Back

Politics

October 29, 2026

தவெக அரசும் தங்க மோதிரத் திட்டமும்: ஒரு கிராம் தங்கமா, ஒரு தலைமுறையின் எதிர்காலமா?

SHARE

தவெக அரசும் தங்க மோதிரத் திட்டமும்: ஒரு கிராம் தங்கமா, ஒரு தலைமுறையின் எதிர்காலமா?

தவெக அரசும் தங்க மோதிரத் திட்டமும்: ஒரு கிராம் தங்கமா, ஒரு தலைமுறையின் எதிர்காலமா?

அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் ஒரு சாமானிய தகப்பனின் கண்களில் இருப்பது வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல; தன் குழந்தையின் எதிர்காலம் குறித்த ஆயிரம் கனவுகளும்தான். பிறந்த குழந்தையின் பிஞ்சு விரலைப் பிடித்துப் பார்க்கும் தாய்க்கு, தன் பிள்ளை இந்த உலகத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்துவிட மாட்டானா என்ற ஏக்கம் இருக்கும். பொருளாதார நெருக்கடியில் உழலும் அத்தகைய குடும்பங்களுக்கு, அரசு சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாகக் கிடைக்கும்போது ஏற்படும் உடனடி மகிழ்ச்சியை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. நமது பண்பாட்டில் 'தாய்மாமன் சீர்' என்பது உறவையும் அரவணைப்பையும் காட்டும் ஓர் அடையாளம்.

ஆனால், ஓர் அரசாங்கம் என்பது உறவினர் அல்ல; அது மக்களின் வரிப்பணத்தைக் கையாளும் பொறுப்புள்ள நிறுவனம்.

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் விரலில் ஒரு கிராம் தங்கத்தை மாட்டிவிடுவதோடு ஓர் அரசின் கடமை முடிந்துவிடுகிறதா? அல்லது, அந்தக் குழந்தை வளர்ந்து சமூகத்தில் கால்பதிக்கும்போது அதற்குத் தரமான கல்வி, பாதுகாப்பான மருத்துவம், நவீனத் திறன் பயிற்சி, கண்ணியமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கித் தருவதில் அரசின் உண்மையான பொறுப்பு அடங்கியிருக்கிறதா? இந்த அடிப்படைக் கேள்வியிலிருந்துதான் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை' நாம் விமர்சனப்ூர்வமாக அணுக வேண்டியிருக்கிறது.

இந்தியா ஏழை நாடல்ல; ஆனால் அதன் செல்வம் எங்கே தூங்குகிறது?

இந்தத் திட்டத்தின் பொருளாதாரப் பின்னணியைப் புரிந்துகொள்ள, இந்தியாவின் செல்வ வளம் குறித்த ஓர் அடிப்படை முரண்பாட்டை நாம் பார்க்க வேண்டும். இந்தியா வளங்களே இல்லாத ஏழை நாடு கிடையாது. மாறாக, உலகின் மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையையும் உழைக்கும் மனித வளத்தையும் கொண்ட நாடு. ஆனால், இங்கே இருக்கும் மூலதனம் உற்பத்தி சார்ந்த துறைகளுக்குச் செல்கிறதா என்பதுதான் கேள்வி.

மார்ச் 2025-ல் வெளியான 'ஹெச்.எஸ்.பி.சி குளோபல்' (HSBC Global) ஆய்வறிக்கையின் மதிப்பீட்டின்படி, இந்தியக் குடும்பங்களின் கைவசம் மட்டும் சுமார் 25,000 டன் தங்கம் சேமிப்பாகக் கிடக்கிறது. நிச்சயமாக, இந்தியக் குடும்பங்கள் தங்கம் வாங்குவதற்குப் பின்னால் வலுவான சமூக-பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. முறையான வங்கிக் கடன் கிடைக்காத சாமானியக் குடும்பங்களுக்கு, அவசர மருத்துவச் செலவுக்கோ, கல்விக்கோ நள்ளிரவிலும் கைகொடுக்கும் உடனடிப் பாதுகாப்புச் சொத்தாக (Liquid Security Asset) தங்கம் இருக்கிறது. எனவே, மக்களிடம் உள்ள தங்கத்தை முற்றிலும் பயனற்றது என்று புறந்தள்ளிவிட முடியாது.

