Back

Short story

December 29, 2022

நித்தியா

SHARE

நித்தியா

அவள் பெயர் நித்தியா. வயது 20. பசும்பாலும் காபி பொடியும் கலந்த நிறம். உயரம் நாலரை அடி இருப்பாள். என்னை விட ஆறுமாதம் இளையவள். நல்ல வளப்பமான உடல்வாகு. என்னைக் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டு ரெண்டு வருடமாக சுற்றிக் கொண்டுத் திரிகிறாள். எனக்கு அதிலெல்லாம் உடன்பாடில்லை. அதுவும் என்னை விட இளைய பெண்கள் மேல் நிச்சயம் காதல் கூடாது என்பது என் கொள்கை. Because they are poor in bed and poor in maturity. மேலும், காதல் என்பது ஒரு பிரம்மை. கானல் நீர். Illusion. போதை என்று கூடச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுமில்லாதவை. உள்ளீடற்ற நீர்க் குமிழிகள். எதையும் அடைகிற வரையில் தான் தவிப்பும் தாகமும். அடைந்த பின்னால் நிறைவின்மை. போதாமை. ஏமாற்றம். அல்லது இவ்வளவு தானா என்கிற சலிப்புணர்ச்சி. எதையும் ஒரு முறை செய்துப் பார்க்கிறோம். Like an experiment. For our experience. அந்த அனுபவம் பிடித்திருந்தால் இன்னும் ஒரு முறை அல்லது இரு முறை. அல்லது சலிக்கும் வரை. அதாவது ஒன்றை அடைகிற வரையில் காட்டுகிற ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அன்பையையும் அடைந்த பின் காட்டுவதில்லை. இது மட்டும் இல்லாமல் காதல் என்பது வீண் நேரச் செலவு. அதற்கு பொறுமை எல்லாம் கூட வேண்டும். ஆனால் நான் சின்ன வயதில் இருந்தே கொஞ்சம் அவசரக் குடுக்கை. எதையும் சடுதியில் செய்து முடிக்கிற அவா. ஆனால் எல்லா விசயங்களையும் சொதப்பி விடுவேன். சரியான முந்திரிக் கொட்டை. அதற்காக நிறையத் திட்டும் வாங்கி இருக்கிறேன். ஆனால் அந்த அவசரத்தை விட முடியவில்லை. மேலும், இந்த பெண்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லி ஆகனும். பெண்கள் உடலளவிலும் மனசளவிலும் ரொம்ப மென்மையானவர்கள். சரியான எலும்பில்லாத பிராணிகள். அவ்வளவு மென்மையான ஜீவராசிகளை எல்லாம் எனக்கு கையாளத் தெரியாது. பொதுவாக எனக்குப் பெண்களைக் கண்ணோடு கண் பார்த்தும் பேச வராது. புரிந்திருக்கும். பெண்களின் அருகாமையை உணர்ந்தாலே ஒரு போல உள்ளுக்குள் உதறலாக - படபடப்பாக இருக்கும். இவள் என்னடா என்றால் கண்ணைப் பார்த்து பேசச் சொல்கிறாள். எவ்வளவோ அழகான பாகங்கள் இருக்கும் போது கண்ணை மட்டும் எப்படிப் பார்த்துப் பேசறது. இடியட். நானும் நிறைய முறை முயன்று விட்டேன். பத்து செகண்ட் கூட கண்ணோடு கண் பார்க்க முடிவதில்லை. கண்ணாடியில் பட்ட நீர்த் துளிப் போலப் பார்வைத் தானாக இறங்கி வந்து விடுகிறது.
"எனக்குக் காதலிக்க நேரமும் பொறுமையும் இல்லை" என்று எவ்வளவோ சொல்லி விட்டேன். திரும்பத் திரும்ப காதலிக்கச் சொல்லி நாய்க் குட்டி போலக் காலைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். எத்தனை முறை எடுத்து எறிந்தாலும் பந்தை எடுத்து வரும் நாய் போலத் தூக்கி எறிய எறிய அன்பை ஏந்திக் கொண்டு வருகிறாள்.
"அப்படி என்னத்தை என் கிட்ட கண்டுட்ட? என் கிட்ட என்ன எதிர்பாக்குற? என்னால் உன்னை காதலிக்கவும் முடியாது அப்படியே காதலித்தாலும் உன்னை கல்யாணமெல்லாம் செய்து கொள்ள முடியாது" என்றும் சொல்லிப் பார்த்து விட்டேன். அதற்கும் பதில் மொழி வைத்திருந்தாள்
"ஒரு வருடம் காதலிக்கலாம். பிடித்தால் தொடரலாம் இல்லையேல் நீ என்னை விட்டுப் போய்விடு" என்கிறாள்.
