Back

Short story

August 21, 2020

மோப்பம்

SHARE

மோப்பம்


"எந்த திருட்டுக் கண்டார ஓலி வூட்டு கோழியோ. இப்படி காய வச்ச ஆரியத்த எல்லாம் கொத்திக் கெளச்சி வுட்டுட்டு போய்டு ச்சே.. திருட்டு முண்டைகளுக்கு
கோழிக்கு எற வைக்க தெரியாது.? எற போட துப்பு கெட்ட தேவுடியாளுகளுக்கு எதுக்கு கோழி. என் சாண்ட திங்குறதையே பொழப்ப வச்சிருக்காளுக.." என்று பெருமா யாரையோ வாய்க்கு
வந்தவாறெல்லாம் ஏசிய படியே தன் கரு நெடுங் கூந்தலை அள்ளி முடிந்தாள். கையிலிருந்த கண்ணாடி வளையல்கள் அவள் பேச்சுக்கும் பாவனைக்கும் ஏற்றவாறு ஆடிக் கொண்டே இருந்தன. களி
உருண்டையை போல வழ வழவென மினு மினு க்கும் வாளிப்பான உடற் கட்டு. லவுக்கைக்குள் அடங்காமல் துருத்தி நிற்கும் மார்பு. கோழியை விரட்டி விட்டு, அந்த கோழி வளர்ப்பவளின் முலை, யோனி
என்று எல்லாவற்றையும் வார்த்தைகளால் அறுத்துக் கொண்டே ஆரியத்தை முறத்தில் அள்ளி புடைக்கத் தொடங்கினாள். அப்போது பெருமாவின் தம்பி பையன் "என்ன அத்த ராத்திரிக்கு
கலியா" என்று கேட்டபடி கையில் ஏதோ பையோடு வந்து நின்றான். "ஆமா டா கலி தான். என்ன அது கையில கறியாட்டம்" "அதுவாத்த..கறி தான் மொசக் கறி. குட்டி மேய்க்க
போனப்போ..கூட வந்த நம்ம செவலையன் புடிச்சாந்துட்டான்.. சரி சாத்துக்கு ஆச்சேனு.. அறுத்து அவனுக்கு கொஞ்சம் போட்டுட்டு மீதிய கொண்டாந்தேன்.. உன் தம்பி பொண்டாட்டி இன்னைக்கு
சனிக்கெழம அது இது னு சாங்கியம் சொல்றா.. நீயாச்சும் கொழம்பு வச்சு குடுத்தே. " " அட புண்ட வாய முட்டு பையன.. ஏன்டா அம்மாலாம் போச்சு..தம்பி பொண்டாட்டியம் ல தம்பி
பொண்டாட்டி" " பின்ன, சாறு சோறாக்க கூட சாங்கியம் பாத்தா கோவம் வராதா? " " சேரி சேரி கொண்டு போயி வூட்ல வச்சிட்டு போ.. ராத்திரிக்கு கலிக் கிண்டி சாறு
காச்சி வைக்கறேன் வா" கறியை அடுப்படியில் வைத்து விட்டு கொஞ்சம் ஆரியத்தை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு புறப்பட்டான் ரங்கசாமி. கொக் கொக் கென்று எங்கிருந்தோ வந்தது
மீண்டும் அந்தக் கோழி. இந்த தடவை வார்த்தைகளோடு கோபமும் வரம்பு மீறியது. " வக்கத்த முண்டைகளுக்கு கோழிய ஊட்டோட வச்சுக் தெரியலனா என்ன மசுருக்கு கோழி" என திட்டி
படியே " உசோ உசோ " சொன்னாள். கோழி போன பாடில்லை. ஆரியத்தைத் தின்னவே அலை மோதியது. அவளுக்கு கோபம் தலைக்கேறவே தன் வலது புறமாய் இருந்த படியை விட்டெறிந்தாள். உலக்கை
பிடித்த கையின் முரட்டுத் தனமான வலுவோடு படி பட்ட வேகத்தில், கோழி வாசலில் துடித்து விழுந்தது. படியை விட்டெறிந்து விட்டு தன் பாட்டுக்கு ஆரியத்தை புடைக்கத் தொடங்கி
