Back

Article

December 22, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

#சிறுகதை
#நான்_போகிறேன்.

சூரியன் பார்த்து மலரும் தாமரை போல விடுமுறை நாட்களில் ஊருக்கு போகும் போதெல்லாம் அவள் ஞாபகம் நெஞ்சில் மலர்ந்து விடும்

இன்னும் எளிய முறையில் சொன்னால் என் வீட்டு வாசலில் கால் வைத்த உடன் என்னை மோப்பம் பிடி‌த்து கொண்டோடி வரும் என் வீட்டு நாய் குட்டியை போலத் தான் அவள் நினைவு.

ஆமாம் இப்போது என் ஊருக்கு தான் வந்திருக்கிறேன்.

என் பால்ய கால சிநேகிதர்கள் என்று அட்டவணை படுத்தினால் அவள் மட்டும் தான் இருப்பாள். என்னை விட நான்கு வருடம் மூத்தவளும் என்னுடைய முறை பெண்ணும் கூட. அவளை அக்கா என்று கூப்பிட சொல்வார்கள். ஒருநாளும்
அவளை நான் அப்படி கூப்பிட்டதில்லை.
அவள் மீது எனக்கும் என் மீது அவளுக்கும் அப்போதிருந்த பிரியத்தை என்னவென்று இப்போதும் சரியாய் சொல்ல முடியவில்லை. என் அத்தை இறந்து விட்டதால் அவள் எங்கள் வீட்டில் பாட்டி மற்றும் என் அப்பா அம்மா
வின் மேற்பார்வையில் தான் வளர்ந்தாள்
சின்ன வயதில் எங்கு போனாலும் என்னை உப்பு மூட்டை சுமந்து கொண்டு தான் போவாள்.
நானும் அவளும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அவள் நான்காம் வகுப்பு படிக்கும் போது நான் ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.நானும் அவளும் ஒன்றாகத் தான் பள்ளிக் கூடம் போவோம். கால் வலிக்கிறது
என்று சொன்னால் என்னை உப்பு மூட்டை சுமப்பாள். சாப்பாட்டு நேரத்தின் போதும் மற்ற இடைவேளைகளின் போதும் நான் அமர்ந்து இருக்கும் வேப்பமரத்தடி தேடி வந்து நெத்தியில் ஒரு முத்தம் தருவாள். தினமும் எனக்கு
பிடித்த மைசூர் பாகையோ இனிப்பான ஏதாவதோ வாங்கி தருவாள்.
காலங்கள் ஓடின. ஒன்பதாம் வகுப்பு படிக்க அவள் டவுன் போக வேண்டியிருந்தது. பல்வேறு சமாதனங்களுக்கு பின் டவுனுக்கு போக சம்மதித்தாள். அவள் போகும் போதே என்னையும் உப்பு மூட்டை சுமந்து கொண்டு போய்
பள்ளிக் கூடத்தில் விட்டுவிட்டு நெத்தியில் ஒரு முத்தமும் அவளுக்கு பஸ் க்கு கொடுக்கப் பட்டிருந்த காசில் 5 ரூபாயும் கொடுத்து விட்டு போவாள்.
பள்ளி முடிந்து வந்து புத்தகப் பையை வைத்தும் வைக்காததுமாய் நான் எங்கிருந்தாலும் என்னை தேடிக் கொண்டு ஓடி வந்து விடுவாள்.வரும் போது எனக்கு பிரியமான செர்ரி பழத்தையோ மைசூர் பாகையோ இதர
இனிப்புவகைகளையோ அல்லது புதிதாய் எதையேனும் கொண்டு வருவாள்.
என்னை பிரிந்து இருக்க முடியாதென்ற பயத்திலேயே அவள் அதிகமாய் வெளியூருக்கு போக மாட்டாள். என்னோடு தான் சாப்பிடுவாள். ஒரே தட்டில்.சாப்பிடும் போதெல்லாம் சண்டையிட்டு கொள்வோம். நான் அவளுக்கு
ஊட்டுவேன். அவள் எனக்கு ஊட்டுவாள்.
இதில் என்னை சண்டை என்றால் அவள் ஊட்டும் போது நான் அவள் விரலை பல் பதிய கடித்து விடுவேன்.வலியில் அழுவாள். அழுதாலும் எனக்கு சோறூட்ட மறுக்க மாட்டாள். ஆனால் ஒரு போதும் நான் ஊட்டும் போது என் விரல்களை
கடிக்க மாட்டாள்.

