தயக்கம் நீங்கி உட்கார்ந்து கொண்டான். இப்போது
கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான் மணி 7.47 என்று காட்டியது. உடனே நொடிக்கு நொடி இடம் மாறும் கடிகார முள்ளாய் உலகம் தான் எத்தனை வேகமாய் மாறிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தபடி,
பக்கத்து இருக்கையில் இருந்தப் பெண்ணைப் பார்த்தான்.
அவள், போதும் என்று சொல்கிற அளவு அழகா இருந்தாள். கூந்தலை முடியாமல் சுதந்திரமாக விட்டிருந்தாள். ஜன்னல் காற்றுக்கு அது எழும்பி எழும்பி இவன் மீது மோதி விளையாடியது. இவனுக்கு உடலெல்லாம் ஒரு போல
கூசியது. முகத்தில் பூச்சு எதுவும் இல்லை. உதட்டுக்கு மட்டும் கொஞ்சமாய் சாயம் போட்டு இருந்தாள். வெளியில் இருந்து வரும் உஷ்ணக் காற்றுக்கு உதடு அடிக்கடி உலர்ந்து கொண்டே இருந்ததால் அவள் அடிக்கடி
உள் மடித்து உதட்டை ஈரம் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளை வண்ண டீசர்ட்டில், சரியாக மார்பின் மேலே life is beautiful என்ற வாசகம் எழுதி இருந்து. அந்த வாசகத்தை அதுவும் அந்த இடத்தில்
அந்த நேரத்தில் படித்ததும் அவனுக்கு வாழ்க்கை ரொம்பவே beautiful ஆக தெரிந்தது. இப்போது அவள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள். அவன் தன்னைக் கவனிப்பது தெரிந்து, வாய்க்குள் தண்ணீரை உப்பிய படி,
பாட்டிலை நீட்டி தண்ணீர் வேண்டுமா என்பது போல் கேட்க, இவன் வேண்டாம் என்பது போல் தலையாட்டினான். பாட்டிலின் கழுத்தைத் திருகி பேக்கில் போட்டாள்.
" என்ன முழுங்குற மாதிரி பார்க்கறீங்க"
இவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. வார்த்தைகளை மென்று விழுங்கியபடி "ஒன்னும் இல்ல" என்று எச்சிலை விழுங்கினான். லேசாக சிரித்தபடி
" என் பேரு சுலோச்சனா, உங்க பேரு" என்று கை நீட்டினாள். இவனும் பதிலுக்கு கை நீட்டி, கை குலுக்கி "என் பேரு ராஜேஷ். நீங்க அழகா இருக்கிங்க" என்று பதிலூடே அவள் அழகை துதி
பாடினான். அவள் உள்ளங்கை உஷ்ணம் இவன் கையோடு பரவியது. இதமாக இருந்தது. காதலிக்கலாமா என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான், இவனுக்கு உண்மை பிடிபட தொடங்கியது. இவன் இறங்க வேண்டிய
நிறுத்தத்தைக் கடந்து போய் கொண்டிருந்தது பேருந்து. மீண்டும் பழைய பதட்டம் அவன் கைகளில் பரவியது. அவள் அதைக் கண்டு கொண்டு விட்டாள். கைகள் விடுபட்டது.
"என்ன பதட்டமாக இருக்கீங்க"
தாடி மீசை மழித்த முகத்தில் வேர்வை வழிந்து ஊற்றியது.
" இல்ல.. இறங்க வேண்டிய இடம் தாண்டி போச்சு"
"எது மணிக்கூண்டு தானே. பரவாயில்ல பதறாதீங்க. இதோ அடுத்த ஸ்டாப்ல இறங்கி போய்க்கலாம். நானும் அங்க தான் இறங்க போறேன். அங்க இருந்து கொஞ்சம் தூரம் நான் நடந்தே போய்டலாம்" என புன்னகை ஆறுதல்
சொன்னாள்.
நிறுத்தம் வந்தது. இருவரும் இறங்கி நடந்தார்கள்.பரஸ்பரம் விடை பெற்று பிரிந்தார்கள். இவன் பதட்டத்தோடு வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவள் கைகளை கட்டி காத்து நின்று கொண்டிருந்தாள். கூடவே,
கொஞ்சம் உக்கிரமாக இருந்தாள். கடிகாரத்தைப் பார்த்தான். அது 8.45 என்றது. மன்னிப்பு கோரும் பாவனையில் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு நடந்தான். வழக்கமாக சந்திக்கிற இடத்திற்கு காப்பி ஷாப்பிற்கு
வந்து சேர்ந்தார்கள்.
காத்திருந்த உஷ்ணத்தோடே
"சொல்லுங்க ராஜேஷ்" என்றாள்.
