Back

Poem

April 25, 2026

வார்த்தைக்கு வாக்கப்பட்டவள்

SHARE

வார்த்தைக்கு வாக்கப்பட்டவள்


எழிலுறு நுதலும் ஒளியுறு விழியும்
பழிப்புறு இதழும் பார்வையில் திமிரும்
பாங்காய் அமைந்த பாவை அவளும்
தாங்கா அழகொடு தனங்களை தாங்கி
தனித்தே நின்ற எனையும் நோக்கி
தனித்தே வந்தாள் தயக்கம் நீக்கி
வெட்கிக் குனிந்து வெளிர் கன்னம்
வெட்சி பூவென வேகமாய் சிவக்க
பட்டென இதழ்கள் பூத்து சொன்னாள்
"மலராய் இருந்தும் மணமொடு இருந்தும்
மாலைக்கு ஆகா தாழை போல
வாலிப மிருந்தும் வயது மிருந்தும்
வாரி சீன இயலாள் நானும்
உந்தன் வார்த்தைக்கு வாக்க படவே
சிந்தை கொண்டேன் சிரிப்பும் கொண்டேன்
மறுப்பு இன்றி மனமும் ஒன்றி
சிறுகவியில் என்னை சிந்தி வைப்பாய்
பாவப்பட்ட ஜீவன் என்னா சையை
கோவம் இன்றி கண்ணே நீயும்
கொஞ்சம் நிறைவேற்றி வைப்பாய் " என்று.
கெஞ்சும் மொழியி லவளெனை கேட்டும்
யோசித்து நின்றேன்! கையேந்தாது காதல்
யாசித்து நின்றாளை யாரோ போல
நாசியில் விரல்வைத்து வியந்து கொண்டேன்
மாசில்லாள் இவளுக்கென்ன மறுமொழி சொல்வதென
மனக்குளம் குழம்பி போனேன்! மறுபடியும்
கணமொன்று யோசித்தேன்! தெளிந்தேன்! சொன்னேன்!

"மூத்தாள் உன்னை நேசித்தல் முறையோ
முத்தான கவிதைவழி முத்தித்தாலும் தவறடி
அத்தான் என்று நீ அழையாவிட்டாலும் நினைப்பாயே
எத்தனை கொடுஞ் செயல் எனைபுரிய சொல்கிறாய்
அன்புடையவளே ஆகாது சேராத காதலா?
என்பின்றி உடலா? எப்படி சாத்தியம்?
பேர்சொல்லும் பிள்ளையாய் பெரியவள் நீயிருக்க
வேறென்ன வேண்டும்! வேய்குழலே வேப்பம் நிழலே!
ஈன்றெடுப்பது மட்டுமல்ல ஈன்று கொடுப்பதும் மகவே!
இன்றே சொல்லடி! இ"ம்ம்"மென சொல்லடி!
ஆயிரத்தில் நாமொன்றாய் இருந்து தினமும்
பாயிரத்தில் பாடி வைப்போம் நம்காதலை."
என்றுரைக்க நின்றிருத்தவள் நின்றபடி உறைந்தாள்!
கண்ணி ரண்டும் கார்முகிலென கரைந்தாள்!
பெரும் அழகுப் பேதை அவளும்
சிறுபிள்ளை போல விம்மினாள் விக்கினாள்
சிணுங்கியும் சினந்தும் ஏதோ விளம்பினாள்!

"மன்மதனே மாருதனே தின்ன ஆகாதவள்
என்னை மணந்து என்ன செய்வாய்?
உண்மையில் சொன்னால், எனக்குநீ நினைக்கும்படி
பெண்ணையில் மட்டுமல்ல உடலிலும் ஊனம்
நன்மைக்கு சொல்கிறேன் நலம் வாழச் சொல்கிறேன்
இன்னமும் பேசி இதயத்தை குழைக்காதே
தங்கமே! தாங்காது தசையாலான நெஞ்சு
பொங்கி வருமாசைகளை பொத்தி வைக்காமல்
போட்டு உடைத்து விட்டேன்! உன்னிடம்
கேட்டுத் தொலைத்து விட்டேன்.! உந்தன்
வார்த்தையில் மட்டுமே வாழ்வுற ஆசை"யென்றழுதாள்.
வீர்ரென விரையும் அம்பென நானும்
பார்வை யொன்றை பாவையவள் மேல்வீசி
"மார்தைக் காதே மாணிக்க பெண்ணே
யார் சொன்னாலும் கேட்கவும் ஏற்கவும் மாட்டேன்!
வார்த்தைக் கொருத்தி வாழ்வுக் கொருத்தியா?
கட்டிலுக் கொருத்தி கவிதைக் கொருத்தியா.?
எட்டிக் கனியாய் கசிக்கிறது எண்ணும் போதே!
என்ன நினைத்தாய் என்னை? அன்று
கண்ணகிக்கு கோவலன் செய்த ததினும்
பெரியதோரு பாவச்செயல் பண்ணச் சொல்கிறாய்
சிறியாரும் ஏசும் பாவியாகச் சொல்கிறாய்.
முடியாதடி என்னினும் மூத்த முத்தே!"யென
வெடித்து விட்டேன் வேதனையில் துடித்துவிட்டேன்.
இதையெல்லாம் கேட்டவள் அவளும் எதையோ யோசித்தாள்! சிரித்தாள்! அழுதாள்!
சட்டென அழுவதை நிறுத்தி என்னையேதோ
கேட்டாள் ! இதயத்தை கிழித்து போட்டாள்.

மலட்டு பட்டம் தந்தென்னை ஊர்வாழ்
கிழட்டுக் கூட்டம் எல்லாம் ஏசுமடா
எனக்கு நீ உனக்கு நான் என்ப தெல்லாம்
எழுதத்தான் முடியும் அன்பே! புரிந்துகொள்!
உன் கவிதைக்கு மட்டும்நான் மனைவி
என்றிருந்து போகிறேன்! இறந்தும் போகிறேன்! "
" அடியேய் எனது இளமையை ஆட்டும்
ஆலங்கொடியே! பிள்ளைக்கா பஞ்சம்! ஊரில்
ஆதர வில்லாமல் அலையும் சிறுசுகள்
அத்தனையும் தத்தெடுத்து பெத்த புள்ளையென
ஒத்தக் குறையும் இல்லாமல் ஊர்மெச்ச
வளர்ப்போம்! வாடி! வாலிபத் தேரே!
புண்ணுக்குள் புணர்வதில் சுமொன்று மில்லை
உன்னன்பில் என்னை புதைத்து கொள்ளடி! "
என்றென் எதிர்மொழி கேட்டவள் ஏதோ
புதிர்கேட்டதை போல் சற்றே விழித்துவிட்டு
அதிர ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...