ராத்திரி உறங்கும் போது என் பாட்டி "ஏய் ஆம்பள பையனோட லாம் தூங்க கூடாது.. வா.. வந்து இங்க படு" என அவளை அழைப்பாள்.
"உனக்கு என்ன பிரச்சினை? நான் தான தூங்குறேன். ஒன்னா என்னைய பையனா நெனைச்சி கோ இல்லனா அவன பொண்ணா நெனைச்சிகோ" னு பாட்டியை மிரட்டி பதில் பேசி விட்டு என் பக்கத்தில் படுத்து கொள்வாள்.

எனக்கு உறங்கும் போது ஒரு கெட்ட பழக்கம் உண்டு. காலை தூக்கி போட்டு கையை இடுப்பிலோட்டி பக்கத்தில் இருப்பவர்களை (அல்லது இருப்பதை[தலையணை] ) இறுக்கமா கட்டி என் மோட்டு வாயை அவர்களின் கழுத்தடிக்கு
முட்டுக் கொடுத்து தான் உறங்குவேன்.(உடனே என்னை கெட்ட பையன் என்று முடிவு செய்து விடாதிர்கள். நான் கை குழந்தையாய் இருக்கும் போது அப்பா நெஞ்சின் மீது கிடத்தியே உறங்க வைப்பாராம். அதனால் வந்த
பழக்கம் தான் இது.) அதனாலே என் பக்கத்தில் இன்று வரை யாரும் படுக்க மாட்டார்கள்.

எங்கள் வீட்டில் எப்போதும் இரண்டு மாடு வளர்ப்போம். கன்றீனும் பக்குவத்தில் விற்று விடுவோம்.அந்த மாடுகளை அவளோடு நானும் மேய்ப்பேன் .மேய்ச்சல் காட்டில் பயங்கர அட்டூழியம் செய்வோம். மாட்டு மடியில்
வாய் வைப்பது. மாட்டின் மீது ஏறி அமர்ந்து சவாரி செய்ய முயல்வது. இப்படி நிறைய உண்டு.
ஒரு முறை மாட்டின் பின்னால் பனையோலை கட்டி அதன் மீது அமர்ந்து கொண்டு அவளை மாட்டை ஓட்ட சொன்னேன்.ஓலை நிலத்தில் உராயும் போது வரும் தர தர சத்தத்தில் மாடு மிரண்டு குசாலம் எடுக்க ஆரம்பித்து விட்டது.
அன்று வீட்டில் எனக்கு பயங்கர அடி. பெரும்பாலான அடிகள் என் மீது விழ வில்லை அவளால்.

பலதரப்பட்ட குறும்புகளோடு மாடு மேய்த்து விட்டு வந்து சாய்ந்தரம் குளிக்க தண்ணிர் காய வைப்போம் .இப்படி ஒரு நாள் தண்ணீர் காய வைத்து கொண்டிருந்த போது அடுப்பில் எரிந்து கொண்டிருந்த எள்ளுச்சக்கை
எடுத்து வாயில் வைத்து புகை விட்ட படி "இந்தா பிள்ள நீயும் பீடி குடிக்றியா" என கேட்டேன். "டேய்" என்று சிரித்தவள் முகம் மெல்ல மெல்ல வெளிறி போய்விட்டது.

"வயிறு வலிக்குது டா" என்று அடி வயிற்றில் கையை வைத்து கொண்டு அழாக் குறையாய் சொன்னாள் "எனக்கு தராம எதாவது தின்னிருப்ப அதான்" என்று கோபமாய் சொன்னேன்.
அவள் கண்ணீர் தோய்ந்த சிரிப்போடு "கிறுக்கு பையா உனக்கு தராம நான் எப்போட தின்னிருக்கேன்" என்று சொல்ல கண்களில் கண்ணீர் பிறிட்டு கொண்டு ஓடி வர ஆரம்பித்து விட்டது.
" ஆயா இங்க வா.. ஜனனி க்கு வயிறு
வலிக்குது னு அழறா"
மாட்டுக் கட்டுத்தறியில் இருந்த ஆயா என் குரல் கேட்டு வேகமாய் ஓடி வந்தாள்.
அவசரத்தில் குனியாமல் வந்ததில் மாடு கட்டுவதற்காக போட்டிருந்த சாலை யின் எறவானத்தில் நீண்டிருந்த மூங்கில் இடித்து ஆயா தலையில் காயமாகி ரத்தம் வர ஆரம்பித்து விட்டது.

