Philosophy
May 1, 2020
தத்துவம்
SHARE

ஒரு புத்தகத்தை உங்களால் எவ்வளவு நேசிக்க முடியும்? ஒரு பக்கம் கிழிந்து விட்டதற்காக அல்லது அதன் முனை பக்கங்கள் மழுங்கி விட்டதற்காக அழத் தோன்றுமா? எனக்கு அழுகை அழுகையாக
வரும். ஒரு போல மனம் கனமாக இருக்கும். இன்னும் கடன் கொடுத்த புத்தகம் கைக்கு வந்து சேருவதற்குள் செத்துப் பிழைப்பேன். ஏதோ கொடுக்க கூடாத ஒன்றை கொடுத்து விட்டதைப் போல கஷ்டமாக
இருக்கும். தூங்கும் போது தலை மாட்டிலோ அல்லது என் அருகாமையிலோ புத்தகம் இல்லாமல் தூக்கம் வருவதே இல்லை. (புத்தகங்கள் என்பது என் பொண்டாட்டி கள் என்று எண்ணி விட்டதால் தான்
இப்படி போல) வாசிப்பது எல்லாம் சொற்பமான அளவு தான். ஆனால் புத்தகக் கடைக்கு சென்றால் கையில் உள்ள எல்லா காசுக்கும் புத்தகம் வாங்கத் தோன்றுகிறது. எத்தனையோ நாள் கடைக்கு
சென்று கையில் உள்ள எல்லா காசுக்கும் புத்தகம் வாங்கி விட்டு பேருந்துக்கு பணம் இல்லாமல் நடந்தே வந்ததுண்டு. இந்த புத்தகப் பித்து ஏன் என்று தெரிய வில்லை. வாங்கி போட்டதில்
இன்னும் பாதிக்கும் மேலான புத்தகங்கள் வாசிக்கப்படாமல் இருக்கும் போதும், கையில் காசு கிடைக்கிற போது எல்லாம் மனம் புத்தகம் வாங்கென்றே சொல்கிறது. "உங்கள் வீட்டில்
எத்தனை வருசத்துக்கான அரிசி, பருப்பு, கோதுமை அல்லது சமையல் பண்டங்கள் இருக்கிறது.? இருப்பின் அது திருட்டு பொருட்கள் என்கிறேன் நான்." என்று அளவுக்கு அதிகமாக எதை
சேர்த்தாலும் தப்பு என்று தம்பட்டம் அடிக்கும் மனது ஏன் இவ்வளவு புத்தகங்களை சேர்க்கிறது என்று தெரிய வில்லை. சகட்டு மேனிக்கு இப்படி புத்தகத்துக்கு அதிகமாய் செலவழிக்காதே
என்று யாரேனும் சொன்னால் " வீட்ல மூட்ட மூட்டையா இருக்க அரிசி பருப்பு லாம் கூட கெட்டு உளுத்து காலவதியாகிப் போகும். ஆனா புத்தகம் அப்படி இல்ல. நான் வாசிக்கலானாலும் என்
சந்ததிகள் வாசிக்கும். அதும் இல்லாம புத்தகங்கள் கெட்டுப் போகாது" என்று வியாக்கியானம் பேசுகிறேன். ஆனால் இது என்னவோ உண்மை தானே? புது புத்தகத்தின் அந்த அச்சு வாசனை
இருக்கிறதே அப்பா.... அந்த கிறக்கத்தை நான் பெண்களிடத்து கூட உணர்ந்தது இல்லை. ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்து விட்டு மூக்கோடு மூக்காக வைத்து வாசம் பிடிப்பேன். இதை எழுதி
உடனே எனக்கு புத்தகத்தை பற்றி எழுதிய எனது சில கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. உன் உச்சியிலிருந்து எச்சி விழுங்கிய படி மெல்ல மெல்ல அடி தொட்டு பின் பக்கம் புரட்டி போட்டு
மீ்ண்டும் மேலிருந்து கீழ் வரை மேயந்து எங்கேனுமோரிடத்தில் ஓய்ந்து விட்ட இடத்தை விரலாலும் கண்ணாலும் தடவி விரித்து வைத்ததை மற்றுமொரு முறை வெறித்து நோக்கி விரிந்த தாளிடை
முகத்தோடு பொருத்தி மூக்கோடு இருத்தி உன் வாசனையும் உள் வாசனையும் நுகர்ந்து கண்ணோய்ந்த களைப்பில் கையோய்ந்த களைப்பில் உனை ஆய்ந்த களிப்பில் உன்னோடு ஒன்றாய் உன் உள்ளோடு
நன்றாய் உறங்கி போதல் என்றோ நான் பெற்ற வரமன்றோ... இது போல் வேறொரு சுகமுண்டோ? - பிப்ரவரி 2018 "துணை யாரும் வேண்டாம்! துயர்படவும் வேண்டாம்! மனையாளும் வேண்டாம்!