ஆனால், பேரியல் பொருளாதார (Macroeconomics) பார்வையில் ஒரு முக்கியமான சிக்கல் உள்ளது. வீட்டுப் பீரோவிலும் வங்கி லாக்கரிலும் தூங்கும் தங்கம் என்பது, நாட்டின் உற்பத்திச் சக்கரத்தைச் சுழற்றாத 'முடங்கிய மூலதனம்'.

உதாரணமாக, ஒரு குடிமகன் தன்னிடம் உள்ள சேமிப்பை ஒரு நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிலோ (Primary Market / Equities) அல்லது உற்பத்தி சார்ந்த நிதியிலோ முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணம் அந்த நிறுவனத்திற்குப் புதிய மூலதனமாக மாறுகிறது. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பங்குகளை வாங்கினாலும்கூட, அது சந்தையின் பணப்புழக்கத்தை (Liquidity) அதிகரித்து, நிறுவனங்கள் எதிர்காலத்தில் நிதி திரட்டும் தகுதியை உயர்த்துகிறது. இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் உருவாகின்றன, ஆராய்ச்சிகள் நடக்கின்றன, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நிறுவனம் வளரும்போது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (GDP) உயர்கிறது; அந்த வளர்ச்சியின் பங்கு மீண்டும் முதலீடு செய்த சாமானியனுக்கே லாபமாகத் திரும்பக் கிடைக்கிறது.

மாறாக, தங்கத்தில் முடங்கும் பணம் தானாக ஒரு தொழிற்சாலையைக் கட்டாது; ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்காது; ஒரு பட்டதாரிக்குக்கூட வேலைவாய்ப்பைத் தராது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாடும் மாநில அரசின் முரண்பாடும்

தங்கத்தில் முடங்கும் செல்வத்தை உற்பத்திப் பாதைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான், இந்திய அரசு கடந்த 2015-லேயே 'தங்கப் பணமாக்கல் திட்டத்தை' (Gold Monetisation Scheme) கொண்டுவந்தது. அதுமட்டுமின்றி, இந்தியா தனக்குத் தேவையான தங்கத்தின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. உலகத் தங்க கவுன்சிலின் (World Gold Council) தரவுப்படி, 2025-ல் இந்தியாவின் மொத்த சரக்கு இறக்குமதியில் தங்கத்தின் பங்கு மட்டும் சுமார் 8 சதவீதம்.

இவ்வளவு பெரிய அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கரைகிறது; இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசின் அரசியல் மற்றும் சித்தாந்தப் போக்குகள் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கத் தங்க இறக்குமதியைக் குறைத்தே ஆக வேண்டும் என்ற பொருளாதார நிர்பந்தத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அதன் விளைவாகத்தான், 2026 மே 13 முதல் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதிச் சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியது.

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கொள்கையும் தங்கத்தின் மீதான மோகத்தைக் குறைத்து, மக்களை உற்பத்தி சார்ந்த முதலீடுகளை நோக்கி நகர்த்தப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், தமிழகத்தை ஆளும் தவெக அரசு மக்கள் வரிப்பணத்தில் தங்க மோதிரம் வாங்கித் தரும் திட்டத்தைக் கொண்டாட்டமாகத் தொடங்கியிருக்கிறது.

தமிழக அரசின் இந்த ஒரு திட்டத்தால் மட்டுமே இந்தியாவின் தங்க இறக்குமதி சரிந்துவிடும் என்று சொல்வது மிகைப்படுத்தலாக இருக்கலாம். ஆனால், கொள்கையளவில் (Policy Level) இது ஒரு பிற்போக்கான பொருளாதார முன்னுதாரணம் இல்லையா?

₹755 கோடியா, ₹560 கோடியா? - மோதிரத்தின் விலையை விடப் பெரியது அதன் 'வாய்ப்புச் செலவு'

2026 ஜூன் 22 முதலான கணக்கீட்டில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் (22 காரட்) தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டம், செப்டம்பர் 28, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் 2026-ல் வெளியான அரசின் கொள்முதல் (Tender) தகவல்களின்படி, ஆண்டுக்கு 4,41,667 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க ₹755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய பெருநிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டன. அதேவேளை, 2026–27 திருத்தப்பட்ட பட்ஜெட் ஆவணங்களில் இத்திட்டத்திற்கான தொகை ₹560 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த எண்களுக்கு இடையிலான வேறுபாடு குறித்த தெளிவான கணக்கை அரசு மக்களுக்கு விளக்க வேண்டியது அவசியம்).

