Back

Short story

November 11, 2026

காதலோடு ஒரு கொலை!

SHARE

காதலோடு ஒரு கொலை!

இந்தக் கதையை இப்படித் தொடங்கி இப்படி முடிக்க வேண்டும் என்று நினைத்து நான் தொடங்கவில்லை. ஆனால் நடந்ததை எழுதும்போது என் விருப்பப்படி மாற்றி எழுதுவது எப்படிச் சரியாகும்? அதனால் நடந்ததை நடந்தபடியே எழுதிக்கொண்டு போகிறேன்.

இப்போது என்னால் கொல்லப்பட்டு, இதோ இங்கே என் அருகில் இரத்தம் உறையக் கிடக்கிறானே, இவன் பெயர் அஜித். இப்போதைக்கு அவனது மற்ற விவரங்கள் அனாவசியம். அவன் என்ன வேலை பார்த்தான், எவ்வளவு சம்பாதித்தான் என்பதெல்லாம் ஒரு மனிதனைப் புரிந்துகொள்ளப் போதுமானதா என்ன? அவன் யாரை எப்படி நேசித்தான், யாருடைய கண்ணீரை எப்படிப் பார்த்தான் என்பதுதானே முக்கியம். அதனால், அவனை ஏன் கொன்றேன் என்கிற சுவாரஸ்யமான விஷயத்திற்குள் நேராகப் போகலாம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வாரச் சனி, ஞாயிறு நாட்களில் நானும் அவனும், அவன் தங்கியிருக்கும் — அதாவது இப்போது அவன் பிணமாகக் கிடக்கிற — இந்த அறையில் சந்தித்துக்கொள்வோம். சமைப்போம், உண்போம், படம் பார்ப்போம். சமையலறையில் நான் காய்கறி நறுக்கும்போதோ குழம்பு தாளிக்கும்போதோ, பின்னால் வந்து நின்றுகொண்டு சமையலைப் பற்றிப் பேசுவது போலவே பச்சையாக இரட்டை அர்த்தத்தில் வம்பு வளர்ப்பான்.

"என்ன டி, இன்னைக்குப் பருப்பு சீக்கிரம் வெந்துடும் போலிருக்கே... உன் அடுப்புலதான் எப்பவும் தணல் அணையாமக் கனன்றுகிட்டே இருக்கே, நான் வேணும்னா நெய் ஊத்தட்டுமா?".
"போடா, முதல்ல வெங்காயத்தை உரி"
"வெங்காயத்தை உரிச்சா கண்ணுல தண்ணி வரும் டி, உன்னை உரிச்சாத்தானே..." என்று சிரித்துக்கொண்டே என் இடுப்பு மடிப்பைக் கிள்ளுவான்.
நானும் சளைக்காமல் திரும்பி நின்று,
"ஏன், ராத்திரி முழுக்க உரிச்சதுல இன்னும் என் காமப் புத்தருக்குப் பசி அடங்கலையாக்கும்? கையில கரண்டி இருக்கு, சூடு வச்சிடுவேன் நகருடா!"
"நீ எங்க சூடு வைப்பன்னு எனக்குத் தெரியாதா டி?" என
என் கழுத்தில் முகம் புதைப்பான்.

மேலும், காமம் எங்களுக்குள் எப்போதாவது வந்து போகும் விருந்தாளி அல்ல; அது எங்களுடைய அன்றாட மொழிகளில் ஒன்று. சில நாட்களில் உரையாடலுக்கு நடுவே வந்து உட்கார்ந்துகொள்ளும்; சில நாட்களில் ஒரு பார்வையில் தொடங்கி, இரவு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்ளும்.

அவனுடைய வியர்வை வாசனையும், அதில் கலந்திருக்கும் ஏலக்காய் தேநீரின் நெடியும் எனக்குப் பழக்கமாகியிருந்தன. தூக்கத்தில்கூட என் கழுத்துவளைவில் முகத்தைப் புதைத்துக்கொள்ளும் விதமும், முத்தமிடும்போது என் கீழுதட்டை மெதுவாகக் கடித்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போலப் பார்க்கும் குறும்பும் பழக்கமாகியிருந்தன. அவனுடைய உடலின் எந்தப் பகுதியில் என் விரல் பட்டால் அவன் மூச்சு தடுமாறும், எப்போது அவனுடைய காதோரம் கிசுகிசுத்தால் அவன் கண்களை மூடுவான், எந்த நேரத்தில் அவனைத் தொடாமல் ஜன்னலோரம் விலகி நின்றால் அவன் பின்னால் வந்து என்னை அணைப்பான் என்பதெல்லாம்கூட எனக்குத் தெரிந்திருந்தன.

ஆனால் ஒருவனுடைய உடலோடு பழகிவிடுவது அவனுடைய மனதிற்குள் குடியேறிவிடுவதல்ல என்பது எனக்குப் பின்னால்தான் புரிந்தது.

வழக்கமான தினசரி அலுவலக வேலைக்காக, வார நாட்களில் எனது ஆபீஸுக்கு அருகில் நான் எடுத்துத் தங்கியிருக்கிற ஹாஸ்டல் அறைக்குத் திரும்பிவிடுவேன். அவன் இதே அறையில் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்வான். எப்போதாவது ஒருவரையொருவர் மிஸ் செய்வது போலத் தோன்றினால் வார வேலை நாட்களிலும்கூடச் சந்தித்துக்கொள்வோம்.

அப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில்தான் — அதாவது அவன் என் கையால் சாவதற்குச் சரியாக இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் — நான் அவனைச் சந்திக்க விடியற்காலையிலேயே வந்தேன். நான் வந்தபோது அவன் எழவே இல்லை. காலிங் பெல்லை இரண்டு மூன்று முறை அடித்த பிறகுதான் தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்தான். திறந்தவன் — கதவைக்கூடச் சாத்தாமல் — அப்படியே என்னை அணைத்துக்கொண்டு வந்து, பெட்டில் தள்ளிக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டான். அவனுடைய உடலின் வெப்பம் இன்னும் இரவுத் தூக்கத்தின் மிச்சத்தைக் கொண்டிருந்தது. என் கழுத்துவளைவில் முகத்தைப் புதைத்து கிசுகிசுத்தான்:

"கொஞ்ச நேரம் தூங்கு டி."

"நான் தூங்க வரல."

"அப்புறம் எதுக்கு வந்த?"

"உன்னைப் பார்க்க."

"பாத்துட்டல்ல... இப்போ சமத்தா தூங்கு" என்று சொல்லிவிட்டு, என் இடுப்பை இறுக்கியபடியே தன் குட்டிக் குட்டிக் கண்களை மூடிக்கொண்டு அழகாக, அமைதியாகத் தூங்கிவிட்டான். உலகத்தில் வேறு எந்தக் கவலையும் இல்லாதவனைப் போலத் தூங்கியவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சொல்ல மறந்துவிட்டேன். இந்தக் கதை என்னுடையதுதான் என்றாலும், என் பெயரை எங்கேயும் சொல்லாத என் சாமர்த்தியத்தையும், அவன் பெயரை மட்டும் போட்டு உடைத்திருக்கிற என் குரூரத்தையும் பற்றி ஏதும் குற்றமாக நினைக்க வேண்டாம். உண்மையைச் சொன்னால், அஜித்தே என்னை என் நிஜப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்ட நாட்கள் குறைவுதான்.

அவனுக்குப் பொங்கி வரும் காதலுக்கும் காமக் குறும்புக்கும் ஏற்ப நான் அவனுக்குக் 'கனகாம்பரம்', 'கொழுக்கட்டை' என்று மட்டுமல்ல; வெளியாள்களுக்குப் புரியாத எங்களின் படுக்கையறை ரகசியங்களான 'தீர்த்தக்குடம்', 'நீச்சல்குளம்', 'வெண்ணெய்த்தாழி', 'பூனைக்குட்டி' என்று தினம் ஒரு இரட்டை அர்த்தச் செல்லப் பெயரில்தான் வாழ்ந்தேன்.

நானும் பதிலுக்கு அவனை 'காமப் புத்தன்' என்றும் 'வெண்ணெய்த் திருடன்' என்றும்தான் கொஞ்சுவேன்.

ஆமாம், இதே போல் ஒரு நாளில், கூடலின் வியர்வை ஆறாமல் நானும் அவனும் பிறந்த மேனியாகக் கட்டிக்கொண்டு அருகருகே கிடந்தபோது, அவன் மார்பின் மீது தலை சாய்த்தபடி ஏதோ ஒரு யோசனையில் சொன்னேன்:

"ஏய், உன்னைப் போல நானும் ஒரு நாள் கதை எழுதுவேன். நீ எழுதுற மாதிரி கற்பனைக் கதையில்ல. நிஜக் கதை. நம்மளோட அழகான காதல் கதை."

"ம்ம்... எழுது, எழுது" என்று எதையோ போனில் தட்டிக்கொண்டே சொன்னான்.

"எழுதினா கதையில உன்னோட பாத்திரத்துக்கு என்ன பேரு வைக்கட்டும்?"

"என் பேரே வை."

"இல்ல, வேற வைக்கலாம். அஜித்-ன்ற பேரு இப்படி உசுரை வாங்குற அளவுக்குக் காதலிக்கிறவனுக்கு அவ்வளவா பொருத்தமா இல்ல" என்று சிரித்தேன்.

அவன் தன் போனில் இருந்த கண்ணைத் திருப்பி என்னை ஒரு மாதிரி கிறக்கமாகப் பார்த்து, போனைக் கீழே வைத்துவிட்டு என் வெற்று மார்பு நசுங்க இழுத்து அணைத்து,
"பின்ன என்ன, மன்மதன்னு வைக்கலாமா?" என்று என் உதட்டைக் கவ்வினான்.

அப்போது, அவனுடைய முத்தத்திலிருந்த குறும்பை நான் காதல் என்று நினைத்தேன். ஒருவேளை அதுவும் காதலாகத்தான் இருந்திருக்கலாம்.

போதும், அந்த நாளை அப்படியே விட்டுவிட்டு இந்த நாளுக்கு வருவோம். நான் அவன் பெயரைப் பயன்படுத்தியது தவறில்லை என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் இதை விளக்குகிறேன் என்றால், ஏற்கனவே ஒரு கொலைக் குற்றத்திற்கு ஆளாகிவிட்டேன்; அதோடு இந்தப் பெயர்க் குற்றத்தையும் தூக்கிச் சுமக்க எனக்குத் தெம்பில்லை. அதான்.

அஜித் செத்துக் கிடக்கிறான். அவன் முகத்தில் இன்னும் அந்தக் கிறக்கமான புன்னகை மாறாமல் உறைந்திருக்கிறது. "மன்மதன்னு வைக்கலாமா" என்று சொல்லி என் உதட்டைக் கவ்விய அதே உதடுகள், இப்போது குருதி வற்றி நீல நிறமாக மாறியிருக்கின்றன.

காலையில் நான் வந்தபோது சாத்தாமல் விட்ட வாசல் கதவு காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருக்கிறது; மேஜையின் மீது கிடக்கும் அவனது போன் அவ்வப்போது யாருடைய அழைப்புக்கோ அதிர்ந்து அடங்கிக்கொண்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நான் அவனைக் கொன்றேன். ஆமாம், நானேதான் கொன்றேன். அவன் எதையும் ஆழமாக யோசிக்கிறவன்; நானோ நடைமுறைக்கு ஏற்றபடி கனவு காண்கிறவள். நல்ல பொருத்தம் என்றுதான் நினைத்தேன். இது ஒரு அழகான, சமத்துவமான காதல் என்றும், இதில் இருவருக்குமே சமமான இடம் இருக்கிறது என்றும் நான் நம்பியிருந்தேன்.

