Poem
October 9, 2025
தலையோட்டுக்குள் கூத்தாடும் பேய்கள்
SHARE

உன் முகம் — கத்தியின் முனையில் தொங்கும் பூ!
நான் முத்தமிட்டால் இரத்தம்,
முகர்ந்தால் விஷம்,
என்றாலும்,
என் நெஞ்சு உன்னை நக்கிக் குடிக்கிறது!
நீ என் மண்டையில் குடியிருக்கிறாய்
வாடகையும் கட்டாமல்.
காதலும் காட்டாமல்
என் உயிர்த் தண்ணீரையும்,
என் இரத்தத்தையும்,
என் மூளையையும்
குடித்துக்கொண்டு!
நீ போய் தொலை
ஐயோ, போகாதே, வா!
உன் நிர்வாண நினைவுகள் என்னைக் கொல்கின்றன.
நீ இல்லாமல் நான் பிழைக்க முடியாது,
நீ இருந்தால் நான் சாக முடியாது,
இந்த நரகத்தில்...அதன் நடுவில்
நான் ஒரு பைத்தியக்காரன்!
என் கண்களில் கண்ணாடித் துண்டுகள்
ஒவ்வொரு முறையும் நான் உன்னைப் பார்க்கும் போது
அவை ஆயிரம் ஆயிரம் துண்டு துண்டான நீயாக மாறுகின்றன!
எந்த நீ உண்மையானவள்?
சிரிக்கும் நீயா?
அழும் நீயா?
என் தொண்டையை அறுக்கும் நீயா?
எல்லாமே உண்மை... எல்லாமே பொய்...
எல்லாமே ஒரே நேரத்தில் நடக்கிறது!
உன் உடல் — என் பைத்தியத்தின் வரைபடம்!
மார்பகங்கள் இரண்டு மலைகள்...
நான் அங்கே ஏறி விழுந்து இறந்திருக்கிறேன் ஆயிரம் முறை!
உன் தொடைகள் — இரண்டு நதிகள்!
அவற்றின் நடுவே பாயும் வெள்ளத்தில்
நான் மூழ்கி இறந்திருக்கிறேன்!
அந்த இருண்ட குகை... அந்த ஈரம்... அந்த வாசனை...
என் நினைவில் வெள்ளமாய் வருகிறது... போகிறது...
அப்படி என் நெஞ்சிலும் இருக்கிறது
ஒரு சுரங்கப்பாதை
அங்கே ரயில்கள் இரவும் பகலும் ஓடுகின்றன
சிக்கு புக்கு... கெக்க புக்க... தடக் படக்..
பயணிகள் யாருமில்லை... உடல்கள் மட்டும் இருக்கின்றன!
சில உடல்கள் நான்... சில உடல்கள் நீ...
சில உடல்கள் நாம் இருவரும் ஒன்றாக இணைந்த அழகான விகாரம்!
ஒரு நேரம்
நினைவுகள் காக்கைகளாய் என் மண்டையோட்டின் மேல் வட்டமிட்டு
வந்திறங்கி என் மூளையைக் கொத்துகின்றன.
மறுநேரம்
நினைவுகள் புழுக்களாய் ஊர்கின்றன...
என் மூளையின் மடிப்புகளில் கூடு கட்டுகின்றன...
ஒவ்வொன்றும் வேறு வேறு பொய் சொல்கிறது:
"அவள் உன்னைக் காதலித்தாள்!"
"இல்லை... அவள் உன்னை வெறுத்தாள்!"
"இல்லை... அவள் இருந்ததே இல்லை!"
"இல்லை... நீ இருப்பதே இல்லை!"
வார்த்தைகள்
என்னுள் செரிமானமாகின்றன
எச்சமாக வெளியேறும் போது
எல்லாம் கவிதையாகிறது... இல்லை...
காவடியாடும் பைத்தியமாகிறது!
எது உண்மை? எது பொய்?
எனக்குத் தெரியாது... தெரியவும் விரும்பவில்லை...
உண்மை - கத்தி
என் நெஞ்சில் குத்தும் போதெல்லாம்
நான் அதை முத்தமிடுகிறேன்!
குடைச்சல்... குடைச்சல்... நிற்காத குடைச்சல்!
உள்ளே எதோ கிழிக்கிறது... கடிக்கிறது... எரிக்கிறது!
