Philosophy
July 13, 2018
தத்துவம்
SHARE

#நானும்_தமிழும்
எல்லோர்க்கும் தாய்,தந்தை தமையன், தமக்கை, உற்றார் உறவினர், தோழன், தோழி, காதலன்,காதலி மனைவி இப்படி யாரோ ஒரு வருடனோ அல்லது எதாவதொன்றுடனோ ஒரு ஆத்மார்த்தமான நெருக்கம் இருக்கும். தனது கஷ்ட
சமயங்களில் அவர்களின் துணை அவசியப்படும்.வாழ்வில் அவர்களின் அல்லது அதன் குறுக்கீடு தடுக்க முடியாததாய் இருக்கும். அப்படித் தான் எனக்கும் தமிழுக்குமான பந்தம்.பிடித்த ஒன்றோடு தானே நம்மை
தொடர்புபடுத்திக் கொள்ளத் தோன்றும். ஆமாம் தமிழை எனக்கும் என்னை தமிழுக்கும் ரொம்பவே பிடிக்கும். என் பால்ய காலங்களில் இருந்தே என் வாழ்வோடு தமிழும் தமிழோடு என் வாழ்வும் தொடர்புற்று ஒரு பரஸ்பரத்தை
கொண்டிருக்கின்றன.தமிழை தவிர்த்து பார்த்தால் நானும் என் வாழ்வும் ஒன்றுமற்றதாகிவிடுவோம்.தமிழே என் வாழ்வு. என்னை தமிழோடு தொடர்பு படுத்துகிற அல்லது என்னை நான் தமிழோடு தொடர்பு படுத்தி கொண்ட
சம்பவங்களின் கோர்வை தான் அந்த "நானும் தமிழும்."
எனக்கு இப்படி எல்லாம் எழுத சொல்லிக் கொடுத்தது தமிழ் தான். இதை இதை இப்படி இப்படி இரசி, எதையும் கூர்ந்து நோக்கு, தோற்றுபோ, அழு, காதலி, அது வேண்டாம் விட்டு விடு, கவிதை எழுது, நினைவுகளை சேகரி,
சமூகத்தையும் பார், சுயநலம் தவிர், நிறைய படி, கொஞ்சமாய் பேசு, கூச்சத்தை குப்பையில் போடு, பெண்களை மதி, பெரியார் சொல் கேள், தாய் தந்தை பேணு என்றெல்லாம் சொல்லித் தருவதும் கட்டளை இடுவதும் என்னை
இயக்குவதும் தமிழ் தான்.
என்னை முதன் முதலாய் மேடை ஏற்றி அழகு பார்த்தது தமிழ். என்னை முதன் முதலாய் உள்ளுக்குள்ளேயே கூனி குமையச் செய்தது தமிழ் என் எல்லாத்திலும் தமிழிருக்கிறது.
#அவமானம்
ஒரு நாள் பள்ளி முடிந்து ஆறில்(பேருந்து எண்) வீட்டிற்கு போய் கொண்டிருந்தேன்.இருக்கை இருந்தது. உட்கார்ந்திருந்தேன்.பக்கத்திருக்கையில் பஞ்சுமிட்டை போல் முடி நரைத்த வயதான தாத்தா ஒருவர்
உட்கார்ந்திருந்தார். பொதுவாக பெரிவர்களோடு நான் கொஞ்சம் நிறைய வாயாடுவேன்.என் எண்ண முதுமைக்கு இதுவும் ஒரு காரணம். சக நண்பர்கள் கத்தி கொண்டும் சண்டை வளர்த்து கொண்டும் வந்தார்கள். தாத்தா அவர்களை
பார்த்து ஏதோ சொன்னார். அவர்கள் அமைதியாக வில்லை. உடனே என்னோடு பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.
"எத்தினயாவது படிக்கிற"
"பதினொன்னாவது"
"தமிழ் பாடம் இருக்கா?"
"ம் இருக்கு தாத்தா... நீங்க படிச்சிருக்கிங்களா?"
"ம்ம் படிச்சிருக்கேன். ஏழாங்ளாஸ் வரைக்கும்.பெரியாரை துணைக்கோடல் லாம் இருக்கா?"