மகவுகளும் வேண்டாம்! பெண்டாட்டி சுகமெல்லாம் புத்தகத்திற்கு ஈடில்லை! பேசாமல் போய் விடுங்கள் நான் புத்தகத்தை கூடுகின்றேன்!" - அக் 2018 ஒவ்வொரு சந்திப்பிலும் (குறைந்த
பட்சம்) ஒரு புத்தகம் கொடுப்பதாய் சொல் காதலிக்கலாம். - ஜன 2018 இன்னும் நிறைய இருக்கிறது. நான் பெண்ணை கொண்டாடியதை விட புத்தகத்தை கொண்டாடியதே அதிகம். எனக்கு தெரிந்து நான்
பிறரிடத்து அதிகமாய் கேட்டது பிரியமும் புத்தகமும் தான். ஏன் பெண்களிடம் கூட முத்தங்கள் கேட்டது விட கவிதையும் புத்தகமும் கேட்டதே அதிகம். உங்களிடமும் கூட அதையே கேட்கிறேன்.
என்னைக் கேட்பின் வாசித்தல் என்பதொரு போதை. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு உலகம். வேங்கையின மைந்தன் வாசித்த போது ரோகிணியை காதலித்தேன். பொன்னியின் செல்வன் வாசித்த போது
வந்தியத் தேவன் நானாகி மணிமேகலை நந்தினி என எல்லோரையும் காதலித்தேன். மோக முள் வாசித்த போது யமுனா வை காதலித்தேன். இரும்புக் குதிரைகள் வாசித்த போது விஸ்வநாதனோடு என்னைப்
பொருத்திக் கொள்ள முயன்றேன். வெண்ணிற இரவுகள் வாசித்த போது அந்த நாவலின் மையக் கதாபாத்திரம் நானாகிப் போனேன். நிலா நிழல் வாசித்த போது முகுந்தன் நானானேன். இப்படியாக இன்னும்
நிறைய உண்டு. உண்மையில் நான் ரத்தமும் சதையுமான மனிதர்களை விட இப்படி புத்தகத்தில் அறிமுகமான மனிதர்களைத் தான் அதிகமாக நேசிக்கிறேன் காதலிக்கிறேன். அவர்கள் என்னை
ஆசுவாசப்படுத்துகிறார்கள். என் துக்கங்களை தாங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் எனக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள். எனக்கு அந்தரங்கமாய் ஆலோசனை சொல்கிறார்கள். ஒரு மனைவியை போல, ஒரு
நண்பனை போல, ஒரு தாயைப் போல இருந்து என்னைத் தாங்கி தோள் கொடுத்து அன்போடு வழி நடத்திப் போ கிறார்கள். நிஜ மனிதர்களை விட அவர்கள் மிகவும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனக்கு அவர்களை மிகவும் பிடித்து இருக்கிறது. அதனால் தானோ என்னவோ புத்தகங்களாக வாங்கிக் குவிக்க்கிறேன் போல. நீங்களும் வாசித்து பாருங்கள். மேற் சொன்ன படி வாசிப்பு என்பது
ஒரு போதை யா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டேனும் வாசித்து பாருங்கள். அப்புறம் முடிந்தால் எனக்கு ஒரு புத்தகம் வாங்கி அனுப்பி வையுங்கள். வாங்கி அனுப்பா விட்டாலும்
வாசித்து பார்ப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் பித்தன். ர. அஜித்குமார்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...