என் நெஞ்சில் எறும்புகள் அணிவகுத்துச் செல்கின்றன...
நரம்புள் உள்ளே
சிறகுகளில் தீ ஏந்திக் கொண்டு திரிகின்றன
நாம் வாழ்ந்த காலத்து வண்ணத்துப் பூச்சிகள்
என் எலும்புகள் உருகி... மீண்டும் உறைகின்றன!
நான் அமைதி வேண்டுகிறேன்.
மன இரைச்சலின் மாபெரும் சத்தம்!
செவிகளைக் கிழிக்கிறது...
கத்த விரும்புகிறேன் —
குரல் தொண்டையிலேயே மாட்டிக்கொண்டு
உள்ளிருந்து நசுக்குகிறது உயிரை!
உன் முதல் முத்தம்... இல்லை... என் முதல் கொலை...
இல்லை... நம் கடைசி அணைப்பு... இல்லை... என் முதல் பிறப்பு...
எல்லாமும் ஒன்றாகக் கலந்து...
எனக்கு இரண்டு இதயங்கள் இருக்கின்றன...
ஒன்று வலது பக்கம் பித்தளை போல அடிக்கிறது — தக்... தக்... தக்...பட்... பட்..
இன்னொன்று இடது பக்கம்
மரத்தால் ஆனது — அழுகிக்கொண்டிருக்கிறது!
இரண்டும் வெவ்வேறு நேரத்தில் துடிக்கின்றன...
ஒன்று வாழ்கிறது... மற்றொன்று இறக்கிறது...
நான் எந்த இதயத்துடன் உன்னை நேசித்தேன்?
என் கைகளைப் பார்க்கிறேன்...
அவை என் கைகளா? வேறு ஆளின் கைகளா?
விரல்கள் சுயமாக அசைகின்றன
நான் கட்டளையிடாமலே!
ஓயாமல் உன் உடலை சொல்லாக்கி பிசைந்து
கவிதை செய்கின்றன.
சமயத்தில் என் கொலையும் செய்கின்றன.
நான் கீழே பார்க்கிறேன் —
என் மார்பில் விரல் தடங்கள்... நகச் சுவடுகள்... இரத்தக் கோடுகள்!
நான் என்னையே கொல்ல முயற்சித்திருக்கிறேன்.
எப்போது? நேற்றா? இப்போதா?
கண்ணாடியில் பார்க்கிறேன்...
அங்கே என் முகம் இல்லை... உன் முகம் இருக்கிறது!
நான் என் முகத்தைத் தேய்க்கிறேன்... தோல் உரிகிறது...
கீழே மற்றொரு முகம்... மேலும் தேய்க்கிறேன்... மேலும் ஒரு முகம்...
எத்தனை முகங்கள் என் முகத்துக்குள் ஒளிந்திருக்கின்றன?
இரவில் அறையில் ஆயிரம் குரல்கள்...
சுவர்களில் இருந்து... தரையில் இருந்து... கூரையில் இருந்து...மண்டையில இருந்து
"உன்னை நேசிக்கிறேன்" என்று ஒரு குரல் —
"உன்னை வெறுக்கிறேன்" என்று மற்றொரு குரல்.
"நீ இல்லவே இல்லை" என்று இன்னொரு குரல் —
எல்லா குரல்களும் என் குரல்.
ஆனால் நான் பேசவே இல்லை!
நாக்கு பாம்பாகி
தொண்டைக்குள் ஊர்ந்து இறங்கி
நுரையீரலை நசுக்குகிறது!
மூச்சு விட முடியவில்லை...
தீம்புகை...
கந்தக வாடை...
ம்ம்.. மயிர் மழிக்காத உன் அக்குளின் மணம்
இல்லை, நான் உள்ளிருந்து எரிகிறேன்!
கொஞ்சம் வந்து அணைத்துக் கொள்ளேன்.
அல்லது அணைத்தே கொல்லேன்.
இல்லை வேண்டாம்.
உன் நாபி — சுழலும் குழி!
அதில் நான் விழுந்தேன்... இன்னும் விழுந்துகொண்டே இருக்கிறேன்!
அடி இல்லாத கிணறு... உன் உடல் முழுதும் அப்படித்தான்!
எங்கே தொட்டாலும் நான் மூழ்குகிறேன்... மூச்சு திணறுகிறேன்!