இங்கே நாம் எழுப்ப வேண்டிய மிக முக்கியமான பொருளாதாரக் கேள்வி 'வாய்ப்புச் செலவு' (Opportunity Cost) பற்றியது. ஒரு மாநில அரசு ₹560 முதல் ₹755 கோடியை ஒரு திட்டத்தில் கொட்டும்போது, அந்தப் பணத்தை வேறு எந்த அத்தியாவசியத் தேவைக்காகப் பயன்படுத்தியிருக்க முடியும்?

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்று அரசு சொல்கிறது. ஒரு தாய் அரசு மருத்துவமனையைத் தேடி வருவது, அங்கே தன் உயிருக்கும் தன் குழந்தையின் உயிருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்க வேண்டுமா? அல்லது ஒரு கிராம் தங்க மோதிரம் கிடைக்கும் என்ற கவர்ச்சியில் இருக்க வேண்டுமா?

இதே நூற்றுக்கணக்கான கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமித்திருக்கலாம்; பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளை (NICU) நவீனப்படுத்தியிருக்கலாம்; கர்ப்பிணித் தாய்மார்களின் ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் திட்டங்களை விரிவுபடுத்தியிருக்கலாம். மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவது தாயின் உயிரைக் காக்கும் நிரந்தர முதலீடு; மோதிரம் கொடுப்பது வெறும் அரசியல் விளம்பரம்.

திராவிட இயக்கத்தின் நலத்திட்ட மரபும், வாய்ப்புகளை உருவாக்கும் அரசியலும்

தமிழ்நாட்டின் கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகள் மீது நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நமக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். எந்த ஆட்சியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால், திராவிட இயக்க ஆட்சிகள் கொண்டுவந்த நலத்திட்டங்களின் அடிப்படைத் தத்துவம் என்பது வெறுமனே ஒரு பொருளைக் கொடுத்து மக்களைத் திருப்திப்படுத்துவது அல்ல; மாறாக, அடித்தட்டு மக்களின் சமூக-பொருளாதார நகர்வை (Socio-Economic Mobility) வேகப்படுத்துவது.

* மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் (விடியல் பயணம்): 2024-ல் சி.ஏ.ஜி (CAG) அமைப்பு தமிழகத்தின் 6 நகரங்களில் 3,000 பெண்களிடம் நடத்திய ஆய்வின்படி, இத்திட்டத்தால் பெண்கள் மாதம் சராசரியாக ₹601 முதல் ₹800 வரை சேமிக்கின்றனர். அரசு இங்கே பணத்தைக் கையில் கொடுக்கவில்லை; பெண்களின் நடமாட்டச் சுதந்திரத்தை (Mobility) உறுதி செய்தது. அவர்கள் வேலைக்குச் செல்லவும், உயர் கல்வி பயிலவும் வழிவகுத்தது. அதன் மூலம் சேமிக்கப்பட்ட பணம் அந்தக் குடும்பத்தின் சத்தான உணவாகவும், குழந்தைகளின் கல்விச் செலவாகவும் மாறியது.
* விலையில்லா மடிக்கணினித் திட்டம்: 2016–17 இடைக்காலப் பட்ஜெட் தரவுகளின்படி, 2014–15 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 31.78 லட்சம் மடிக்கணினிகள் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. கம்ப்யூட்டரைத் தொட்டுப் பார்க்க வாய்ப்பில்லாத முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் கைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொடுத்து, அவர்களை தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT Sector) நுழைய வைத்த மூலதனம் அது.
* நான் முதல்வன் மற்றும் நூலகக் கட்டமைப்பு: வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது, நவீனத் தொழில்துறைக்கு ஏற்ப மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 2024–25 பட்ஜெட் உரையின்படி சுமார் 28 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்; முந்தைய ஆண்டில் மட்டும் 1.19 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். (இத்திட்டத்தின் தொடர் விளைவுகள் குறித்து சுயாதீன ஆய்வுகள் தேவைப்பட்டாலும், கல்வியை வேலைவாய்ப்புடன் இணைக்கும் இதன் கட்டமைப்பு முக்கியமானது).

