Article
January 17, 2026
காதல் என்னும் கள்ளச் சந்தை: ஒரு பொய்யின் வரலாறு
SHARE

மனிதன் பிறக்கிறான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஏன் பிறந்தான்? எதற்காக? எங்கே போகிறான்? பதில் இல்லை. அந்த பதிலின்மை தான் மனிதனின் அடிப்படை துயரம். அந்த சூனியத்தை நிரப்ப அவன் கடவுளை கண்டுபிடிக்கிறான். கடவுள் போதாது. அப்போது அவன் காதலை கண்டுபிடிக்கிறான்.
காதல் என்பது கடவுளை விட சக்தி வாய்ந்த போதை. ஏனென்றால், கடவுள் கற்பனை – அவனால் பார்க்க முடியாது, தொட முடியாது. ஆனால் காதல்? காதல் என்பது மாமிசம் கொண்ட கடவுள். தொடக்கூடிய மாயை. பேசக்கூடிய மயக்கம்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பார்க்கிறான். உடனே அல்லது ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு - அவன் முடிவு செய்கிறான்: "இவர் தான் என் வாழ்வின் அர்த்தம்." எந்த அடிப்படையில்? முகம் அழகாக இருக்கிறது? குரல் இனிமையாக இருக்கிறது? உடல் கவர்ச்சியாக இருக்கிறது? இவை எல்லாம் உயிரியல் சமிக்ஞைகள் – இனப்பெருக்கத்திற்கான அழைப்புகள். ஆனால் நாம் அதை "ஆன்மீக இணைப்பு" என்று அழைக்கிறோம்.
ஏன் இந்த பொய்? ஏனென்றால், "நான் உன் இடுப்பின் வடிவத்தை விரும்புகிறேன், அது நல்ல சந்ததிக்கான அறிகுறி" என்று சொல்ல முடியாது. அது மிருகத்தனமாய் பார்க்கப்படுகிறது. நாம் மனிதர்கள் – நமக்கு கதை வேண்டும். அதனால் நாம் சொல்கிறோம்: "உன் கண்களில் பிரபஞ்சத்தை பார்க்கிறேன்." உண்மையில், அந்த கண்களில் நீ பார்ப்பது உன் சொந்த பயத்தின் பிரதிபலிப்பு.
உண்மையில் எல்லாமே வர்த்தகம். ஆனால் வர்த்தகத்துக்கு மரியாதை இல்லை, காதலுக்கு இருக்கிறது. அதனால் நாம் வர்த்தகத்தை காதல் என்று மறுபெயரிட்டு விற்கிறோம்.
ஆண் ஒருவன் சொல்கிறான்: “நான் உன் மீது உயிர் வைத்திருக்கிறேன்.” மொழிபெயர்ப்பு: “என் பாலியல் தேவைக்கும் சமூக அங்கீகாரத்துக்கும் நீ ஒரு தீர்வு.” பெண் ஒருத்தி சொல்கிறாள்: “நீ இல்லாமல் என் வாழ்க்கை பொருளற்றது.” மொழிபெயர்ப்பு: “என் பொருளாதார பாதுகாப்புக்கும் சமூக நிலைக்கும் நீ அவசியம்.”
மேலும் , காதல் என்பது கண்ணாடி. நீ அதில் உன்னையே பார்க்கிறாய், ஆனால் அது மற்றவர் என்று நினைக்கிறாய்.
இப்போது ஆழமான கேள்வி: ஏன் மனிதனுக்கு இந்த பொய் தேவை? பதில் எளிது: மரணம்.
மனிதன் தான் சாகப்போகிறான் என்று அறிந்த ஒரே உயிரினம். அந்த அறிவு தாங்க முடியாதது. எப்படி வாழ்வது, எல்லாமும் அழியப்போகிறது என்று தெரிந்தால்? எப்படி காலையில் எழுவது, இந்த நாளும் மரணத்துக்கு ஒரு படி நெருக்கம் என்று தெரிந்தால்?
அதனால் நாம் பொய்களை கட்டமைக்கிறோம். முதல் பொய்: கடவுள். "மரணத்திற்கு பிறகு வாழ்க்கை இருக்கிறது." நல்ல பொய். ஆனால் எல்லோருக்கும் வேலை செய்யாது. சிலருக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை.