"என்ன love agreement ஆ? What you want? Are you Mad?" என்று நிராகரிக்கப் பார்த்தேன். ஆனால் அவள்,
"நீ காதலிக்கா விட்டாலும் பரவாயில்லை. என்னை யாவது காதலிக்க அனுமதி" என்கிறாள்.
"என்னிடம் என்ன வேண்டுமோ எடுத்துக் கொள். அதற்கு பதிலாக கொஞ்சம் அன்பைக் கொடு" என்கிறாள்.
இப்படி, பேசிப் பேசியே எப்படியோ என்னை அன்புக்குப் பழக்கி விட்டாள். அவ்வளவு பெரிய யானையே அன்புக்கு பழகி பிச்சை எடுக்கும் போது நானெல்லாம் எம்மாத்திரம்? இப்போது Key கொடுத்த பொம்மை போல அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகிறேன். கிட்டத்தட்ட நாங்கள் காதலிக்கத் தொடங்கி இந்த மாதத்தோடு ஆறு மாதம் ஆகிறது. எப்போதும் ஊடலும் கூடலும் தான். தினமும் சாயந்தரம் எங்கள் கல்லூரிக்கு எதிரே உள்ள சாயிபாபா காலணி மற்றும் பாரதி பார்க் ரோட்டில் ஒரு நடைபயணம். ஒரு சூஸ். தினமும் ஒரு முத்தம். சொல்ல மறந்து விட்டேன்.
"பாலொடு தேன் கலந்தற்றே பனிமொழியாள்
வாலெயிறு ஊறிய நீர்"
- என்று பொய்யா மொழிப் புலவன் பொய்ச் சொல்லி விட்டான். முத்தச் சுவை இனிப்பாயெல்லாம் இல்லை. அது உப்பு சப்பு இல்லாத ஆனால் வசீகரமான சுவை. இன்னும் வேண்டு்ம் வேண்டு்ம் என்கிற சுவை. தேன் திகட்டும். முத்தமும் எச்சிலும் திகட்டவே திகட்டாது. இப்படியாக, மாலை நேரத்து இருளும் ஒளியும் இல்லாத அந்த மந்தமான பொழுதில் அதுவும் ஒரு பெண்ணோடு நடப்பது ஏதோ ஒரு விதத்தில் அழகாகவும் சுகமாவும் தான் இருந்தது.
அடுத்த வாரம் அவள் பிறந்த நாள் வேறு. எனக்கு பரிசு வாங்கிக் கொடுத்தெல்லாம் பழக்க மில்லை. ஆனால் அவள் ஊட்டிக்கு கூட்டிப் போகச் சொல்கிறாள். எனக்கு வேறு என் மேல் நம்பிக்கை இல்லை. எப்படி? என்ன சொல்லி மறுப்பது. திட்டியும் பார்த்து விட்டேன். ஒரு மனசு போகாதே என்கிறது. ஒரு மனசு இதையும் ஒரு முறை என்கிறது. ஏதோ உணரச்சி வேகத்தில் சரி என்று சொல்லி ஊட்டி வரை வந்து ஊர் சுற்றி ரோஜா கார்டன் சுற்றினோம். எல்லாப் பூவும் அழகழகாய் வித விதமாய் ரக ரகமாய் இருந்தன. மனிதர்களைப் போலவே, வெளியில் சிரிப்போடும் உள்ளே முள்ளோடும். பிறகு, வசந்த பவனில் சாப்பிட்டு, இருட்டி, ஹாஸ்டலுக்கு போக முடியாது என்றாகி, ஆளுக்கு ஒரு ரூம் எடுக்கலாம் என்று சொல்லி, அதை மறுத்து, இப்போது ஒரே ரூமில் வந்து விட்டாயிற்று. வரும் வழியில் ஒரு நாய்க் குட்டியைப் பார்த்தோம் குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்தது. பாவம் போல.!? அநாதை ஜீவன். அதன் தாய் நாய் எங்கே போனதோ? அள்ளிச் செல்லம் கொஞ்சனும் போல அவ்வளவு அழகாய் இருந்தது. பால் கூட மறந்திருக்காது. குனிந்து முகத்தை நீவிக் கொடுத்தேன். கையை சப்பியது. அதன் எச்சில் பட்டதும் எனக்கு ஆன்ம சிலிர்ப்பு. இவள் வேறு போகலாம் என்றாள். முணகிக் கொண்டே பின் தொடர்ந்து வந்தது அது. என்ன செய்வது அதை எடுத்தா வர முடியும்.? என்னமோ நான் தான் அதை வா வா என்று சொன்னதைப் போல இவள் என்னை முறைத்து முறைத்து பார்க்கிறாள். சரியென்று கையில் இருந்த பிஸ்கட்டை போட்டேன். தின்று கொண்டு அங்கேயே நின்று விட்டது.
