Back

Philosophy

April 23, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

இந்த தனிமையின் பிடியில் இருந்து
தப்பித்து கொள்ள முயல்கிறேன்.

அதுவோ விட்டு பிடித்து விட்டு பிடித்து
எனக்கு விளையாட்டு காண்பிக்கிறது.

ஒரு காட்டுக்குயிலின் சிறகை போல கனத்திருக்கும்
என் மன பறவையின் சிறகிலிருந்து இறகுகளை
ஒவ்வொன்றாய் பிடுங்கி பிடுங்கி
காது குடைந்து களிப்படைந்து கொண்டிருக்கிறது.

மழை மேகம் பார்த்து
அகவி தோகை விரித்தாடும் மயிலென
இசையின் லயத்தை ரசித்து ரசித்து
இந்த ராத்திரியில்
ஆனந்த நடனம் ஆடும் நெஞ்சின்
கால்களை முறித்து விட்டு
உஷ்ணம் கக்கும் நினைவு சிறையின்
உள்ளே தள்ளி கதவடைக்கிறது.

கரையோரம் ஓய்ந்திருக்கும் ஓடத்தை
தன் போக்கில் ஆட்டுவிக்கும் தண்ணீர் போல
இந்த தனிமை
தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கிறது என்னை .

காலத்தின் செயலால்
கிளையிலிருந்து
கழன்று கொண்டு காற்றின் போக்கில்
உழன்று திரியும் இலையை போல
என்னை என் போக்கில்
விட்டு விட்டால் என்ன?

அதனில் இருந்து தப்பித்து
ஓட முயலுமென் முதுகெலும்பை முறித்து தன்னருகில் கிடத்தி விட்டு
வானத்தின் நீளத்தில்
ஒரு குழி தோண்டுகிறது தனிமை.

என்னை புதைப்பதானால்
ஆறடி நீளம்
அதில் பாதி அகலம் போதும்.

எரிப்பதானால்
ஒரு கங்கு நெருப்பு.

அவ்வளவு தான்.

ஏனோ இந்த தனிமை
தோல் பூண்ட ஐந்தடி நீள எலும்பு கூட்டை
புதைக்க
அத்தனை நீள சவக்குழி செய்கிறது.

பள்ளாங்குழி ஆட
குழி தோண்டும் பிள்ளையின்
குதூகலத்தோடு
தோய்வில்லாமல் தோண்டி முடித்து விட்டது.

பேருந்து நிலையத்தில்
ஹாரன் இரைச்சலை தாண்டி
"அம்மா பசிக்குது மா" என
கக்கத்தில் குழந்தையை வைத்து கொண்டு
முகத்தில பாவம் பண்ணி கொண்டு
கை யேந்தும் வாலிப பிராயத்து பெண்ணென
வாய் நிறைய கூவலோடும்
தேம்பலோடும்
என்னை விட்டு விடச் சொல்லி
விடாமல் கத்து கிறேன்.

அது என்னை விடுவதாயில்லை.

சாமிக்கு பூ போடும்
பக்தனின் லாவண்யத்தோடு
என்னை தூக்கி மெல்ல
குழியில் கிடத்தி.....
தன் கிணத்து கண்களில்
கொஞ்சமாய் கருணையூற
எதையோ யோசித்து-பின்
தன் நெடு நீண்ட கால்களையும் கைகளையும்
குறுக்கி கொண்டு
என்னை நெஞ்சோடு நெருங்க அணைத்த படி
எனக்கு தோண்டிய குழியில்
என்னை பிரிய மனமில்லாமல்
தானும் படுத்து கொண்டதந்த தனிமை.
சரி யென்று நானும்
சிரித்து கொண்டே
அதன் அரக்கத் தழுவலுக்கு இணங்கி விட்டேன்.

😔😔😔

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...