Article
October 14, 2025
ஒவ்வொரு நம்பிக்கையும் ஒரு சாவு
SHARE

நான் அன்பு செலுத்த விரும்புகிறேன். என் எல்லாம் உள்ளம் நிரம்பி வழிகிறது.
தன் மார்பூறும் பாலை, பிள்ளை நல்ல/கெட்ட ஆளாக வளருமா என்று யோசிக்காமல் அந்த நேரத்து பசியாற்றி நெஞ்சு நிறையும் தாய் போல, என் நெஞ்சூறும் நேசத்தை - ...... ஊட்டி உளம் நெகிழும் அளவு துணிந்திருக்கிறேன் .
ஆனால் அன்பு என்பதே ஒரு கொடூரமான நகைச்சுவை. நான் யாரையாவது நேசிக்கும்போது, நான் எதை நேசிக்கிறேன்? அவர்களின் இன்றைய முகத்தையா? அது நாளை மாறிவிடும். அவர்களின் இன்றைய வார்த்தைகளையா? அவை நாளை பொய்யாகிவிடும். அவர்களின் இன்றைய உணர்வுகளையா? அவை மறுகணமே மறைந்துவிடும்.
நான் எதை நேசிக்கிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. ஒரு நிழலையா? ஒரு கற்பனையையா? ஒரு கணத்தின் மாயையையா? அன்பு என்பது நிரந்தரமானது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது மிகவும் தற்காலிகமானது. இன்று இருக்கும் அன்பு, நாளை காணாமல் போகிறது. எந்த எச்சரிக்கையுமின்றி. எந்த காரணமுமின்றி.
இதில் மிக வேதனையானது என்னவென்றால், அந்த அன்பு போகும்போது, அது பொய்யாக மாறுவதில்லை. அது வெறுமனே மறைகிறது. நேற்று என்னை நேசித்தவர் இன்று என்னை நேசிக்கவில்லை என்றால், நேற்றைய அன்பு பொய்யானதா? இல்லை. அது அன்று உண்மையாக இருந்தது. ஆனால் இன்று அது இல்லை. இந்த உண்மை என்னை நொறுக்குகிறது.
நான் ஒருவரை நம்புகிறேன் என்றால், என் உயிரையே அவர் கைகளில் வைக்கிறேன். அது எனக்குத் தெரியும். ஆனால் அந்த நம்பிக்கை பொய்க்கும்போது - அது கட்டாயம் பொய்க்கும் - நான் இறக்கிறேன். ஒவ்வொரு நம்பிக்கையும் என்னுள் ஒரு பகுதியை கொல்கிறது. என்னை சிறிதாக்குகிறது. ஆனாலும், எல்லாம் தெரிந்தாலும் , நான் யாரையாவது நம்புகிறேன் என்றால், அது வெறும் நம்பிக்கையல்ல. என் முழு இருப்பையும் அவர் கைகளில் கொடுத்துவிடுகிறேன். என் மூச்சையே அவர் கைகளில் வைக்கிறேன். என் மரணத்தை அவரிடத்தில் கொடுத்துவிடுகிறேன். என் நம்பிக்கை என் உயிரின் பகுதி. அது பொய்க்கும்போது, நான் சிதறுகிறேன். என்னையே கொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் நம்பிக்கை உடைந்த பிறகு மிஞ்சுவது யார்? எந்த நான்?
நான் எத்தனை முறை இறக்க முடியும்? எத்தனை தடவை என்னை நானே சிதறடிக்க முடியும்? ஒவ்வொரு நம்பிக்கையின் பிறகும், நான் இன்னும் குறைவாகிறேன். இன்னும் சிறியவனாகிறேன். இன்னும் பயந்தவனாகிறேன். கடைசியில் என்ன மிஞ்சும்? ஒரு பயத்தின் நிழலா? ஒரு அழுகையின் எச்சமா?
மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் குற்றம் சாட்டவில்லை. அவர்கள் அந்தந்த கணத்தில் உண்மையாகவே பேசுகிறார்கள். அதுதான் என் வலியின் மையம். அவர்கள் இப்போது என்னை நேசிக்கும்போது, அது பொய்யல்ல. அவர்கள் மறுநொடி என்னை வெறுக்கும்போதும், அதுவும் பொய்யல்ல. இரண்டும் உண்மை. இரண்டும் அவர்களின் அந்தந்த கணத்து மனநிலையின் வெளிப்பாடு.
