Back

Poem

January 17, 2022

கவிதை

SHARE

கவிதை

நெடு நீண்ட நாளாகவே ஒரு சந்ததேகம், ஒரு கேள்வி மனதை அறுத்துக் கொண்டே இருக்கிறது. தமிழ் இலக்கிய தளத்தில் - இலக்கிய தளத்தில் மட்டும் இல்லை - அரசியல் - திரை - என எல்லா துறைகளிலும் கூட - பெண்கள் -
பெண் படைப்பாளிகள் அதிகம் உருவாகவில்லையே ஏன்? அப்படியே உருவாகி இருந்தாலும் ஏன் அவர்கள் பெரிதும் போற்றவும் பாரட்டப் படவுமில்லை?
மேற் கண்ட கேள்விக்கு விடை தேடிப் போனால், இந்த ஆணாதிக்க சமூகம் பெண் மீது கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் வல்லாதிக்கத் தனங்கள் அத்தனையும் பல்லிளித்துக் கொண்டு பதிலாய் கிடைக்கப் பெறுகின்றன.

முதலில் இந்த ஆணாதிக்க சமூகம் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றது. பெண் பிறந்ததே ஆணுக்கு பசித்தால் சமைத்து போடவும், அரித்தால் படுக்கை போடவும் என்பது போல ஒரு அடிமையாக நடத்தி வந்தது.
இதை மீறி அவள் எதாவது வேலைக்கோ தனக்கு பிடித்த துறை சார்ந்தோ இயங்க முயன்றால் தாய்மை, குடும்ப பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு ஆகிய விசயங்களைக் கைக்காட்டி அவளை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது.
இன்னும் இதுவரையிலான வரலாற்றில், பொது அரசியலிலும் சரி, குடும்ப அமைப்பிலும் சரி - பலியாடாகவும் பகடைக்காயாகவும் மட்டுமே பெண்ணைப் பயன்படுத்தி வந்திருக்கிறது இந்தச் சமூகம் . இதையெல்லாம் தாண்டி அவள்
படித்து கேள்வி கேட்டு கொஞ்சமாய் வெளி வந்து வான் நோக்கி அன்னாந்து பெரு மூச்சு விட்ட போது அவளைக் கற்பு கலாச்சாரங்களால் கட்டிப் போட்டது. அவள் உடலைப் புனிதத்திற்கும் தீட்டிற்கும் இடையில் உசலாட
விட்டு வேடிக்கைப் பார்த்தது. நடையில் இருந்து உடையில் இருந்து ஏன் பேசும் மொழியில் கூட அவளுக்கு விதி மற்றும் விதி விலக்குகளை வகுத்து வைத்தது. அவள் உடலின் மீதும் நடத்தையின் மீதும் வன்முறையையும்
கேள்விகளையும் ஆசிட்டையும் அள்ளி வீசியது.
ஆணுக்கென்று வரும் போது, பெண் முலையைப் போல தளர்வாகவும் மென்மையாகவும் இருக்கும் இந்த சமூகச் சட்டங்களும் படைப்பு மொழியும் பண்பாடும் கலாச்சாரமும் குடும்ப அமைப்பும்- பெண்ணென்கிற போது மட்டும் ஏன்
ஆண் குறியைப்போல அத்தனை விறைப்புத் தன்மைக் கொண்டு விடுகிறதெனத் தெரிய வில்லை .
இடை தொடை முலை யோனி என பெண் உடலின் எல்லாத்தையும் இலக்கியத்திலும் மற்ற கலை வடிவங்களிலும் திரையிலும் கதைகளிலும் - உலவ விட்டு - காட்சி படுத்தி - துகிலுரித்து - கவர்ச்சி பொருளாக்கி - கிளுகிளுத்துக்
கொண்டிருக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகத்திற்கு பெண் தன் உடலை, தன் விருப்பத்தை எழுதும் போதும், சுதந்திரமாய் தன்னுடலை கலையாக்கும் போதும், தன்னுடலின் மீதான கற்பு கலாச்சாரக் கட்டுக்கதைகளை உடைத்து