விட்டிருந்ததால் கோழி விழுந்து கிடப்பதை கவனிக்க வில்லை. முறத்தை மேலும் கீழுமாய் உயர்த்தி தாழ்த்தும் வேகத்தில் அவள் இரு மார்பும், ஒரு வீணைக் கம்பியைப் போல
அதிர்ந்துயரந்தடங்கிக் கொண்டிருந்தன. புடைத்து முடித்து விட்டு படியைத் தேடிய போது தான் படியோடு கோழியும் அசைவற்று கிடந்தது தெரிந்தது. எழுத்து போய் படியை கையில் எடுத்துக்
கொண்டு, வெளிப் பானையில் இருந்து தண்ணி அள்ளி, கோழிக்கு ஊட்டினாள், அலகில் வாய் வைத்து ஊதினாள். அந்த உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ பிரம்ம பிரயத்தனம் செய்தும் ஒன்றும் பிரயோசனம்
இல்லை. கோழி செத்து விட்டது. ஆத்திரத்தில வெட்டிப்புட்டு கட்டிப் புடிச்சு அழுதா மட்டும் உயிர் வந்து விடவா போகிறது? பெருமா வுக்கு ஒரு கொலை செய்து விட்ட குற்றவுணர்ச்சி.
சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் பார்க்க வில்லை என்பதை உறுதி செய்து கொண்டு கோழியை மடி கட்டிக் கொண்டு தாழ்ந்த ஏறவானம் கொண்ட அந்த கூரை வீட்டில் குனிந்த படி நுழைந்து
கோழியை அடுப்பருகே வைத்து விட்டு, வெளியில் வந்து களி கிண்டுவதற்காக ஆரியத்தை ஆட்டுக் கல்லில் அரைக்கத் தொடங்கினாள். ஆனாலும் மனம் பதை பதைத்து கொண்டே இருந்தது. யார்
பார்த்தால் என்ன? பார்க்கா விட்டால் என்ன? தப்பு செய்து விட்டால் மனதின் முன் எல்லோருமே குற்றவாளிகள் தானே? அரைக்கத் தொடங்கிய சற்று நேரத்தில், மூங்கில் வெட்ட, நேற்று
மங்கம்மாள் மலைக்கு போன பெருமா புருசன் பொன்னப்பன் ஒரு செமை மூங்கிலோடு வந்து வாசலில் நின்றான். நல்ல ஓங்கு தாங்கலானா உடம்பு. மூங்கில் செமையை நிறுத்தி விட்டு, செமையைப்
போலவே விறைப்பாக, மலையேறி வந்த களைப்பே தெரியாமல், ஆரியம் அரைக்கும் போது அசைந்து வளையும் பெருமா வின் அங்க அசைவுகளை ரசித்து கொண்டிருந்தான். அழகை ரசிக்கத் தெரிந்தவனுக்கு
அலுப்பேது. - - பொன்னப்பனை விட பெருமா ஆறேழு வருசம் மூத்தவள். பொன்னப்பன் சின்ன வயதில் தன் அக்கா சின்னுதாயியை விட்டுப் பிரியவே மாட்டான். ஆடு மேயக்கப் போகும் போது கூட
அக்காளோடு தான் போவான். சேட்டை பிடித்தவன். அக்காவின் சிநேகி தான் பெருமா. அக்காளுக்கு கல்யாணம் ஆனப் பிறகு பெருமாளோடு தான் ஆடு மேய்க்கப் போவான். ஒரு வகையில் பெருமா
பொன்னப்பனுக்கு முறைப் பெண்ணும் கூட. "என்னடா மாமன் மகனே வயசுக்கு வந்துட்ட போல மீச எல்லாம் மொலைக்குது" என பெருமா ஆட்டுக் காட்டில் வேணும்னுட்டே பொன்னப்பனை