அவர்களுக்கு இரண்டாவது பொய்: காதல். "இந்த ஒருவருடன் நான் என்றென்றும் வாழ்வேன்." இது மரண மறுப்பு. நீ இறக்கிறாய் என்பது உண்மை, ஆனால் "நாம்" என்ற கருத்து அழியாது என்று நீ நம்புகிறாய். உன் காதலன் இறந்தால், "அவன் என் இதயத்தில் வாழ்கிறான்" என்று சொல்கிறாய். இது தற்காப்பு வழிமுறை. மரணத்தை ஏற்க முடியாததால், நீ அதை "நித்திய காதல்" என்று மறுபெயரிடுகிறாய்.
ஆனால் உண்மை கொடூரமானது: அவன் இறந்துவிட்டான். போய்விட்டான். இல்லை. நீ அவனை நினைவு கூர்கிறாய், ஆனால் அதுவும் உன் நினைவு மட்டுமே. அவன் எங்கும் இல்லை. உன் காதல் என்பது வெறும் மூளை இரசாயனம் – ஆக்ஸிடோசின், டோபமின், செரட்டோனின். அந்த இரசாயனங்கள் தீர்ந்தால், உன் காதலும் தீர்ந்துவிடும்.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நாம் romanticize செய்கிறோம். காதலை மேன்மைப்படுத்துகிறோம். அதை தத்துவமாக்குகிறோம். "காதல் பரிசுத்தமானது," "காதல் சுயநலமற்றது," "காதல் தெய்வீகமானது" – இவை எல்லாம் கட்டுக்கதைகள். காதல் என்பது சுயநலம் தான். மிக ஆழமான சுயநலம்.
நான் உன்னை "நேசிக்கிறேன்" என்றால், நான் சொல்வது இது தான்: "உன் இருப்பு என் இல்லாமையை மறைக்கிறது. உன் உடல் என் தனிமையை தொலைக்கிறது. உன் குரல் என் அமைதியை உடைக்கிறது. நீ இல்லாமல், நான் என் வெறுமையை சந்திக்க வேண்டும். அது பயங்கரமானது. அதனால் நான் உன்னை பிடித்துக்கொள்கிறேன். நான் உன்னை சிறை வைக்கிறேன்.அதற்கு காதல் என்று பெயர் வைக்கிறேன்."
இந்த உண்மையை சமூகம் ஒளித்து வைக்கிறது. ஏனென்றால், இந்த உண்மை வெளிவந்தால், எல்லா நிறுவனங்களும் சரிந்துவிடும். திருமணம் சரியும். குடும்பம் சரியும். சொத்துரிமை சரியும். மதம் சரியும். அரசு சரியும்.
ஏனென்றால், இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரு அடிப்படை பொய்யின் மீது கட்டப்பட்டவை: "நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்." இல்லை. நாம் ஒருவரை ஒருவர் பயன்படுத்துகிறோம். ஆனால் "பயன்படுத்துதல்" என்பது அசிங்கமான வார்த்தை. அதனால் நாம் அதை "நேசித்தல்" என்று அழைக்கிறோம்.
வியாபாரத்தை கவிதையாக மாற்றுவது தான் நாகரிகம்.
இப்போது மிக ஆழமான உண்மை: நீ உன்னையே நேசிக்கவில்லை. உன்னை நேசிக்க முடியவில்லை. ஏனென்றால், நீ உன்னை அறிவாய். உன் கோழைத்தனம் தெரியும். உன் சுயநலம் தெரியும். உன் வஞ்சகம் தெரியும். உன்னோடு தனியாக இருக்க பயமாக இருக்கிறது.
அதனால் நீ மற்றொரு மனிதனை தேடுகிறாய். அவன் உன்னை அறியமாட்டான் – குறைந்த பட்சம் ஆரம்பத்தில். அவன் உன்னை "அழகாக" பார்ப்பான். அந்த பார்வையில், நீ உன்னை மறக்கிறாய். அதுவே காதலின் மயக்கம்.
ஆனால் காலம் செல்லச் செல்ல, அவனும் உன்னை அறிவான். உன் உண்மை முகத்தை பார்ப்பான். அப்போது காதல் மங்குகிறது. அப்போது நீ சொல்வாய்: "காதல் இறந்துவிட்டது." இல்லை. காதல் என்று ஒன்றே இருந்ததில்லை. இருந்தது மயக்கம் மட்டுமே. அந்த மயக்கம் தீர்ந்துவிட்டது.
பிறகு என்ன செய்வாய்? இரண்டு வழிகள். ஒன்று: அந்த உறவில் தொடர்வாய், இப்போது அது "பழக்கம்" என்று அழைக்கப்படும். இல்லை: அந்த உறவை விட்டுவிட்டு, புதிய மயக்கம் தேடுவாய். இதுதான் நவீன காதலின் சுழற்சி.