இயல்பாக்க முயலும் போதும் மட்டும் அது ஆபாசமாகவும் சர்ச்சை பொருளாகவும் ஆகி விடுவது எப்படி?
யோசித்து பாருங்களேன். பள்ளி கால இலக்கியத்தில் - பாடப் புத்தகத்தில் எத்தனை பெண் படைப்பாளிகளைப் படித்திருக்கிறீர்கள் நீங்கள் ? ஞாபகத்தின் ஆழத்தில் துழவிப் பார்த்தால் அவ்வையும் ஆண்டாளும்
வருவார்கள். அவ்வை நீதி நெறியாலும் ஆண்டாள் பக்தி இலக்கியத்தாலும் அனுமதிக்கப்பட்டார்கள். இல்லையேல் இவர்களுக்கும் அதோகதி தான். அதை மீறிப்பார்த்தால் வெள்ளி வீதியார் வருவார். அவ்வளவு தான். ஏன்?
அப்போதைய பெண் படைப்பாளிகள் அவ்வளவு தானா? இல்லை. இன்னும் நிறைய பேர் இருந்தார்கள். இருக்கிறார்கள். நிற்க. என்றாவது சங்க காலப் பெண் படைப்பாளிகள் யாருக்கும் ஏன் திருமணம் ஆகவில்லை அல்லது ஏன் செய்து
கொள்ள வில்லை அல்லது ஏன் அவர்களுக்கு பெரிதாக வரலாறு எதுவும் இல்லை - என யோசித்திருக்கிறீர்களா? யோசியுங்கள். அதைப் பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்.
சங்க காலம் தான் இப்படி என்றால் சமக கால படைப்புலகம் இதை விட கேவலம் ; மோசம். நெடு நீண்ட காலமாக எழுதி வந்த அம்பைக்கே இப்போது தான் சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த அம்பையை
யாருக்கெல்லாம் தெரியும் என்றால் எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பம்.
சரி இதே பெரிய வியபாரத் தளமான சமகாலத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உண்டு பண்ணும் தளமான - திரையுலகில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், பின்னணி பாடகர்கள் ..... ஆகிய தளங்களில் யோசித்து
பாருங்களேன். எத்தனைப் பேர் நினைவுக்கு வருகிறார்கள் என்று. அப்படி நினைவுக்கு வருகிறவர்களில் எத்தனைப் பேர் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்கள்? எல்லாமே விடை இல்லாத கேள்வி தான் இல்லையா??
ஆனால் திரைக்கு முன்னாக பார்த்தால் கொஞ்சம் பட்டியல் நீளும். ஏனென்றால் திரைக்கு முன்னால் இருக்கும் பெண் கலைஞர்களைப் பொருத்த மட்டிலும் அவர்களின் திறமையை விட உடல் கவர்ச்சி பெரிதும் வியாபாரம்
ஆகிறது. அதை யொட்டி மட்டுமே ஆன் ஸ்கிரீனில் கொஞ்சமேனும் பெண்கள் அனுமதிக்கப்பட்டும் கொண்டாப்படப்பட்டும் கொண்டிருக்கிறார்கள் என்பது திரைமறைவான உண்மை. ஆனால் இந்த நிலைக்கு வரவும் கூட ஆயிரமாயிரம்
தடைகள் இருக்கிறதென்பதும் மறுக்க முடியாத உண்மை. ஒரு பெண் சினிமாவில் நடித்து விட்டாலே அவள் யாரோடவது படுத்து தான் அந்த வாய்ப்பை பெற்றிருப்பாள் என்று பேசவும் சிந்திக்கவும் செய்கிற கூட்டம் தானே
