Short story
March 20, 2018
நானா?
SHARE

புனைகதை.
#நானா?
அவன் பெயர் முத்துகிருஷ்ணன். என்னோட நெருங்கிய சிநேகிதன். பயங்கரமான ஆன்மீக வாதி. எனக்கும் அவனுக்கும் அடிக்கடி விதண்டா வாதங்கள் வரும்.சண்டைகளும்வரும். வெறும் வாய்ச்சண்டை தான். அதற்கே ஏழெட்டு நாள்
என்னோடு பேச மாட்டான்.
நேற்றும் இப்படி தான் என்னோடு சண்டை வளர்த்தான். அவனை நான் என்ன சொல்வது. அவன் கேட்கும் கேள்விக்கு பதில் எங்கு தேடுவது. நேற்றிதே நேரம் அந்த சமூக கூடத்தின் மாடியில் உட்கார்ந்த படி பேசிக்
கொண்டிருந்தோம்.
"மச்சி போன வாரம் அந்த கோழி மூக்கன் கெழவன் சாவுக்கு அடிச்ச வாத்தியம் இருக்கே" - நான்.
"எங்க அந்த வாத்தியக்காரன் வீட்ல தான"
"டேய்...(முறைத்தேன்)"
"சரி... மேல சொல்லு.
" என்ன வாத்தியம் டா... அது... அப்படியே சாவு ஊர்வலம் ன்ற தையும் மறுந்து ஆட ஆரம்பிச்சிட்டேன் டா..."
"அப்பறம்"
"அதை நெனைச்சா இப்போ ஒரு கவிதை தோனுது டா... "
"ஏன்டா நல்லா தான பேசிட்டு இருந்தோம்.. உடனே ஏன் பிளேடு போட பாக்ற"
"டேய் கேளுடா..."
"ம்ம் என்ன பண்றது சொல்லு.. "
" கொட்டும் பறை தோலடி நீயெனக்கு
தட்டும் பச்சை கோலடி நானுனக்கு.... "
"என்ன?"
"கொட்டும் பறை தோலடி நீயெனக்கு "
" ம்ம்ம் "
" தட்டும் பச்சை கோலடி நானுனக்கு "
" ம்ம்ம்ம்ம்மம்" என இழுத்தான்.
"என்ன டா இழுக்ற... நல்லா இருக்கா? "
" எந்த வாத்தியம் னு பாத்தா தான மாப்ள நல்லா இருக்கா இல்லையானு சொல்ல முடியும் .. எப்படி இருந்தா என்ன... பாத்து அடி... தாங்குமா? "
" டேய்..." என அவனை அடிக்க ஏதேனும் கிடைக்காதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.அவனும் தப்பிக்க முயல் பவனை போல அவசர அவசரமாக உடலை இயக்கினான்.எங்கும் ஓட வில்லை. நானும் அவனை எதும்
செய்யவில்லை.ஒரு நிமிடம் அமைதியானான்.
எதையோ ஆழ்ந்து யோசித்தான்.
" என்ன மச்சி அடிச்சா தாங்குமா தாங்காத னு யோசிக்றியா " னு நானும் கொஞ்சம் கிண்டலாக கேட்டேன்.
" இல்ல டா... இப்போ நான் இங்க... இந்த செவுத்து மேல உட்கார்ந்துகிட்டு உன் கூட பேசிட்டு இருக்கேன்... இதே நான் அப்படியே கீழ உழுந்து செத்து போய்ட்டேன்ன்னா... உடம்பு கீழ கெடக்கும்.. உசுரு எங்க
போகும்... இப்போ உன் கூட பேசிகிட்டு இருக்கறது உடம்பா உசுரா... கம்னு நான் கீழ குதிச்சு பாக்கட்டுமா " என்று கால்களை சுவற்றின் இரு பக்கம் தொங்கவிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தவன்..... குதிக்க
போகிறவனை போல்... சுவற்றின் மேல் ஏறி நின்று கொண்டான்.எனக்கு இதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டது.
" டேய்... முத்து கிறுக்கு எதும் புடிச்சு இரு இருக்கா என்ன... " னு இழுத்து கீழ விட்டேன்.
நேத்து மாதிரி இன்னைகும் எதாவது பைத்தியகார தனமா யோசிச்சிட்டு இங்க வந்திருப்பானோ னு அவசர அவசரமா வந்தேன். நல்ல வேலை அப்படி எதும் நடக்கல.
என்னை மறந்து பரந்து விரந்த வானத்தை ரசிக்க ஆரம்பிக்கிறேன். எத்தனை அழகு. எத்தனை வண்ணம். யாரால் இப்படி யெல்லாம் ஒன்றை உருவாக்க முடிந்தது. உருவாக்கியது யார்?
