Philosophy
October 28, 2025
நம்பிக்கையை கொல்லும் சமூகம்
SHARE

நான் ஒரு காலத்தில் எல்லாரையும் நம்பினேன். எல்லாரும் நல்லவர்கள் என்று நினைத்தேன். ஒவ்வொருவரின் கண்களிலும் நேர்மையைத் தேடினேன். ஒவ்வொருவரின் சொற்களையும் உண்மையென நம்பினேன். ஆனால் இந்தச் சமூகம் என்னை என்னவாக மாற்றிவிட்டது தெரியுமா? ஒரு சந்தேகக் குவியலாக. ஒரு பயந்த மனிதனாக. ஒரு தனிமையின் கைதியாக. அவநம்பிக்கைவாதியாக.
இன்று நான் யாரையும் நம்ப முடியாமல் நிற்கிறேன். ஆனால் இது என் தேர்வல்ல. இது இந்த சமூகம் எனக்குக் கற்றுக் கொடுத்த கொடிய பாடம். யார் நல்லவர்? யார் கெட்டவர்? யார் சொல்வது சரி? யார் சொல்வது தவறு? அவர் பேசும் அன்பான சொற்களின் பின் இருக்கும் நோக்கம் என்ன? இந்த அன்பு எப்போது என்னை குத்தும் கத்தியாக மாறும்? இத்தனை அன்பை கொட்டி நிகழ்த்தும் அளவு என்னிடம் என்ன இருக்கிறது? இப்படி ஆயிரம் கேள்விகள் என் மனதை ஒவ்வொரு நொடியும் அரித்துக் கொண்டே இருக்கின்றன. நான் யோசிக்கிறேன். யோசித்துக் கொண்டே இருக்கிறேன். முடிவுகளை எட்டவே முடியவில்லை.
சமூகத்தின் மௌன வன்முறை
எல்லாரையும் நேசிக்க வேண்டும் என்று என் இதயம் ஏங்குகிறது. ஆனால் எல்லாரும் ஏமாற்றக் கூடும் என்று மனம் எச்சரிக்கிறது - "செல்போன் பத்திரம்; நகைகள் பத்திரம்; யாரையும் நம்ப வேண்டாம்; யார் எது தந்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம்; ஜாக்கிரதை" என்று மீண்டும் மீண்டும் ஒலிக்கும் பேருந்து நிலைய ஒலிப்பெருக்கி போல. இந்த இரண்டுக்கும் இடையே நான் சிக்கித் தவிக்கிறேன். இது ஒரு மோசமான வன்முறை. இரத்தமும் காயமும் தெரியாத வன்முறை. ஆனால் ஆன்மாவை நசுக்கும் வன்முறை. சுதந்திரத்தைப் பறித்து ஒரு மனதை சுக்கு நூறாக்கும் கொடுமை.
இப்போது நான் என்ன செய்வேன்? நம்பினால் காயம் படுவேன். நம்பாவிட்டால் தனிமையில் சாவேன். இரண்டும் வேதனை. இரண்டும் வலி. எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை.
தனிமையின் சிறைச்சாலை
நான் இன்று தனிமையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இது நான் விரும்பிய தனிமை அல்ல. இது என் மீது திணிக்கப்பட்ட தனிமை. மனிதர்களுக்கு நடுவில் இருந்தும் தனியாக இருக்கும் தனிமை. யாரிடமும் மனம் திறந்து பேச முடியாத தனிமை. யாரையும் முழுமையாக நம்ப முடியாத தனிமை.
ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் என்னிடம் நெருங்கி வரும்போது, என் மனம் ஆயிரம் கேள்விகளைக் கேட்கிறது. இவர் உண்மையானவரா? இவருக்கு என்ன தேவை? இவர் என்னை ஏமாற்றப் போகிறாரா? இந்தக் கேள்விகள் எனக்கும் அந்த மனிதருக்கும் இடையில் ஒரு மாயச் சுவரை எழுப்பிவிடுகின்றன.
என் இதயம் அன்பு செலுத்த விரும்புகிறது. என் மனம் சந்தேகப்பட சொல்கிறது. இந்தப் போராட்டத்தில் நான் சோர்ந்து போய்விட்டேன். தவித்துப் போய்விட்டேன். ஏறத்தாழ பாதி செத்தே போய்விட்டேன். மீதி இருக்கும் பாதி உயிரை தேற்றி காக்கத்தான் இப்படி எழுதி எழுதி மன்றாடுகிறேன்.
நான் இழந்தது என்ன?
நான் என்னையே இழந்துவிட்டேன் என்று தோன்றுகிறது. என் நம்பிக்கையை இழந்துவிட்டேன். என் அன்பை இழந்துவிட்டேன். என் தன்னம்பிக்கையை இழந்துவிட்டேன்.
நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படி இருக்க முடியவில்லை. நான் எப்படி இருக்க விரும்பவில்லையோ அப்படி ஆகிவிட்டேன்.
இதுதான் சமூகத்தின் மிகப் பெரிய வன்முறை. ஒரு நல்ல மனிதனை , எல்லோரையும் நம்ப விரும்பும் மனிதனை, எல்லோரையும் அன்பு செய்ய விரும்பும் மனிதனை- அவனாக - அவன் போக்கில் - அன்பாக இருக்க விடாமல், சந்தேகப் பிராணியாக மாற்றுவது. அன்பு செலுத்த விரும்பும் இதயத்தை, பயத்தால் நிரப்புவது. எல்லாரையும் நேசிக்க விரும்பும் மனிதனை, யாரையும் நம்ப முடியாத நிலைக்குத் தள்ளுவது.
நான் இன்னும் என் பழைய நான் ஆக விரும்புகிறேன். எல்லாரையும் நம்ப விரும்புகிறேன். எல்லாரையும் நேசிக்க விரும்புகிறேன். ஆனால் இந்த சமூகம் மீண்டும் என்னை ஏமாற்றுமோ என்ற பயம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. இந்த வேதனையில் நான் தினமும் உழலுகிறேன். தினமும் தவிக்கிறேன். தினமும் சாகிறேன்.
Now, read it once more as if it were written by a woman — you’ll see some extra dimensions in the write-up and its context.
- ஏனென்றால், நெடுங்காலமாக இப்படியான சிக்கலில் தான் இருக்கிறாள் பெண். நம் அம்மா, தங்கை, மகள், மனைவி, காதலி-யென - எல்லா பெண்களும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...