Back

Article

July 3, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

சிறுகதை..

#பசி

ஒரு ரூபாயும் இல்லாமல் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்களை கடத்தி விட்டத்தில் எனக்கு ரொம்ப கர்வ கௌரவமாக இருந்தது. நான் அடிக்கடி சொல்வதை போல் காசில்லாமல் வாழ்தல் எளிதென்ற நினைப்பே வந்து
போனது.பூசன் என்கிற பிரசாந்த் கொடுத்த பத்து ரூபாயில் ஒரு டீயும் பிஸ்கட்டுமாக நேற்றைய பொழுது பாதி பசி யோடு இனிப்பாகவே முடிந்தது. ராத்திரி தூங்கும் முன் நிறைய நினைப்புகள் வந்து வந்து போயின. எதை
எதையோ நினைத்து வெகு நேரம் கொட்ட கொட்ட முழித்தபடி உறங்காமல் புரண்டு கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் என்பது தெரியவில்லை. கடைசியாய் மொபைல் க்ளாக் ல் 2.35 am என பார்த்ததாக ஞாபகம். கண்களை மூடி
திறந்ததை போலத் தான் இருக்கிறது. மொபைலில் 8.13 am காட்டியது.
அவசர அவசரமாக எழுந்து மாடிக்கு போய் சன்சைடில் இறங்கி கடிக்க ஏதுவாக என்னை போலவே மெலிந்த ஒரு வேப்பங் குச்சியை ஒடித்து கடித்து மென்று வாழ்க்கையை விட மோசமாக கசக்கிற அதன் கசப்பினை சகித்து கொண்டு
ஈறுகள் கிழிபட பல் தேய்த்து முடித்து, வாய் கொப்பளிக்க போய் குழாயை திறந்தால் நேற்று பிறந்த குழந்தை மூத்திரம் போவதை போல சொட்டு சொட்டாக ஒழுகியது.உடனே கசந்த வாயோடு கையில் வாளியும் இடுப்பில்
துண்டுமாய் ஹாஸ்டலின் பின்பக்கம் இருந்த open bathroom க்கு சென்று Indian toilet ல் இருக்கிற சௌகரியம் வேறெந்த Western toilet லிலும் இல்லை என்ற அனுபவத்தோடு, போக வேண்டியதை எல்லாமும் போய், இப்போது
நிற்பதா பிறகு நிற்பதா என்று ஒழுகி பயங்காட்டி கொண்டிருந்த குழாயின் புண்ணிய தீர்த்தத்தில் ஈரம் சொட்ட சொட்ட நூலளவு தடிமனும் ப்ளேடளவு புறப்பரப்பும் கொண்டு கையோடு ஒட்டிக் கொண்டுலவிய சோப்புத் துண்டை
தேய்த்து குளித்து நேற்றைக்கு முன் தினம் அறையும் குறையுமாய் துவைத்து போட்ட கருப்பு சட்டையையும் புளூ கலர் கால் சராயையும் மாட்டி ஜீப் எல்லாம் போட்டுக் கொண்டேனா என்று செக் செய்து பெல்படை சுற்றி
மொபைலை பார்த்தால் மணி 8.47am. அவசரமாக தட்டை தூக்கி கொண்டு மெஸ் க்கு ஓடினேன். நூடுல்ஸ். அது எனக்கு குமட்டுகிற வஸ்து. பசிக்கு தின்றாக வேண்டுமே என கொஞ்சமாய் போட்டு வந்தேன். ஒரு வாய் மென்று
விழுங்கியதுமே என்னமோ போல் இருந்தது. அப்படியே கொட்டி விட்டு க்ளாஸ்க்கு கிளம்பி விட்டேன். என்னுடைய கெட்ட நேரம் பர்ஸ்ட் அவரோடு க்ளாஸ் இல்லை என்று சொல்லி விட்டார்கள். பசி வயிறை எரித்தது. வெட்டியாக
இருந்தால் தான் பசி தெரியுமென்று ரூம் க்கு வந்து முடிக்காமல் இருந்த "ஜே. ஜே சில குறிப்புகள் " ஐ எடுத்தேன். 78 ஆம் பக்கத்தை திறந்தேன். கடைசியாக வாசித்த போது பாலு வின் அப்பா எஸ். ஆர்.
எஸ் ம் அவருடைய சிநேகிதரான டாக்டர் பிஷாரடியும் திருநக்கரை பஜார் மருந்து கடை தேவசக் குட்டியின் புது ஆஸ்டின் 8 ல் சம்பத் பங்களாவிற்கு போய் அங்கு வரையப்பட்டிருந்த ஓவியங்களையும் வரைந்து கொண்டிருந்த
ஓவியரையும் பார்த்து கொண்டிருந்தார்கள். விட்ட இடத்தில் இருந்து படிக்க தொடங்கினேன்.
"ஓவியர் ஆங்கிலத்தில் சொன்னார் ஒவ்வொன்றையுமே நன்றாக பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி சில சமயம் தூரத்தின் இடைவெளி.
ஓவியர் சொன்னது இருவருக்குமே புரியவில்லை."