கடவுளா? அப்படி ஒரு ஜீவன் இருக்கிறாதா? ஜீவன். உயிரைத் தானே ஜீவன் எனச் சொல்கிறோம். அப்படியென்றால் நேத்து முத்து கேட்ட கேள்வி சரி தானே. செத்த பின் உடல் கீழே விழுந்து கிடக்கும். உயிர்? அப்படி
ஒன்று இருக்கிறாதா? உயிர் என்பது திடமா? திரவமா? இப்போது பேசிக் கொண்டிருப்பது எது?பேசாமல் முத்து முயற்சித்ததை போல் குதித்து பார்த்தால் என்ன? குதித்து தான் பார்ப்போமே. வலிக்குமா? ச்சீ செத்த பின்
எப்படி வலிக்கும். பிணத்தை எரிக்க வெல்லாம் செய்கிறார்களே. வலிக்காது.கண்ணை மூடிக் கொண்டேன். வன்... டூ... த்ரீ..
"குதி"
இப்போது குதி என்று சொன்னது யார் என் ஆத்மாவா? . இல்லையே.
"குதிடா... ஏன் நின்னுட்ட... குதி.."
"நீயா"
"ஒரு நாளுல மறந்துட்டியா"
"டேய் வாடா.. வந்து உட்கார் வா..."
"ஏன் குதிக்கலயா.... குதி மச்சான்..."
"மச்சான் சொல்லுடா குதிச்சு பாக்கட்டுமா... நீ சொன்ன மாதிரி.. இப்போ நான் குதிச்சிட்டேன்னா.. உடம்பு கீழ கெடக்கும்... உசுரு..? மச்சான் குதிச்சு செத்து பாக்கறேன்... டா.. செத்தப்றம் உன்னைய
ஞாபகம் இருந்தா வந்து உன் கூட பேசுறேன்... நீ கேட்ட கேள்விக்கு.. பதில் சொல்றேன்... "
" மூடிட்டு இறங்க போறியா என்னங்ற "
" டேய் நேத்து ராத்திரி இத நெனைச்சு தூக்கமே இல்ல டா... இதுக்கு ஒரு விட கிடைச்சு ஆகனும்.. அப்போ தான் நிம்மதியா இருக்கும்.. "
"சரி.. நீ இரு நான் குதிக்றேன். டவுட் எனக்கு தான முதல்ல ஆரம்பிச்சது. "னு என் கூட செவுத்து மேல ஏறி நின்னுட்டான்.
" டேய்... இறங்குடா..." நான்
" நீ இறங்கு... டா" - முத்து.
"முத்து எங்க டா ஓடுற....டேய்...நான் பேசறது கேட்குதா இல்லையா டா? நில்லுடா முத்து "
இடையில் பொத்தென்று ஒரு சத்தம் கேட்டது. அவ்வளவுதான்.என்னோடு சுவற்றின் மேல் நின்று கொண்டிருந்த முத்து வேக வேகமாக சுவற்றின் மேலிருந்து குதித்து கீழே ஓடுகிறான். நானும் அவனை தொடர்ந்து நில்லுடா
முத்து நில்லுடா என் கத்தி கொண்டு ஓடுகிறேன்.
கீழே யாரோ ரத்தச் சகதியில் செத்து கிடக்கிறார்கள்.
"ஐய்யோ.... " னு என்னென்னமோ பெனாத்திய படி அழறானே முத்து.செத்து கெடக்கறது யாரா இருக்கும்.
" மச்சான் யாருடா... யாரோ ஒரு அனாத பொணத்துக்கு ஏன் டா இப்படி அழற... டேய் முத்து... இங்க பாரு டா அழாத டா"
பின்னந் தலையில் வெள்ளரி பழம் போல் ஒரு வெடிப்பு.. பிணத்தை புரட்டி போட்டான்.பார்க்கவே சகிக்க முடியவில்லை. அந்த பிணத்தை எடுத்து மடியில் வைத்து கொண்டான். எனக்கு குமட்டி கொண்டு வந்தது. கண்களை மூடி
திறந்தேன். அதற்குள் இடது கண்ணோரத்தில் ஒரு கோலி குண்டு தொங்கி கொண்டிருந்தது. அதை எடுத்து அதே இருந்த இடத்தில் பொருத்தி முகமெங்கும் வழிந்தோடும் செஞ்சாயத்தை துடைத்திருந்தான். இப்போது தான் செத்து
கிடப்பது மனித முகமாவே தெரிகிறது. மசங்கி விட்டதால் இருட்டில் முகம் தெளிவாகவே தெரியவில்லை. மேகத்திடையில் இருந்த நிலா மெல்ல முகம் காட்டுகிறது. பிணத்தின் முகத்தில் கதிர்களை அத்தனை சௌந்தர்யத்தோடு
தெளிக்கிறது.முகம் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வருகிறது.என் இது...? "ஐய்யோ முத்து செத்து போனது நானா ...."
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...