சீண்டுவாள். பொன்னப்பனும் லேசுப்பட்டவனில்லை. பதிலுக்கு "ஆமா டி அத்த மவளே. மீசை யும் வந்திடுச்சு.. ஆசையும் வந்திடுச்சு...நீ ஒத்து கிட்டா இப்பவே கண்ணலாம் கட்டி பொழுது
விடியறதுக்குள்ள புள்ள பெத்துக்கலாம்" என்பான். இப்படி, ஒரு நாள் விளையாட்டாய் தொடங்கி, பேச்சு வாக்கில் "ஏன்டா மாமன் மகனே கட்டிக்கலாம் பெத்துக்கலாம் னு தா
சொல்ற.. ஆனா கட்டவும் காணோம் பெத்துக்றதுக்கு வழி காட்டவும் காணோம் " என்று சீண்ட, " அப்படியா வாடி கழுத "என வம்படியாக இழுத்து கொண்டு போய் சாதி சனம்
ஏதுமில்லாமலே ஆத்து காட்டு முனியப்பன் கோவில் வைத்து தாலி கட்டி விட்டான் பொன்னப்பன். மனசும் மனசும் ஒத்துப் போய் விட்ட பிறகு சாதி என்ன? சனம் என்ன.? கேட்க ஆள் இல்லாததால
ரெண்டும் குடித்தனம் பண்ணத் தொடங்கிடுச்சுங்க. உண்மையைச் சொல்லப் போனாள் பெருமாவுக்கும் பொன்னப்பன் மேல் ஆசை இருக்கத் தான் செய்தது. ரெண்டுமே அப்பன் ஆத்தா இல்லாம அநாதியா
கெழடு கெட்டைங்க தயவுல வளர்ந்ததுங்க. ரெண்டு வூட்டு ஆணு பொண்ணும் வெளியூருக்கு வேலைக்கு போன இடத்துல லாரி ஏறி செத்து போய்ட்டாங்க. சேதி வந்த அன்னைக்கு ஊரே ஒப்பாரி வச்சிட்டு,
பொழுது விடிஞ்தும் அது அதுக பொழப்ப பாக்க போய்டு ச்சு ங்க. இந்த அறியாப் புள்ளைங்களும் அழுதுட்டு அமைதியாகிடுச்சு ங்க. இல்லாதப் பட்டவங்க இருந்தா என்ன செத்த என்ன யாருக்கு
என்ன வந்து ச்சு? அரசாங்கத்து கணக்குல ஆட்டு மாட்ட போலத் தானே ஏழ பாழைங்க. - - மூங்கில் செமையை நிறுத்தி விட்டு உருமாலைத் துண்டை உதறி திண்ணையில் விரித்து போட்டு அப்பாடா
என்று உட்கார்ந்தான் பொன்னப்பன் " அடியே மடச் சிறுக்கி அலுப்பா வந்து உட்கார்ந்தா ஒரு சொம்பு தண்ணி கூட கொண்டாந்து தார மாட்டியா டி.. அந்த கள்ளு பான மாரு ல குண்டு
மணியூண்டு கூடவா ஈரம் இல்ல" " வந்த உடனே பேச்ச பாரு. ஈரம் இருக்க இல்லையானு ராத்திரிக்கு பாரு. இந்தா தண்ணி" "என்னாடி கழுத்த ஆறுத்து போட்ட கோழியாட்டம்
பட பட னு இருக்குற" " அத ஏன் மாமா கேட்கற.. எந்த தேவுடியாளுதா தெரியல.. ஒரு செவல வெட.. காய வச்ச ஆரியத்த எல்லாம் கொத்தி கெளச்சி கிட்டு இருந்தது.. முடுக்குனா
போவுல.. படியில இட்டேன்.. பப்பரபேனு படுத்து கிச்சு மாமா " "அடி.. திருட்டு முண்ட.. சரி எங்க கோழிய கொண்டா.. பொசுக்கி தீச்சு கொழம்பு வைக்கலாம் " " நானே
எவ ஏத்த போறாளோனு பயந்து கெடக்கேன். நீ வேற" " எது அந்த சித்து வெடயா.. போடி அது நம்ம முனியம்மா கோழி தான்.. கோழிய எடுத்தாந்து குடுத்துட்டு.. இந்தா இந்த நூத்தம்பத
கொண்டு போயி குடுத்துட்டு.. உங்க மாமன் அந்த கோழி அறுத்து புடுச்சுடி னு சொல்லிப்புட்டு வா ஒன்னும் சொல்ல மாட்டா போ. " " என்னது.. அவ மாமனா.. ஒன்னும் சொல்ல