அதற்குள் ஒரு பையன் வந்து
"என்ன க்கா வேண்டும்" என்று குறுக்கிட்டு நின்றான். அவள் இவனைப் பார்க்க இவன் ரெண்டு காபி என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு இவள் பக்கம் திரும்பினான்.
"ம்ம்ம் சொல்லுங்க ராஜேஷ். அதான் எல்லாம் முடிஞ்சுடுச்சு னு சொன்னேன் ல பிறகு எதுக்கு கடைசியா ஒரே ஒரு முறை சந்திக்கனும் னு சொன்னிங்க. இப்போ என்னடானா எதும் பேசாம உட்கார்ந்து இருக்கீங்க? ஆமா
எனக்கு ஒரு சந்தேகம் உங்க டிக்ஷனரில பன்சுவாலிட்ங்கற வார்த்தையே கிடையாதா? " என்று கோபத்தை சொற்களின் வழியாக இறக்கிக் கொண்டிந்தாள். .
"மன்னிச்சுகோ மோனிஷா. கவனிக்காம அடுத்த ஸ்டாப்ல இறங்கி நடந்து வந்தேன். அதான் லேட்டு"
"நீங்க எத தான் கவனிச்சு இருக்கீங்க எதுலயும் ஒரு அலட்சியம். கேலி கிண்டல். சரி எதுக்கு வரச் சொன்னீங்க அத சொல்லுங்க "
அவள் தேவைக்கும் அதிகமாகவே மரியாதையை பிரயோகித்தாள்.
" எதுக்கு இப்போ ங்க போட்டு பேசற. நெஜமாவே எல்லாம் முடிஞ்சிடுச்சா மோனிஷா. நான் தான் இனி அப்படி எதும் பண்ண மாட்டேன் ன்றேன் ல " என்று அவளின் கையைப்பிடித்தான்.
பேச்சுவாக்கிலேயே கையை விடுவித்துக் கொண்டு
" இனி என்ன இனி.? இதுவரை பட்டதே போதும் ராஜேஷ். இத்தனை நாளா உங்க டார்ச்சர எப்படி பொறுத்துக்கிட்டு இருந்தேன் னு நினைச்சா ஆச்சரியமா இருக்கு. நீங்க யாருக்காகவும்"
அதே பழைய பையன் வந்து இடை மறித்து காபியை வைத்து விட்டு போனான். காபியை விடவும் சூடாக இருந்தாள் மோனிஷா. துண்டித்த பேச்சு தொடர்ந்தது.
"நீங்க யாருக்காவும் எதையும் மாத்திக்க வேண்டாம். "
காபி ஆவியோடிக் கொண்டிருந்தது.
"என் நேரத்த வீணாக்கினத போல இந்தக் காபியை யும் வீணாக்காதீங்க. குடிச்சு கிட்டே பேசுங்க ராஜேஷ்."
அவள் ஆறிக் கொண்டிருந்த காப்பியை ஒரு முழுங்கு பருகி விட்டு வைத்தாள்.
" வார்த்தைகளால குத்தாத மோனிஷா.டார்ச்சர் பண்ணேன்..ன்ற எப்படி இதுலாம் பொறுத்த கிட்டு இருந்தேன் னு தெரியல ன்ற.. அப்போ என் கூட இருந்தா எல்லா நேரங்கள்லயும் அப்படி தானே இருந்திருப்ப.? பிடிக்காம
கஷ்டபட்டு இஷ்டம் இல்லாம? ஆனா நான் அப்படி இல்ல என் கஷ்ட நேரங்கள் ல உன்ன தான் தேடி வந்திருக்கேன்.. "
" எது நீங்க தேடி வந்திங்களா? ராஜேஷ் நான் எப்போதும் உங்க கைக்கெட்டும் தூரத்திலேயே உங்களயே தான் சுத்தி வந்தி கிட்டு இருந்தேன். தேடி வந்தேன் னு அபத்தமா சொல்லாதீங்க"
" ம்ம் ஆமா எப்போதும் என் கூடவே இருந்த. உனக்கு பிடிச்சு பண்ணியோ.. பிடிக்காம பண்ணியோ தெரில.. ஒவ்வொன்னையும் எனக்குனு பார்த்து பாத்து பண்ணி என்னோட முழு கவனத்தையும் உன் மேல குவிச்சிட்ட.. அதனால
தன்னியல்பாவே உன் மேல possessiveness வந்துடுச்சு. உன் மேல ரொம்ப ரொம்ப possessive ஆ இருந்தேன்.. நீ எனக்கே எனக்கான எனக்கு னு நெனைச்சேன்.. நீயும் அப்படி நெனைச்சதுல தப்பு இல்ல ஆனால் நான் மாற
கொஞ்சம் டைம் தேவைப்படும் இல்ல.. ஏன் நான் வாழ நெனைச்ச வாழ்க்கைக்கு எதிரா மாற டைம் தேவைப்படும் இல்ல? "
" ஹையோ ராஜேஷ். நீங்க மாறல ன்றது பிரச்சனை இல்ல. எனக்கான அடிப்படை சுதந்திரம் கூட இல்ல. ஒரு mutuality இல்ல. எல்லாம் உங்களுக்காக மட்டுமா தானே இருந்தது. நடந்தது. போதும் ராஜேஷ். இத இத்தோட
முடிச்சுக்கலாம். இதுக்கு மேல தொடர்ந்தா ரெண்டு பேருக்குமே கஷடம். புரிஞ்சுகோங்க. "
என்று குடித்து முடித்த காலி கோப்பை கீழே வைத்து விட்டு கிளம்புவதற்கு ஆயத்தமாக எழுந்தாள். அவனுடைய காபி பாதி அப்படியே இருந்தது. கைகள் பட படத்தது. அவளின் கைகளை பிடிக்க நீண்ட தன் கைகளை
சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தினான்.