கிராமப்புறப் பெண்களைப் பள்ளிக்கூடம் வர வைத்த சைக்கிள் திட்டம் முதல், ஊர்தோறும் அமைக்கப்பட்ட அறிவுசார் நூலகங்கள் வரை—இவை அனைத்துமே மக்களின் உற்பத்தித் திறனை (Productivity) பெருக்கிய திட்டங்கள்.

காகிதத்தில் இருக்கும் 'வெற்றி தமிழகமும்' நடைமுறை அரசியலும்

"தவெக அரசிடம் நீண்டகாலத் திட்டங்களே இல்லையா?" என்று கேட்டால், அவர்கள் 2026 ஆகஸ்டில் வெளியிட்ட 'வெற்றி தமிழகம்' என்ற ஐந்தாண்டுத் தொலைநோக்கு ஆவணத்தை (Vision Document) சுட்டிக்காட்டலாம். 35 துறைகளில் 436 முன்மொழிவுகளைக் கொண்ட அந்த ஆவணத்தில், ₹50,000 கோடி முதலீட்டு நிதி, AI City உருவாக்கம், செமிகண்டக்டர் (குறைக்கடத்திகள்), மின்சார வாகனங்கள் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் முதலீடு எனப் பிரம்மாண்டமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவையே. ஆனால், ஒரு தொலைநோக்கு ஆவணத்தை வெளியிடுவது வேறு; அதைச் செயல்படுத்துவதற்கான நிர்வாகத் திறனைக் காட்டுவது வேறு.

₹50,000 கோடி முதலீட்டு நிதி எங்கிருந்து திரட்டப்படும்? AI City எப்போது கட்டமைக்கப்பட்டு எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலை தரும்? பின்தங்கிய மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு இதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது? என்பதற்கெல்லாம் இன்னும் கள அளவில் விடைகள் இல்லை. உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சித் திட்டங்கள் காகித அளவிலான முன்மொழிவுகளாக மட்டுமே நின்றுகொண்டிருக்கும்போது, எந்தப் பொருளாதார ஆக்கத்திறனும் இல்லாத 'தங்க மோதிரத் திட்டத்திற்கு' மட்டும் உடனடியாக நூற்றுக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டு, கார்ப்பரேட் நகைக்கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டு, வேகவேகமாகச் செயல்படுத்தப்படுவதுதான் தவெக அரசின் முன்னுரிமை குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

முடிவாக: உண்மையான ஆபரணம் எது?

நலத்திட்டங்கள் என்பவை ஏழை மக்களுக்கான சமூகப் பாதுகாப்புக் கவசம். எல்லா நலத்திட்டங்களையும் வணிக ரீதியான லாப-நஷ்டக் கணக்கில் மட்டுமே பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களைக் கொண்ட ஒரு மாநில அரசு, தன் மக்களின் வரிப்பணத்தை எங்கே, எதற்காகச் செலவிடுகிறது என்பதில் தெளிவான முன்னுரிமை இருக்க வேண்டும்.

இன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு, அதன் விரலில் அணிவிக்கப்படும் ஒரு கிராம் தங்க மோதிரம் பிறந்தநாளின் நினைவுப் பொருளாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தை ஐந்து வயதில் ஊட்டச்சத்துக் குறைபாடின்றி வளர்கிறதா? பத்து வயதில் நவீன அறிவியல் ஆய்வகம் கொண்ட அரசுப் பள்ளியில் படிக்கிறதா? இருபது வயதில் உலகத்தரம் வாய்ந்த திறன்களோடு தன் சொந்தக் காலில் நிற்கும் வேலைவாய்ப்பைப் பெறுகிறதா? என்பதுதான் அந்தக் குடும்பத்தின் தலைமுறையை மாற்றும்.

தரமான கல்வியும், சமரசமற்ற மருத்துவமும், சுயமரியாதையுள்ள வேலைவாய்ப்பும்தான் ஒரு குடிமகனுக்கு அரசு அணிவிக்கக்கூடிய உண்மையான ஆபரணங்கள். மக்களின் உழைப்பையும் அறிவையும் மூலதனமாக்கி, அவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில்தான் ஒரு அரசின் நிர்வாகத் திறமை அடங்கியிருக்கிறது. அதை விடுத்து, மக்களின் சென்டிமென்ட்களைத் தூண்டி அரசியல் அறுவடை செய்யும் தங்க மோதிரத் திட்டங்களை ஒருபோதும் வளர்ச்சியின் சாதனையாகக் கொண்டாட முடியாது.

