Poem
May 10, 2026
அம்மாக்கள் சபிக்கப்பட்டவர்களா ஆசீர்வதிக்கப்படவர்களா.?
SHARE

அம்மாக்கள் சபிக்கப்பட்டவர்களா
ஆசீர்வதிக்கப்படவர்களா.?
ஓயாமல் இயங்கிக் கொண்டே
இருக்க எப்படி முடிகிறது அவர்களால்?
அதிகாலை எழுந்தது முதல்
ராத்திரி உறங்குகிற வரை
வீடு, வாசல் பெருக்குவது
எல்லோருக்குமாய் தேநீர் அல்லது
அது பிடிக்காதவர்களுக்கு
காபி தயாரிப்பது
ஆக்கி வடிப்பது
துணிகளைத் துவைப்பது
உலர்ந்தவைகளை மடிப்பது
எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறுவது
விக்கிக் கொள்ளும் போது
தண்ணீர் முகந்து தருவது
அழுக்கு படிந்த அல்லது
கலைந்து கிடக்கும் வீட்டைச் சரி செய்வது
குழந்தைகளைப் பராமரிப்பது
என அத்தனையையும்
தனியொரு ஆளாய் செய்ய
எங்கு கற்றார்கள் அவர்கள் ?
இப்படி வீட்டையே
அவள் ஒருத்தி முதுகில்
கட்டி சுமக்க விட்டிருப்பது
எந்தக் குற்றத்திற்கான தண்டனை?
அவள் கனவுச்சிறகுகளை
கத்தரித்து விட்டு
வீட்டாரும் வீடுமே அவள் உலகமென்று
எண்ண வைத்திருப்பது சரியா?
விடாய் நாட்களிலும் கூட
இடைவிடாமல்
இயங்கிக் கொண்டே இருக்கிற அவர்களின்
வலிவு அல்லது கட்டாயத்தை
யார் ஏற்பாடு செய்ததது?
தலைவலித்தாலும் வயிறு வலித்தாலும்
மருந்து சாப்பிட்டு விட்டேனும்
வேலைகளைச் செய்ய வேண்டும் என்கிற
நிர்ப்பந்தத்தை யார் விதித்தது?
எல்லோர்க்கும்
எது பிடிக்கும் பிடிக்காது என்று
பார்த்து பார்த்து செய்கிற அம்மாவுக்கு
பிடித்தது பிடிக்காதது என்று
எதாவது இருக்குமா?
யாரேனும் சொல்லுங்களேன்
நிச்சயம்
அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இல்லை தானே?
அவர்களுக்கும் பிடித்ததும் பிடிக்காததும்
இருக்கும் தானே?
அவர்களுக்கும் ஓய்வு தேவைப்படும் தானே?
வெங்காயத்தை நறுக்குகிற போது
வருகிற கண்ணீர்
அமிலத்தின் விளைவா?
இல்லை
அது வலிகளின் வெடிப்பு
மூடி மறைத்து வைக்கப்பட்ட
வேதனைகளின் வெளிப்பாடு
ஆதி காலந்து தொட்டு
உள்ளிருந்த ஆசைகளின்
ஏக்கங்களின் ஊற்று நீர் தானே? .
தோழரே
யாராலும் இல்லை
நம் அம்மாக்கள்
நம்மாலும் நம் அப்பாவாலும் தான்
சபிக்கப்பட்டு
சமையல் கட்டின்
எண்ணெய் பிசுக்கிலும்
அடுப்படியின் சூட்டிலும்
வெந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி, அம்மாக்களை மட்டும் இல்லை
நம் அக்காக்களையும் தோழி களையும் மனைவிகளையும் தங்கைகளையும் கூட
ஏதோ சாபத்துகுரியவர்களாய் தான்
வைத்திருக்கிறோம் நாம்.
உங்களை நான்
மீட்பராய் இருங்கள் என்று
சொல்ல வில்லை
அவர்களை அப்படியான
ஒரு அடிமைச் சிலுவையில்
அறையாமல் இருங்கள்.
ஏனென்றால்
அவள்களும் நம்மை போல
மனிதர்கள் தான்.
- ர. அஜித்குமார்
(16/07/2021)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...