Politics
May 6, 2026
அறிவார்ந்த செயல் என்பது...
SHARE

த.வெ.க-வின் வெற்றியை வெறும் 'திரை வெளிச்சத்தால் கிடைத்த கவர்ச்சி வெற்றி' என்று நாம் விமர்சித்தாலும், ஒருவேளை இந்த வெற்றி சமூகத்திற்குத் தீமையானதாகவே அமைந்தாலும், அதை நன்மையாக மடைமாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நம் அனைவருக்கும் இருக்கிறது.
குறைபாடுகளைத் தாண்டி, இந்தத் தேர்தல் களம் பல ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் கட்டமைக்கப்பட்டிருந்த பல பிம்பங்களைச் சுக்குநூறாக உடைத்துள்ளது என்பதை நாம் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும். 'கையில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் மட்டுமே இங்கு அரசியல்வாதியாக முடியும்', 'குறிப்பிட்ட சாதி வாக்கு வங்கி இருந்தால் மட்டுமே தேர்தலில் சாதிக்க முடியும்' போன்ற எழுதப்படாத அரசியல் விதிகள் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, கணிசமான தொகுதிகளில் (சுமார் 72 இடங்களில்) தலித் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்கி, அவர்கள் வெற்றிபெறும் ஒரு சூழலையும் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். பல தசாப்தங்களாகக் களத்தில் இருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் கூட முன்னெடுக்கத் தயங்கும் இந்தச் சமூகப் பிரதிநிதித்துவ நகர்வு, நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
எனவே, திமுக, அதிமுக, விசிக போன்ற பாரம்பரியமான அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்:
கொள்கையற்றவர்களிடம் அதிகாரம் சென்றுவிட்டதே என்ற ஆதங்கத்தில், "நாட்டைக் கெடுக்கப் போகிறீர்கள், நீங்களே அனுபவிப்பீர்கள்" என்று மக்களைச் சாபமிடுவதையோ, புதியவர்களை இன்னும் மோசமான சூழலுக்குத் தள்ளுவதையோ நாம் முற்றிலுமாகக் கைவிட வேண்டும். மாறாக, அவர்களை அரசியல்ரீதியாகப் பக்குவப்படுத்துவதும் (Politicize), ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம் அவர்களுக்கு அரசியலைக் கற்பிப்பதுமே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.
ஒரு தவறான முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், அதைச் சரிசெய்து அரவணைத்துச் செல்வதுதான் உண்மையான ஜனநாயகப் பண்பு. ஏனென்றால், இது நம் நாடு... இவர்கள் நம் மக்கள்! நமது கவனம் முழுதும் அவர்களைச் சரியான அரசியல் பாதையில் செலுத்துவதில்தான் இருக்க வேண்டும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...