Poem
May 22, 2018
கவிதை
SHARE

❣️நெஞ்செலும்பு முறித்து
இரு மாரிடையில் துடித்து கொண்டிருக்கும்
இதயம் கொரித்துண்கிறது
இந்த இரவின் பெருந் தனிமை.
❣️எங்கிருந்தோ வருமொரு
காற்றின் அலைவரிசையில்
தொலைந்து கொண்டிருக்கிறேன்.
❣️ஒளி ஆண்டு தொலைவில்
ஒளிர்ந்து கொண்டிருக்குமொரு விண்மீனில்
எனக்கான அன்பு மிச்சப்பட்டிருப்பதாய்
இருண்டு கிடக்கும் வானை
வெறித்து கிடக்கிறேன்.
❣️தூக்க நிலையிலும்
தாயின் முலை காம்பென
தன் கீழுதட்டை சப்புகிற குழந்தையை போல்
பழக்கப்பட்ட பாடலொன்றை திரும்ப திரும்ப முணுமுணுக்கிறேன்
இடையிடையே
வறண்டு விடுகிற அடி உதட்டை சப்பி
எச்சில் தடவி கொள்கிறேன்.
❣️வெடித்து சிதறும் தருணத்திற்கு முந்தி
லாவா கக்கும் எரிமலையாய்
தனிமை
உஷ்ணம் கக்கி
என் உடலின் உள்ளீரத்தையும் உறிஞ்சுகிறது.
❣️இலையுதிர் கால பொழுதின்
வெயில் சூழ்ந்த பகலில்
இலையடர்ந்த மரமொன்றின்
நிழல் தேடி அலையும் பறவையென
நாம் பழகி கொண்டதில்
நீ அன்பாயிருந்த நாளொன்றை
நினைவு கூற முயல்கிறேன்.
எல்லா நாளும்
வெறுப்பும் வெறுமையுமாயே இருக்கிறது.
❣️பெர்முடாவென
செலுத்துகிற அன்பை எல்லாம்
உள்வாங்கி கொள்கிறாய்.
அன்பிற்கு உன்னில் அத்தனை வறட்சியா?
பாவம் நீ.
❣️நானீந்த அன்பின்
வர்க்கத்தின் மூலத்தையாவது செலுத்து.
உன் அன்பு வறட்சி போக்கவேனும்
இன்னும் கொஞ்ச ஆண்டுகள்
உயிர் வாழ்ந்து போகிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...