Back

Philosophy

January 7, 2021

தத்துவம்

SHARE

தத்துவம்

அன்புக்குரிய யாரோ ,
யாருக்கு எழுதுவது என்று தெரியவில்லை. ஆனால் யாருக்காகவது எழுதினால், யாரோடாவது எழுத்தின் வழியாக பேசினால் நன்றாயிருக்கும் என்று தோன்றிற்று. அதனால் தான் இப்படி எழுதுகிறேன். உங்களை நலமா என்று
எல்லாம் நான் கேட்க மாட்டேன். எனக்கு தெரியும்,யாரும் எல்லா வகையிலும் சௌக்கியமாய் இல்லை என்று. ம்ம், உளவியல், உடலியல், கருத்தியல், ஆகி மூன்று ரீதியிலும் எவரொருவர் சௌக்கியமோ அவரே மனதார நலம் என்று
சொல்ல முடியும். அவரே நலமாக இருப்பதாகவும் அர்த்தம். ஆனால் அப்படியான ஒரு நல்ல நிலையில் யாரையும் வாழ்க்கை வைத்திருக்கவில்லை. வருத்தம் தான். ஆனால், காலத்தோடும் சூழலோடும் மல்லுக்கட்டுவது தானே
வாழ்க்கை. மல்லுக்கட்டுங்கள்.
ஆமாம், உங்களுடைய பொருட்கள் அல்லது உடைமைகள் உங்களோடு எப்போதாவது ஏதாவது பேசியது உண்டா? உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, எனக்கு, என் உடைமைகள், என்னோடு பேசுவது போல தோன்கின்றன. என்னைச் சுற்றி உள்ள
எல்லா பொருட்களிலும் இருந்தும், யாரோ ஒருவருடைய அழு குரல், ஏக்கக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. உண்ணும் உணவு, உடுத்தும் உடை என இருப்பு நிலையில் இருக்கிற எல்லாப் பொருளிலும் யாரோ ஒருவருடைய
பசியின் ஓலம், யாரோ ஒருவரின் நிர்வாணக் கோலம் என ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொருவர் பேசுகிறார்கள். அழுகையாக வருகிறது. பித்து பிடித்தது போல் இருக்கிறது. அடிப்படைக்கு அடி உதை படும் மக்களின் ஏழ்மை
நிலை மாறாதா என்று ஏங்குது மனம். ஆனால் ஏங்குவதை விட அதற்காக இயங்குவது தானே சிறப்பு. இயங்க வேண்டும். இருந்தும் எல்லோரும் ஏன் சுய நலமாகவே இருக்கிறோம்.? இங்கு எல்லோருமே ஏதேதோ படிக்கிறோம் ஆனால்
யாருமே எதைப் பற்றியும் ஆழமாக சிந்திப்பது இல்லை. சிந்தித்தாலும் செயல்படுத்தவோ அதை ஒட்டி செயல்படவோ துணிவதில்லை. உண்மையைச் சொன்னால் இங்கு கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம், சிந்தனைவாதிகள் மிக மிகச்
சொற்பம். சிந்தனைவாதிகளாலும், அந்தச் சிந்தனைகளை செயல்படுத்த துவங்குகிறவர்களாலுமே இந்தச் சமூகம் முன்னேற்றமடையும் என்பதை மட்டும் நினைவுகொள்ளுங்கள்.
மேலும் உங்களுக்கு எக்கச்சக்கமான அலுவல்கள் இருக்கலாம். இருந்தாலும் கொஞ்சம் எனக்காக உங்கள் அலுவலை ஒதுக்கி வைத்து விட்டு என்னோடு பேசுங்களேன். ஆமாம் யாரென்றே தெரியாத எனக்காக, உங்கள் அலுவலை ஒத்திக்
வைக்க உங்களுக்கு என்ன, என்னைப் போல பைத்தியமா பிடித்திருக்கப் போகிறது. எப்படியும் நீங்கள் இதைக் கண்டு கொள்ளப் போவதில்லை. என்ன செய்வது எனக்கு பேச வேண்டுமே.. அதான். இந்த கவிதையை படியுங்களேன்.