" மோனிஷா. தயவு செஞ்சு புரிஞ்சுகோ.. நான் உன்ன வா னு சொல்லி ப்போ பேசல.. Just i wanna expose my love. That's it... கொஞ்ச நேரம் பேசிட்டு போய்டுவேன். உட்காரேன்" என்று அழாத குறையாக
கெஞ்சினான்.
யாரேனும் பார்க்கிறார்களா என்று அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் பார்க்க வில்லை. எல்லோரும் அவரவர் அலுவலிலும் தேநீர் மற்றும் காபி கோப்பைகளிலும் மூழ்கிப் போயிருந்தார்கள். சரி என்று
உட்கார்ந்தாள்.
" ரொம்ப நன்றி. நான் யாரையும் control பண்ண மாட்டேன். ஆனா உன் விசயத்துல அப்டி இருக்க தவறிட்டேன்...உன் மேல எக்கச்சக்கமா possessive ஆ இருந்துட்டேன்."
ரெண்டு கண்ணீலும் நீர் கோர்த்தது. அவள் கண்களை கண்ணோடு பார்ப்போம் முற்பட்டான். முடிய வில்லை. அவள் அதற்கு வாய்ப்பும் தரவில்லை. இதயம் எகிறி குதித்தது.
" பரவாயில்ல பதறாதீங்க ... ". ஒரு கணம் பேருந்தில் பார்த்த சுலோச்சனா நினைவில் வந்து போனாள். அவளும், அவள் சுதந்திர முடியும், தாராளமான... மோனிஷா மெல்லமாக செருமினாள். சத்தம் கேட்டு நினைவு
மீண்டான். கண்ணீர் கன்னத்தில் வழிந்துருண்டது. அவள் அதைப் பொருட் படுத்த வில்லை.
"மோனிஷா, Possessiveness வெறுமனே வந்திடாது நாம யார அதுவும்.. நம்ம control ஆ மீறி love பண்றோமோ அவங்க மேல தான் வரும்.. அதான் உன் மேல அதிகமா இருந்தது.. உன்னைய நான் ரொம்ப காதலிச்சேன்.
காதலிக்கிறேன் மோனிஷா. ஐ லவ் யூ. என் காதல வெளிக்காட்ட தெரியாத உன்ன போட்டு கஷ்டப்படுத்திட்டேன். சாரி. நீ பேசின வார்த்தைகள் மனச ரம்பமா அறுத்தது அதான் நேர்ல பார்த்து பேசலாம் னு கூப்டேன். "
அவள் இதை எல்லாம் கேட்டும் கேட்காத படி எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்நாள்.
" . நீ கேட்கற கேட்கல.... இதுலாம் எனக்கு வேணாம்.. எனக்கு உன் கிட்ட சொல்லனும் தோனுச்சு.போதுமான அளவு சொல்லிட்டேன்.. நான் உன்ன டார்ச்சர் பண்ண நெனைச்சு எதையும் பண்ண ல.. என் காதல வெளிக்காட்ட
தெரியாம கஷ்டபடுத்திட்டேன் போல.. ஐ லவ் யூ.. மன்னிச்சுகோ. ரொம்ப ரொம்ப சாரி." என்று முகத்தை துடைத்தான் அவன்.
அவள் புறப்பட ஆயத்தமாக இருந்தாள்.
" ரொம்ப நன்றி ராஜேஷ் "என்று சொல்லி விட்டு புறப்பட்டு போனாள். அவள் மீதிருந்த பர்ஸ்ட் லவ் ஃபர்ப்யூம் வாசனை காற்றில் மிச்சப்பட்டு நாசியை வருடி யது. அவள் போன திசையையே பார்த்துக்
கொண்டிருந்தான். சிரித்த படி வந்து கொண்டிருந்தாள் சுலோச்சனா. அவளோடே வந்து கொண்டிருந்தது ப்யூட்டிபுல்லான லைப்பும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...