இந்த ஒரு பத்தி தான் வாசிக்க முடிந்தது. ஓவியர் சொன்னது அந்த இருவருக்கு மட்டுமல்ல எனக்குமே புரியவில்லை. மூடி வைத்து விட்டேன். பசியில் என் வயிற்றுக்கு வாய் முளைத்து விட்டது. Hcl ன் எரிச்சல்
தாங்காமல் வயிறு வாய் திறந்து கத்த ஆரம்பித்து விட்டது. கொடிதினும் கொடிது இளமையில் வறுமை என்று தோன்றியது. பசியாற்ற ஒரு டீ குடிக்க கூட காசில்லாமல் திரிதலை என்பது வாழ்வின் கொடுங்கணங்கள் என்றால்
கொஞ்சமும் மிகையில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. நேற்று சாய்ந்தரம் பிடித்து வந்து வைத்திருந்த தண்ணீரை குடித்து Hcl ஐ dilute செய்ய முயற்சி செய்தேன். ஒரே உப்பு. குடிக்கவே முடியவில்லை. த்தூஊ.
துப்பி விட்டேன். ரெண்டு மூன்று வாரமாக காலேஜ் எங்கிலுமே சிறுவாணி வரவில்லை. ஏதோ சம்பள பாக்கி தராததால் தண்ணீர் திறந்து விடவில்லையாம்.பசி. கடையில் சாப்பிடலாம் என்றால் கையில் காசில்லை.டிங்.
மொபைலுக்கு ஏதோ மெசேஜ் வந்திருந்தது. ஓபன் செய்தால்
Your AC XXXXX137123 Debited INR 17.70 on 03/07/18 -MAB SB Debit . Avl Bal INR 75.70.Plz download Buddy. என்றிருந்தது.
இன்னும் ஒரு முப்பது ரூபாய் இருந்தால் நூறு ரூபாய் உருவலாமே. யார் யார்க்கோ கால் செய்து 30 ரூபாய் transfer செய்யச் சொல்லி கேட்டேன். எல்லாரும் தன் இல்லாமையையும் இயலாமையையும் விளக்கினார்களே ஒழிய
யாரும் உதவவில்லை. வறண்டாவில் குறுக்குமறுக்காக நடந்து கொண்டிருந்தேன். தெய்வ தாட்சண்யமாக வறாண்டாவில் எதிர்பட்ட மொட்ட அருண்குமார் கேட்ட மாத்திரத்தில் 30 ரூயாய் transfer செய்து விட்டான். மெசேஜ்ம்
வந்தது. Avl Bal INR 105.70 எனவும் காட்டியது. உடனே ஏடிஎம் கார்டை எடுத்து கொண்டு போய் சொருகி கடவெண்ணை உள்ளிட்டு 100 ரூபாய் உருவ முற்பட்டேன்.கடக் கடக் என பணம் எண்ணுகிற சத்தம் கேட்காமல் சரக் சரக்
என்ற சத்தத்தோடு Insufficient balance என்ற வாசகத்தை சுமந்து ஒரு துண்டு சீட்டு வந்தது. டிங். Your AC XXXXX137123 Debited INR 25 on 03/07/18 -MAB SB Debit . Avl Bal INR 85.70 Plz download buddy.