ஆயா தலையை பிடித்து கொண்டு
"போய் கொஞ்சம் காபி தூள் எடுத்து வாடா" என சொல்ல நான் அரக்க பரக்க ஓடி கொஞ்சம் காபி தூள் அள்ளி வந்தேன். (கிராம புறங்களில் யாருக்கேனும் காயமாகி விட்டால் ரத்தத்தை நிறுத்த
காபி தூள், முகத்திற்கு அடிக்கும் பவுடர் பனம்பூ என இருப்பை பொறுத்து வைப்பார்கள்)
"உங்க மாமனுக்கு செலவு வச்சிட்டியேடி " என்று ஜனனியிடம் பேசி கொண்டே ஆயா, காபி தூளை அள்ளி தலையிலிருக்கும் காயத்திற்கு வைத்து கொண்டாள்.
"இன்னுமா வயிறு வலிக்குது" என்று ஜனனியை பார்த்து கேட்டவன்
அவள் பாவடையில் படிந்திருந்த ரத்தக்கறையை கண்டவுடன் "ஆயா இந்தா ஜனனிக்கும் புண்ணாகி இருக்கு பாரு அவளுக்கும் கொஞ்சம் காபி தூள் வச்சூடு" என்று கையை நீட்ட.... பின் மண்டையில் ஒரு தட்டு
தட்டி போடா இது பெரியவங்க சமாச்சாரம்" என என்னைய விரட்டி விட்டாள். (சிரிப்பு வருதா.. சிரிக்காதிங்க அப்போ நான் சின்ன பையன் எனக்கு என்ன தெரியும்)

அடுத்த ஒரு வார்த்திற்கு என்னை அவளாலும் அவளை என்னாலும் பார்க்க முடியவில்லை. அவளை தென்னங் கீற்றில் பின்னிய குடிசையில் குடியிருத்தி வைத்திருந்தார்கள். தினமும் ராத்திரி எல்லோரும் தூங்கிய பின்
குறட்டை விட்டபடி உறங்கி கொண்டிருக்கும் என் ஆயாவின் கட்டிலை தாண்டி அவளின் பச்சை குடிசைக்குள் பதுங்கி பதுங்கி நுழைவேன். எனக்கு பிடித்த மைசூர் பாகையும் கடலையையும் கொஞ்சம் மிட்டாய்களையும்
பாவாடையில் கொட்டி வைத்து காத்திருப்பாள். என்னை கண்ட உடன் மெல்லச் சிரிப்பாள். அந்த சிரிப்பில் அவள் கண்ணிலும் உதட்டிலும் உண்டான ஒளியால் அந்த குடிசையிலுத்த வெளிச்சப் பரவலை இப்போது உணர்கிறேன்.
அந்த கடலையையும் மிட்டாயையும் தின்று விட்டு அங்கேயே தூங்கி விடுவேன். என்னை தட்டி எழுப்பி "டேய் கிறுக்கு பையா வீட்டுக்கு போடா அம்மா க்கு தெரிஞ்சா ரெண்டு பேருக்கும் அடிவிழும்" என கெஞ்சி
கொஞ்சி அரை தூக்கத்திலிருக்கும் எனக்கு நெத்தியில் ஒரு முத்தம் வைத்து அனுப்பி வைப்பாள்.