ஆனால் அவன் என்ன நினைத்தான் தெரியுமா? இது அந்தந்த நொடியை மட்டும் அழகாய் வாழ்ந்து பார்க்கும் ஒரு அனுபவம். எதிர்காலத்தைப் பற்றிய வாக்குறுதிகளோ, எதிர்பார்ப்புகளோ இல்லாத ஒரு தூய பிணைப்பு. அவனைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு பரிசோதனைக் கூடம்; நாம் இங்கே எல்லாவற்றையும் செய்து பார்க்க வந்திருக்கிறோம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவன் என்னைக் கட்டிக்கொண்டு நிம்மதியாகத் தூங்குவதற்கு முந்தைய இரவு — அதாவது நேற்று சனிக்கிழமை இரவு — நாங்கள் கூடி முடித்த களைப்பில் நான் சமையலறையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது, பால்கனியில் நின்று அவன் போனில் பேசிக்கொண்டிருந்தது எதேச்சையாகக் கேட்டது:

"மச்சி, எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்டா... அவ இல்லாம இருக்குறது கஷ்டம்தான். ஆனா ஆரம்பத்துல என் கொள்கைக்குத் தலையாட்டிட்டு, இப்போ மத்த பொண்ணுங்க மாதிரியே அவளும் என்னை முழுசாத் தனக்குள்ள அடைக்கப் பார்க்குறா, எமோஷனலாகி அழ ஆரம்பிச்சுட்டா... நான் அவளுக்கு எந்தப் பொய் வாக்குறுதியும் கொடுக்கலயேடா. என் காதல் உண்மையா இருந்தா கொஞ்ச நாள் போனா இதுக்குப் பழகிடுவா, இல்லன்னா ஒருநாள் அவளே என்னை விட்டுக் கிளம்பிடுவான்னு நினைச்சாத்தான்டா கஷ்டமா இருக்கு..."

அந்த வார்த்தைகளைக் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இல்லை; மாறாக, சுரீரென்று புத்திக்கு உரைத்தது. அவன் பொய் சொல்லவில்லை; என்னை வெறுக்கவும் இல்லை. ஆனால் என் உயிரைப் பிழியும் தவிப்பும் கண்ணீரும் அவனுக்குக் காலப்போக்கில் தானாக ஆறிப்போகும் ஒரு தற்காலிகப் பழக்கமாகத்தான் தெரிந்திருக்கிறது. அவனுடைய கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடிக்கும் ஒரு மனுஷியாக அல்ல; அவனுடைய கொள்கைக்குப் பழக்கப்பட வேண்டிய ஒருத்தியாகத்தான் என்னைப் பார்த்திருக்கிறான்.

நான் பால்கனிக்குள் நுழைந்தேன்.

"அஜித், யார்கிட்ட பேசிட்டு இருந்த?"

அவன் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் திரும்பி, "என் ஃப்ரெண்ட்கிட்டதான். நம்மளைப் பத்திப் பேசிட்டு இருந்தேன்" என்றான்.

"என்னைப் பத்தி என்னன்னு சொன்ன?"

"உண்மையைத்தான் சொன்னேன் டி. நாம மனசளவிலும் உடலளவிலும் அவ்வளவு நெருக்கமா இருக்கோம், ஆனா ஊர் உலகம் சொல்ற மாதிரியான எந்தக் கட்டுப்பாடும் நமக்குள்ள இல்ல... அதை ஏத்துக்க முடியாம நீ இப்போ தவிச்சுட்டு இருக்கேன்னு சொன்னேன்" என்றான் என் தோளை ஆதரவாகத் தொட்டபடி.

அவன் முகத்தில் குற்றவுணர்ச்சியின் சாயல்கூட இல்லை. முதல் நாளிலிருந்து என்னிடம் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறான். அவனது கையைத் தட்டிவிட்டு, அன்றிரவே கோபமாக என் ஹாஸ்டல் அறைக்குக் கிளம்பிப் போய்விட்டேன். இரவு முழுக்க எனக்குத் தூக்கமே வரவில்லை; ஆனால் இவன் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறான்.

இதற்கு மேலும் என் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்றும், இன்றோடு அவனிடம் நேருக்கு நேர் பேசி இந்த உறவை நிரந்தரமாக முறித்துக்கொண்டு என் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் உறுதியெடுத்துக்கொண்டுதான் இன்று விடியற்காலையில் திரும்பி வந்து காலிங் பெல்லை அடித்தேன். ஆனால் நான் உறவை முறிக்க வந்திருக்கிறேன் என்பதை அறியாமல், என் கோபம் தணிந்து வழக்கம் போல அவன் உடலின் சூட்டைத் தேடித் திரும்பி வந்துவிட்டேன் என்று நினைத்துத்தான், கதவைக்கூடச் சாத்தாமல் என்னை இழுத்துக் கட்டிக்கொண்டு படுத்தான்.

கடந்த வருடம். ஒரு புத்தகக் கஃபேயில் நடந்த கவிதை வாசிப்பு நிகழ்வில், மேடையில் நின்று அவன் உரக்கச் சொன்னான்:

"உன்னை முத்தமிட்ட

உதடுகள்

வேறெவளையும்

முத்தமிட குவியாதென்றெல்லாம்

பொய்யுரைக்க மாட்டேன் கண்மணி.

மிகையுரைத்துன்னை

ஏமாற்றாது என் காதல்."

என்னவொரு தடாலடியான நேர்மை! ஒரு காதல் கவிதையில் "நான் மற்ற பெண்களையும் முத்தமிடுவேன்" என்று வெளிப்படையாகச் சொல்லும் துணிவு! அரங்கில் சிலர் சிரித்தார்கள்; சிலர் முகத்தைச் சுளித்தார்கள். எனக்கோ அவன் மீது ஒரு விசித்திரமான ஈர்ப்பு தட்டியது.

நிகழ்வு முடிந்ததும் நான் அவனிடம் போனேன். "பயங்கர அதிர்ச்சியான கவிதை! இப்படிப் பட்டவர்த்தனமா உண்மையைச் சொன்னா யாராவது மனசு உடைஞ்சு போக மாட்டாங்களா?"

"உடையும். அதுக்காகப் பொய் சொல்ல முடியுமா? பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அப்புறம் ஏமாத்துறதை விட, என்கிட்ட என்ன எதிர்பார்க்கலாம்னு முன்னாடியே தெளிவுபடுத்திடுவேன். அதுதான் என் கொள்கை."

"நடைமுறைக்கு இதெல்லாம் ஒத்து வருமா?"

"கொஞ்ச பேருக்கு வேலைக்கு ஆகும். மத்தவங்க வழக்கமான எதிர்பார்ப்புகளால விலகிடுவாங்க."

"உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?"

"இல்லை. திருமணம் பந்தமாக இல்லாமல் நிறைய இடங்கள்ல நிர்பந்தமா இருக்குறதால, காதலே கதி மோட்சமென காலம் ஓட்டுறேன்."

என் மனதில் ஆச்சர்யம் ததும்ப, இப்படியொரு பக்குவமான ஏற்பாடு சாத்தியமா என்று கேள்வி எழுந்து முட்டி நின்றது. மன்னிக்கவும், அவனோடு ஆசை ததும்பும் அசைவப் பேச்சுகள் பேசிப் பேசி எனக்கும் அப்படியே ஆகிவிட்டது. அவனுடைய கண்கள் பேசும்போது மாறிக்கொண்டே இருந்தன; சில நேரங்களில் தீவிரமான தத்துவவாதியைப் போலவும், சில நேரங்களில் குறும்புக்காரக் குழந்தையைப் போலவும் சிரித்தன.

"காபி குடிக்கலாமா?" என்று கேட்டேன்.

காபி கடையில், காதலின் மீதான தன் சித்தாந்தத்தை அவன் இன்னும் விலாவாரியாக விளக்கினான்:

"காதல்ங்கிறது தீர்ந்து போற பொருள் இல்லன்னு நான் நம்புறேன். ஒருத்தரைக் காதலிச்சா மத்தவங்களைக் காதலிக்க முடியாதுன்னு யார் விதி போட்டாங்க?"

"பொறாமை வராதா?"

"வரும். நம்மளோட பயம், பாதுகாப்பின்மை, இழந்துடுவோமோங்கிற பதற்றம் எல்லாம் சேர்ந்து பொறாமையா வெளிப்படும். அது இயற்கைதான். ஆனா அந்த உணர்வை இன்னொருத்தரைக் கட்டுப்படுத்துற உரிமையா மாத்திடக் கூடாது. உடமையாக்கிக்க நினைக்கிற குணத்தைக் காதல்னு போட்டுக் குழப்பிக்கக் கூடாது."

"அப்போ பொறாமையை என்னதான் பண்ணணும்?"

"முதல்ல அது எங்கிருந்து வருதுன்னு கேட்கணும். எனக்கு அவளோட நேரம் வேணுமா? அவளோட உறுதியான அன்பு வேணுமா? இல்ல, அவள் வேற யாரையாவது விரும்புறதை என்னால தாங்க முடியலையா? இதெல்லாம் வேற வேற விஷயங்கள். நமக்குள்ள இருக்கிற உணர்ச்சியைப் புரிஞ்சுக்காம, அதை இன்னொருத்தர்மேல திணிக்கக் கூடாது."

"அப்படீன்னா ஒருத்தருக்கு இன்னொருத்தர் மேல எந்த உரிமையும் இருக்கக் கூடாதா?"

"உரிமை இருக்கலாம். ஆனா ஒருத்தர் தன் மனசுக்குள்ள எழுதிக்கிட்ட ஒப்பந்தத்துல, இன்னொருத்தர் கையெழுத்தே போடாம ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாதுல்ல?" என்றவன், காபிக் கோப்பையின் விளிம்பை விரலால் தடவியபடியே சற்றுத் தணிந்த குரலில் தொடர்ந்தான்:
"உண்மையைச் சொல்லணும்னா, ஒருத்தருக்குள்ள மட்டுமே கரைஞ்சு போறதுல எனக்குப் பயம் இருக்குங்க. சின்ன வயசுல இருந்து என் அம்மாவும் அப்பாவும் 'கணவன்-மனைவி'ங்கிற பெயர்ல ஒருத்தரை ஒருத்தர் அதிகாரம் பண்ணிக்கிட்டு, காதலே செத்த பிறகும் ஊருக்காக ஒரே வீட்டுக்குள்ள மூச்சு முட்ட நடிச்சுட்டு வாழுறதைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஆரம்பத்துல காதலா இருக்குற விஷயம், 'நீ எனக்கு மட்டும்தான்'னு வாக்குக் கொடுத்த அடுத்த நொடியே சிறைச்சாலையா மாறிடுது. இன்னைக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உன்கூட உண்மையா இருக்கேன். ஆனா இருபது வருஷம் கழிச்சும் இதே உணர்வு மாறாம இருக்கும்னு என்னால எப்படிப் பொய் சத்தியம் பண்ண முடியும்?"
"அப்போ உனக்கு யாரையாவது இழந்துடுவோம்ங்கிற பயமே இல்லையா?"

"இருக்கு. ஆனா பயத்துக்காக ஒருத்தரைப் பிடிச்சு வைக்க விரும்பல."

அவன் சற்று இடைவெளிவிட்டு என்னைப் பார்த்தான்.

"ஆனா இன்னொரு விஷயம். சுதந்திரம் என்ற பெயரில் ஒருத்தருடைய வலியைப் புறக்கணிக்கவும் கூடாது. பல உறவுகள் வைத்திருக்கிறதுன்னா பொறுப்பில்லாம இருக்கிறதுன்னு அர்த்தமில்லை."

அவன் சொன்ன நியாயம் சரியாகத்தான் பட்டது. அந்தக் கடைசி வரிதான் எனக்கு அதிகமாகப் பிடித்திருந்தது. அவன் ஒரு தத்துவவாதியாக மட்டும் பேசவில்லை; ஒரு மனிதனாகவும் பேசினான்.