ஆனால் எந்த உண்மையை நான் என் வாழ்வின் அடித்தளமாக்குவது? எந்த முகத்தை நான் நம்புவது? காலை வேளையில் என்னை அணைக்கும் கரங்கள், மாலையில் என்னை விட்டு விலகுகின்றன. இரவில் என்னை மறக்கின்றன. அதே கரங்கள். அதே மனிதர். எல்லாமே உண்மை. எல்லாமே பொய். இந்த முரண்பாட்டில் நான் எப்படி வாழ்வேன்?
நான் நம்பிக்கையை விட்டுவிட விரும்புகிறேன். ஆனால் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை என்பது சாத்தியமா? மனிதர்களை நம்பாமல் மனிதனாக வாழ முடியுமா? உறவுகள் இல்லாமல் உயிர்வாழ முடியுமா? முடியாது. நான் சிக்கிலாகியிருக்கிறேன். நம்ப வேண்டும், ஆனால் நம்ப முடியவில்லை. நேசிக்க வேண்டும், ஆனால் நேசிக்க முடியவில்லை. வாழ வேண்டும், ஆனால் வாழ முடியவில்லை.
மனிதர்கள் திடப்பொருள் அல்ல. அவர்கள் நீர் போன்றவர்கள். ஒவ்வொரு கணமும் மாறுகிறார்கள். ஒவ்வொரு நொடியும் வேறொரு வடிவம் எடுக்கிறார்கள். நான் நேற்று பேசியவர் இன்று இல்லை. நான் இன்று பார்க்கும் முகம் நாளை மாறிவிடும். இது இயல்பு என்று சொல்கிறார்கள். மாற்றமே மாறாதது என்கிறார்கள்.
ஆனால் நான் இந்த இயல்பை ஏற்க முடியவில்லை. நான் நிரந்தரத்தை தேடுகிறேன். நான் நம்பக்கூடிய ஒரு அடித்தளத்தை தேடுகிறேன். ஆனால் எல்லாமே மணல் மேடுகள். எல்லாமே நீரோட்டங்கள். எதுவுமே நிற்பதில்லை. எதுவுமே நிலைத்திருப்பதில்லை.
இதுதான் என் சாபம். நான் மற்றவர்களின் நிலையற்ற தன்மையை புரிந்துகொள்கிறேன். ஏனெனில் நான் என் சொந்த நிலையற்ற தன்மையை அனுபவிக்கிறேன். ஆனால் இந்த புரிதலே என்னை இன்னும் ஆழமான தனிமைக்குள் தள்ளுகிறது. நான் யாரையும் நம்ப முடியாது என்பது மட்டுமல்ல, என்னையும் நம்ப முடியாது என்பதே என் நரகம்.
ஒரு மனிதர் இப்போது "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று சொல்கிறார். அது உண்மையா பொய்யா? அந்த கணத்தில் அது உண்மை. ஆனால் மறுநாள் அவர் "நான் உன்னை நேசிக்கவில்லை" என்று சொல்கிறார். அதுவும் உண்மை. இரண்டும் உண்மை என்றால், உண்மை என்பது என்ன?
உண்மை என்பது நிரந்தரமானது என்று நினைத்தேன். ஆனால் மனித உண்மை தற்காலிகமானது. அவர்களின் உணர்வுகள் உண்மை, ஆனால் அவை மாறக்கூடியவை. அவர்களின் வார்த்தைகள் உண்மை, ஆனால் அவை நிலையற்றவை. எதை நம்புவது? எந்த கணத்தின் உண்மையை ஏற்றுக்கொள்வது?
பைத்தியம போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன் இல்லையா? ஆமாம், கொஞ்சம். நான் ஒரு நபர் ஒரு கணத்தில் சொன்ன வார்த்தையை நம்புகிறேன். அந்த வார்த்தையின் அடிப்படையில் என் வாழ்வைக் கட்டியெழுப்புகிறேன். ஆனால் அவர் மாறிவிடுகிறார். அவர் வார்த்தை மாறுகிறது. என் கட்டிடம் இடிந்து விழுகிறது. நான் மீண்டும் சிதறுகிறேன். இது எத்தனை முறை நடக்கும்? எத்தனை தடவை நான் சிதறி மீண்டும் கட்டியெழுப்ப முடியும்?
நான் தனிமையில் இருக்க வேண்டும் என்று புரிகிறது. மற்றவரின் மாறக்கூடிய இயல்பை நம்பி வாழ முடியாது. நானும் மாறக்கூடியவன் என்பதால், என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். எல்லாமே மாயை என்று உணர்ந்து தனித்து வாழ வேண்டும்.