இதே போல் மற்றுமொரு நாள் அவளை சந்திக்க போனேன். அவளும் காத்திருந்தாள். அன்று புதிதாய் ஒரு தாவணி உடுத்தி இருந்தாள்.
" ஏய் என்ன பிள்ள... நீ மட்டும் புதுசா புதுசா துணி போடுற.. எனக்கு இல்லையா" னு அழ ஆரம்பிச்சிட்டேன்.
"டேய் கிறுக்கா அழாதடா... நான் பெருசாகி வேலைக்கு போய் வாங்கி தரேன் " என்று அழுது கொண்டிருந்த என்னை தேற்ற முயன்றாள்.
அப்போது அவரசத்திற்கு எழுந்த அம்மா சத்தம் கேட்டு குடிசைக்கு வந்து விட்டாள். வீட்டுக்கும் ஜனனி இருந்த குடிசைக்கும் ரொம்ப தூரமில்லை. வீட்டு வாசலின் ஒரு மூலையில் தான் குடிசை இருந்தது.
அம்மா ஏற்கனவே சொல்லி இருந்தாள் "இனி ரெண்டு பேரும் முன்ன இருந்தா மாதிரி இருக்க முடியாது. ஜனனி பெரிய பொண்ணாய்ட்டா இனி நீ தனியா தான் தூங்கனும்..இந்த ஒரு வாரத்துக்கு அவ குடிசைக்கும் போக
கூடாது... உனக்கும் தான் ஜனனி... நீ பெரிய புள்ளையாகிட்ட இனி இவன் கூட சேர்ந்து சேட்ட பண்றத நிறுத்திக்கோ" னு.

இப்போ நான் அவளோட இருந்ததை பார்த்தும் அம்மா முகம் தூக்கத்திலும் கோபமேறி சிவந்து போனது. "எத்தனை தடவ சொன்னேன். எதாவது சொன்னா கேட்க்றியா" னு குடிசைக்குள்ள இருந்தா என்னை வெளியே இழுத்து
வந்து பக்கத்தில் கிடந்த பொரிச்சங் கோலை எடுத்து "ஐயோ அம்மா.. வலிக்குது மா" என்று அலற அலற அடித்து விட்டாள்.
தடுக்க வந்த ஜனனிக்கும் அடி விழுந்தது.
இந்த கலவரத்தில் பாட்டியும் அப்பாவும் விழித்து கொண்டார்கள்.
இப்போது ஜனனிக்கு அடி விழுந்து கொண்டிருந்ததை பார்த்ததும் பாட்டிக்கு கோவம் வந்து விட்டது." நீ பெத்ததா இருந்தா இப்படி அடிப்பியா"னு பாட்டி கத்த அப்பாவும் நடந்த விவரம் தெரியாமல் தூக்க
வெறியில் அம்மா வை அடித்து விட்டார்.
அவ்வளவு தான். விடிந்ததும் வீட்டில் பெரிய பூகம்பம் வெடித்தது. என் அம்மா அவளுடைய அம்மா வீட்டிற்கு போய் விட்டாள். (அம்மா வை பெத்த) பாட்டி "அந்த ஜனனி புள்ள வீட்ல இருக்க வரைக்கும் என் புள்ள
(அதாவது என் அம்மா) அங்க வர மாட்டா" என்று தீர்க்கமாய் சொல்லி விட்டாள். அப்பா எவ்வளவு கேட்டும் அம்மாவை அனுப்ப மறுத்து விட்டடாள்.
"சின்ன புள்ளைக்கு என்ன கல்யாணம் பண்றாங்க அவ(என் அம்மா) வரப்போ வரட்டும்" என்று மறுத்த அப்பா வை ஆயா (அப்பாவை பெற்றவள்) " ஜனனி தான் வயசுக்கு வந்துட்டா ல்ல இனி என்ன... கல்யாணம்
பண்ணி வச்சிடாலாம்" என்று எதை எதையோ பேசி சம்மதிக்க வைத்து ஜனனிக்கு கல்யாணம் செய்து விட்டாள்.
கல்யாணத்திற்கு பின்.... நெத்தியில் அவள் வைக்கும் ஈர முத்தங்கள் கிடைப்பதில்லை. ஆனால் அந்த பாசமும் அவள் தரும் மைசூர் பாகும் இப்போதும் கிடைக்கும்.

அவளை நினைக்க நினைக்க நெஞ்சில் தேனும் கண்ணில் நீரும் ஊருகிறது.
நான் வீட்டுக்கு வந்திருப்பதாய் சொன்னால் நாளைக்கே பொடுசுகள் இரண்டையும் இழுத்து கொண்டு வந்து விடுவாள். இந்த முறை அவளை வர வைக்க போவதில்லை. நான் போகிறேன் அவளை பார்க்க.

முற்றும்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...