ஆனால் என்னைக் கவர்ந்தது அவனது தத்துவம் மட்டுமல்ல. இவ்வளவு தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, காபிக் கோப்பையைப் பிடித்திருந்த என் விரல்களின் நடுக்கத்தையும், பேசும்போது என் மேலுதட்டில் பூத்திருந்த மெல்லிய வியர்வையையும் அவன் கண்கள் எந்தக் கூச்சமும் இல்லாமல் மேய்ந்துகொண்டிருந்தன.

பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டு, "உங்க மூக்குத்திக்குப் பக்கத்துல இருக்குற அந்தச் சின்ன மச்சம், நீங்க சிரிக்கும்போது மட்டும் உள்ள போய் ஒளிஞ்சுக்குது. கவனிச்சிருக்கீங்களா?".

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தத்துவத்திற்கும் அழகியலுக்கும் நடுவே எந்தச் சுவரும் இல்லாமல், இரண்டையும் ஒரே மூச்சில் அவனால் எப்படிப் பேச முடிகிறது!

"நீங்க தத்துவம் பேசுறீங்களா, இல்ல என்னை சைட் அடிக்கிறீங்களா?" என்றேன் சுதாரித்துக்கொண்டு.

"ரெண்டும்தான். அழகான ஒரு பொண்ணை எதிரில் உட்கார வச்சுக்கிட்டு வெறும் தத்துவம் மட்டும் பேசுனா, அது நான் எழுதுற கவிதைக்கும் துரோகம், நீங்க கொண்டிருக்கிற அழகுக்கும் துரோகம்" என்றான் கண்களில் குறும்பு மின்ன.

சூடான காபியும் சுவையான உரையாடலுமாகக் கழிந்த அந்தப் பொழுது, அவன்பால் என்னைக் கவர்ந்திருந்தது. ஒரு சின்ன சந்திப்பும், கொஞ்சம் காபியும், கொஞ்சம் கவிதையும், "பெண்களைக் காதலிப்பது போல் இல்லை ஒரு பெண்ணைக் காதலிப்பது" என்று பேசும் ஒருவனைக் காதலிக்கப் போதுமான காரணமா என்று கொஞ்சமும் நான் யோசிக்கவே இல்லை. சில நேரங்களில் ஒரு மனிதனின் சிந்தனையை நாம் காதலிப்பதில்லை; அந்தச் சிந்தனையைப் பேசிக்கொண்டிருக்கும் மனிதனின் கண்களைப் பார்த்துத்தான் காதலிக்கத் தொடங்குகிறோம்.

என் உணர்ச்சியின் சூடு அணையும் முன் உடனே கேட்டுவிட்டேன்:

"உங்களுக்கு என் மேல விருப்பம் இருக்கா?"

"என்ன கேட்டீங்க?"

"உங்களுக்குக் கேட்டதுதான் கேட்டேன்."

"என்னங்க இன்ஸ்டன்ட் காபி மாதிரி இவ்வளவு சீக்கிரம் முடிவு பண்றீங்க?"

"ஏன் கூடாதா?"

"கூடலாம்" என்றான் சிரித்துக்கொண்டே. (அவன் இப்படித்தான் அசைவ ஆசாமி).

என் மனதில் ஒரே பரவசம்! எனக்கு இது ஒரு சாகசம் மாதிரித் தோன்றியது. 'எனக்கு மட்டும்தான்' என்று கட்டிப்போடும் வழக்கமான உறவுகளிலிருந்து ஒரு விடுதலை! மனம் ஒரு மாய ஊஞ்சலில் வானுக்கும் மண்ணுக்குமாக ஆடிக்கொண்டிருந்தது.

சீன மூங்கில் போல் கிடுகிடுவென வளர ஆரம்பித்தது எனக்கும் அவனுக்குமான காதல் உறவு. நாட்கள் ஓடின. உரையாடல் வழியாகத் தொடங்கிய உறவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. முதன்முறையாக இதே போல் ஒரு நாளில் அவன் அறைக்கு என்னை அழைத்துச் சென்றான்.

அறையின் சுவர்களில் யாரோ ஒரு பழைய நடிகையின் இளமைக்காலப் புகைப்படங்கள் நிறைய ஒட்டப்பட்டிருந்தன. எனக்கு யாரென்று தெரியவில்லை. ஆனால் அழகான பெண். மாடர்ன் உடை, புடவை, கவுன், மிடி — என விதவிதமான ஆடைகளில் விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்ட நிறைய படங்கள். என்னைப் போலவே மூக்குத்தி போட்டிருந்தாள்; கனகாம்பரம் சூடியிருந்தாள்.

அவன் ஏதோ லேப்டாப்பில் தட்டிக்கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்துக்கொண்டே "இவள் யார்?" என்றேன்.

"பொன்னூஞ்சலில் ஆடிய இளமை. ஷோபா. கேமரா இமைக்கும் வேகத்திற்கு ஈடாக முகபாவங்களை அள்ளித் தெளித்த அழகி".

நான் அவளின் ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டிருக்க, அவன் எழுந்து வந்து அவளை வர்ணித்தான். அவள் வாழ்வை விவரித்தான். செந்தாழம் பூவில் வந்தாடிய தென்றலாம் அவள். கேரளச் செழுமையின் பெண் வடிவமாம். பதின்பருவத்திலேயே மனுஷ வாழ்வின் மொத்த வலியையும் கண் வழியே கடத்தித் தேசிய விருதைத் தட்டிச் சென்ற அபூர்வக் கலைஞியாம். மிக இளம் வயதிலேயே பூத்து, இளமையிலேயே உதிர்ந்துவிட்ட பருவப் பூவாம். அவளுடைய மரணத்திற்குப் பின்னால் என்னென்னவோ மர்மங்கள் பேசப்பட்டாலும், அஜித் தன் கவிதை மனதிற்கு ஏற்ப, அவள் காதலின் வலி தாளாமல்தான் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் என்று உருகி உருகிச் சொன்னான்.

"உனக்கு ஏன் இவளை இவ்வளவு பிடிக்கும்?"

"அவளை முழுமையா யாராலயும் புரிஞ்சுக்கவே முடியாது. ஒரு நொடி சிரிப்பா, அடுத்த நொடியே கண்ணீர் சிந்துவா. பிடிபடாம நழுவுற அந்த மர்மம்தான் அவளோட அழகு"
அறிவுஜீவித்தனமான பெண்ணியம் பேசும் இவனுக்குள் இப்படி ஒரு தீவிர ரசிகன் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம், என் முன்னால் நின்றுகொண்டு இன்னொரு பெண்ணை இவ்வளவு ரசனையோடு வர்ணிக்க வர்ணிக்க எனக்குள் எரிச்சலும் மண்டியது. என் மூக்குத்தியை விரலால் தடவிக்கொண்டேன்.

"பருக்கவும் கறுக்கவும் செய்யாத அந்தச் சின்ன உதட்டில்..." என்று அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, அவனை உதட்டோடு உதடு பொருத்தி அழுத்த முத்தமிட்டு அணைத்துக்கொண்டேன். என்னைப் போன்ற எந்தப் பெண்ணுக்குத்தான் தான் விரும்பும் ஆண் இன்னொரு பெண்ணை இப்படி உருகி உருகி வர்ணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும்?

அவன் சிரித்தபடியே என் இடுப்பை வளைத்தான். என் எரிச்சல் சட்டெனப் பெருங்காமமாய் உருமாறியது.

அவனது சட்டையை நானே பிடித்துக் கழற்றினேன். என் அவசரத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தவன்,
"என்ன மேடம், இன்ஸ்டன்ட் காபி இப்போ பொங்கும் கடலா மாறுது? சட்டை பட்டனைப் பிச்சு எறிஞ்சுடுவ போலிருக்கே!"
"வாயை மூடுடா!"
"வாயை மூடிட்டா அப்புறம் உன் உடம்புல எப்படி டி கவிதை வாசிக்கிறது?"
என்று சிரித்துக்கொண்டே என் புடவையை உருவி எறிந்தான்.

அரையிருள் சூழ்ந்த அந்த அறையில் ஆற அமர அரங்கேறியது எங்கள் உடற்கூத்து. என் புடவையை உருவி எறிந்தவன், என்னை உடனே படுக்கையில் தள்ளவில்லை.
என் மூக்குத்தியின் திருகாணியில் தொடங்கி, கழுத்து வளைவு, மார்புகளின் பள்ளம், அடிவயிற்றின் மடிப்பு என ஒவ்வொரு அங்குலமாகத் தன் சூடான முத்தத்தால் நனைத்துக்கொண்டே இறங்கினான். என் பின்னங்கழுத்தில் இருந்த மெல்லிய பூனை முடிகளைப் பற்களால் கடித்து இழுத்தபோது நான் சிலிர்த்துப்போய் முனகினேன். "சத்தம் போடாத என் பூனைக்குட்டி..." என்று கிசுகிசுத்தவன், இன்னும் கீழே இறங்கி என் தொடையிடுக்கில் முகம் புதைத்தான். நான் வெட்கம் தாங்காமல் அவன் தலைமுடியை இறுக்கிப் பிடித்துத் தடுக்கப் பார்க்க, நிமிர்ந்து என்னைப் பார்த்துக் கிறக்கமாகச் சிரித்தவன், "கையை எடு டி... உன் தீர்த்தக்குடத்துல இருந்து வழியுற தீர்த்தத்தைக் குடிக்காம இன்னைக்கு இந்தப் பக்தன் விரதத்தை முடிக்க மாட்டான்! உன் உடம்புக்குள்ள இவ்வளவு ஊற்று இருக்கா டி?" என்றான் பச்சையாக. ஒரு பெண்ணின் பச்சையான காமத்தைக் கண்டு மிரளாமல், அதைத் தன் முத்தத்தாலும் நாவாலும் 'தீர்த்தம்' என்று ஆராதிக்கத் தெரிந்தவனாக இருந்தான்.

சில முத்தங்கள் உடலைக் கேட்கின்றன; சில முத்தங்கள் மனதைச் சமாதானப்படுத்துகின்றன. அவனுடைய முத்தங்களில் இரண்டுமே இருந்தன. என் மார்பின் மீது முகம் புதைத்தவன், சற்று முன் ஷோபாவிற்குச் சொல்லத் தொடங்கிய வரியை எனக்கானதாக மாற்றி என் காதோரம் கிறங்கினான்:
"நீரேந்தக் குவிக்கும்
உள்ளங்கையின் உட்குழிக்குள் அடங்கும்
உன் சிறு முலைக்குள் அடக்கம்
என் சோகமும் காமமும்.
என் சுண்டுவிரலளவான —
பருக்கவும் கறுக்கவும் செய்யாத
உன் உதட்டிடை சுரக்கும்
எச்சிலில் அடங்கும்
என் தாகமும் தவிப்பும்."
என் உச்சக்கட்ட அலறல்களைத் தன் உதடுகளால் விழுங்கியபடி, மயங்க மயங்க, முயங்கி முயங்கிக் கூடினோம்.
கூடிக் களைந்த பின், என் கை அவன் மேலும் அவன் கால் என் மேலும் பட்டுக் கிடக்க மல்லாந்து கிடந்தோம். எனக்குக் குளியலறைக்குப் போக வேண்டும் போல் இருந்தது. தள்ளாடித் தள்ளாடி எழுந்தேன். வெளியே மழை பெய்து ஓய்ந்திருந்தது.

அடித்துப் போட்ட பாம்பெனச் சுருண்டு படுத்துக் கிடந்தவன், திடுக்கென எழுந்து என்னை "அப்படியே நில்லு!" என்றான்.

ஜன்னல் வழியே கசிந்த வெளிச்சம் என் உடலின் விளிம்பில் பட்டுத் தெரிந்தது. போனைக் கையில் எடுத்தவன், "வெளிச்சம் உன் மேல ஓவியம் மாதிரி விழுந்திருக்கு டி... உன் அனுமதியோட இதை நான் எடுத்து வச்சுக்கவா?" என்றான் கண்களில் ரசிகனின் கெஞ்சலோடு. சுவரில் இருந்த ஷோபாவைப் பார்த்து வெட்கம் மேலிட நான் சிரித்தபடியே தலையசைத்ததும், வியர்வை மின்னும் என் நிர்வாண அழகைக் கோணம் மாற்றி மாற்றிப் புகைப்படம் எடுத்தான்.