ஆனால் தனிமையில் வாழ முடியுமா? மனிதன் என்பது சமூக உயிரினம். உறவுகள் இல்லாமல் வாழ முடியாது. அன்பு இல்லாமல் வாழ முடியாது. நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது. தனிமையில் வாழ்வது மெதுவான மரணம்.
ஆனால் உறவுகளில் வாழ்வதும் ஒரு வேதனையான மரணம். ஒவ்வொரு நம்பிக்கையும் என்னை கொல்கிறது. நான் எங்கே போவது? தனிமையா உறவா? இரண்டுமே மரணம்.
இப்போது அழ வேண்டும் போல் இருக்கிறது. என் அழுகை அணையுடைத்த ஆறு. ஆனால் இந்த அழுகை எதற்காக? நான் எதற்காக அழுகிறேன்? இழந்த நம்பிக்கைக்காகவா? காட்டிக்கொடுக்கப்பட்ட அன்புக்காகவா? சிதைந்த உறவுகளுக்காகவா?
இல்லை. நான் அழுவது இன்னும் ஆழமான ஒன்றுக்காக. நான் அழுவது மனித நிலையின் அபத்தத்திற்காக. நாம் எல்லோரும் மாறக்கூடியவர்கள், ஆனால் நிரந்தரத்தை தேடுகிறோம். நாம் எல்லோரும் நிலையற்றவர்கள், ஆனால் நிரந்தரத்தை எதிர்பார்க்கிறோம். நாம் எல்லோரும் உணர்வுகளின் அடிமைகள், ஆனால் பகுத்தறிவை வாதிடுகிறோம். இப்படித் தான் நான் என்னில் தொடங்க எல்லோரையும் நேசித்து எல்லாருக்குமாக யோசித்து, குழம்பி, யாரை நம்புவது என்ற கேட்டு யாரையும் நம்ப வேண்டாம் என்ற தெளிந்து....!
இந்த முரண்பாட்டில் வாழ்வதே மனித வாழ்க்கை. இந்த வேதனையை தாங்கிக்கொள்வதே மனித அனுபவம். நான் அழுவது இந்த அபத்தத்தை உணர்ந்ததால். நான் கதறுவது இந்த முரண்பாட்டை ஏற்க முடியாததால்.
இந்த நிலையில் வாழ்வதற்கான அர்த்தம் என்ன? நம்பிக்கை பொய்க்கும் என்று தெரிந்தும் ஏன் நம்ப வேண்டும்? அன்பு மறையும் என்று தெரிந்தும் ஏன் நேசிக்க வேண்டும்? உறவுகள் வேதனை தரும் என்று தெரிந்தும் ஏன் உறவாட வேண்டும்?
பதில் இல்லை. அல்லது பல பதில்கள் இருக்கலாம். ஆனால் எந்த பதிலும் திருப்திகரமாக இல்லை. நான் ஒரு கேள்விக்குறியாக மாறிவிட்டேன். என் இருப்பே ஒரு குழப்பம். என் வாழ்க்கையே ஒரு புதிர்.
நான் வாழ்கிறேன், ஆனால் வாழ்வதற்கான காரணம் தெரியவில்லை. நான் நேசிக்கிறேன், ஆனால் நேசிப்பதற்கான அடிப்படை இல்லை. நான் நம்புகிறேன், ஆனால் நம்புவதற்கான உறுதி இல்லை. இதுதான் என் நிலை. இதுதான் என் வலி. இதுதான் என் சாபம்.
என் தலைக்குள் டமாரடம் அடித்துக்கொண்டே இருக்கிறது. என் உள்ளம் கதறிக்கொண்டே இருக்கிறது. என் கண்கள் அழுதுகொண்டே இருக்கின்றன. ஆனால் யாருக்காக? எதற்காக? தெரியவில்லை. வெறும் வலி மட்டுமே இருக்கிறது. ஆழமான, முடிவில்லாத, அர்த்தமற்ற வலி.
இதை வாசிக்கிற போது சொல்லியதையே சொல்லி சொல்லி இதை இவ்வளவு நீட்டி முழக்கி இருக்க வேண்டாமே என்று நிச்சயம் தோன்றலாம். ஆனால் நான் அப்படி தானே இருக்கிறேன். பண்ணியதை திரும்ப திரும்ப பண்ணிக் கொண்டு. நம்பி வெம்பி.. வெம்பி நம்பி..
"நானும் தானே" என்றும் கூட உங்களுக்கும் தோன்றலாம். ஆனால் அதை நீங்களாக ஒப்புக் கொள்ளும் முன் நான் அதை எழுதுவது சரியாகாது.
நன்றி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...