நாம்?
சரி, மீண்டும் பெரும் புரட்சி செய்கிற, சமூகத்தைச் சீர் செய்து சீராட்டுகிற இலக்கிய தளத்திற்கே வருவோமே. பெண் எழுதுவதை எவ்வளவு கேவலமாகச் சித்திரித்து கேள்விக்குறியாக்கிறது இந்த உலகம். முலை, யோனி
என்று ஆண் எத்தனை முறை எழுதினாலும் கேள்வி கேட்காதாவர்கள் விமர்சனம் செய்யாதவர்கள், அதையே பெண் எழுதினால் இச்சையில் எழுதுகிறார்கள் ; தன் பாலிச்சையைத் தீர்த்துக் கொள்ள எழுதுகிறாள்; "ஆண்கள்
எழுத வருவது, மக்களுக்காகவும் சமூக மாற்றத்துக்காகவும். ஆனால், பெண்கள் எழுத வருவது, பாலியல் போதாமைக்காக" என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிமட்டமான விமர்ச்சனத்தை முன் வைக்கிறது இந்த
ஆணாதிக்கக் கூட்டம். நிற்க. ஆமாம் அவள் அப்படியே எழுதினாலும் என்ன தப்பு எனக் கேட்கிறேன்.? தன்னளவில் செழிக்காத மரம் யாருக்கு என்ன தந்து விட முடியும்? எதை எதையோச் சொல்லி, அடிமையாக
வைக்கப்பட்டிருந்தவள் விடுதலை அடைந்து முதலில் தன்னை தன் விருப்பத்தை தன் உடலை தன் சுதந்திரத்தை தானே எழுது தப்பில்லையே. ஆனால், பெண் விடுதலையாக சுதந்திரமாக இருப்பது இங்கு ஆண்களுக்கு பெரும்
பொச்செரிச்சலாக இருக்கிறது.
பெண்ணாகச் சொல்லப்படுகிற சித்தரிக்கப்படுகிற வர்ண்ணிக்கப் படுகிற தமிழ் மொழியே பெண்ணுக்கு எதிரானதாக இருக்கிறது என்பது எவ்வளவு மோசம்? இந்திந்த சொற்களை பெண் பேச கூடாது. இந்திந்த விசயங்களை பெண்
எழுதக்கூடாது. இந்திந்த விசயங்களை பெண் படிக்க கூடாது. எவ்வளவு அபத்தமான சட்டங்கள் இவை. பெண்ணை முன்னிறுத்திய படைப்புகளை - அதுவும் கவர்ச்சியாகவும் - புனிதமானவளாகவும் - குடும்பப் பெண்ணாவும் -
ஒருத்தனுக்கு ஒருத்தியாக இருக்கிற கலாச்சார காதலியாகவும் இருந்தால் மட்டுமே - கொண்டாடும் சமூகம், பெண்ணின் படைப்புகளை நிராகரிப்பது ஏன்? காரணம் அவள் சுயமாக சிந்திப்பது பிடிக்க வில்லை. காரணம் அவள்
கேள்வி கேட்பது பிடிக்க வில்லை. காரணம் அவள் தன்னளவில் சுதந்திரமானவளாய் இருப்பது பிடிக்க வில்லை.
இப்படியாக இன்னும் ஏராளமாகச் சொல்லிக் கொண்டே போகலாம். உதயநிதியை விடவும் அரசியலில் நெடு நீண்டகாலமாய் இயங்கி வந்தும் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும், சமத்துவம், அம்பேத்கரியம் பெரியாரியம்,
கடவுள் மறுப்பை எல்லாம் பேசும் முற் போக்குக் கட்சியின் உறுப்பினரான எம்பி கனிமொழி யின் மொழியிலே சொன்னால்
"எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக்கொள்வதுமில்லை உமது கவிதைகளில்
யாம் இல்லை
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத்தந்ததே நான்".

  • நன்றி தொடர்ந்து உரையாடுவோம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...