Philosophy
October 7, 2018
ஒரு பைத்தியக்காரனின் டைரிக்_குறிப்புகள்
SHARE

ஊருக்குள் நானுட்பட்ட சில பையன்களும் (பெரும்பாலும் நான் மட்டும்) பக்கத்து வீட்டு,எதிர் வீட்டு, கீழ் தெரு, மேல் தெரு சேர்ந்த சில அவள்களும் ஒழிஞ்சாட்டம் ஆடுவோம். தானியக் குதிருக்குள்ளோ பாதி நீர்
இருக்கிற தொட்டியிலோ ஒன்றாய் ஒழிந்து கொள்வோம். வெள்ளையப்பன் பெரியப்பா வீட்டு மரத்தில் நெல்லிக்காய் திருடி தின்போம். தேங்காய் தொட்டியில் கூட்டாஞ் சோறு ஆக்குவோம்.சிறுநீர் பொழுதுகளில் நாங்கள்
நின்றபடி கழிப்போம். அவள்கள் பாவாடையை ஒரு கோழிக்கூடையை போல பரப்பி அமரந்து எழுவாள். சண்டை வந்தால் கட்டி புரண்டு கொண்டு உதைபடுவோம். நுங்கு வண்டி செய்து மோத விடுவோம். வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி
பூசாரித் தனம் செய்வோம். வாத நாராயணன் மரத்தில் ஏறிக் கொண்டு குரங்கு சேட்டை செய்வோம். கள்ளச் செடிகளையும் கம்மம் பூட்டைகளையும் பனம் பழங்களையும் சுட்டு தின்போம். காலை நேரப் பனியில் கழித்தட்டுகளை
பொறுக்கி வந்து தீ மூட்டி கை நீட்டி அனல் காய்வோம். அன்றைய நாட்களில் பாலின பேதமோ சாதிய பேதமோ எதுவும் தெரியாது எனக்கு.பள்ளிக் கூடங்களில் சிலர் சில பையன்களின் தட்டுகளில் சோறு தின்னவும் அவர்களை
சேர்த்துக் கொள்ளவும் மாட்டார்கள். அப்போது அதெல்லாம் ஏனென புரியவில்லை எனக்கு. நான் யார் தட்டில் வேண்டுமானாலும் சாப்பிட உட்கார்ந்து கொள்வேன். எவருடைய டிபன் பாக்ஸிருக்கிற சாப்பாடேனும் காணாமல்
போயிருந்தால் அதற்கு பெரும்பாலும் நான் அல்லது என்னைச் சார்ந்த யாராவது தான் காரணமாயிருக்கும். ஐஸ்வர்யா, கவிதா, கார்த்திக் பிரியா, சந்தியா, மீனா, சுதா, ஸ்ரீ வித்யா, ரவீந்தரன், ரூபேஷ், மாதேஷ்,
ராஜேஷ், பவித்ரன், பாரதி, ரமேஷ், தமிழரசன், தவமணி, சுதாகர், தினேஷ் என எத்தனையோ பேரின் டீபன் பாக்ஸ்கள் அவர்களின் கண்முன்னேயே களவு போயிருக்கிறன. பள்ளிக் கூட சத்துணவு சாப்பாடும் பூண்டு ஊறுகாயும்
என்னுடைய பிரிய உணவு. குதிர முட்ட, டிக்கான், பொடக்காளி, ஓட்டயன்,கல்லொடுக்கி, சீனு, குள்ளச்சி, பனங்கொட்ட தலையன்,சுருட்ட, சுருக்கு முறுக்கு, கூழு, முட்டகண்ணி, கருப்பி என ஒவ்வொருக்கும் ஒவ்வொரு
பட்டப் பெயரும் அதற்கு பின் சிரிப்புக்க்கிடமாகிற சில காரணங்களும் உண்டு. இப்படி எவ்வித பேதமும் இல்லாமல் சண்டைகளோடும் சச்சரவுகளோடும் கிண்டல்களோடும் கேளிகளோடும் கழிந்த பழைய நாட்கள் எத்தனை
இனிதானவை. இப்போது எவளோடும் எவனோடும் இப்படி விளையாடவோ சண்டையிடவோ பழைய பட்டப் பெயரை சொல்லி அழைக்கவோ முடிவதில்லை. இல்லை, சந்திக்கவே முடிவதில்லை. எல்லோரும் காலச் சுழற்சியில் காணாமல் போய்
விட்டார்கள். கவிதா, கார்த்திக் பிரியா, சுதா ஆகியவள்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருப்பதாக அறிகிறேன். பவித்ரன் பெங்களூரில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். தவமணி இப்போது வேலை தேடிக்
கொண்டிருக்கிறான். ரமேஷ் ஏதோ கவர்மென்ட் எக்ஸாம் க்கு படித்து கொண்டிருக்கிறான். சுதாகர் இளங்கலை வேதியியல் படித்து விட்டு அடுத்து என்ன செய்வதென யோசித்து கொண்டிருக்கிறான். இப்படியாக அவர்களுக்கு
காலம் பழைய நாட்களை பற்றி யோசிக்க இடைவெளிக்குப் கொடுக்க்காமல் துரத்திக் கொண்டிருக்கிறது. நான் மட்டும் இப்படி உட்கார்ந்து பழைய நாட்களை, மாட்டை போல அசைபோட்டு கொண்டிருக்கிறேன்.
#ஒரு_பைத்தியக்காரனின்_டைரிக்_குறிப்புகள்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...