அறைக்குள் நுழைந்த போது மணி பத்து. ஜன்னல் வழியாக வெளியேப் பார்க்கிறேன். ஒரே இருள். இரவு தான் எத்தனை வித்தியாசமானது. சகலத்தையும் இருட்டடிப்பு செய்து நிறம் மாற்றி விடுகிறது. பனிக் காற்று ஈரமாய் முகம் தொடுகிறது. லேசாக உடலில் குளிர் பரவுகிறது. துரத்தில் மரங்களின் சல சலப் போசை. கூடடைந்த பறவைகள் கீச்சிடுகின்றன. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திரங்கள் தெரிந்தன. அழகான அதே சமயம் அசந்தர்ப்பமான சூழ்நிலை. உள்ளுக்குள் ஏதோ அச்ச உணர்ச்சி. தலையணையை எடுத்து தரையில் போட்டு படுத்துக் கொண்டேன். பெட்டில் உட்கார்ந்த படி அவள் பாட்டுக்கு எதெதோ சொல்கிறாள். அவளைப் பார்க்கிறேன். உதடு ஈரச்சிவப்பாக இருக்கிறது. இந்தப் பிறந்த நாளை அவளால் மறக்க முடியாதாம். எனக்கும் தான் என்று எனக்குள்ளேயேச் சொல்லிக் கொண்டேன். என்னிடம் கேட்டு சண்டைக் கட்டி வாங்கிய புடவையை வேறு கட்டி இருந்தாள். உலகிலேயே ரொம்ப கவர்ச்சியான ஆடை என்றால் அது சேலை தான். பாதி காட்டி பாதி மறைத்து ஆர்வத்தை தூண்டி விடும். அது வேறு ஒரு புறமாய் விலகி இடுப்பையும் மாரையும் ஓரமாய் காட்டிக் கொண்டிருந்தது. நான் முகத்தைப் போர்த்திக் கொண்டேன். அவள் பேச்சு தொடர்ந்து. என் அவசரமான பேச்சும் செயல்பாடும் பிடித்திருக்கிறதாம். மழிக்காத தாடியும் மீசையும் பிடித்திருக்கிறதாம். என் புறத்தோற்றத்தை முதல் முறையாக ஒரு பெண் புகழுகிறாள். என் தோற்றத்தை இதுவரை விமர்சித்தவர்களே அதிகம். ஆனால் இப்படி தாடியும் மீசையுமாக இருப்பதில் தான், நான் என்னை மனதளவிலும் உளவியல் ரீதியாகவும் பலமுள்ளவானக உணர்கிறேன். இப்படி இருப்பது எனக்கு பிடித்தும் இருக்கிறது. இது தான் அவளுக்கும் பிடித்திருக்கிறாம். இன்னும் ஏதோ எசகு பிசகாக கவிதை எல்லாம் கூடச் சொன்னாள்.
"மழைத்துளிப் போல நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் குளிர்கிறாய் நீ" என்று.