"ம்ம் இருக்கு தாத்தா. பரவாயில்லையே அப்போ படிச்ச எல்லாம் இப்போ வரைக்கும் ஞாபகம் வச்சிருக்கிங்க "
"நாங்க படிச்ச படிப்பு வேற.. நீங்க படிக்ற படிப்பு வேற.. எங்க திருக்குறள்ல மொத அதிகாரம் பேரு சொல்லு "
" கடவுள் வாழ்த்து"
" சரி இரண்டாவது அதிகாரம் என்ன? "
" தெரியலையே"
" பதினொறு வருசம் திருக்குறள் படிக்ற.. இரண்டவாது அதிகம் பேரு கூட தெரியல... "வான் சிறப்பு ".. கண்ணு பள்ளிக் கூடம் போறது பெருசில்ல எதையாவது கத்துக்கணும் "
இப்படியாக எங்களுக்குள் ஒரு நெடு நீண்ட சம்பாசனை நடந்தது.
ஆமாம் பதினொறு வருசமாக திருக்குறளின் இரண்டாவது அதிகாரம் என்னவென்று தெரியாமல் படிந்திருக்கிறேன் என உள்ளுற ஒரு மாதிரி இருந்தது. தமிழால் நான் பட்ட முதல் அவமானம்.
#மேடை_ஏற்றமும்_பாராட்டும்.
அடுத்து, அதே வருடத்தில் "மழை நீர் சேகரிப்பு" என்ற தலைப்பில் தமிழம்மா பேச சொன்னார்கள் "நீயும் பேசுறியா.?" என் சக தோழன் ஒருவன் கேட்டான். இல்லை நீயே பேசென அவன் பேசுவதற்கான
குறிப்புகள் திரட்டிக் கொடுத்தேன். கடைசியில் ப்ரேயர் தொடங்கும் முன்னம் வந்து "டேய் இது போட்டியாம் டா நீயும் வாடா" என வலுக்கட்டாயமாக இழுத்து போய் ப்ரேயரில் நிறுத்தி விட்டான். எனக்கு
என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அட்ரீனல் வேறு அதிகமாக சுரந்து கொண்டிருந்தது. தெரிந்த "மாரியல்லாது காரியமில்லை" "கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரம் வான் சிறப்பு. ஆக மழையை தெய்வமென
போற்றுவோம் " "துப்பார்க்கு துப்பாக்கி" யை எல்லாம் நீ பேசென அவனுக்கு எழுதி கொடுத்து விட்டேன்.
என்ன பேசுவதென நான் நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் வெகு நேர்த்தியாக திறம்பட பேசி முடித்தான். கைத் தட்டல் ஒரு முப்பது விநாடிக்கு நிற்காமல் ஒலித்து ஆரம்பித்த ஒழுங்கில்லா தன்மை யோடு நின்றது.
மைக் என் கைக்கு வந்து. "எல்லாருக்கும் வணக்கம்.. மழை நீர் சேகரிப்பு, மழை நீர் சேகரிக்கும் முறையை அனைவரும் தெரிந்து பயன்பெற வேணும், வேண்டும் என தமிழ் நாடு அரசு அதை ஒரு பாடமாகவே
வைத்திருக்கிறது. ஆனால் நாம் அதை கேவலம் ஒரு நான்கு மார்க் கேள்வியாக மார்க் அடிப்படையில் வகைமை படுத்தி அதை படித்து பேப்பரில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றங்களையும் முன்னேற்றங்களையும்
உண்டாக்குவதே கல்வியின் நோக்கம் எனவே இனிமேலாவது மார்க்கு ச்சீ மதிப்பெண்ணிற்காக அல்லாமல் பயன்பெற படிப்போம் நன்றி " என கட கட வென பேசி முடித்தேன். கடமைக்கோ அல்லது என் பேச்சுதிறமைக்கோ
தெரியவில்லை கைதட்டல் கொஞ்சம் அடர்த்தியாக ஒலித்தது.நிறைய பேர் வந்து" அந்த... கேவலம் நான்கு மார்க் செமடா" என்று வாழ்த்து சொல்லி பாராட்டினார்கள்.
அதே வருடம் நான் எழுதிய " புதுமை" " கைம்பெண்" என இரண்டு கவிதைகள் தின தந்தி மாணவர் ஷ்பெசலில் வெளிவந்தது. முன்னம் என் பேச்சுக்கு வாழ்த்தாதவர்கள் கூட வந்து பாராட்டினார்கள்.
