Back

Poem

April 29, 2019

கவிதை

SHARE

கவிதை

#இன்னும்_கொஞ்சம்_தூரம்.

முழு கை சட்டை. கட்டம் போட்டது. சிகப்பும் நீலமுமாய்.வெள்ளை நிற பாண்ட். எந்த கட்சியையும் எந்த கொள்கையும் அவனோடு தொடர்பு படுத்தி விடாதீர்கள். அவனை பார்த்தால் அப்படி தெரியவில்லை. அடர்ந்து நீண்ட
தலை மயிர். முகத்தை முக்கால் வாசி மூடிய தாடி. கையில் என்னவோ வைத்திருக்கிறான். பாட்டில். அதிலிருப்பது என்ன வஸ்துவோ. மதுவோ? விசயமோ? ரெண்டுமே ஒரு விதத்தில் ஒன்று தான்.
சித்திரை வெயில் பயங்கர உக்கிரம். தோலெல்லாம் எரிகிறது. செருப்பில்லாமல் எப்படி தான் நடக்கிறானோ.? நின்று விட்டான். காலை மேலுயர்த்தி பாதத்தை பார்த்து அதிலிருந்து எதை பிடுங்கி எறிகிறான். முள்ளேறி
விட்டது போல. நெருஞ்சி முள்ளாகத் தான் இருக்கும். பாவம். இருபது வயது இருக்கும்.வாலிப பிராயம். ஆனால் ஏதோ பித்து பிடித்தவன் போல தன்னோடு தானே பேசிக் கொண்டு நடக்கிறான்.
அவனுதட்டில் கடும் வறட்சி. ஆற்றோர களிமண் நிலமாய் அதில் அத்தனை வெடிப்பு. அவன் உளறல் கிணற்றாழத்திலிருந்து பேசும் குரல் போல மெதுவாக விட்டு விட்டு கேட்கிறது எனக்கு.
"இருந்தா என்ன? செத்தா என்னவாம். சாவுறேன். ஓரே அடி.....செத்...... யறேன். அப்பறம் யார திட்டு வாங்க னு பாக்றேன். நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? ஆடு மாடு க்ஓ... இ, கு....அ,யானை பன்னி நரி
கொரங்கு எல்லாம் தான் குட்டி போடுது. வளர்க்குது. ஆனா அதுங்க லாம் எந்த நிபந்தனையும் அதுங்க குழந்தைங்க பேர் ல வைக்றதில்லயே. இந்த மனுசங்க மட்டும் தான் எதிலுயுமே அதீதம். வளர்ப்புலயும் சரி.
எதிர்பாக்றதுலயும் சரி. நிபந்தனை இல்லாம இங்க எதுமே இல்ல போல. அன்பும் தான். அம்மா அப்பாவே இப்படி சொல்லிடப்றம் எதுக்கு இருக்கனும்? ம்ம்.? அங்க அம்மா அப்பா மட்டும் தான. பெத்தவங்க இல்லயே. தவமா
தவமிருந்து பெத்தேன் தவமா தவமிருந்து பெத்தேன் னு சொல்லிட்டு இப்போ தத்து பிள்ள னு சொல்றாங்க. இத்தனை நாள் காட்டின அன்பு, ப்ஆ.....ம் எல்லாம் பொய் போல. ஏன் இத இப்போ சொன்னாங்க. என்னைய பெத்தவங்க
யாரு? நான் இனி அநாதையா? ஐயோ..... ஓஓஓஓஓ. தல சுத்துதே."
பாவம் அழறான். ஐயோ னு இருக்கு. தேம்பி தேம்பி அழறான். பேச்சே இல்ல. வெறும் அழற தேம்பல் சத்தம் மட்டும் தான் கேட்குது. வார்த்தையற்ற அழுகை. இடி மின்னலற்று சோவென பெய்கிற மழை போல அழுகிறான். ஓவென.
அழுதாலும் நடப்பதை நிறுத்த வில்லை. நடந்து கொண்டே அழுகிறான். அழுது கொண்டே நடக்கிறான். எதை நோக்கி நடக்கிறான்.? எதற்காக நடக்கிறான்? சற்று நடை தளர்கிறது. சட்டை தொப்பரையாக நனைந்து விட்டது. வேர்வையா
இல்லை அழுத ஈரமா? தெரியவில்லை. பாட்டிலை திறக்கிறான். ஒரு கல்ப் குடித்து விட்டு இடுப்பில் சொருகிக் கொண்டான். அதே இடத்திலிருந்து வேறு எதையோ எடுக்கிறான். மாலை நேர சூரிய ஒளியில் பள பள வென
மின்னுகிறது அது. கண்ணெல்லாம் கூசுகிறது. கத்தி. ஐயோ யாரை குத்த போகிறானோ. அவன் நிதானமாகவே இல்லை. கத்தியை தடவி பார்கிறான். இரத்த சிவப்பு அதன் விளிம்பில் வழிகிறது. இரத்தமே தான். பதம் பார்க்க தடவிய