உடனே எங்கே தொட்டுப் பார்க்கிறேன் என்று போர்வையை விலக்கி கை நீட்ட, உடனே இறங்கி வந்து கையைப் பிடித்து மார்போடு வைத்துக் கொண்டாள். எனக்கோ கைகளுக்குள் மென்மையான கத கதப்பு. அந்த குட்டி நாய் போல ரொம்ப மென்மையாக இருந்தது. வருடிக் கொடுக்கலாம் என்று தோன்றியது. ஏனோ உள்ளத்தில் படபடப்பு. லப் டப். அவள் இதயத்தை விட என் இதயம் படக் படக் கென்று சத்தமாக துடித்தது. கையை எடுத்துக் கொள்ளெனவும், எடுக்காதே "இன்னும் இன்னும் அழுத்தமாக" என்றும் மாறி மாறிப் பேசுகிறது மனது. ஏதோ தியானித்தில் இருப்பதைப் போல அத்தனை சாந்தாமாக கண்களை மூடி என் கைகளின் தொடுதலை ரசித்துக் கொண்டிருக்கிறாள். விளக்கு எங்களை ஆயிரம் ஒளிக் கண்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது குறுந்தொகை பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
"யாரும் இல்லை; தானே கள்வன்
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே"
எவ்வளவு அழகான பாடல். பாடலில் வருகிற அந்த நாரையைப் போல அந்த விளக்கு எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அந்த நாரை தின்ற மீனின் நிலை தானோ தனக்கும்? என எண்ணி இவளும் அந்தத் தலைவியைப் போல வருந்துவாளோ? அப்படி வருந்தி எங்கு போய் சொல்லுவாள்? சொன்னால், அதற்கு யார் சாட்சி? இந்த விளக்கா? ச்சீ என்ன இது ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு கவிதை படிக்கிற நேரமா இது? அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கிறேன். முத்தம் கொடு என்பதைப் போல ஈரப் படுத்தி எச்சில் பூசி இருந்தாள் உதட்டுக்கு. எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. தீடீரென்று ஒரு மூர்க்கம். ஆவேசம். பெண்ணுடலை முழுதும் அறிய முற்படுகிற தீவிரம். தேடல். அவள் எதற்கும் மறுக்க வில்லை. எனக்கே எனக்கென படைக்கப் பட்டத்தைப் போல, என் எல்லா செயலுக்கும் இசைந்து கொடுத்தாள். தி. ஜா சொல்வதைப் போலச் சொன்னாள் "உறை கழற்றிய வீணை மாதிரி கிடந்த அந்த உடல் அலை அலையாக எழுந்தது."
அந்த பத்து நிமிடம் மிருகம் போலத் தான் நடந்து கொண்டேன். நகமும் சிறகும் வளர்ந்து விட்டதைப் போலொரு உணர்ச்சி. கீறி, தாழ்ந்து, மிதந்து, உயர்ந்து, பறந்து, உதிர்ந்து எல்லாம் முடிந்து விட்டது. நான் கொஞ்சக் குழப்பத்தில் உட்கார்ந்திருந்தேன். அவள் எதுவும் நடக்காததைப் போல எழுந்து ஆடைகளை சரி செய்து கொண்டு அருகில் வந்து என் தலையை மார்போடு அணைத்துக் கொண்டாள். இப்போதும் அவள் இதயத் துடிப்புக் கேட்டது. ஆனால் இப்போது எனக்குள் அந்த பட படப்பு இல்லை. ஆனால் என்னுள் பூரண மௌனம். அவள் பேசினாள்.
"என்னைய செக்ஸ்க்காக அலையறாளோனு நினைச்சு நீ சந்தேகிச்சது நிராகரிச்சது எல்லாம் தெரியும் . அதுக்காக நான் அலைய ல. காதல்லயும் தாம்பத்தியத்துலயும் காமம் ஒரு பகுதி தான் டா. அன்பு தான் பிரதானம் நீ சிலாகிச்சு பேசுறியே அந்த அன்பு தான் என்னோட தேவை. நான் உன் சகி ஆகனும். நான் உன் தாயாகனும். உனக்கு எல்லாமுமா நான் இருக்கனும். உன் சகலமுமா ஆகனும். கல்யாணத்துக்கு முன்னாடியே முந்தி விரிச்சுட்டாளே இவ அப்படி இப்படி னு யாரு என்ன வேணாலும் சொல்லட்டும். நீ என்னைய தப்பா நினைச்சிடாதடா அத தாங்கிக்க முடியாது. இது என்னோட வயசுக் கோளாறு எல்லாம் இல்ல. காமத்துக்குப் பிறகும் உன் மேல உள்ள என் காதல் குறையாது னு சொல்லத்தான் இதுக்கு மறுப்பு சொல்ல ல." கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு மீண்டும் பேசினாள்.
"இந்த சமூதாயம் எவ்வளவு மோசம் பாரேன். நீ கூடத் தான்" நான் அவள் மார்பில் இருந்து எழப்பார்த்தேன். அவள் "பதறாத" என்று சொல்லி முன்பு இருந்ததை விட அழுத்தமாக மார்போடு அணைத்துக் கொண்டு பேசினாள். அவள் பேசும் போதும் மூச்சு விடும் போதும் மார்பு மேலும் கீழும் அசைந்தது. அவள் மார் துடிப்பும் பேச்சும் ஏதோ கிணற்றடிக் குரலாய் கேட்டது எனக்கு .