நேரம் என்ற பொய்யன் என்னை ஏமாற்றுகிறான்...
முன்னோக்கி ஓடுகிறது... பின்னோக்கி ஓடுகிறது...
கடிகார முட்கள் என் கண்களை குத்துகின்றன!
நான் எல்லா காலங்களிலும் ஒரே நேரத்தில் வாழ்கிறேன் —
குழந்தையாக... முதியவனாக... இளைஞனாக... பிணமாக... கருவாக...
எல்லாம் ஒரே உடலில்!
என் ரத்தம் மாறி மாறி நிறம் மாறுகிறது...
சிவப்பு... கருப்பு... வெள்ளை... பச்சை... தங்கம்...
நரம்புகளில் ரத்தம் அல்ல... பாதரசம் ஓடுகிறது!
உடலுக்குள் கொதிக்கிறது... நான் திரவமாக மாறுகிறேன்...
என் உருவம் உருகி... தரையில் பரவி... மீண்டும் உறைகிறது!
உன் பெயரை எழுத முயற்சிக்கிறேன்...
ழுத்துக்கள் உன் உடல் வடிவங்களாகி நடனமாடுகின்றன!
உன் மார்பகங்களாக... உன் இடுப்பாக...
உன் தொடைகளாக மாறுகின்றன!
பாம்புகளாகி என்னை நெருடுகின்றன!
பின் பறவைகளாகி பறக்கின்றன!
இதையெல்லாம் கண்டு குழம்பி
நான் சிரிக்கிறேனா? அழுகிறேனா? கத்துகிறேனா?
எனக்கே தெரியவில்லை... அனைத்தும் ஒரே சத்தம்!
என் வாய் திறக்கிறது... ஒரு வார்த்தை வெளியே வர முயற்சிக்கிறது —
வெளியே வருவது
காக்கைகள்...
மட்டைப் புழுக்கள்...
உன் முடி இழைகள்
இப்படி பைத்தியம் பிடித்த சொற்கள்!
இறுதியில் நான் புரிந்து கொள்கிறேன்:
பைத்தியம் என்பது நோய் அல்ல... அது தெளிவு!
நான் மட்டும் தான் உண்மையைப் பார்க்கிறேன் —
உலகம் ஒரு கூண்டு... நாம் அனைவரும் சிறைக்கைதிகள்...
காதல் ஒரு கத்தி... வாழ்க்கை ஒரு காயம்...
சாவு ஒரு பொய்...
நாம் எல்லோரும் முன்ன்மே இறந்துவிட்டோம்!
நான் இதை எழுதவில்லை... இது என்னை எழுதுகிறது!
நான் கவிஞன் இல்லை... நான் காகிதம்!
வார்த்தைகள் என் மீது இரத்தத்தால் எழுதப்படுகின்றன —
யாரோ கண் தெரியாத கை... மூளை இல்லாத மனம்...
என்னை ... வெறுமையாக்குகிறது... மீண்டும் நிரப்புகிறது!
இது முடிவா? ஆரம்பமா?
ஐயோ
நானிப்படி
ஏனிப்படி
எண்ணிலா பேராகி
எல்லாரும் என் உடலுக்குள் போராடுகிறார்களே!
யார் வெல்வார்கள்?
யாரும் இல்லை... எல்லாரும் தான்!
போரே என் இருப்பு...
சமாதானம் என்பது என் சாவு!
நான் சாக விரும்புகிறேனா?
ஆயிரம் முறை சாக விரும்புகிறேன்!
ஆயினும் உயிர் போயினும்
செத்தாலும் ஒவ்வொரு முறையும்
மீண்டும் பிறக்கிறேன்... அதே பைத்தியத்துடன்!
இது என் சாபம்... இது என் வரம்...
இது என் நரகம்... இது என் சொர்க்கம்...
நான் என்றென்றும் இந்த சுழலில்...
எரிந்தபடி... அணைந்தபடி... மீண்டும் எரிந்தபடி...
உன்னை நேசித்தபடி... உன் உடலை தியானித்தபடி...
உன்னை வெறுத்தபடி... மறந்தபடி... நினைத்தபடி...
தத்துவம் பேசியபடி... ...
என்றும்.. என்றென்றும்...
நீ என் நிறை நேச ஞானப்பைந்தொடி!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...