அவன் எடுத்த அத்தனையும் அழகழகாய் இருந்தது. என் உடலின் ஒவ்வொரு வளைவையும் ஏதோ உலக அதிசயத்தைப் பார்ப்பது போலக் கண்களில் காதலும் காமமும் வழிய ஆராதித்தான். அப்படி ஒரு தீவிரமான காதலோடு என்னை ரசிக்கும் ரசிகனைப் பார்த்து என் மனம் கிறங்கிப் போனது. சுவரில் இருந்த ஷோபாவைப் பார்த்து நான் பெருமையோடு சிரித்துக்கொண்டேன் — அவனது கேமராவுக்குள் நான் சிறைப்பட்டுவிட்டதால், சுவரில் இருக்கும் ஷோபாவின் இடத்தை இனி நான் நிரந்தரமாகப் பிடித்துவிட்டேன் என்று என் பேதை மனம் நம்பியது. ஒரு பெண்ணை உயிரைக் கொடுத்துக் காதலிக்கும் அதே கணத்தில், அவளுடைய உச்சக்கட்ட இன்பத்தையும் சரி, அவளுடைய அந்தரங்கக் கண்ணீரையும் சரி, தன் கலைக்கான அழகியல் அனுபவமாகவும் மாற்றிவிடும் ஆபத்தான கலைஞன் அவன் என்பது எனக்கு அப்போது உரைக்கவில்லை.

பின் இஞ்சி, ஏலக்காய் தட்டிப்போட்டுச் சுடச்சுடத் தேநீர் போட்டுத் தந்தான். அவன் தேநீர் வைக்கும்போது அவன் முகத்தில் ஒரு குழந்தைத்தனமான பெருமை இருக்கும்.

"டீ நல்லா இருக்கா?"
"ம்ஹூம்... சர்க்கரையும் கம்மி, பாலும் கம்மி"

"சர்க்கரை உன் உதட்டுலயே இருக்குன்னு கம்மியாப் போட்டேன்... ஆனா பால் கம்மின்னு என்கிட்ட சொல்லலாமா டி? அதான் வற்றாத ரெண்டு குடம் உன்கிட்டயே இருக்கே, க்ளாஸ்ல ஊத்தவா இல்ல நேரடியாவே குடிச்சுக்கட்டுமா?" என்று என் மார்பை ஓரக்கண்ணால் பார்த்துக் கண்ணடித்தான்.
"நேரடியாக் குடிக்கணும்னா சும்மா கிடைக்குமா வெண்ணெய்த் திருடா?" - சிரித்துக்கொண்டே.
"பின்ன... உன்னை மாதிரி ஒரு கொழுகொழுப்பான வெண்ணெய்த்தாழியைப் பக்கத்துல வச்சுக்கிட்டு எவனாவது திருடாம இருப்பானா? ராத்திரி முழுக்க மத்துப் போட்டுக் கடைஞ்சதுல வெண்ணெய் எப்படித் திரண்டு வந்ததுன்னு நினைவு இல்லையா? “ - என் என்னைச் சீண்டினான்.

நான் வெட்கத்தில் அவன் கையைத் தட்டிவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தபோது, தன் லேப்டாப்பில் புதிதாக எழுதிய கவிதையைக் காட்டினான்:

"மத்தள பிருஷ்டங்கள்

அதிர நீ

நடக்கும் போதெல்லாம்

உண்டாகி உலுக்குகிறது

எனக்குள்

மன நடுக்கம்"

இதை அப்போதுதான் எழுதியிருந்தான். இதை வாசித்ததும் மேலே சுற்றிக்கொண்டிருந்த ஃபேன் என் அடிவயிற்றில் சுற்றியது. "இதையும் கவிதைன்னு சொல்வியாடா?" என்று சிணுங்கியதும், என் வெட்கத்தைப் பார்த்துவிட்டு இழுத்தணைத்துக் காதோடு கவிதை பேசினான்:

"வெட்கத்தால் ஆன ஆடையைத் தவிர வேறெந்த ஆடையை வேண்டுமானாலும் அணிந்து வா. பட்டுத் துணி, பருத்தித் துணி எல்லாம் கூட நான் தொட்ட உடன் அவிழ்ந்து விழுகிறது. உன் வெட்கத் துணி மட்டும் நான் தொடத் தொட வளர்ந்து உன் வாலிப உடல் மூடுகிறது."

என்று சொல்லி, என் பருவக் கனிகளில் கிளி முத்தம் கொடுத்துவிட்டு, அடுத்த கவிதையை வாசித்தான்:

"எண்ணிலா பேர் என்னை காதலித்தாலும்

உன்னிலே மனம் குவிந்து கிடக்கிறதென

உருட்டத் தெரியாது கண்மணி எனக்கு.

காதலிக்காத பேரையும்

காதலித்துருகுமளவு

கனிமையுற்று கிடக்கும் மனம்

காதலிக்கின்ற பேரை காதலிக்காமல் போகுமா என்ன?"

ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, தொண்டையைக் குத்தும் மீன் முள் போலக் குத்தியது அவன் கவிதை. என் புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. இருந்தாலும் சுதாரித்து, "கவிதை ரொம்ப அழகா இருக்கு! ஆனா, நீ என்னை மட்டும்தான் காதலிப்பேன்னு சொல்ல மாட்டியா?"

அவன் என் முகத்தைத் தொட்டான்.
"இல்ல. ஆனா நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல். வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு விதமான பிணைப்புகள்."

"அப்படி என்ன ஸ்பெஷல்?"

"நான் சந்தித்த சமகால ஷோபா நீ. உன் மூக்குத்தி. உன் கனகாம்பரம். மின்சாரம் போல எதிர்பாராத நேரத்தில் என்னைத் தாக்கும் உன் சொல்லும் செயலும். உன்னோட காமத்தைக்கூட நீ ஒளிச்சு வைக்க மாட்ட. ஊதி வைத்த பலூன் போன்ற..." என்று தொட வந்தவனைத் தடுத்து நிறுத்தி, "போதும் போதும். நீ இப்போ வேற யாரையெல்லாம் காதலிக்கிற?" என்று உள்ளுக்குள் எழுந்த அச்சத்தோடும் பொறாமையோடும் கேட்டேன்.

"ரெண்டு பேர். பிரியா — காலேஜ்ல பழக்கம், கவிதைகள் மேல ரொம்ப ஆர்வம் உள்ளவ. காவியா — சாஃப்ட்வேர் இன்ஜினியரா இருக்கா, எதையும் ஆழமா அலசிப் பேசுவா. நீ மூணாவது."

'நீ மூணாவது!' — அந்த வார்த்தை என் அடிவயிற்றில் சுளீரென்று விழுந்தது. சிறுவயதில் அப்பா வாங்கி வரும் பலகாரத்தில் முதல் துண்டு எப்போதும் தம்பிக்குப் போய்விட்டு, மிச்சமிருப்பது மட்டுமே எனக்குக் கிடைக்கும்போதெல்லாம் தொண்டைக்குள் அடைக்கும் அதே பழைய கேவல் இப்போதும் எட்டிப் பார்த்தது. என்றைக்குமே இன்னொருவருக்குப் பின்னால் வரிசையில் நிற்பதை என் மனம் வெறுத்தது. நான் காதலிக்கும் ஒருவனின் வாழ்க்கையிலாவது நான் மட்டுமே முதல் இடமாக, வேறு யாராலும் இடமாற்றம் செய்ய முடியாதவளாக இருக்க வேண்டும் என்ற தீராத பசி எனக்குள் கிடந்தது. சராசரி ஆண் என்றால் இதை மறைத்திருப்பான்; ஆனால் இவனோ சிறிய தயக்கம்கூட இல்லாமல் எல்லாவற்றையும் முகத்தில் அடித்தாற்போல் கொட்டிவிட்டான்.

"அவங்களுக்கும் என்னைப் பத்தித் தெரியுமா?"

"தெரியும். நான் யார்கிட்டயும் எதையும் மறைச்சு வைக்கல. எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் வெளிப்படையாச் சொல்லிடுவேன். நம்ம நேரத்தைப் பகிர்ந்துக்கிறதுலயோ, நம்ம உடம்போட பாதுகாப்பிலயோ எந்த ஒளிவுமறைவும் இருக்கக் கூடாதுங்கிறதுல நான் ரொம்பக் கறாரா இருப்பேன்."

"அவங்களுக்கு இதுல சம்மதமா?"

"ஆரம்பத்துல ஏத்துக்கக் கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க. ஆனா நாங்க பேசினோம். இப்போ புரிஞ்சு ஏத்துக்கிட்டாங்க."

என் தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கிக்கொண்டது. என் மனதில் ஆயிரம் குழப்பங்கள்.

"முடிவெடுக்க நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் எடுத்துக்கோ. என்னை விரும்புறதுக்காக உன்னை நீயே ஏமாத்திக்க வேண்டாம். எந்தக் கட்டாயமும் இல்ல" என்றான்.

அந்தப் பொறுமை! என் உணர்வுகளுக்கு அவன் கொடுத்த அந்த மரியாதை! நான் அன்றே வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் அந்த உரிமையை அவன் கொடுத்தபோது, என் சிறுவயதுக் காயத்திலிருந்து முளைத்த அகங்காரம் என்னைத் தடுத்தது. அவன் என்னை 'சமகால ஷோபா' என்று அழைத்தது என் கர்வத்திற்குத் தீனி போட்டது. மூன்றாவதாக உள்ளே நுழைந்தாலும், என் அழகாலும் என் தீவிரமான காமத்தாலும் மற்ற இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவனது சுதந்திரத்தின் எல்லா வழிகளையும் என்னிடமே வந்து முடியும்படி செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்தேன். அவன் எந்தப் பொய்யையும் சொல்லவில்லை; நான்தான் எனக்குள் இப்படியொரு அழகான பொய்யை உருவாக்கிக்கொண்டேன்.

மழை தூறி ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில், அவனது மடியில் தலைசாய்த்துச் சோபாவில் கிடந்தேன். என் புடவை விலகியிருந்த இடுப்பின் மடிப்பைப் பிடித்து மெதுவாகப் பிசைந்தான்.
"ஏய், விரல் எங்க போகுது? சும்மா இருடா" என்றேன் சிணுங்கியபடி.
"வெளியில இப்படி மழை பெய்யும்போது, மடியில ஆவி பறக்க ஒரு சூடான கொழுக்கட்டை கிடந்தா எவனாவது சும்மா இருப்பானா டி? உள்ளுக்குள்ள எவ்வளவு பூரணம் வச்சிருக்கன்னு கடிச்சுப் பார்க்க வேண்டாமா?" என்றான் என் காதைக் கடித்தபடி.
"ஆமாம், இவரு பெரிய பிள்ளையாரு... கொழுக்கட்டையைக் கடிக்க வந்தாரு!" என்று நான் நக்கலடிக்க,
"பிள்ளையாரா இருந்தா பூஜை பண்ணியிருப்பேன் டி... நான் மனுஷன், அதனால மேய்ச்சலுக்குத்தான் போவேன்" என,, என் மார்பின் மீது தன் தாடையை அழுத்தியபடி கிசுகிசுத்தான்:
"உன் இளஞ்சூட்டு
மென் மேட்டுப் பெருநிலத்தில்
மேய்ச்சலுக்கு வர அலைகின்றன
என் முத்தக் கிடாரிகள்.
உனது காம்பரும்பிய
கனி முலை உரசியாடும்
கொடியின் யோகம் எனக்கு வாய்க்க —
எங்கு சென்று பிரார்த்திக்கணும்?"
அதைக் கேட்டதும் எனக்குள் சூடு பரவியது. எப்போதும் அவனே கவிதை சொல்லி என்னை மடக்குவான்; இன்று அவனை மடக்க நினைத்து, அவன் தாடியைச் செல்லமாகக் கடித்து இழுத்து அவன் காதோரம் நானும் பதிலுக்குக் கிசுகிசுத்தேன்:
"வேலி போடாத
என் மேட்டு நிலத்தில்
மேய்வதற்கு உன் கிடாரிகளுக்கு
அனுமதி எதற்கு?
வந்து மேய்ந்துவிட்டுப் போ —
ஆனால் உன் நாக்குப் பட்ட இடத்திலெல்லாம்
துளிர்த்து நிற்கும் என் காமப் பயிரை
இன்று இரவு முழுக்க
நீதான் அறுவடை செய்ய வேண்டும்!"
நான் சொன்னதைக் கேட்டதும் அவன் கண்கள் ஆச்சரியத்திலும் கிறக்கத்திலும் விரிந்தன. "அடிப்பாவி! என்னை விடப் பச்சையா எழுத ஆரம்பிச்சுட்டியே டி கொழுக்கட்டை!" என்று என்னைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டு, போனில் எனக்காகத் தட்டி வைத்திருந்த அடுத்த கவிதையைக் காட்டினான்:
"காதலின் நெடுங்காயிற்றால் சுழற்றி விடப்பட்ட

உன் ஆதி பெருங் காமம்

என் பருவத்தின் ஆணி முனையில்

பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க

முத்த விரல்களால் தீண்டி தீண்டி

உன்னை வான வில்லாய் முளைக்க செய்தது

என் காதல்."