"ஆமா நீயும் மோசம் தான். நீ சொன்ன பிறகு நாச்சியார் திருவாய் மொழி, சிலப்பதிகாரம் குறுந்தொகை எல்லாம் படிச்சேன். உனக்கு ஒன்னு தெரியுமா? சங்க கால காதலர்கள் எல்லாம் டீனேஜ் லவர்ஸ் டா. ஆமா, கல்யாணம் ஆகும்போது கண்ணகிக்கு 12 வயசு, கோவலன் க்கு 16. ஏன் மாதவிக்கும் 12 தான். இவ்வளவு ஏன் கண்ணன காதலனா நினைச்சு உருகினாளே ஆண்டாள், அவ நாச்சியார் திருவாய் மொழி பாடும் போது எவ்வளவு வயசு னு நினைக்ற? 15 வயசு தான். நாச்சியார் திருவாய் மொழி ல இல்லாத காதலா காமமா? அதுல ஒரு பத்தி வருமே
"அவரைப் பிராயந் தொடங்கி யென்றும்
ஆதரித் தெழுந்தவென் தட முலைகள் துவரைப் பிரானுக்கே" னு இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? தூங்கிட்டியா என்ன? கேட்டு கிட்டு இருக்க தானே?எதாவது பேசேன். இல்ல இன்னும் கேளு. "நான் அரை மயக்கத்தில் " ம்ம்ம்ம் " கொட்டினேன். அவள் மார்பு மெத்தை போல் சுகமாக இருந்தது.
"தாயோட வயித்துல கருவான நாள் முதலா அவளோட முலை ரெண்டும் அந்த கண்ணனுக்கு னு உறுதி பூண்டுட்டாளாம். நம்ப முடியல இல்ல. ஆனா அவங்களோட காதல மெச்சி உயர்த்தி பேசற இந்த உலகமும் நீயும் என்னோட காதல ஏன்டா புரிஞ்சிக்க மறுக்றீங்க? என் காதல் எந்த விதத்துல தரங்குறைஞ்சிடுச்சு. எனக்கு வயசு ப்போ ட்வென்ட்டி டா. அதுக்குனு நான் கண்ணகியோ மாதவியோ ஆண்டாளோ இல்ல. நித்யா உன்னோட நித்யா உனக்கான நித்யா. You know I love you unconditionally டா. "
"உண்மையில நீ குழந்தைடா. இது வரைக்கும் நானா தான் உன்ன முத்தம் பண்ணிருக்கேன். கட்டிப் பிடிச்சு இருக்கேன். என்னைய நீ காதலிக்காத வரைக்கும், என் காதல நீ உணராத வரைக்கும் எவ்வளவு சந்தர்ப்பங்கள் இருந்தும் நீ என்னைய தொட்டது கூட இல்ல. நானா வாய் திறந்து முதல் முறை முத்தம் கேட்டப்போக் கூட நீ என் புறங்கை ல தான் குடுத்த. ஐ லவ் யூ டா. ஏற்கனவே சொன்னது தான் எல்லா பொண்ணும் தன் உசுர விட கற்ப பெருசா நினைப்பா. நான் உசுரு கற்பு எல்லாத்தையும் விட உன்னை நினைக்கிறேன். நேசிக்கிறேன். " இடையில் பேச்சை நிறுத்தி என் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள். மார்பில் ஈரத்தை உணர்ந்திருந்தப்பாள் போல. என் கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்து. ஒரு பெண்ணோடான காமப் பொழுதில் அழ முடியுமா? அதுவும் மெத்தென்று அவள் மார்மேல் படுத்து கொண்டு? முடியும். அன்பு அழ வைக்கும். அன்புக்கும் இரவின் குணம். சகலத்தையும் மாற்றி விடும். எனக்கு என்னப் பேசுவது என்றே தெரியவில்லை. அழுகைத் தான் பீறிட்டது. ஒரு பெண்ணின் மனசு எவ்வளவு ஆழமானது. என்னை எவ்வளவு நுணுக்காமகப் புரிந்து வைத்திருக்கிறாள். நான் எதுவுமே பேச வில்லை. மீண்டும் அவளே பேசினாள்.
"நீ சுத்த வெகுளி டா. தப்பு பண்ணிட்டோமே இவள தொட்டுட்டமே னுலாம் நீ என் கூட இருக்க வேணாம். If you want you can go." என்று சொல்லி கண்ணைத் துடைத்து விட்டு முடி கோதி நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு என் முகத்தையே வெறித்துப் பார்த்தாள். அந்தப் பார்வையில் என் பதிலுக்கான ஏக்கம் தெரிந்தது.
நான் எதுவும் பேச வில்லை. அவள் வலது புறங்கையில் அழுத்தமாக முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள் போல. கண்ணில் நீர் மல்க என்னைக் கட்டிக் கொண்டாள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...