ஆனால் எல்லா மயக்கங்களும் முடியும். கடைசியில், முதிய வயதில், நீ தனியாக இருப்பாய். உன் துணை இறந்திருப்பார். அல்லது உன்னை விட்டிருப்பார். அல்லது அவர் இருந்தாலும், நீங்கள் இருவரும் அந்நியர்கள். ஒரே வீட்டில் வாழும் இரண்டு தனிமைகள்.
அப்போது நீ புரிந்து கொள்வாய்: காதல் என்பது நேரத்தை கடத்துவதற்கான ஒரு வழி. மரணத்தை மறப்பதற்கான ஒரு தந்திரம். ஆனால் மரணம் மறக்கப்படவில்லை. அது காத்திருந்தது. இப்போது அது வந்துவிட்டது.
இதுதான் காதலின் இறுதி உண்மை: அது நம்மை காப்பாற்றவில்லை. அது நமக்கு நேரம் தந்தது. ஆனால் அந்த நேரம் வீணானது. நாம் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு, நாம் தனியாக இல்லை என்று நினைத்தோம். ஆனால் நாம் எப்போதும் தனியாக தான் இருந்தோம். பிறப்பில் தனியாக, வாழ்க்கையில் தனியாக, மரணத்தில் தனியாக.
காதல் என்பது இந்த தனிமையை மறைக்கும் திரை. அழகான திரை. ரத்தம் தோய்ந்த திரை. நாம் அந்த திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைக்கிறோம்.
ஆனால் திரை கிழிகிறது. அடிக்கடி கிழிகிறது. பிறகு நாம் நம் உண்மை முகத்தை சந்திக்கிறோம்: நாம் யாரையும் நேசிக்கவில்லை. நம்மையே நேசிக்க முடியவில்லை. நாம் வெறும் உயிரினங்கள் – பயத்தால் நிரம்பிய, அர்த்தமின்றி அலையும், இறுதியில் அழியும் உயிரினங்கள்.
இதை புரிந்துகொண்டால், நீ சுதந்திரமாவாய். ஆனால் அந்த சுதந்திரம் தனிமை. அந்த சுதந்திரம் அர்த்தமின்மை. அந்த சுதந்திரம் சூனியம். அதை யாரும் விரும்புவதில்லை.
அதனால் நாம் காதலைத் தொடர்ந்து கொண்டாடுகிறோம். கவிதை எழுதுகிறோம். பாடல் பாடுகிறோம். திரைப்படம் எடுக்கிறோம். நாம் அந்த பொய்க்குள் ஆழமாக குழிபறிக்கிறோம். ஏனென்றால், உண்மை தாங்க முடியாதது.
காதல் என்பது மனிதகுலத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. அது நம்மை காப்பாற்றவில்லை. ஆனால் அது நமக்கு வாழ்வதற்கான ஒரு காரணம் கொடுத்தது. போலியான காரணம். ஆனால் போலியும் இல்லாமல், எப்படி வாழ்வது?
இதுதான் காதலின் சோகம்: அது பொய். நாம் அதை அறிவோம். ஆனால் நாம் அதை நம்புகிறோம். ஏனென்றால், நம்பாமல், நாம் இல்லை என்று நாம் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறோம்.
மட்டுமின்றி தனிமையில் இருக்கும் மனிதன் ஆபத்தானவன். அவன் கேள்விகள் கேட்பான். அமைப்புகளை சவால் செய்வான். ஆனால் காதலில் சிக்கிய மனிதன் பாதுகாப்பானவன். அவனுக்கு ஒரு திசை தெரிப்பு இருக்கிறது. அவன் வீடு கட்டுவான், குழந்தை பெறுவான், கடன் வாங்குவான், வேலை செய்வான். அவன் ஒரு நல்ல நுகர்வோன். அமைதியான குடிமகன்.
அதனால் எல்லா திரைப்படங்களும் காதலில் முடிகின்றன. அதனாலே சமூகம் காதலை ஊக்குவிக்கிறது. அதனாலே எல்லா பாடல்களும் காதலைப் பாடுகின்றன. ஏனென்றால், காதல் என்பது கட்டுப்பாட்டின் முதல் படி. “உன்னை நேசிக்கிறேன்” என்று சொன்னவுடன், நீ ஒரு கூட்டில் நுழைந்துவிட்டாய். இனி உன் சுதந்திரம், உன் கேள்விகள், உன் தேடல்கள் – எல்லாம் ‘பொறுப்பு’ என்ற பெயரில் கழுத்தறுக்கப்படும்.
யோசி என் ___!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...