காமம் கொப்பளிக்கும் அந்த வரிகளை வாசித்ததும் எனக்குள் ஒரு வெப்பம் பரவியது. என் உடலின் வேட்கையை இவனால் எப்படி இவ்வளவு அழகாக மொழிபெயர்க்க முடிகிறது! எனக்காகத்தான் எழுதினான் என்று தெரிந்தாலும், அவன் வாயால் கேட்க வேண்டும் என்ற கிறக்கத்தில் கேட்டேன்:

"இது என்னைப் பத்தியா?"

"ஆமாம். உனக்குள் பொங்கி வழியும் காமத்தைக் கொண்டாடுறேன் டி".

அன்று இரவு நாங்கள் கூடும்போதும் அவன் அந்தக் கவிதையின் தொடர்ச்சியை என் காதோரம் முணுமுணுத்துக்கொண்டிருந்தான்:

"பிறகு பாலொடு தேன் கலந்த

நம் எச்சிலின் வழவழப்பில்

உன் ஏழு வண்ணங்களையும் குழைத்து

உடலெங்கும் பூசி பூசி

நானுமோர் வானவில்லானேன்."

அந்த நொடியில், அவனுடைய கவிதைகளுக்கான ஒரே ஊற்றுக்கண் நான்தான் என்று நினைத்துப் பூரித்துப் போனேன். ஆனால் அவன் மற்ற பெண்களைப் பற்றியும் இதே போலத்தான் உருகி உருகி எழுதுகிறான் என்பது எனக்குப் பிறகுதான் தெரியவந்தது.
இருந்தாலும், அவனோடு விவாதிப்பதே ஒரு தனி போதைதான். ஒரு நாள், "ஏய், பொண்ணுங்க படுற பாட்டைப் பத்தி இன்னைக்கு முக்கியமான ஒரு கவிதை எழுதினேன். படிச்சுப் பாரேன்" என்று கொடுத்தான்.வாசித்துவிட்டு, "கவிதை நல்லாத்தான் இருக்கு அஜித். ஆனா இதுலயும் உன் ஆம்பளப் புத்தி எட்டிப் பார்க்குதே!" என்றேன்.
அவன் புருவம் சுருக்கி, "என்ன டி சொல்ற?" என்றான்.
"பின்ன என்ன? கடைசி வரியில நீயே பொண்ணுங்களுக்கு விடுதலை வாங்கித் தர்ற மாதிரியும், அவளோட மார்பைத் தாய்மையின் ஊற்று, கலைப் படைப்புன்னு கொண்டாடுற மாதிரியும் முடிச்சிருக்க. எப்பேர்ப்பட்ட முற்போக்கு ஆம்பளையைத் தோலுரிச்சுப் பார்த்தாலும், உள்ளுக்குள்ள ஒரு துளி ஆணாதிக்கம் ஒளிஞ்சுட்டுதான் இருக்கும் போல! பொண்ணோட மார்பைக் கலையாகவும், காதலின் ஆதாரமாகவும், தாய்மையாகவும் மட்டுமே பார்க்குற புத்தியே பெண்ணியச் சிந்தனைக்கு முட்டுக்கட்டை இல்லையா? அவளைத் தெய்வமாவோ தாயாவோ மாத்தாம, ரத்தமும் சதையுமான சாதாரண மனுஷியா விடுதலை அடைய விடு!" என்றேன்.
அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. சில நொடிகள் என்னையே உற்றுப் பார்த்தவன், பேனாவை எடுத்து அந்த வரிகளை அடித்துத் திருத்தினான். "என் தத்துவத்தையே உடைச்சுட்டல்ல? இப்போ மனசத் தொட்டுடுச்சாடி கொழுக்கட்டை?" என்றான்.
"ம்ம்... இப்போ மனசத் தொட்டுட்ட அஜித்" என்றேன் நெகிழ்ந்துபோய்.
ஒரு மாதிரி குறும்பாகச் சிரித்துக்கொண்டே, "இல்லையே, இன்னும் தொடலயே... இப்போ இதை எந்தக் கலைப் படைப்பாவும் பார்க்காம, வெறும் மனுஷனாத் தொடப்போறேன் பாரு!" என்றவன், சட்டென என் மார்பைத் தீண்டியபடி என்னை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
பேச்சோடு பேச்சாக வார்த்தையை வைத்து விளையாடி, அப்படியே கூடலுக்குள் இழுத்துப்போய்விடும் வித்தை அவனுக்குக் கைவந்த கலை.

"அஜித்! நீ அடங்கவே மாட்டியா!"
"உன்னை மாதிரி ஒரு பம்பரக்கட்டையைக் கையில வச்சுக்கிட்டு எவனாவது சும்மா இருப்பானா டி? சாட்டையைச் சுத்தி ஆணி முனையில நிக்க வச்சுச் சுத்த வேண்டாமா?" என்று என் கழுத்தோரம் முணகிக்கொண்டே,
"ரொம்ப சீரியஸான நேரத்தையும் கொஞ்சம் இலகுவாக்கிக்கணும் டி. வாழ்க்கையைப் போட்டு ரொம்ப அழுத்திக்கக் கூடாது"

"அதுக்காக இப்படியாடா? வாயைத் திறந்தா புத்தர் மாதிரி தத்துவம் பேசுற, கையை வச்சா மட்டும் காமப் புத்தனா மாறிடுற!" என்று சிரித்தபடியே அவன் கைகளுக்குள் அடங்கினேன்.

அப்படி என்னை இறுக்கி அணைத்து முத்தமிட்ட தருணத்தில்கூட, நான் அவன் கைகளுக்குள் முழுமையாகக் கரைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பான். என் காதோரம் அவன் முணுமுணுத்த கவிதை இதுதான்:

"அன்பே

இந்த நேர இருத்தலை அன்றி

வேறெதையும் நம்புவதில்லை நான்.

இங்கு இப்போது என்னோடு இருக்கிறாய். இருக்கிறோம்.

அவ்வளவு தானே அன்றி,

'எப்போதும் என்னோடு இருப்பாய்! ஒன்றாகவே இருப்போம்' என்பதெல்லாம்

போலி நம்பிக்கை."

புத்த மதத்தில் சொல்வது போல, நிகழ்காலத்தில் மட்டுமே விழிப்புணர்வோடு வாழும் ஏதோ மகா தத்துவம் போல அப்போது அது தோன்றியது. உடலால் என்னை அவ்வளவு ஆழமாகத் தீண்டுபவன், தன் மனதின் எல்லைக் கோட்டை மட்டும் ஏன் இவ்வளவு கவனமாகப் பாதுகாக்கிறான் என்பது அப்போது என் கண்ணுக்குத் தெரியவில்லை.

முதல் ஆறு மாதங்கள் சொர்க்கத்தில் மிதப்பது போலத்தான் இருந்தது. அவனுடைய கவிதைகளைப் போலவே அந்த நாட்களும் அழகாக இருந்தன. உடலளவில் அவன் தந்த நெருக்கமும் சுகமும் என்னைப் பித்துப் பிடிக்க வைத்தன.

நான் அறிவார்ந்த ரீதியில் வளர்வதில் அவன் உண்மையான அக்கறை காட்டினான்; நல்ல புத்தகங்களைப் பரிந்துரைத்தான்; சில சமயங்களில் நான் அவனுடைய கருத்தை ஏற்காமல் வாதிட்டால், கோபப்படாமல் ரசித்துக் கேட்பான்; நான் சொன்ன ஒரு சிறிய விமர்சனத்தையே நாட்கணக்கில் யோசிப்பான். அதே சமயம், வார நாட்களில் நாங்கள் சந்திக்கும்போது அவன் லேப்டாப்பில் ஆபீஸ் மீட்டிங்கில் சீரியஸாகப் பேசிக்கொண்டிருப்பான். நான் குளித்து முடித்து ஈரத் தலையோடு கண்ணாடி முன் நின்று புடவையைச் சரிசெய்துகொண்டிருப்பேன். திரையைப் பார்த்தபடியே சீரியஸாகத் தலையாட்டிக்கொண்டிருக்கும் அவனது கண்கள் மட்டும், கண்ணாடி வழியே என் இடுப்பு மடிப்பில் வழிந்து இறங்கும் தண்ணீர்த் துளியையே மேய்ந்துகொண்டிருக்கும். மீட்டிங் முடிந்து ஹெட்போனைக் கழற்றியதும், பின்னால் வந்து என் ஈர இடுப்பில் முகம் புதைத்து, "ஆபீஸ்ல எவனோ ஒருத்தன் பிரசன்டேஷன் காட்டிட்டு இருக்கான்... ஆனா என் கவனம் முழுக்க இங்கத் தேங்கி நிக்குற உன் நீச்சல்குளத்துலயேதான் டி கிடந்தது. மனுஷனை வேலை பார்க்க விடுறியா நீ?" என்று என் தொப்புள் சுழியில் உதடு பதிப்பான்.

உண்மையில் அஜித் ஒரு சாதாரண மனிதன் அல்ல; எதையும் உச்சத்தில் நின்று அணுகும் ஒரு மிகையுணர்ச்சிவாதி. கலையின் மகத்தான உச்சப் பார்வை அவனிடம் இருந்தது. சாதாரண மனிதர்கள் கவனிக்காமல் கடந்துபோகும் 'நிகழும் கணத்தின்' சிறிய அற்புதங்களை அப்படியே சொற்களுக்குள் பிடித்துவிடும் மாந்திரீகம் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஜன்னல் வழியே விழுகிற வெயிலில் மிதக்கும் தூசியின் நடனத்தையோ, தேநீர் கோப்பையிலிருந்து எழும் ஆவி என் மூக்குத்தியில் பட்டு நீர்த்துளியாகும் அந்த ஒரு நொடியையோ அவனால் ஒரு பெருங்கவிதையாக மாற்றிவிட முடியும்.
மனிதர்களை அணுஅணுவாக ரசிப்பதில் அவனுக்கு ஒரு விசித்திரமான பசி இருந்தது. ஒரு முகத்தைப் பார்க்கும்போது அதன் வெளிப்படையான அழகை மட்டும் அவன் கவனிக்க மாட்டான். பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென வார்த்தைக்குத் தடுமாறி நின்றுவிடும் அந்தச் சிறிய இடைவெளி, சிரிக்கும்போது வெட்கத்தை மறைக்க முகத்தைத் திருப்பிக்கொள்ளும் கோணம், கோபத்தில் சுருங்கும் புருவங்கள், எதையோ தீவிரமாக யோசிக்கும்போது பற்கள் அறியாமல் கீழுதட்டைக் கடிப்பது — என நாம் நம்மை அறியாமல் செய்யும் சின்னச் சின்ன அசைவுகளைக்கூடக் கண் கொட்டாமல் கவனிப்பான். ஒரு பெண்ணைப் பார்த்தால் அவளுடைய அழகை ரசிப்பதை விட, அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அவள் எவ்வளவு மெனக்கிடுகிறாள் என்ற அந்தப் பிரயத்தனத்தைத்தான் அதிகம் ரசிப்பான்; ஒரு கவிதையை வாசித்தால் கூட, அதில் எழுதப்பட்ட வரிகளை விடக் கவிஞன் எழுதத் தயங்கி விழுங்கிய இடங்களைத்தான் தேடுவான். அவனது அந்தத் தீவிரமான அழகியல் உலகத்திற்குள் ஒருமுறை நுழைந்துவிட்டால், வெளியிலிருக்கும் சாதாரண ஆண்களின் உலகம் சக்கையாகத் தெரியத் தொடங்கிவிடும்.