அவன் கையை பதமாக கிழித்து சிவப்பாக சிரிக்கிறது கத்தி.
இரத்தத்தை பார்த்தவுடன் வெறிச் சிரிப்பொன்று சிரிக்கிறான். சத்தமாக. நானே மிரண்டு விட்டேன். அவன் சிரிப்பு சத்தம் தூரத்து பாறைகளில் முட்டி ஆயிரமாயிரம் குரலாய் எதிரொளிப்பு செய்கிறது. மீண்டும் குரல்
அதிர அதிர கையிலிருந்து இரத்தம் உதிர உதிர பேசிக் கொண்டே நடக்கிறான்.
"வாழ்க்கைல எதுமே நிரந்தரம் இல்லயா.? அவ வந்தா. கொஞ்ச காலம் இருந்தா போய்ட்டா. இவங்களும் போனு சொல்லிட்டாங்க. எங்க போவேன்.?"
"ஏய்.. என்ன வேணும் உனக்கு. கடிக்கனுமா வா கடி"
அவனை பார்த்து குரைத்த நாயை கூப்பிடுகிறான். கடிச்சிட போகுது. உர்ர்ர் உர்ர்ர் என்றபடி பின்னுக்கு போகிறது நாய். இவனும் விடாமல் அதை நோக்கி நடக்கிறான். சட்டென நின்று விட்டான். ஏதோ உளறுகிறான்.
கொஞ்சமாய் சாந்தப்பட்டு நாயை கூப்பிடு கிறான்.
" வா. உனக்கு என்ன பேரு? (வௌவ்.. உர்.. உர்) தெரியலையா.. சரி நீ சிகப்பா மாநிறமா இருக்க. உன்ன செவலையானனு கூப்டுறேன். செவலையா, நீ நாய் இல்ல டா எனக்கு அறிவு தந்த ஞானி.ஆமா. வா டா. நீயாச்சும்
என் கூட இரேன். வர மாட்டியா.?"
மறுபடியும் அழறான். வாழ்க்கை ரொம்ப கொடுமையானதாக தோன்றகிறது.அவனை பார்க்கும் போது.
அவன் சுற்றிலும் பார்க்கிறான். மேற்கில் சூரிய அஸ்தமனம் நடந்து கொண்டிருக்கிறது. அவன் நின்ற இடத்திலிருந்து கொஞ்ச தூரத்திலுயரந்து நின்றிருந்த கோவில் கோபுரத்தின் உருவங்கள் எல்லாம் தெய்வமாய் இருந்து
கருக்கிருட்டில் பேய் பூதமாய் ஆகிக் கொண்டிருந்தன. பறவைகள் கத்திக் கொண்டே அவன் நடந்த அதே மேற்கு திசை நோக்கி பறந்தன. கோவிலை பார்த்தவன் சிரித்தான். சிரித்து விட்டு ஏதோ உளறினான்.
"மடப்பயலுக. கல்லுக்கு எதுக்கு டா கோபுரம். பூஜை புனஸ்காரம்? பேத்தனமா தெரியலயா இவங்களுக்கு."
இப்படி பேசிக் கொண்டே இருந்தான். மெல்ல வாய் ஓய்ந்து பின் என்ன நினைத்தானோ தெரியவில்லை. அந்த கோவிலிருந்து தெரிந்த மஞ்சளொளியை பார்த்து கை கூப்பி வணங்கி விட்டு நாயை பார்த்தான். பார்த்தவன்..
" சரி நான் போறேன் செவல"என நாயிடம் சொல்லிவிட்டு முன் நடந்த அதே மேற்கு திசை நோக்கி நடக்கிறான். நாய் குரைத்த படி அவனை தொடர்கிறது. கடிக்க போகிறதா? இல்லை அவனை தொடர போகிறதா? நடந்தவன்
தள்ளாடி நின்று மீண்டும் திரும்பி நாயை பார்க்கிறான்.
" செவலை..உன்ன மாதிரி தான் டா இந்த உலகத்துல இருக்க எல்லோரும், நெருங்கி போன தூரமா போவாங்க. விட்டு போனா விடாம துரத்தி வருவாங்க."
"ச்சீ. இல்ல.இனி மனுச பயலுகள பத்தி இனி யோசிக்கவே கூடாது. உன்ன மாதிரி தான்டா இந்த சாவும். வா வா னு கூப்டா வராது. எவன் அத கண்டு மிரண்டு ஓடுறானோ அவன துரத்தும். பாரேன். நான் விசத்த குடிச்சு,
கைய கிழிச்சு கிட்டேன். ஆனா சாவு வரல. இன்னும் உயிரோட இருக்கேன். என் கூட வாழ, இந்த சாவு கூட வார மாட்டேங்குது பாத்தியா.? உன் கிட்ட எதுக்கு இத சொல்றேன்? உனக்கு என்ன புரியவா போகுது. போ. "

