Back

Letter

November 4, 2019

சகி

SHARE

சகி

சகி...சௌக்கியமா? நிச்சயம் நீ சௌக்கியமாய் இருப்பாய். இங்கு நான் நலம். அப்படியானால் நீயும் நலமாய் தான் இருப்பாய். நானே நீ. நீயே நான்.ஏனெனில் என் முழுதிலும் நீ நிரம்பி வழிகிறாய்.சரி கடைசியாய்
எழுதிய கடிதம் நினைவு இருக்கிறதா? நினைவில்லை என்றாலும் பரவாயில்லை. நானே சொல்கிறேன். புத்தகங்களை பத்திரமாய் பார்த்து கொள். அதுகளோடு சக்களத்தி சண்டை எல்லாம் போட்டுக் கொண்டிருக்காதே. தூசு தட்டி
வைக்க மறுக்காதே டி புருஷி. ஆமாம் இது 8 வது மாசம் தானே. வயிறு பெருசாய் இருப்பதை பார்த்தாலே தெரிகிறது நமக்கு பிறக்க போகிற ரெண்டு குழந்தைகளுமே நிச்சயம் பெண் பிள்ளைகள் தான். நீ ஒரே பிரசவத்தில்
நாலு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாய். ஆனால் ஏதோ உன் ஆசையில் பாதியையேனும் நிறைவேற்றி விட்டேன். சந்தோஷம் தானே. சரி பூங்குழலியையும் நெய்வாசக்குழலியையும் கேட்டதாகச் சொல். வளையல் சத்தம்
கேட்டு நிறைய உதைக்கிறாள்களா? பரவாயில்லை பொறுத்துக்கொள். நம் ஆனந்த பொழுதின் அடையாளம் அவர்கள். மெல்ல நட. ரொம்ப குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாதே . (வெட்கச்சிரிப்பு சிரிக்காதே.)அப்படியே குனிந்து
நிமிர்ந்து வேலை செய்தாலும் நீ குனியும் போது நான் இருக்க மாட்டேன். தொடர்ந்து படி. உன் மார்பை போலவே மனதையும் மென்மையாகவே வைத்திரு. (போதும் உதட்டை கடித்தது) தினமும் வாசி. இசை கேள். கால் கொலுசு
குலுங்க குலுங்க எங்கேனும் நடந்து போய் வா. வாரம் இருமுறை மஞ்சள் தேய்த்து குளிக்க மறக்காதே. உறங்கும் போது ஆடைகளை மறந்து அப்படியே தூங்காதே. நான் அருகிருந்தாலேனும் அடிக்கடி இழுத்து விட்டு சரி
செய்வேன். இப்போது நானும் இல்லை. களையும் உடைகளை கவனி. புரண்டு புரண்டு படுக்காதே. சரி அந்த மாதுளை, ( நினைப்பை வேறெங்காவது கொண்டு போகாதே. நான் கனிகளை சொல்கிறேன்), ஆப்பிளை எல்லாம் தின்று தீர்த்து
விட்டு சொல். மறுபடியும் வரும் போது வாங்கி வருகிறேன். வேளா வேலைக்கு உண். நான் வீட்டை விட்டு வரும் போது தந்த நெற்றி முத்தங்களின் எண்ணிக்கையை எல்லாம் நினைவில் வைத்துக் கொள். பிள்ளைகள் பிறந்த பின்
அத்தனையையும் எனக்கு உதட்டு முத்ததமாக தர வேண்டும். சரி என் பிள்ளைகளை அச்சச்சோ என் பிள்ளைகள் இல்லை நம் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள். உதைத்தால் பொறுத்துகொள். "அப்பன போலவே அடங்காப்
பிடாரிக" னு திட்டாத புருசி. நிறைய கொஞ்சு. குழந்தைகளை கொஞ்ச கொஞ்ச தான் மூளை வளருமாம். அப்பறம் ஆரோக்கியமான சாப்பாடா சாப்டு உடம்ப தேர்த்திக்க. இனி நீ மூன்று பிள்ளைகளை சமாளிச்சாகனும். வயிறு
நிரப்பனும். சரியா. நான் உனக்கு மூத்த மகன் தானே.? ஆமாம், நம் முதல் இரவு முடிந்த காலை யில் எனக்கு நீ எழுதின கவிதை நினைவிருக்கிறதா புருஷி
"நேசனே
எனக்கு நீ
கட்டிலில் கணவன்
காய்ச்சலுறும் போது தகப்பன்
சாப்பாட்டு மேசையில் மகன்
அழுகிற பொழுதுகளில் தாய்
சண்டையின் போது காதலன்
புரிகிறதா புருசனே..
எனக்கு எல்லாமுமாய் இருந்து கொள்
வா.. இப்போது என்னை உன் மார்போடு இறுக்கிக் கொள்
பிரிவொன்று நேருமாயின் அப்போதும் இப்படியே இறுக்கிக் கொல் "
வாழும் காலம் மட்டும் இந்த வார்த்தைகளை மறவேன் புருசி.சரி நீ போய் நம் பிள்ளைகளோடு பேசு. இப்போதைக்கு ஆயிரம் எழுத்து முத்தங்கள். மிச்சத்தை எச்சில் முத்தமாய் வந்து தருகிறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...