Article
April 29, 2025
அடையாளங்களை உடைத்தெறிவோம்
SHARE

எல்லாருக்கும் வணக்கம்!
அண்மையில் ஒரு "நீயா நானா" நிகழ்ச்சியில் கோபி அண்ணா கேட்ட கேள்வி என் மனதை உலுக்கியது. "இங்கிருக்கும் எத்தனை பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, அங்கிருந்த எந்தப் பெண்ணும் கையெழுப்பவில்லை. பலரும் "வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க" என்ற காரணத்தைச் சொன்னார்கள்.
ஒரு நிமிடம் சிந்தியுங்கள் - நாம் நம் சொந்த வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை வீட்டினரோ சமூகமோ ஏற்றுக்கொள்ளாத போதும் செய்து வருகிறோம். ஆனால் திருமணம் என்று வரும்போது மட்டும் "குடும்பம் ஒத்துக்க மாட்டாங்க" என்ற காரணத்தைக் காட்டுகிறோம். "என் வாழ்க்கை என் சுதந்திரம்" என்று சொல்லும் நாமே, இந்த விஷயத்தில் மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறோம்?
உண்மையில் பிரச்சனை என்னவென்றால், பல பாகுபாடுகளை நாம் நம்முள்ளேயே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்:
* ஜாதிப் பாகுபாடு
* நிறப் பாகுபாடு
* உடல் அமைப்புப் பாகுபாடு
* பாலினப் பாகுபாடு
இவை நமக்குள் ஆழமாக வேரூன்றி, சில சலுகைகளை அனுபவிக்க உதவுகின்றன. அதனால்தான் அவற்றை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
உங்களிடம் சில கேள்விகள்:
- உங்கள் காதல் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், திருமணம் செய்துகொள்ள முன்வந்திருப்பீர்களா?
- உங்கள் காதல் கருப்பு நிறமுடையவராக இருந்திருந்தால், அவரை ஏற்றுக்கொண்டிருப்பீர்களா?
- உங்கள் காதல் குண்டாக அல்லது மிக ஒல்லியாக இருந்திருந்தால், அவரை திருமணம் செய்திருப்பீர்களா?
முதலில் இப்படியெல்லாம் இருந்திருந்தா காதலித்திருப்பீர்களா என்று உங்களிடமே கேளுங்கள். பின்னர், காதலித்த பிறகு அந்தக் காதலை திருமணம் வரை கொண்டு சென்றிருப்பீர்களா என்று யோசியுங்கள். உங்கள் குடும்பம் எதிர்த்தாலும் அந்தத் திருமணத்தை நடத்தியிருப்பீர்களா?
எங்கெல்ஸ் சொன்னதுபோல, எவ்வளவு முற்போக்கான சிந்தனையுள்ள ஆணாக இருந்தாலும், அவனுள் ஆணாதிக்கம் சிறிதளவாவது இருக்கும். அதேபோல்தான், "நான் சாதி பார்க்கவில்லை", "நான் பாலின பாகுபாடு காட்டவில்லை", "உடல் அமைப்பை பொருட்படுத்தவில்லை" என்று சொல்லும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இந்தப் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.
பாவ்லோவின் நாய் பரிசோதனை போல, சமூகம் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறது. அறிந்தோ அறியாமலோ இந்தப் பாகுபாடுகளை நாம் உள்வாங்கி நம் அடிமனதில் பதித்துக்கொண்டோம். இதை விழிப்புணர்வுடன் கவனித்து சரிசெய்யாத வரை நம் சமூகம் முன்னேற முடியாது.
"குடும்பம் ஒத்துக்க மாட்டாங்க", "சமூகம் ஏற்காது" என்ற சாக்குப்போக்குகளை ஒதுக்கிவிட்டு, உண்மையில் உங்களால் மனமார இந்தப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவரை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். முடியாது என்றால், முதலில் அதை சரிசெய்யுங்கள்.
நான் ஒன்று மட்டும் வலியுறுத்துவேன் - புரட்சியை யாரும் திணிக்கக்கூடாது. ஆனால் இந்தப் பாகுபாடுகள் நம்மீது திணிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை நாம் தொடர்ந்து சுமக்கக்கூடாது. நம் அடிமனதிலும் இவை நிலைத்திருக்கக்கூடாது. இதைப் பற்றி சிந்தியுங்கள்.
இறுதியாக
ஜாதி, மதம், பாலினம், நிறம் என்ற அனைத்து பாகுபாடுகளும் காக்கப்படும் கோட்டையாக திருமணம் இருக்கிறது. என் அன்புக்குரிய, குறிப்பாக பெற்றோர் தேர்வு திருமணம் செய்ய இருக்கும் தோழர்களே - உங்களால் காதல் செய்ய முடியவில்லை என்றாலும், குழைந்தபட்சம் திருமணத்தையாவது சமூகம் வரையறுத்த எல்லைகளிலிருந்து விடுவித்து, உங்களுக்கான துணையை சுதந்திரமாக தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் பெண்ணாக இருந்தால் என்னையே கூட தேர்ந்தெடுக்கலாம்! (சிரிப்பு)
அன்புடன்,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...