ஒரு முக்கியக் குறிப்பு — என் அரசியல் நிலைப்பாடு

இந்தக் கட்டுரையின் நோக்கம் திமுகவை ஆதரிப்பதோ, பாஜகவை ஆதரிப்பதோ, தவெகவை எதிர்ப்பதோ அல்ல. எந்தக் கட்சியின் மீதும் கண்மூடித்தனமான ஆதரவும் எனக்குக் கிடையாது; அதேபோல எந்தக் கட்சி நல்லது செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையும் எனக்குக் கிடையாது. எனக்குத் தேவை நல்ல நிர்வாகம்; மக்களின் வாழ்க்கையை உண்மையாக மேம்படுத்தக்கூடிய தொலைநோக்குத் திட்டங்கள்; பொதுமக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு வெளிப்படையான பதில்.

திராவிடக் கட்சிகள் செய்த தவறுகள் விமர்சிக்கப்பட வேண்டும். அவை செய்யத் தவறிய விஷயங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். ஆனால், அவை கொண்டுவந்த நல்ல திட்டங்களையும் அவற்றால் மக்களுக்குக் கிடைத்த பயன்களையும் மறுத்துவிடுவது நேர்மையான அரசியல் பார்வையாக இருக்க முடியாது. ஒரு கட்சி செய்த நல்லதை ஒப்புக்கொள்வதால் அதன் தவறுகளுக்கு நாம் ஒப்புதல் அளித்துவிடுவதில்லை. அதேபோல, ஒரு கட்சி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால் இன்னொரு கட்சியின் எல்லாச் செயல்களையும் ஆதரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

தவெக தன்னை மாற்று அரசியல் சக்தியாக முன்வைத்திருக்கிறது. பழைய அரசுகளின் தவறுகளைச் சரிசெய்வதும், அவை செய்யத் தவறியவற்றைச் செய்து காட்டுவதும்தான் அந்த மாற்று அரசியலின் உண்மையான சோதனை. அப்படியிருக்கும்போது, முந்தைய அரசுகளின் திட்டங்களைப் பெயர் மாற்றி அறிவிப்பதோ, ஏற்கெனவே இருந்த திட்டங்களைப் புதிய பெயரில் மீண்டும் அறிமுகப்படுத்துவதோ மட்டுமே மாற்று அரசியலாகிவிடாது. அந்தத் திட்டங்களில் எதை மேம்படுத்துகிறோம், மக்களுக்கு எந்தக் கூடுதல் பயனை வழங்குகிறோம், முன்பு இருந்த குறைகளை எவ்வாறு சரிசெய்கிறோம் என்பதில்தான் அதன் தனித்துவம் இருக்கிறது.

உதாரணமாக, திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் முதலில் மகளிர் பயணம் என மாற்றப்பட்டு, பின்னர் வெற்றிப் பயணம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது. இங்கே ஒரு நியாயமான வேறுபாட்டை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்: பெயர் மாற்றம் மட்டுமல்லாமல், கூடுதல் வகைப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க வழிவகுத்திருப்பது உண்மையான கொள்கை விரிவாக்கம். அதனால் கிடைக்கும் பயன்களையும் மதிப்பிட வேண்டும். அதே நேரத்தில், ஏற்கெனவே இருந்த திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையும் அதன் வரலாற்றையும் மறைத்துவிட்டு, பெயர் மாற்றத்தை மட்டுமே புதிய சாதனையாக முன்னிறுத்துவதையும் கேள்வி கேட்க வேண்டும்.