ஒருமுறை அவன் என் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது, "உனக்கு மனுஷங்களைப் பார்க்குறதுலயே தனியா ஒரு காமம் இருக்குல்லடா?" என்று கிண்டல் செய்தேன்.

"ஆமாம் டி. சில முகங்களைப் படிக்கப் படிக்கத் தீராது. அப்படியே பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கும்" என்றான்.

"அப்போ என் முகத்தை எவ்வளவு நேரம் சலிக்காமப் பார்க்க முடியும்?"
"நீ அந்த வாயை வெறுமனே பேசுறதுக்கு மட்டும் பயன்படுத்தாம, என் மேல வேற நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தினா விடிய விடியச் சலிக்காமப் பார்க்கலாம்!" என்றான் குறும்பாகக் கண்ணடித்து.
"போடா பொறுக்கி!" என்று முகம் சிவக்க அவன் தோளில் அடித்தேன்.
உடனே என் மணிக்கட்டைப் பிடித்துத் தன் மடியில் இழுத்துப் போட்டுக்கொண்டு, "இப்போ கூட நீ கோபப்படும்போது உன் கம்மல் ஆடுற விதத்தை ரசிச்சுட்டுத்தான் இருக்கேன்" என்றவன், என் மூக்குத்தியின் நுனியில் தன் மூக்கை உரசியபடியே உடனடியாகக் கவிதை கட்டினான்:
"மூக்குத்தி நிழலுக்குள்
பதுங்கி ஆடும்
உன் கள்ள மச்சத்தைத்
தேடித் தேடியே
திசை மாறிப் போகிறது
என் முத்தங்களின் தத்துவம்.
முறைத்துப் பார்க்கும்
உன் மூக்குத்தி வெளிச்சத்தில்
விட்டில் பூச்சியாய் விழுந்து
சீரழிகிறது என் கர்வம்!"

அவனுக்கு உடலின் மீதும் காமத்தின் மீதும் எந்தக் கூச்சமும் கிடையாது; ஆனால் அந்தக் காமத்திற்குள் ஒரு நாகரிகமான நிதானம் இருக்கும். என் உடலில் ஒரு மெல்லிய தயக்கம் தெரிந்தால்கூடத் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, என் கண்களைப் பார்த்துச் சம்மதம் கேட்பான்; தனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகப் பிடிக்காத எந்தத் தொடுதலையும் என் மீது திணிக்க மாட்டான். என் உடலின் விருப்பங்களை எனக்கே வெட்கமில்லாமல் அறிமுகப்படுத்தியவன் அவன்தான். சராசரி ஆண்களுக்காகப் பெண்கள் தங்கள் உடலைச் செதுக்கி, பூசி மெழுகி மறைக்கும் விஷயங்களைத்தான் அவன் தேடித் தேடி ஆராதிப்பான். நான் அவனைப் பார்க்க வரும்போது கை கால் முடிகளை மழிக்காமல் வந்தாலோ, வெயிலில் அலைந்து உள்ளாடை நனைய வியர்வையோடு வந்தாலோ நான் கூச்சத்தில் நெளிவேன்; அவனோ என் கைகளைத் தூக்கி முகர்ந்து பார்த்துப் பித்தனைப் போலக் கவிதை சொல்வான்:
"உன்னுடம்பின் வியர்வை எனக்குத் தீர்த்தம்.
குளித்த பின் உன் ஈரக் கூந்தலிலிருந்து ஒழுகும் நீர்த்துளி
என் பூமிக்கு மழை.
உன் பின்னங்கழுத்தின் பூனை முடிகள் பார்த்தால்
என் ஹார்மோன்கள் பூ பூக்கும்.
மயிர் மழிக்காத உன் அக்குளில்
சிக்குண்டு கிடக்கிறதென் மனம்.
அக்குள் வேர்வையின் ஈரம் படர்ந்து
மார் மூடிய உள்ளாடை தெரியும் காட்சி —
யாரும் எழுதாத கவிதை!
உன் தொடை முடிந்து முட்டி தொடங்கும்
பின்னங்காலின் வரிகளும்,
அதன் கீழ் ரோமமடர்ந்த கெண்டைக்காலில்
சப்தமிடும் கொலுசின் ஓசையும் எனக்குத் தேவ கீதம்.
ஈரம் தேங்கி நின்று வழியும் உன் மார்புக் குழியும்
தொப்புள் பள்ளமும் —
என் இளமையின் நீச்சல் குளம்!"
இப்படி என் தொப்புள் பள்ளத்தை 'நீச்சல் குளம்' என்றும், என் வியர்வையை 'தீர்த்தம்' என்றும், பின்னங்கழுத்து முடியைத் தடவி 'என் பூனைக்குட்டி' என்றும், நான் வெட்டி எறியும் நகத்துண்டுகளைக்கூடத் தன் பர்ஸில் எடுத்து வைத்துக்கொண்டு 'இவை என் பர்ஸில் வந்து குட்டி போடும் டி' என்றும் கொஞ்சும் ஒருவனை எந்தப் பெண்ணால்தான் மறக்க முடியும்?
அதேபோல், அவன் என் அழகையும் காமத்தையும் மட்டுமே கொண்டாடினான் என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். ஒருமுறை ஹாஸ்டலில் தனியாகக் கிடக்க முடியாமல், கடுமையான வைரஸ் காய்ச்சலோடு உடலெல்லாம் நடுங்க அவன் அறைக்கு வந்தேன். அன்று என் முகத்தில் எந்தக் கவர்ச்சியும் இல்லை; உதடுகள் வறண்டு வெடித்து, உடல் முழுக்க மருந்து வாடையும் வியர்வைப் புழுக்கமுமாகப் படுக்கையில் சுருண்டு விழுந்தேன். "கிட்ட வராதடா, உனக்கும் தொத்திக்கப் போகுது" என்று நான் ஈனஸ்வரத்தில் தடுத்தும் அவன் கேட்கவில்லை.

நடுராத்திரியில் குமட்டிக்கொண்டு வந்தபோது, வாஷ்பேஸினில் வாந்தி எடுத்துவிட்டுத் தலைசுற்றலில் கால்கள் பின்ன, உடல் வலியிலும் சோர்விலும் கண்கலங்கி நின்றேன். கொஞ்சமும் முகம் சுளிக்காமல் என்னைத் தாங்கிப் பிடித்தவன், வெதுவெதுப்பான நீரால் என் வாயையும் முகத்தையும் கழுவிவிட்டு, தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டாலேயே என் தாடையைத் துடைத்துவிட்டான். "உன் டிரெஸ்ஸை மாத்திடட்டுமா டி?" என்று கேட்டு, நான் நடுக்கத்தோடு தலையசைத்ததும் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்த என் உடையை மென்மையாக மாற்றிவிட்டான். அப்போது என் வெற்றுடலின் மீது விழுந்த அவனது பார்வையில் ஒரு துளிக்கூடக் காமம் இல்லை; மாறாக, அடிபட்ட ஒரு சின்னக் குழந்தையைக் கையாளும் பதற்றம்தான் இருந்தது. குளிரில் விறைத்துப்போயிருந்த என் பாதங்களைப் போர்வைக்குள் இழுத்துத் தன் வெற்று மார்போடு சேர்த்து அணைத்துச் சூடேற்றியபடியே, விடிய விடிய என் நெற்றியில் ஈரத்துணியை மாற்றிக்கொண்டிருந்தான்.
தூக்கக் கலக்கத்தில் விடியற்காலையில் நான் கண் விழித்தபோது, என் கையைத் தன் கன்னத்தோடு அழுத்தியபடி படுக்கையின் ஓரத்திலேயே கண் அயர்ந்திருந்தான். அருகில் கிடந்த அவனது போன் நோட்ஸில், இரவு விழித்திருந்தபோது அவன் தட்டச்சு செய்து வைத்திருந்த வரிகள் வெளிச்சத்தில் தெரிந்தன:
"புணர்ச்சியின் பெருமூச்சுகள் பழகிய இந்தப் படுக்கையில்
இன்று உன் காய்ச்சலின் முனகல் மட்டும் கேட்கிறது.
மருந்து மணக்கும் உன் மூச்சுக்காற்றும்,
கசந்துபோன உன் உதடுகளின் வறட்சியும்
எந்த முத்தத்தைக் காட்டிலும் என்னை உன்னோடு பிணைக்கின்றன.
உன் வெற்றுடலைக் கொண்டாடிய என் விரல்கள்,
இன்று நடுங்கும் உன் பாதங்களைப் போர்த்திப் பிடிக்கும்போதுதான்
முதன்முறையாகக் காதலைக் கற்றுக்கொள்கின்றன.
என்னை ஆளும் உன் நிர்வாணத்தின் அழகை விட,
என்னிடம் மட்டுமே நீ கழற்றி வைக்கும் உன் பலவீனம்தான்
இன்றிரவு என்னை உன் காலடியில் கட்டிப்போடுகிறது.
காமம் உன் உடலை மட்டும்தான் தொட்டது கண்மணி —
உன் நோயோ என் உயிரின் அடிவரை தொட்டுவிட்டது."

என் உடலின் உச்சங்களை மட்டுமல்ல, என் நோயையும், என் இயலாமையையும், என் உடைந்த தருணங்களையும் கூடத் தன் மார்போடு சேர்த்துத் தாலாட்டத் தெரிந்த அந்த அஜித்தைத்தான் நான் பைத்தியக்காரத்தனமாகக் காதலித்தேன்.

ஆனால் என் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவன் என்னிடம் காட்டிய இந்த அசுரத்தனமான காதலும் கரிசனமும் எனக்கு மட்டுமே உரியதல்ல என்பதுதான்!

ஒருநாள் நள்ளிரவு இரண்டு மணிக்கு நாங்கள் கட்டிக்கொண்டு படுத்திருந்தபோது பிரியாவிடமிருந்து போன் வந்தது. மறுமுனையில் அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை; அவளது விசும்பல் சத்தத்தை மட்டுமே வைத்து, "பிரியா, வீட்டுல மறுபடியும் மாப்பிள்ளை பார்க்கிற பிரச்சனையா? அழாத, இதோ இருபது நிமிஷத்துல உன் ஹாஸ்டல் வாசல்ல நிப்பேன்" என்று சொல்லிவிட்டு, கொட்டும் மழையில் நனைந்துகொண்டே பைக்கை எடுத்துக்கொண்டு ஓடினான். ஒருமுறை பிரியா கோபப்பட்டு ஒரு வாரம் அவனோடு பேசாமல் இருந்தபோது, தாடி வளர்த்துக்கொண்டு, ஒரு வரி எழுத முடியாமல் பால்கனியில் சிகரெட் புகையோடு அவன் தவித்த தவிப்பை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.