மாட்டாளா.. இழுத்து வச்சு அறுத்துபுடுவேன்.. ரெண்டு பேத்துக்கும்.. மானம் மருவாதிலாம் கெட்டுப் போயிடும். ஒன்னா மலையேறத் தான் போறிங்கனு பார்த்தா.. மலையில போயி.. மாத்தி
மாத்தியில்ல ஏறிப்பிங்களாட்டங்குது" " ஏன்டி கருவாச்சிறுக்கி.. அவ புருசனும்மில்ல டி கூட வரான்.. சும்மா சீண்டுறதுக்கு சொன்னா.. அவுத்து போட்டு.. ஆடுற "
" உனுக்கு வேணும் னா சொல்லு மாமா.. அப்படி கூட ஆடுறேன்..ஆனா என் உசுரு உள்ள வரைக்கும் மறந்தும் புத்தி மத்தவ மேல போவக் கூடாது " " சேரி.. சேரி.. கறியக் கண்ட
நாயாட்டாம் கொழையாம போயி.. கோழிய கொண்டா.. அப்டியே அவ கிட்டயும் சொல்லிப் புடு.. பசி வவுத்த புடுங்குது" சரி என்று உள்ளே போனவள், கோழியை யும், முயல் கறி யையும் கொண்டு
வந்து கொடுத்து விட்டு தம்பி மகன் வந்து விட்டு போன கதையை சொல்லி முடித்தாள். அந்தி மசங்கி நெலா வரும் நேரத்தில் கோழி ஒரு அடுப்பிலும், முயல் ஒரு அடுப்பிலும் வெந்தது. பிறகு
களியும் உருண்டை தட்டப்பட்டு சோத்து வட்டிலை எடுத்து வைக்கும் நேரத்திற்கு, சொல்லி அனுப்பியதைப் போல வந்து சேர்த்தான் பெருமா வின் தம்பி மகன் ரங்கசாமி. ரெண்டு பேருக்கும்
ஆளுக்கொரு தட்டில் பரிமாறி விட்டு தானும் போட்டு தின்று முடித்தாள் பெருமா. களியை தின்று விட்டு வந்த இடம் தெரியாமல் தன் தம்பிக் கென்று பெருமா ஊற்றி வைத்த குழம்பை கூட
எடுத்து போகாமல் சிட்டாட்டம் ஓடி விட்டான் ரங்கசாமி. "இந்த காலத்து புள்ளைங்களுக்கு பொறுமையே இல்ல..தின்னுறதுல இருந்து வயசுக்கு வரது வரைக்கும் எல்லாத்துலயும்
அவரசம்" என்று சம்மந்தமே இல்லாமல் சாத்த மறந்து வைத்து விட்டு போன தம்பி மகனை ஏசிய படி மார்பை இறுக்கிக் கொண்டிருந்த லவுக்கையை கழட்டு போட்டு விட்டு படுக்கையை
விரித்தாள் பெருமா. " ஏன்டி பேச்சுக்கு தான் சொன்னனு பாத்தா.. நெசமாலுமே.. அவுத்து போடுற.. அவுசாரி முண்ட " "என்னது அவுசாரியா முண்டயா.. வெவரந் தெரிஞ்சது ல
இருந்தே எனக்கு ஒன்னையும் ஒன் அக்காளுயும் வுட்டா வேறச் சொந்த மில்ல.. குத்த வச்சு குத்தின பிறவு என் மேல பட்ட மொத ஆம்பள கையு உன்னுது தான்.. அவுசாரி முண்டயாமில்ல அவுசாரி
முண்ட " அவன் வெறுமனே தான் அவுசாரி என்று சொன்னான் என்பது அவளுக்கு தெரியும். இருந்தாலும் கூடுவதற்கு முன் ஊடுதல் இன்பமன்றோ.? " பொட்டக் கழுத.. பேச்சுவாக்குல
சொன்னத புடிச்சு கிட்டு மலையாக்குற " " " " என்ன டி பொங்குற.. நீ அவுசாரி முண்ட தான்.. எனக்கொசரம் னு பொறந்த அவசாரி முண்ட.. பொறண்டு பொறண்டு படுக்காம..
