Back

Letter

October 3, 2025

பைத்தியக்காரன்

SHARE

பைத்தியக்காரன்

எனக்கு,

இந்தக் கடிதம் எழுதும்போது என் விரல்களில் இரத்தம் கொட்டுகிறது—
ஏனெனில் இதைத் தட்டச்சு செய்வதற்கு முன்பு நெஞ்சைக் கிழித்து எடுத்து வைத்திருக்கிறேன். வார்த்தைகள் போதாது என்று தெரியும்
ஆனால் மௌனம் இனி விஷமாகிவிட்டது.

நான் காதலித்தேன்—வரம்பு அறியாமல்
அளவு என்பது எனக்குத் தெரியவில்லை என்று சொல்கிறார்கள்.
அது பொய்—நான் அறிந்தேன்
அறிந்தும் மீறினேன்.

கடலை அள்ளலாம் என்று நினைத்தேன்—வெறுங்கையால்
விண்ணை அணைக்கலாம் என்று நம்பினேன்—வெறும் நெஞ்சால்
சூரியனைக் கையில் வைக்கலாம் என்று கனவு கண்டேன்
இதையெல்லாம் தவறு என்று உலகம் சொன்னது—நான் கேட்கவில்லை

நான் தவறு செய்யவில்லை என்று நம்புகிறேன்
முழு இதயத்தோடு காதலித்தது குற்றமா?
என் உயிரை முழுவதும் கொடுத்தது பாவமா?
மெழுகு குற்றவாளியா, இருளுக்கு தன்னை தீயிட்டதால்?

இல்லை—நான் அப்படி நினைக்கவில்லை

சூரியன் கேட்குமா "எவ்வளவு ஒளி கொடுப்பது?" என்று?
தன் உயிரை எரித்துக் கொடுக்கிறது.

மேகம் கணக்கிடுமா "எங்கே மழை பொழியவேண்டும்?" என்று?
பாலை வனத்திலும் கொட்டுகிறது.

மரம் பேரம் பேசுமா "எத்தனை பழம் கொடுப்பது?" என்று?
வேரில் ஈரம் உள்ள வரை காய்க்கிறது.

பூக்கள் எண்ணுமா தாம் வீசும் மணத்தை?

வாழ்வழித்து வாசம் வீசுகிறது

பெற்றவள் கணக்கிடுவாளா கொடுத்த பாலை?
தன் உதிரம் முறித்து ஊட்டுகிறாள்.

காற்று எடைபோடுமா தான் தரும் உயிர்ப்பை?

கொடியானது அளவிடுமா செல்லும் தூரத்தை?
கடல் அளவிடுமா "எவ்வளவு அலை அடிக்க வேண்டும்?" என்று?

நான் அந்த மரம்—உயிர் முழுதும் பழமாக்கி கொடுத்தேன்
நான் அந்த கடல்—என்னை முழுதும் அன்பின் அலையாய் அடித்தேன்
நான் அந்த தாய் - உயிர் சுரந்து ஊட்டினேன்
நான் அந்த மெழுகு - என்னை எரித்து ஒளிர்ந்தேன்

தப்பு இல்லை இதில்

இப்போது காயப்பட்டிருக்கிறேன்—உண்மைதான்
இரத்தம் வடிகிறது—மறுக்கவில்லை
வலி தாங்க முடியாததாக இருக்கிறது—ஒப்புக்கொள்கிறேன்.
இந்தக் காயம் என் பெருமை

போர்வீரன் காயம் பட்டால் அது தோல்வியின் அடையாளமா?
இல்லை—அது வீரத்தின் சான்று
நான் போர்வீரன்—காதலின் போர்க்களத்தில்
என் காயங்கள் என் மகுடம்

மற்றும்

காயம் பட்டவன் பலவீனன் அல்ல—போர் புரிந்தவன்

அழுதவன் மென்மையானவன் அல்ல—உணர்வுள்ளவன்
தோற்றவன் மூடன் அல்ல—துணிந்தவன்

நான் இனி காதலிக்கமாட்டேன் என்று சொல்ல முடியாது

சொன்னால், அது பொய்யாகும்

நான் இனி வலிபடமாட்டேன் என்றும் சொல்ல முடியாது

ஏனெனில் வலி என் வாழ்க்கையின் பகுதி

நட்சத்திரங்களைத் தின்று நாவிலே வெளிச்சம் பூத்தபோது, சொல்ல முடிந்தது ஒரு வார்த்தை—“நான் அஞ்சவில்லை”

மீண்டும் காயப்பட்டாலும் இதேபோல் அன்பு கொடுப்பேன்
மீண்டும் நிராகரிக்கப்பட்டாலும் இதேபோல் எரிவேன்
இதுதான் என் இயல்பு—இதை மாற்ற முடியாது
மாறமாட்டேன்—நான் இதுதான்

அளவில்லா காதலுக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்
முழு இதயத்தோடு வாழ்ந்ததற்கு வருந்தமாட்டேன்
எரிந்து சாம்பலானதற்கு வெட்கப்படமாட்டேன்
இதுதான் என் தர்மம்—இதுதான் என் வாழ்வு

மீண்டும் கேட்கிறேன் -

மண் குற்றவாளியா விதை வளர்க்க முயன்றதால்?

விதை குற்றவாளியா மரமாக விரும்பியதால்?

மரம் குற்றவாளியா நிழல் தர விழைந்ததால்?

நீயே யோசித்துக் கொள்.

மழை பெய்தது குற்றமில்லை

பூமி ஏற்காதது இன்னொரு கதை

விதை விதைத்தது குற்றமில்லை

மண் வளமற்றது வேறொரு பாடல்

நன்றி—என் வாழ்வில் வந்ததற்கு
நன்றி—என்னை காதலிக்கக் கற்றுக்கொடுத்ததற்கு
நன்றி—என்னை இவ்வளவு ஆழமாக உணரவைத்ததற்கு

அளவில்லாமல், மன்னிப்பில்லாமல்,
வருத்தமில்லாமல்,
பயமில்லாமல்,
பெருமையோடு
தைரியமாக காதலித்து,
தைரியமாக வலிபட்டு,
தைரியமாக வாழும்

பைத்தியக்காரன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...