வாழ்க்கை சூன்யமானது. வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளில் sbi காரனை திட்டி தீர்த்து விட்டு ஏடிஎம் கதவின் கைபிடியை இழுக்க முற்பட்டேன்.
ஒரு வயதான அம்மா கதவை திறந்து ஏடிஎம் கார்டை நீட்டிக் கொண்டு
"தம்பி இதுல பணம் எடுத்து கொடுப்பா" என உள் நுழைந்தாள்.
"ம் கொடுங்க மா"
"ஆறு அஞ்சு "
"கொஞ்சம் இருங்க ம்மா"
"ம் இப்போ சொல்லுங்க ம்மா"
"ஆறு அஞ்சு"
"ம்"
"ஆறு அஞ்சு "
பசி மயக்கத்தில் pin நம்பர் ஃபோர் டிஜிட் என்பதையும் மறந்து
"அவ்வளவு தானா?" என கேட்டேன்.
அந்த அம்மாள்
"ஆறு அஞ்சு ஆறு அஞ்சு" என அழுத்தமாக சொன்னாள்.
" எவ்வளவு எடுக்கனும்"
" ஆயிரம் "
கடக் கடக்.
"ம் இந்தாங்க ம்மா"
" அப்படியே மீதி எவ்வளவு இருக்கு னு பார்த்து சொல்லுப்பா"
வயிறுக்குள் கழுதை கனைத்தது. தீடீரென ஒரு கெட்ட புத்தி. மனது வேண்டாம் என்றது வயிறு பசிக்கிறதென்றது.வயிறும் மனசும் மோதிக் கொண்டன. மௌன யுத்தம். கடைசியில் வயிறே வென்றது.
அந்த அம்மா கொடுத்த ஏடிஎம் கார்டை சொருகி உருவினேன். சரக் சரக். 611 ரூபாய் இருப்பதாக சொல்லியது துண்டு சிட்டு. வயிறு 511 என்று சொல்லச் சொல்லியது.
"எவ்வளவு இருக்கு ப்பா"
"ம் ஒரு நிமிசம் ம்மா"
ஒரு நிமிசம் முடிந்தது. அந்த அம்மாளின் இருப்பில் இருந்து நூறு ரூபாய் என கார்டில் ஏறி யிருந்தது.
கையிலிருந்த ஆயிரத்தையும் ஒன்றுக்கு இரண்டு தடவை எண்ணிக் கொண்டிருந்தவள் நான் செய்த காரியத்தை கவனிக்க வில்லை.
"ஐ நூத்து பதினொறு ரூபா ம்மா"
ஆயிரத்தையும் இடுப்பில் சொருகி கொண்டு
"தேங்ஸ்ச்" என்று குழறு தமிழில் சொல்லி விட்டு போனாள்.
நானும் நூறை உருவிக் கொண்டு ஏடிஎம்ஐ விட்டு வெளியே வந்தேன். வயிறு மனசும் மறுபடியும் சண்டையிட்டு கொண்டிருந்தன.டிங். டிங். நூறு ரூபாய் ஏறியதற்கும் எடுக்கப்பட்டதற்குமான மெசேஜ். மணி 11.23Am
என்றிருந்தது.மொபைலை பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். கால்கள் தன் போக்கில் நடந்து "அய்யா" வாக இருந்து "டாம்" ஆக மாறி தற்போது "சோழா" வாக உருப்பெற்றிருந்த ஹோட்டலுக்கு
கூட்டிச் சென்றது.ஒரு சிக்கன் ரைஸ் ஒரு ஆம்ப்ளேட் என 85 ரூபாய்க்கு தின்று விட்டு மீதி பதினஞ்சை வாங்கி சாயந்தரம் டீ க்கும் பாதுசாவுக்கும் என பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஹாஸ்டலை நோக்கி
நடந்தேன்.பாக்கெட்டில் இருந்த மூன்று ஐந்து ரூபாயையும் க்ளிங் க்ளிங் என்று சத்தமிட்டு கொண்ருந்தன.இப்போது பசி இல்லை.வயிறு புடைத்து நின்று கத்துவதை நிறுத்தி இருந்தது. மனசு மட்டும் வயிறை விட
கனமாகவும் கத்தி கொண்டும் இருந்தது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...