Back

Short story

June 7, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

கொஞ்ச நாளாகவே எதும் எழுதத் தோன்றுவதில்லை. இந்த மனது ஏதோ சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு தீராத தேடல். ஏதோ ஒரு நிறைவின்மை. ஏதோ ஒரு குழம்பிய மனநிலை. இந்த
சமூகத்தின் மீது வெறுப்பு. எழுதி என்ன சாதிக்க போகிறாய் என்ற விரக்தி. இதற்கெல்லாம் பொறுமை யாக உட்கார்ந்து பதில் தேடுகிற பழக்கம் இல்லை. நானொரு அவசர குடுக்கை.சரி அதை
விட்டொழிக. எதையாவது உருப்படியாக... வேண்டாம் அறுவை வேண்டாம். ரசனையோடு எதையாவது பேசலாம். நம் சுற்று புறமும், இந்த உலகமும், இயற்கையும் நம்மை கடக்கிற பெண்களும், அம்மா
அப்பாவோ இருக்கிற தைரியத்தில் நம்மிடத்தில் சேட்டை செய்கிற குழந்தைகளும் அழகோ அழகு. இந்த உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்திலும் ஒரு பாடம் இருக்கிறது.இந்த இயற்கையின் ஒவ்வொரு
படைப்புக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது .அந்த ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. ஏன் நீங்கள், நான், உங்கள் வீட்டு நாய், என் வீட்டு பூனைக்குட்டி இப்படி
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலிருந்து தனித்து நிற்கிறது.எல்லாவற்றிலும் ஒரு கவித்துவம் ஒளித்து கிடக்கிறது. எத்தனை பேர் சூழ்ந்திருந்தாலும் தனக்கு அவசரம் என்கிறபோது போட்டிருக்கும்
டவுசரை கழட்டிவிட்டு நின்றவாக்கில் ஒன்னுக்கு போகிற குழந்தையின் கள்ளங்கபடமில்லாத நிர்வாணம், மான அவமானங்களை பகுத்தாய தெரியாத அதற்கு வாய்த்திருக்கும் சுதந்திரம்,
குய்யோமுயெயோ வென வயிறுகத்துகிற போது கையேந்தி காசு கேட்கிற பஸ் ஸ்டாண்ட் பிச்சைகாரன், பேருந்தை தவிர விடக்கூடாத அவசரத்தில் உள்ளாடை வெளியில் தெரிவதை கூட கவனிக்காமல் சேலை
முந்தானையை இழுத்தெடுத்து மார்ப்பை மறைத்து கொண்டு மல்லிகை வாசத்தை காற்றில் நிரப்பிக் கொண்டோடுகிற என் பக்கத்து விட்டு பெண், போன விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த போது
நான் வாங்கி போட்ட மூனு ரூபாய் பார்லேஜி யை நினைவில் வைத்து கொண்டு இன்று வரை என்னோடு வாலாட்டித் திரிகிற என் வீட்டு செவலையன், பேருந்து பயணத்தில் அருகில் அமர்ந்து பயணிக்கிற
சகப் பயணியின் சிநேகப் புன்னகை, கறந்து மிஞ்சிய பாலை ஊட்டும் கன்றினை பரிவோடு நக்கி விடும் பசுவின் தாய்மை, கருக்கண்டி கிடக்கிற மாலை நேரத்து மேற்கு வானம் இப்படியாக நாம்
காண்கிற எதிலும் ரசிக்க வைக்கிற, ஏதையேனும் கற்று தருகிற ஒரு விசயம் ஒளிந்து கிடக்கிறது. எதையும் நின்று ரசிக்க பழ வேண்டும். வாழ்க்கை என்ன விமானப் பயணமா...? நிற்காமல் ஓடிக்
கொண்டே இருக்க. கடந்த வாரம் நானும் என் ரூம் மெட்டும் டீ கடைக்கு போய் விட்டு ரூம் க்கு திரும்பி கொண்டிருந்தோம். கடந்த சில நாட்களாக நல்ல மழையென்பதால் மரங்கள் இலையும்
தழையுமாய் பசுமையோடு செழித்து நின்றிருந்தன.அதை ரசித்து கொண்டே மௌனமாய் நடந்தோம். தீடீரென ஒரு சிறு உரையாடல். "மச்சான் மனுசனா பொறந்ததுக்கு.. இந்த மாதிரி மரமா
பொறந்திருக்கலாம் டா.. பாரேன் எவ்வளவு செழிப்பா.. இருக்கு னு" "மரமா பொறந்தாலும் இந்த மாதிரி நல்ல மழை இருக்கற இடத்தில.. அதுவும் இந்த மாதிரி காலேஜ் லயோ பார்க்
லயோ... நல்ல பாதுகாப்பான இடத்துல இருக்கனும் டா.. வெளில இருந்தா வெட்டி கிட்டு போய்டுவானுக.. இல்லாட்டி தண்ணியில்லாம வாடி வதங்கி செத்து போய்டுவோம்". இப்படி நம் புறத்தை
ரசிக்கிற ஒவ்வொரு நொடியிலும் ஒரு புது வித சிந்தனை புறப்பட்டு வருகிறது. முடிந்த மட்டும் எல்லோரிடத்திலும் முகம் கொடுத்து பேசுங்கள். பழகுங்கள்.காற்றில் அசைகிற கொடி, கால்
தைக்கிற முள், முகம் உரசிப் போகிற துப்பட்டா எல்லாத்தையும் ரசியுங்கள். எதையும் புறக்கணிக்க வேண்டாம். ❣️❣️❣️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...