இருக்கும் அந்த நொடியில் எதிரில் இருப்பவளுக்குத் தன் உயிரையே கரைத்துக் கொடுப்பான்; ஆனால் வேறொரு நாளில் இன்னொருத்தியிடமும் இதே அளவுக்குக் கரைவான் என்பதுதான் என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அவனது காதலாக இருந்தது.

அவனைச் சந்திப்பதற்கு முன்பு எனக்கென்று ஒரு தனி உலகம் இருந்தது. வார இறுதிகளில் தோழிகளோடு சுற்றியலைவேன்; சிறுகதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன்; அலுவலகத்தில் அடுத்த பதவி உயர்வுக்காகப் போராடுவேன். ஆனால் அஜித்தை எனக்கு மட்டுமே உரியவனாக்கப் போராடியதில், என் உலகத்தை நானே என் கையால் சுருக்கிக்கொண்டேன். தோழிகள் கொடைக்கானல் போகலாம் என்று அழைத்தபோது அஜித் அன்று கூப்பிடுவானோ என்று நினைத்துப் பயணத்தை ரத்து செய்தேன். எல்லாவற்றையும் விடக் கொடுமை, என்னால் இப்போது என் சொந்தக் கற்பனையில் ஒரு சிறுகதையைக்கூட எழுதி முடிக்க முடியவில்லை. கதை எழுதுவதற்குத் தேவையான மனச் சுதந்திரத்தை நான் எப்போதோ தொலைத்திருந்தேன்; என் லேப்டாப்பில் பாதி எழுதிய சிறுகதையின் பக்கம் மாதக்கணக்கில் அப்படியே உறைந்து கிடந்தது.
இந்த அறை அவனது காதல்களின் அருங்காட்சியகமாக இருந்தது. புத்தக அலமாரியில் பிரியா மயிலிறகு வைத்து மடித்து வைத்த கவிதைத் தொகுப்புகள் இருக்கும்; குளியலறைக் கண்ணாடியின் ஓரத்தில் காவியாவின் அடர் சிவப்பு உதட்டுச்சாயமும் அவளது வாசனைத் திரவியமும் வீற்றிருக்கும்; சமையலறையில் நான் வாங்கி வைத்த ஏலக்காய் டப்பாவும் தேயிலையும் இருக்கும். அறையிலிருந்து கிளம்பும்போதெல்லாம் என் தலையிலிருந்த கனகாம்பரப் பூவையோ, என் ஹேர்பின்னயோ அவன் தலையணைக்கு அடியில் வேண்டுமென்றே விட்டுச் செல்வேன். இதோ, இப்போது சமையலறைத் தரையிலிருந்து வழிந்து படுக்கையறை வரை உறைந்து கிடக்கும் அவனது இரத்தத்தின் கவிச்சை, நாங்கள் மூவரும் விட்டுச் சென்ற அத்தனை வாசனைகளையும் ஒரேயடியாய் விழுங்கிக்கொண்டிருக்கிறது.
முழுமையான கதைகள்தான் என்னால் எழுத முடியவில்லையே தவிர, என் லேப்டாப்பில் பாதியில் உறைந்து கிடந்த சிறுகதையின் குறிப்புப் பக்கத்தில், ஒரு நாள் அவன் குளித்துக்கொண்டிருந்தபோது என் கதாநாயகியின் குரலாக இப்படி ஒரேயொரு பத்தியை மட்டும் தட்டச்சு செய்தேன்:
"மூன்று கிண்ணங்களில்
ஊற்றப்படும் ஒரே தேநீர்தான்.
சூடும் சுவையும் குறையவில்லைதான்;
ஆனால் அவள் உதடுகள் தேடியதோ
பங்குபோடப்படாத முதல் மிடறை."
அதற்கு அடுத்த வாரம் நடந்த இலக்கியப் பயிலரங்கத்திற்கு நானும் அவனோடு போயிருந்தேன். பிரியாவும் அங்கே வந்திருந்தாள்; இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க அழகான பெண். மேடையேறிய அஜித், தான் புதிதாக எழுதிய கவிதை என்று சொல்லி வாசிக்கத் தொடங்கினான்:
"அணைத்திருந்த என் மார்பின் மீது
உடைந்து விசும்பியவளின் மூக்குத்தித் திருகாணியில்
பட்டுச் சிதறிய கண்ணீர்த் துளி கேட்டது —
'எல்லோருக்கும் பொதுவான உன் வானத்தில்
எனக்கென ஒரு நட்சத்திரம்கூட இல்லையா?' என்று."
அதைக் கேட்டதுமே என் இரத்தம் உறைந்தது. அதற்கு முந்தைய வாரம் என் தனிமையைப் பற்றி அவனது மடியில் கிடந்து நான் உடைந்து அழுதபோது, நான் விசும்பிக்கொண்டே கேட்ட அதே வார்த்தைகளை அப்படியே கோத்து அந்தக் கவிதையை எழுதியிருந்தான்! அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அவன் என்னைப் புண்படுத்த வேண்டுமென்று அதைச் செய்யவில்லைதான்; ஆனால் என் சொந்த வலியை என்னால் ஒரு கதையாக எழுத முடியாமல் நான் ஊமையாகிப் போயிருக்க, என் அந்தரங்கமான கண்ணீர் அவனுக்குக் கைதட்டல் வாங்கித் தரும் கவிதைப் பொருளாக மாறியிருந்தது என்னைக் கூசிப் போகச் செய்தது.

அதைவிடப் பெரிய இடி, மேடையிலிருந்து இறங்கி வந்தவன் மற்ற எழுத்தாளர்களிடம் என்னைக் காட்டி, "இவங்க என்னோட தோழி. என் எழுத்துகளை ரொம்ப ஆழமா உள்வாங்கிப் படிக்கிற வாசகர்களில் முக்கியமானவங்க" என்று அறிமுகப்படுத்தியதுதான்!
தோழி. வெறும் வாசகி. பயிலரங்கம் முடிந்ததும் நான் அவனிடம் கேட்டேன்: "என் அழுகையைக் கவிதையா எழுதி மேடையில வாசிக்கத் தெரிஞ்ச உனக்கு, ஏன் என்னை உன்னோட காதலின்னு சொல்ல வாய் வரல?"
"உனக்கு அந்த வார்த்தை முக்கியமா? நம்ம உறவுக்கு ஊருக்காக என்ன பெயர் வைக்கிறோம்ங்கிறதை விட, நாம எப்படி இருக்கோம்ங்கிறதுதானே முக்கியம்?" என்றான்.

நான் பதில் சொல்லாமல், "பிரியா ரொம்ப அழகா இருக்கால்ல?" என்றேன்.

அவன் புன்னகைத்தான். "ஆமாம். நல்லா கவிதையும் எழுதுவா."

"அவளோடவும் நீ நெருக்கமா இருக்கியா?"

"சில சமயம். அவளுக்கும் நம்மளைப் பத்தித் தெரியும். அவளுக்கு அதுல எந்தப் பிரச்சனையும் இல்ல."

"அப்போ நானும் வேற யாரையாவது காதலிக்கலாமா?"

அவன் உடனே உற்சாகப்படுத்தினான்! "தாராளமா! அனுபவம் விரிவடையுமே. நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்."

அவன் அப்படிச் சொன்னதும், அவனைச் சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற குறும்பு எனக்குள் எழுந்தது. அடுத்த வாரமே என் அலுவலக நண்பன் ஒருவன் என்னைக் காபி குடிக்க அழைத்தபோது வேண்டுமென்றே போனேன். அன்று இரவு அஜித்தின் அறைக்கு வந்தபோது, சாதாரணமாகப் பேசுவது போல், "இன்னைக்கு ஆபீஸ் ஃப்ரெண்ட் கௌதம்கூட வெளிய போனேன் அஜித். பையன் ரொம்ப ஸ்மார்ட். என் மூக்குத்தியைக்கூடப் பாராட்டினான், கையைப் பிடிச்சுப் பேசிட்டே இருந்தான்" என்றேன்.

புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த அஜித்தின் விரல்கள் ஒரு நொடி இறுகின. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு என்னை நேராகப் பார்த்தான். அவன் கண்களில் சட்டென ஒரு கூர்மை ஏறியிருந்தது. அருகில் வந்து என் தாடையைப் பிடித்துத் தூக்கி, "ஓ... உன் மூக்குத்தியைப் பாராட்டினானா? எந்தக் கையைப் பிடிச்சான்?" என்றான் தணிந்த குரலில்.

எனக்குள் உற்சாகம் கொப்பளித்தது! ஆஹா, மகா தத்துவவாதிக்கும் பொறாமை வந்துவிட்டது! "ஏன், பொறாமையா இருக்கா?" என்று நக்கலாகக் கேட்டுக்கொண்டே, நானே அவன் சட்டைப் பித்தான்களை இழுத்து அவிழ்த்தேன். என் கண்களில் இருந்த சவாலைப் பார்த்ததும் அவனுக்குள் இருந்த நிதானம் உடைந்தது. "உனக்கு இன்னைக்குப் பொறாமையைக் காட்டணும், அவ்வளவுதானே?" என்று முணுமுணுத்தபடியே என்னைத் தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். நான் என் கால்களால் அவன் இடுப்பை இறுக்கித் தூண்ட, என் இரண்டு கைகளையும் என் தலைக்கு மேல் கோர்த்துப் பிடித்துக்கொண்டு என் கழுத்துவளைவில் முத்தமிட்டான். "இங்க பாரு... உன் உடம்புக்குள்ள நான் மட்டும்தான் இருக்கணும்னு இப்போ எனக்கும் வெறி வருது டி" என்று என் காதோரம் பச்சையாகக் கிறங்கியபோது, என் உடலின் ஒவ்வொரு அணுவும் வெற்றிக்களிப்பில் துடித்தது. அன்று எங்கள் கூடலில் வழக்கமான நிதானம் இல்லை; தன் தத்துவத்தையும் மீறி அவனுக்குள் பீறிட்ட பொறாமையும், அவனை எனக்கானவனாக மாற்றிவிட்டதாக நான் நினைத்த பெருங்காமமும் ஒன்றோடொன்று மோதின.

கூடல் முடிந்து மூச்சு வாங்கப் படுத்திருந்தபோது, அவன் மார்பில் தடவிக்கொண்டே பெருமையோடு கேட்டேன்: "இப்போ சொல்லு... நான் அவன்கூடப் பழகுனா உனக்குப் பொறாமையா இருக்கில்ல? இனிமே போகக்கூடாதுன்னு சொல்லு, போகமாட்டேன்."

அவன் பெருமூச்சு விட்டு, என் நெற்றியில் முத்தமிட்டான். "பொய் சொல்ல மாட்டேன் டி. நீ இன்னொருத்தன் உன் கையைப் பிடிச்சான்னு சொன்னதும் வயிறு எரிஞ்சதுதான். பொறாமையே வராத மனுஷன் யாராவது இருந்தா அவன் உயிரற்ற ஜடமாத்தான் இருக்கணும். ஆனா, என் பொறாமைங்கிறது என்னோட பலவீனம். அதுக்காக உன் சுதந்திரத்தைத் தடுக்குற உரிமை எனக்கில்ல. உனக்கு அவனைப் பிடிச்சிருந்தா தாராளமாப் பழகு" என்றான்.

நான் உறைந்து போனேன். அவனுடைய பொறாமை என்னைக் கட்டிப்போடும் சங்கிலியாக மாறும் என்று நான் ஏங்கினேன்; அவனோ தன் சொந்தப் பொறாமையையும் தத்துவத்தால் அறுத்து எறிந்துவிட்டு எழுந்து போனான்!

