Back

Philosophy

June 3, 2022

தத்துவம்

SHARE

தத்துவம்

தனித்திருத்தலில் எத்தனை சௌந்தர்யம். எத்தனை சௌகர்யம். சற்று முன் அழத் தோன்றியது. விம்மி விம்மி அழுதேன். பிறகு எனக்கு நானே ஆறுதல் சொல்லி தேற்றி இப்போது இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன். மனித
நடமாட்டம் இல்லாத தனிமையை போல மனித நினைவும் இல்லாத தனிமை வாய்த்து விட்டால் எத்தனை நன்றாயிருக்கும். இங்கு மொட்டை மாடியில் ஒரு இரும்பு நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறேன். ஒரே கொசுக் கடி. நகம்
நறுக்கிய விரல்களால் சொரிந்து விட்டுக் கொண்டே டைப் செய்து கொண்டிருக்கிறேன். சோடியம் ஆவி விளக்கின் மஞ்சள் ஒளி நிலவாய் பொழிந்து கொண்டிருக்கிறது. இருட்டில் துரத்து பொருள் எல்லாம் திட்டுத் திட்டாய்
நிறம் இழந்து கருப்பு நிறத்தில் காட்சி தருகின்றன. அன்னாந்து பார்க்கிறேன். வானில் அங்கங்கு சில விண்மீன்கள் ஒளியழுகைச் செய்து கொண்டிருக்கிறன. கிழக்கு வானில், நிலா முழுதாய் ஒளிர்ந்து
கொண்டிருக்கிறது. அழகாய். அதுவும் தனியாய். எல்லாவற்றையும் எடை நிறுத்தி பார்த்து கொண்டிருக்கிறேன். மனித சஞ்சாரம் இல்லாத உலகைத் தேடி ஓடுகிறது மனது. யாராவது அன்பு காட்டினாலே இப்போதெல்லாம் பயமாய்
இருக்கிறது. எல்லோருடைய அன்புக்கு பின்னாலும் ஏதாவதொரு நிபந்தனை இருக்கிறது. ஒன்று என்றால் ஒன்றே அல்ல. எனக்குத் தெரியும் என்னிடமும் அன்பு இருந்தால் அது நிபந்தனையாகத் தெரியாது. ஒருவரை நமக்கு
பிடித்து விட்டால் அவருக்குப் பிடித்தது எல்லாம் நாள் போக்கில் நமக்கும் பிடித்தாகி விடும் என்று. நாம் கொஞ்சம் கொஞ்சமாய் அவராகி விடுவோம். இது தான் பிரச்சனை. இந்த ஆக்கிரமிப்பு தான் பிரச்சனை. சரி
விடுங்கள். இது வேண்டாம்.அன்பைப் பற்றி கேட்டாலோ பேசினாலோ ஏதோ பித்துப் பிடித்தது போல் இருக்கிறது. உலகில் எவ்வளவோ விசயம் இருக்கிறது இல்லையா.? இருந்தாலும் இந்தத் தனிமை எத்தனை அழகான - சுகமான -
ரணம். என்னோடு நானே பேசிக் கொள்ள முடிகிறது. என் உயிருக்கும் சரீரத்துக்குமான உரையாடலை, எனக்குள் இருக்கின்ற எண்ணற்ற இரைச்சல்களை, அழுகையை, மனதின் காது கொண்டு துல்லியமாகக் கேட்க முடிகிறது. இந்த
ஞானம் தரும் மோனத் தனிமையே போதும். யாரும் வேண்டாம். வருவார்கள். இருப்பார்கள். அன்பைக் கொட்டுவார்கள். காலம் நேரம் சூழ்நிலை வேலை என்று எது எதையோ சொல்லிக் கொண்டு பிரிவார்கள். பிறகு நினைவாகவோ
பொருளாகவோ நிறமாகவோ காண்கின்ற எதாவதொன்றில் தோன்றி சிரிப்பார்கள். அவர்களுக்கு என்ன? நாம் தான் அவர் நினைவில் அழுவோம். எதற்கு இந்த வம்பு. வந்ததும் தனியே. போவதும் தனியே. இடையில் எதற்கு இந்த
உறவெனும் ஊன்று கோல்கள். என்னால் முடிகிற வரை தனித்து வாழ்கிறேன். அப்படியே தனித்து இருக்க முடியாத பட்சத்தில் வாழ்வதை முடித்துக் கொள்கிறேன். எனக்குச் சாவதை விட யாரோவாக அறிமுகமாகி எல்லாமுமாக ஆகி
இல்லாமல் போய் இதயத்தை வாட்டுகிற பிரியமானவர்களைப் பிரிவது கஷ்டமானதாகவும் ரணமானதாகவும் படுகிறது. இது ஒருவகையில் பலவீனம் தான். என்ன செய்வது. அன்பு தான் சகலமுமாக இருக்கிறது. ஐய்யய்யோ மறுபடியும்
அன்பா. தற்கொலை செய்து கொள்ளலாம் போல தோன்றிவிடுகிறது.சொல்ல மறந்து விட்டேன். ஒரு அரை நிமிடப் பொழுதில் தப்பித்திருக்கிறேன். இல்லையேல் இந்நேரம் செத்திருப்பேன். நாற்காலியில் இருந்து முன்னமே எழுந்து
நடக்க தொடங்கி விட்டேன். நடந்து கொண்டே தான் இவ்வளவு நேரம் டைப் செய்தேன். அப்படியே மாடியின் சுற்று சுவர் மேல் ஏறி நடந்தேன். ஒரு கணம் கீழே குதித்து விடலாம் எனத் தோன்றி, எட்டிப் பார்தேன். கொஞ்சம்
மரண பயமாக இருந்தது. பக்கத்தில் இருந்த குச்சியைத் தள்ளி விட்டேன். அது மெல்ல போய் கீழே விழுந்து எழுத முடியாத படியான ஒரு சப்தத்தை உண்டு பண்ணி உடைந்தது. விழுந்திருந்தால் நானும் அப்படித் தான்
உடைந்திருப்பேன். அது என்ன இருந்தால். விழுந்து விட்டால் என்ன.? வேணாம். நான் விழுந்து செத்து விட்டால் யார் இப்படி எல்லாம் எழுதுவது. எனக்காக நான் தானே எழுத வேண்டும். அதனால் தான் விழாமல் வந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் எழுதுவேன். எழுதிக் கொண்டே இருப்பேன்.
பெ. மோ. பித்தன்.

@ 25/03/19

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...