அந்த நாய் அவனை மிரள மிரள பார்த்து கொண்டு நிற்கிறது. உர்ர்ர் உர்ர்ர் என்று கத்தி கொண்டிருந்தது இப்போ வாலை ஆட்டி ஆட்டி குலைகிறது. அவனுடைய சோகத்தில் அதுவும் பங்கெடுக்க ஆசை கொண்டு விட்டதை போல அவனை
தொடர்கிறது அது.
இருட்டி விட்டது. அவனுருவம் கருங்கோடுகளாக மட்டுமே தெரிகிறது. எட்டி விடுகிற தூரத்தில் ஒரு கற் கரடு தெரிகிறது.அதே கருங்கோடுகளாய். அதன் உருவம் கரடியை போல இருக்கிறது. நாய் அவனை பின் தொடர்கிறது. அதை
பற்றிய பிரக்ஞையற்று அவன் தன் போக்கில் நடக்கிறான். தள்ளாடியபடி. மந்திரம் போல, கவிதையை போல, எது எதையோ முனு முனுத்த படி.
"May.லே ஆகாசம். கீழே பூமி. பின்னே நாய்.
முன்னே இருள். இவற்றிற்கெல்லாம் நடுவில் நான். கண்ணே விளக்கு. கால் போனதே பாதை. பெண்ணே பேய். விண்ணே இடிந்து விழு. சாவே என்னை தழுவி அழு."
இருள் முழுதாய் உலகை சூழ்ந்து விட்டது. தடமே தெரியவில்லை. வானில் நிலவும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் விண் மீன்கள் மட்டும் மினுக்கி கொண்டிருக்கின்றன. இருள் கோரமாய் வளர்ந்து நிற்கிறது. யாரும்
எதுவும் தெரியவில்லை. எல்லாம் இருள் எங்கும் இருள். டப் டப். தரக் தரக். இப்படியாக, இன்னும் எழுத்தில் அடங்காத சப்தங்கள். அதோடு அவன் முனு முனுப்பொலி. தூரத்தில் கோட்டான் கத்துகிறது. கரட்டை ஓட்டிய
வண்டி தடத்தில் வாகனங்கள் பீங் பேங் உர் ட்டுர் டுர் என்று சப்தித்த படி போய் கொண்டிருக்கின்றன. இடையிடையே மனித குரல்களும் கேட்கின்றன. நிலா எங்கிருந்து அரை முகமாய் எட்டி பார்க்கிறது.எல்லாம்
மங்களாய் தெரிகின்றன.
அவன் இப்போது கரட்டை சுற்றி நடந்து உழுது போட்டிருந்த ஒரு காட்டில் நடந்து போய் கொண்டிருந்தான்.பின்னே நாயும்.இன்னும் அதே போல புலம்பி கொண்டே இருக்கிறேன்.
"நானொரு நாடோடி. தாய் தந்தை யாரோடி. அன்பே அருள் புரி. சிவமே அருள் புரி. சாவே வந்தேனே உனை தேடி. நானும் ஓடோடி. வா செவலை.. வந்து என்னை கடி கடி.."
நிலா அவன் பித்துப் புலம்பலை கேட்கவும் பார்க்கவும் முடியாமல், மேகத்தினூடோடி ஒளிந்து கொண்டது. மங்களாய் தெரிந்தவையும் இப்போது தெரியவில்லை. அவன் சப்தமும் நாய் குரைப்பும் மட்டுமே கேட்டுக்
கொண்டிருக்கிறது.
" வா.. வா.. வா. தொடு, கீறு, குத்து, தாவு"
" லொல், லொல் லொல்.."