அதேபோல, தங்கம் வழங்கும் திட்டங்களைப் பற்றிப் பேசும்போதும் வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தாலிக்குத் தங்கம் திட்டத்தின் பின்னணியில், 1989-ல் தொடங்கப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் இருக்கிறது. 2011-ல் ஜெயலலிதா அரசு இந்தத் திட்டத்தைத் தங்கம் வழங்கும் வடிவத்தில் விரிவுபடுத்தியது; பின்னர் எட்டு கிராம் தங்கம் வழங்கும் நிலைக்கும் உயர்த்தியது. 2022-ல் திமுக அரசு திருமண உதவியை மையமாகக் கொண்டிருந்த அணுகுமுறையிலிருந்து பெண் குழந்தைகளின் உயர்கல்வியை ஆதரிக்கும் புதுமைப் பெண் திட்டத்தை நோக்கி நகர்ந்தது. தற்போது தவெக அரசு அண்ணன் சீர் என்ற பெயரில் திருமணத்திற்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்திருக்கிறது.

இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்: குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டமும், திருமணத்துக்குத் தங்கம் வழங்கும் திட்டமும் ஒன்றல்ல. அவற்றின் பயனாளிகளும் நோக்கங்களும் வேறுபட்டவை. ஆனால், தங்கத்தை மையமாகக் கொண்ட நலத்திட்டங்கள் தமிழக அரசியலில் ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் இருந்திருக்கின்றன. எனவே, புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதைவிட, அது எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கிறது, ஏற்கெனவே இருந்த திட்டங்களிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது, அதன் பயன் என்ன என்பதைத்தான் நாம் மதிப்பிட வேண்டும்.

முக்கியமாக, திராவிடக் கட்சிகள் செய்யத் தவறியதைச் செய்வதாகக் கூறும் ஓர் அரசு, அவற்றைவிடச் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. அது மக்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பரிசளிப்பதோடு நிற்காமல், அவர்களுக்குத் தரமான கல்வியையும் ஊட்டச்சத்தையும் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும். இளைஞர்களுக்குத் திறன் பயிற்சியும் வேலைவாய்ப்பும் உருவாக்க வேண்டும். புதிய தொழில்களுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்கட்டமைப்புக்கும் முதலீடு செய்ய வேண்டும். குடும்பங்கள் தங்களுடைய உழைப்பின் மூலம் பொருளாதாரப் பாதுகாப்பை அடைவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

இவை அனைத்தையும் ஒரே நாளில் செய்துவிட முடியாது என்பது உண்மை. ஆனால், ஒரு அரசு எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதை அதன் முன்னுரிமைகள் வெளிப்படுத்தும். பொதுப் பணத்தை எங்கே செலவிடுகிறது, எந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது, அந்தத் திட்டங்களின் பலனை எவ்வாறு அளவிடுகிறது என்பதில்தான் அதன் நிர்வாகத் திறன் வெளிப்படும்.

இந்த விமர்சனத்தின் மூலம் நான் சொல்ல விரும்புவது இதுதான்: நான் திமுக ஆதரவாளனும் அல்ல; பாஜக ஆதரவாளனும் அல்ல; தவெக ஆதரவாளனும் அல்ல. எந்தக் கட்சி மக்களுக்கு நல்லது செய்கிறதோ, அந்தச் செயலுக்கு ஆதரவாக இருப்பேன். எந்தக் கட்சி மக்களின் நலனைப் புறக்கணிக்கிறதோ, அந்தச் செயலுக்கு எதிராகக் கேள்வி கேட்பேன். எனது அளவுகோல் கட்சியின் பெயரோ, தலைவரின் புகழோ, தேர்தல் முழக்கமோ அல்ல; மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் உண்மையான மாற்றமே.

ஒரு கிராம் தங்கம் ஒரு குழந்தையின் நினைவாக இருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைக்கு நல்ல கல்வி, நல்ல ஆரோக்கியம், பொருளாதாரச் சுதந்திரம், கண்ணியமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதுதான் ஓர் அரசின் பெரிய சாதனை.

எனக்குத் தேவையானது ஒரு கட்சியின் வெற்றி மட்டுமல்ல; மக்களின் வெற்றி. பெயர்கள் மாறலாம், ஆட்சிகள் மாறலாம், அரசியல் முழக்கங்கள் மாறலாம். ஆனால் மக்களின் வாழ்க்கை முன்னேறவில்லை என்றால் அந்த மாற்றங்களால் என்ன பயன்?

ஒரு நல்ல அரசு மக்களுக்கு என்ன கொடுத்தது என்பதைவிட, மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள என்ன வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது என்பதில்தான் அதன் உண்மையான வெற்றி இருக்கிறது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...