அவர்கள் தன் அலுவலைத் தவிர
வேறெந்த விசயத்திலும் தலையிட மாட்டார்கள்.
அவர்கள் அப்பிராணிகள்.
தன் வாய்
தன் வயிறு
தன் பெண்டு
தன் பிள்ளை என்று வாழ்கிறவர்கள் அவர்கள்.
அவர்களுக்கு ஊரில் நடப்பதெதுவும் தெரியாது.
பிச்சைக்காரர்களின் கூக்குரல் கேட்காது.
எதிர் வீட்டுச் சண்டை சச்சரவுகள் கேட்காது.
அவர்கள் மிக மிக நல்லவர்கள்.
அவர்கள் யாருடைய வம்பு தும்புக்கும் போகாதவர்கள்
அவர்களை குறைச் சொல்லாதீர்கள்.
அவர்கள்.
அவர்கள் அவர்களுக்காக வாழ்கிறார்கள்.
இந்தக் கவிதையில் வருகிற அவர்கள் யாரென்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நான் எதும் சொல்ல வேண்டி இருக்காது.
அவர்கள் எப்படியோ இருக்கட்டும் நமக்கு என்ன போச்சு? ஆங். சரி தானே. சிரிப்பாக இருக்கிறது. ஆமாம் அவர்கள் என்பதும் நாம் என்பதும் வேறு வேறா என்ன? அன்பு இருந்தால் எல்லோரும் நாமாக முடியும் தானே?
அப்பறம் எப்படி அவர்களைப் பற்றி யோசிக்காமல் வருந்தாமல் இருக்க முடியும். ஏதேதோ உளறுகிறேன்.இப்படி, யாரோடோ, யாரைப் பற்றியோ பேசினேன் என்று யாரிடமாவது போய் சொன்னேன் என்றால் சிரி சிரி என்று
சிரிப்பார்கள் இல்லையா?
சரி விடுங்கள். உங்களிடம் என்னைப் பற்றியாவது பேசலாம் இல்லையா? கேட்பீர்கள் ச்சீ வாசிப்பீர்கள் இல்லையா?
கொஞ்ச நாளாக யாரும் எதுவும் வேண்டாம் என்கிற மன நிலை வலுப்பட்டுக் கொண்டே போகிறது. ஏதும் செய்யத் தோன்றாத தொய்வு நிலை. ஏதும் என்றால் இப்படி எழுதுவதைத் தான் சொல்கிறேன். எதுவுமே எழுதாமல் இருப்பது
எனக்கு செத்து விட்டது போல இருக்கிறது. நடை பிணமாகி விட்டது போல இருக்கிறது. நான் நானாகவே இல்லாதது போல் தோன்றுகிறது. ஏனென்றால் எழுதுதலை எனக்கான எல்லாமுமாக வரிந்து கொண்டு விட்டேன். அதான்
பிரச்சினை. எல்லோரும் எல்லோரிடத்தும் அன்பாய் இருக்க வேண்டும் என்று எண்ணுகிற என் மனம் பிரச்சினை. பாருங்களேன் கானலைக் கொத்தும் பறவைப் போல, யாரும் இல்லாத இடத்தில் யாருக்காகவோ அதுவும் அன்புக்குரிய
என்று எழுதிக் கொண்டிருக்கிறேன். முட்டாள் முட்டாள். ஆனாலும் இந்த முட்டாள் தனம் தான் நானென்று தோன்றுகிறது. யாரும் இல்லாத போதும், யாரும் என் எழுத்தை, என் இருப்பை சட்டை செய்யாத போதும், எதையாவது
யோசித்து, யாரையாவது நேசித்து இப்படி, அப்படி இப்படி கிறுக்குவதும் யாரோடோ பேசுவதாக எனக்கு நானே புலம்பிக் கொள்வதும் தான் என்னை சமநிலையோடு வைத்திருக்கிறது.
ஐயோ... என்ன பேசிக் கொண்டே போகிறேன். உங்கள்.. ச்சீ.. சிரிப்பும் அழுகையுமாக வருகிறது. லவ் யூ க்கள். போதும் உங்கள் அலுவலைப் பாருங்கள். நான் இப்படித்தான், தான் தோன்றி தனமாக உளறிக் கொண்டிருப்பேன்.
கண்டுகொள்ளாதீர்கள்.

  • பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...