பக்கமா வா" பெருமா அவிழ்த்தெறிந்த ரவிக்கையிலிருந்த வேர்வை வாடையை முகர்ந்து உன்மத்தமேறிக் கொண்டிருந்தான் பொன்னப்பன். " கிட்ட வரதா.. நெனப்பு தான் பொழப்ப
கெடுக்குதாம்.. ஒரே வெக்கையா இருக்கேன்னு கழட்டி போட்டேன்.. கம்னு தூங்கு.. கறிச்சாரும் களியும் கண்ணக் கட்டுது" என்று இன்னும் ஆறாத கோவத்தோடேச் வார்த்தைகளை கொட்டினாள்
பெருமா. கறி தின்னும் நாளில் பொன்னப்பனுக்கு கொஞ்சூண்டேனும் கள்ளோ சாராயமோ குடிக்கமால் தூக்கம் வராதென்பதை பெருமா நன்கு அறிவாள். அதனாலே முனியம்மா விட்டுக்கு போய் வருகிற
வழியில் மரமேறி ராசாத்தி வீட்டில் கள்ளு வாங்கி கொண்டு வந்து சாப்பிட்டு முடித்த கையோடு கள்ளையும் ஊற்றிக் கொடுத்திருந்தாள். பொன்னப்பனுக்கு போதை கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்
கேறிக் கொண்டிருந்தது. கறியும் கள்ளும் உள்ளே சென்று பண்ணாத வேலை எல்லாம் பண்ணத் தொடங்கின. கூடவே பெருமா வின் ரவிக்கையில் இருந்த வேர்வை வாசமும். "கண்ணக் கட்டினாலும்
சரி, காலக் கட்டினாலுஞ் சரி..எல்லாக் கட்டையும் அவுக்குறேன்.. ந்தா பாருடி.. வெறும் வீம்பு பண்ணாம வா.. தூங்க வுட மாட்டேன் டி.. தூங்க போறவ என்ன இதுக்கு களியும் கறியும்
ஆக்கி போட்டு கள்ளு வாங்கியாந்து தந்தியாம்?" போதையில் இருந்த பொன்னப்பனை மேலும், வெறியேற்றும் பொருட்டு பெருமா எதுவும் பேசமால் படுத்திருந்தாள். லவுக்கை இல்லாத மார்பு
மெல்லிய சேலையின் வழியே மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கனிக்குழையாய் மினு மினுத்தது. " என்னடி.. பேச்சு.. மூச்சு இல்லாம கெடக்குற... பொறி வச்சு எலிய புடிக்கற கத
பண்றியா" அப்போதும் அவள் கள்ள மவுனம் காத்தாள். பொறுமை இழந்த பொன்னப்பன், கோழிக்கு மயிர் பொசுக்கியதைப் போல பெருமாவின் இடுப்பிலும் மார்பிலும் சுற்றி இருந்த புடவை
புடுங்கி எறிந்தான். ஒரு தேக்கு மரச் சிற்பமாய் கிடந்தாள் பெருமா. இத்தனையும் எனக்கே எனக்கேவா என்பது போல் கைகளால் நீவி தடவி பெருமூச்சு வாங்கி, மெல்ல மெல்ல அவளை அள்ளிப்
பருக முயன்று கொண்டிருந்தான் பொன்னப்பன். பெண்ணுக்கே உண்டான மெல்லிய மறுப்பை காட்டி விட்டு கூடத் தொடங்கிய தன் புருசனின் மீது தனதல்லாத வேறெந்த வாசமும் வீசுகிறதா என மோப்பம்
பிடிக்கத் தொடங்கினாள் பெருமா. காதலும் அன்பும் எப்போது இப்படித் தானே? தனக்கான ஒன்றை, எப்போதும் தன் குடையின் கீழே வைத்திருக்க முயலுமில்லையா?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...