புகழேந்தி என்ற என் ஆசிரியர் தேடி வந்து "வாழைப்பூ கால் விரலில், மின்சாரக் கரங்களில்" என நான் எழுதிய கைம்பெண் கவிதையின் வரிகளை சொல்லி வாழ்த்தினார். எனக்கு தேசிய விருதே கிடைத்ததை போல்
அவ்வளவு பெருமையாக இருந்தது. எல்லாம் தமிழ் செயல்.
#தனியடையாளம் :
அண்மையில் ஒரு குரியர் அனுப்புவதற்காக என் கல்லூரி எதிரிலிருக்கிற DTC courier service க்கு கையில் கவரோடு போனேன். மதிய வேளை என்பதால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ரெண்டு பெண்களும் சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்கள். அதிலொரு பெண் ரொம்பவே லாவண்யாக இருந்தாள் . அவள் கீழுதடு நல்ல சிவப்பு. குரியர் அனுப்பனும் என்று போய் நின்ற என்னை பார்த்ததும் அந்த இரண்டு பெண்களுக்கும் கொள்ளை சிரிப்பு.
எதற்கென்று தான் தெரியவில்லை. "சாப்டே வாங்க" என்று ஒரு ஓரமாக வந்து நின்றேன்.என் நல்ல நேரம் அந்த செவ்வுதட்டுக்காரி சாப்பாட்டை பாதியில் விட்டுவிட்டு எழுந்து வந்தாள். வந்து"
பெறுதல்" இன் pin code கேட்டாள். 600017 என்றேன்.computer ல் எதையோ தட்டி பார்த்து விட்டு 70 ரூபாய் ஆகும் என்றாள்
" ம் சரி பிசின் இருக்கா?"
"என்ன?"
"கம் இருக்கா?"
"இல்ல இந்தாங்க Stabler" என்று 'பின்னடிக்கிற மெசினை' எடுத்து கொடுத்தாள்.
பின்னடித்து விட்டு கவரை அவளிடம் கொடுத்தேன். முன்னும் பின்னும் பார்த்து விட்டு. ஏதோ மாதிரி என்னை பார்த்தாள்." என்ன ண்ணா முழுக்க முழுக்க தமிழ் லயே எழுதி இருக்கிங்க" என்று கேட்டாள்.
அவள் அண்ணா சொன்னது வலியாகத் தான் இருந்தது.
"ஏன் தமிழ் ல எழுதினா போய் சேராதா?"
"போகும்.... Phone number கூட அலைபேசி எண் னு எழுதி இருக்கிங்க ல்ல அதான் கேட்டேன்.இங்க வர குரியர் ல... .யாரும் இப்டி எழுதினதில்ல.."
"தமிழ் னா கொஞ்சம் பிடிக்கும் அதான் "
ஏதோ சீட்டில் 'அனுப்புதல்' முகவரியையும், 'பெறுதல்' முகவரியையும் எழுதினாள். தமிழில். உள்ளூர மகிழ்ந்தேன்.
" உங்க கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கு"
"தேங்ஸ் ண்ணா"
"உங்க கையெழுத்த போலவே நீங்களும்"
"புரியல ண்ணா"
" அண்ணா சொல்லாதிங்க... உங்க கையெழுத்த போல நீங்களும் அழகா இருக்கிங்க னு சொன்னேன்"
எதுவும் பேசாமல் சொச்சம் முப்பதை "அண்ணா" இல்லாமல் இந்தாங்க என்று நீட்டினாள்.
❣️ ❣️ ❣️
இப்படியாக எனக்கு கவிஞ அங்கீகாரம் கொடுத்ததும் எனக்குள்ளும் ஒரு எழுத்தாள கர்வத்தை உண்டு பண்ணியதும், இப்போது உங்களிடம் என்னை அறிமுக படுத்தி வைத்ததும் எல்லாமே தமிழ் தான்.தமிழே என் காதலி.
தமிழுக்கும் எனக்குமான ஆத்மார்த்த பந்தத்தை சொன்னாள் சொல்லிக் கொண்டே போகலாம். நன்றி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...