"ஆகா எத்தனை பிரகாசம். எத்தனை ஒளி. சகி உன் கண்ணை போலவே மரணம் என் கண் முன்னே கோடி சூரியனாய் ஒளிர்கிறது. வருகிறேன் சகி. நீ கட்டிக் கொள்ள போகிறவனின் விந்தில் நுழைந்து உன்னில் வளர்ந்து உன்
பிள்ளையாக வருகிறேன். அம்மா நீ சொன்னா படி சாக போகிறேன் அம்மா. இன்னும் கொஞ்ச நேரம், கொஞ்ச தூரம் தான். செவலையா, இருக்கியா, இங்க வா.. இப்பவும் வர மாட்டியா? யாரையாச்சும் கட்டி கிட்டு அழனும் போல
இருக்கு இங்க வாயேன். (லொல் லொல்) "
" வந்துட்டியா.. "
"கடிக்காதடா.. மரணம் என்னை அகல வாய் திறந்தழைக்கிறது "
" எங்க இழுக்குற.. செவல விடு "
" கீறாத டா"
" வந்தாய் சகி. வாழ்வே நீயானாய் சகி. போனாய் சகி.நீ விடல கத்தில குத்திடுவேன்.. விடு டா "
" மரணமே, மரணமே, சகி சகி....அன்பே கடவுள், அன்பே மரணம்"
" சொன்னேன் கேட்டியா.. ஓடி போ.. கொஞ்சமாய் தான் கிழிச்சிருக்கேன் "
" மன்னிச்சுகோ உன்னைய கிழிச்சதுக்காக என்னையையும் கிழிச்சுக்றேன். செவல.. செவல.. போகவா "
"இங்கு தானே இருந்தது. எங்க போச்சு? "
இந்த பேரிருட்டில் தனக்கு தானே பேசிக் கொண்டு எதை தேடுகிறான். செவலையனும் இருக்கிறான். வேறு யாரை தேடுகிறான். பைத்தியம் முற்றி விட்டதோ. இருட்டில் அவன் கண்ணொளி இரண்டு சுடராய் தெரிகிறது.
" ஆஆஆஆஆஆஆ... ஐயோ.. "
தண்ணீரில் ஏதோ கல் விழுந்தது போல் சப்தம்.
"வௌவ் வௌவ்"
செவலையன் விடாமல் கத்துகிறான்.
இருள் மௌனமாய் உறைந்து நிற்கிறது.
வௌவ் வௌவ் எனும் செவலையனின் குரைப்பொலி இருளின் மௌனத்தை பூதாகரமாக்கி காட்டியது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தண்ணீரில் ஏதோ விழுந்தது போலான சப்தம். செவலையனின் குரைப்பொலியும் அடங்கி போனது. இயற்கை மிக
மிக விசித்திரமானது.இவ்வளவு நேரம் ஒளிந்திருந்த நிலா ஆளரவமே இல்லாததால் ஒளிஞ்சாட்டாம் ஆடும் குழந்தையை போல மேகத்திலிருந்து வெளி வந்து மெல்ல மெல்ல எட்டி பார்த்தது. இருட்டி விலகி மங்களான வெளிச்சம்
தெரிந்தது. அவனும் செவலையுனுமிருந்த இடத்தில் இப்போது கிணறு இருந்தது. நிலா நீரில் மிதந்து போய் அவனையும் செவலையனையும் தொட்டு தடவி எழுப்பியது. இருவரிடத்தும் அசையவில்லை. எப்படியோ விசம் குடித்து,
கத்தியால் அறுத்து, கிணற்றில் குதித்து இறுதியாக சேர வேண்டிய இடம் சேர்ந்து விட்டான் அவன். வாழ்வதில் அவனுக்கு அத்தனை வெறுப்பு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...