ஆனால் மெல்ல மெல்ல எனக்குள் ஒரு வெறுமையும் அரிப்பும் வளரத் தொடங்கின. அவன் என்னை 'சமகால ஷோபா' என்று அழைத்தது முதலில் பெருமையாக இருந்தது; ஆனால் போகப் போக, அவன் என்னை நானாகப் பார்க்காமல், தான் ஏற்கனவே செதுக்கி வைத்திருக்கும் ஒரு அழகியல் பிம்பத்திற்குள் என்னைப் பொருத்திப் பார்க்கிறானோ என்ற உறுத்தல் தொடங்கியது.

பிரியாவுக்கு ஒரு கவிதை அனுப்பினால், அதே கவிதையை எனக்கும் அனுப்பியிருக்கிறானா என்று தேடுவேன்; அவன் குளிக்கும்போது அவன் போனை எடுத்துத் திருட்டுத்தனமாகப் பார்ப்பேன். ஒருமுறை பிரியாவுக்கு அவன் அனுப்பியிருந்த மெசேஜில் இப்படி எழுதியிருந்தது:
"இதழ் விரிப்பெண்மையின்
அகல் விளக்கில்
முத்தச் சுடரேற்றி
காம ஒளி சமைப்போம்
கண்ணே வா."
அதைப் படித்ததும் என் அடிவயிறு எரிந்தது. என்னிடம் 'நீச்சல் குளத்தில் இறங்கவா' என்று பச்சையாகக் கேட்பவன், அவளிடம் 'அகல் விளக்கில் முத்தச் சுடரேற்றவா' என்று பக்தி இலக்கியம் போலக் கொஞ்சுகிறான்! அவனுடைய நேரத்தைப் பகிர்ந்துகொள்ளச் சம்மதித்திருந்த என்னால், அவனுடைய கவனத்தையும் காமத்தையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. அவன் காவியாவுடன் போனில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனிடம் ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசலாம் என்று நான் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து காத்துக்கிடந்தேன். பத்து நிமிடம்... முக்கால் மணி நேரம்... ஒரு மணி நேரம். நான் எழுந்து போய்த் தண்ணீர் குடித்து வந்தேன்; ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன்.

பேசி முடித்துவிட்டு என்னிடம் வந்தபோது அவன் முகம் சற்றுச் சோர்வாக இருந்தது. "ஸாரி டி. தங்கத்தை ரொம்பக் காக்க வச்சிட்டேனா? காவியாவுக்கு ஆபீஸ்ல அவ டீம் லீடரோட பெரிய பிரச்சனை. எப்பவும் தைரியமா இருக்குறவ, இன்னைக்கு உடைஞ்சு போய் போன் பண்ணா. அவளைச் சமாதானப்படுத்தித் தேத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு" என்றான்.

காவியாவின் குரல் உடைந்ததைக் கேட்டதும் இவன் துடித்துப்போய் ஒரு மணி நேரம் அவளைத் தாங்கிப் பிடிக்கிறான் என்ற உண்மை என்னை இன்னும் சுட்டது.

"அதுக்குன்னு ஒரு மணி நேரமாவா பேசுவ? நான் உன் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலையா?" என்று கத்தினேன்.

"ஸாரி டி... அவ ரொம்ப அப்செட்டா இருந்தா, அதான் பாதியில வைக்க முடியல. இனிமே உன்கூட இருக்கும்போது இப்படி ஆகாம பார்த்துக்கிறேன்" என்றான் என் கையைப் பிடித்து.

நான் அவனைப் பார்த்தேன். "நீ என்னோட மட்டும் இருக்கும்போது, உன்னோட மனசு இங்கதான் இருக்குதான்னு சில நேரம் சந்தேகமா இருக்கு."

அவன் என் நெற்றியில் முத்தமிட்டான். பிறகு காதோடு கிசுகிசுத்தான்:

"இது என் முதல் காதல் இல்லை

இருந்தாலும்

ஏன் இத்தனைப் பதட்டம் எனக்கு?

உதிர்காலம் இல்லாமல்

வசந்த காலம் இல்லை.

என்றாலும் எனக்கேன்

இவ்வளவு பயம்?

கண்மணி,

எல்லாம் அறிவேன் ஆயினும்

இந்த கணம்

நீ தான் என்

ஒரே ஒரு உயிராக இருக்கிறாய்."

அவன் உண்மையாகத்தான் சொன்னான். ஆனால் எனக்கு அவனுடைய 'இந்த கணம்' மட்டும் போதவில்லை. நான் இல்லாத நேரங்களிலும் அவனுக்கு நான் நினைவுக்கு வரவேண்டும் என்று விரும்பினேன்; அவன் வேறொருத்தியுடன் சிரிக்கும்போதும் அவனுடைய மனதின் ஏதோ ஒரு மூலையில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு மனிதனின் இருப்பை மட்டுமல்ல, அவர் இல்லாத நேரங்களையும் காதலிக்கத் தொடங்கிவிட்டால் அந்தக் காதலிலிருந்து வெளியேறுவது எவ்வளவு கடினம் என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

அன்று இரவு அவன் என் ஆடைகளைக் களைந்தபோது, எனக்குள் ஒரு விபரீதமான மனப்பிறழ்வு தொடங்கியது. அவன் என் மார்பில் முகம் புதைத்தபோது, அவன் முதுகில் தெரிந்த பழைய நகக்கீறல் என்னுடையதா அல்லது காவியாவுடையதா என்று என் விரல்கள் நடுக்கத்தோடு தடவித் தேடின. அவன் என் கழுத்துவளைவில் புது விதமாக முத்தமிட்டபோது, 'இதைப் பிரியாவிடம் கற்றுக்கொண்டானா?' என்ற எண்ணம் மின்னல் போல வெட்டி என் உடலை விறைக்கச் செய்தது. உடலால் அவனோடு எவ்வளவு ஆழமாகக் கலந்தேனோ, அவ்வளவுக்கவ்வளவு அவனது உடலில் மற்ற பெண்களின் தடயங்களைத் தேடி என் மனம் புண்ணானது. என் உடல் மரக்கட்டை போல விறைத்துக்கிடப்பதை ஒருகட்டத்தில் அவனும் கவனித்துவிட்டான். என் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, "என்ன டி? எப்பவும் கவர்ச்சி அழகியா இருக்குறவ, இப்போ ஏன் அசௌகரிய அழகியா இருக்க?" என்றான்.

அவனுடைய அந்த வார்த்தை விளையாட்டு எனக்குள் லேசாகக் கிச்சுக்கிச்சு மூட்டினாலும், முயன்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "ஒண்ணுமில்ல, நான் நல்லாத்தான் இருக்கேன்" என்றேன்.

அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, என் புழுக்கத்தைத் தன் வழக்கமான தத்துவக் கவிதையாலேயே அடைக்கப் பார்த்தான்:

"வா..

இந்த கணத்தை..

இந்த நேர இருத்தலை

இந்த முத்தத்தில் இருக்கிற

எச்சில் கவிச்சையை

உயிரின் மெல்லுஷணத்தை

உணர்ந்து அனுபவி - போதும்."

அந்த நொடியில் அவன் எந்தப் பாசாங்கும் இல்லாமல் உண்மையாகத்தான் இருந்தான். ஆனால் என் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மனதின் தனிமையை உடலின் எச்சில் கவிச்சையால் நிரப்பிவிட முடியுமா என்ன?

எட்டு மாதங்கள் கழித்து, அவனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில்தான் நான் பிரியாவையும் காவியாவையும் நேரில் சந்தித்தேன்.

காவியாவை நான் முதன்முதலில் பார்த்தபோது, அவள் பால்கனி ஓரத்தில் நின்றுகொண்டு அஜித்தோடு ஏதோ தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தாள். அடர் அரக்கு நிறப் புடவையில், தளர்வாகப் பின்னிய கூந்தலோடு நின்றிருந்தவளின் உடல்மொழியில் ஒரு அலட்சியமான கவர்ச்சி ததும்பியது. பேசிக்கொண்டே அஜித்தின் கையிலிருந்த காபிக் கோப்பையை அதிகாரமாகப் பிடுங்கி ஒரு மிடறு குடித்தவள், சட்டென முகத்தைச் சுளித்தாள்.

"ச்சீ! என்னடா இது? உன் காபி மாதிரியேதான் உன் புதுக் கவிதையும் இருக்கு... சர்க்கரையும் பத்தல, சூடும் பத்தல!" என்றாள்.

"அதான் உனக்குத் தித்திப்பே பிடிக்காதேன்னு சர்க்கரையைக் குறைச்சேன்... மத்தபடி சூடு பத்தலன்னா சொல்லு, இப்பவே அடுப்புல கனல் மூட்டி கொதிக்க வச்சுடுறேன்" என்றான் அஜித் குறும்பாகக் கண்ணடித்துக்கொண்டே.

"ம்ம்! நீ எங்க அனல் மூட்டுவ, எதைக் கொதிக்க வைப்பன்னு எனக்குத் தெரியாதா? முதல்ல இரண்டாவது பத்தியில வர்ற உவமையை மாத்து. போன மாசம் நாம படிச்ச மொழிபெயர்ப்புக் கவிதையோட வாடை அப்படியே அடிக்குது."

"அடிப்பாவி! என்னை இவ்வளவு தீவிரமாவா கண்காணிக்கிற?"

"உன்னைக் கண்காணிக்க எனக்குத் தனியா வேற வேலை இல்ல பாரு! உன் கவிதையே உன் கள்ளத்தனத்தைக் காட்டிக்கொடுத்துடும். ஒழுங்கா அதை மாத்தி எழுது."

"முடியலன்னா?" என்று குறும்பாகக் கேட்டபடியே அஜித் அவள் இடுப்பை நோக்கிக் கையைக் கொண்டுபோனான்.

காவியா சற்றும் பின்வாங்காமல், அவனது சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தாள். அவளது உதடுகள் அவன் தாடையை உரசும் அளவுக்கு நெருங்கி, அவன் கழுத்துவளைவில் தன் சூடான மூச்சுக்காற்றை ஊதினாள். அஜித்தின் கண்கள் கிறங்கி மூடுவதைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தவள், அவன் உதட்டைத் தொடாமல் சட்டென விலகி, அவன் நெற்றியில் சுண்டினாள்.

"திருட்டு வரியை மாத்தி எழுதுற வரைக்கும் இந்த உதட்டுக்குக் கீழே ஒரு இஞ்ச் கூட உனக்குக் கிடையாது. இது இலக்கியத் தண்டனை!" "அநியாயம் பண்ணாத என் ராட்சசி! இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்" என்று அவன் ரகசியக் குரலில் கெஞ்சினான். "பிறந்தநாளா இருந்தா தப்புப் பண்ணுவியா சின்னப் பையா? ராத்திரி விருந்து முடியட்டும், உனக்குத் தனியாப் பாயசம் வைக்கிறேன்... இப்போ போய் வேலையைப் பாரு!" என்று அவனது தலையைக் கலைத்துத் துரத்திவிட்டுத் திரும்பியவள், நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டாள். ('ராட்சசி', 'பாயசம்' என்று அவர்கள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க வார்த்தைகள் என் காதுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றின).
எனக்கு உள்ளுக்குள் ஒரு சிறிய மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அஜித்திடம் என்னைக் கவர்ந்த அதே அறிவும், காமமும், குறும்பும் காவியாவிடமும் இருந்தன. ஆனால் நான் அவனிடம் கரைந்துகொண்டிருந்தேன்; அவளோ அவனைத் தன் விரல் நுனியில் வைத்துச் சுழற்றிக்கொண்டிருந்தாள்.

என் அருகில் வந்தவள், எந்தப் பாசாங்கும் இல்லாமல் கையை நீட்டி, "ஹாய்! நான் காவியா. நீங்கதான் அஜித்தோட சமகால ஷோபாவா?" என்று கண்ணடித்துச் சிரித்தாள்.

சற்று நேரம் கழித்து நாங்கள் இருவரும் சமையலறையில் தேநீர் கோப்பைகளை நிரப்பிக்கொண்டிருந்தபோது, அவளே பேச்சைத் தொடங்கினாள்.

"அப்புறம்... கவிஞர் உங்களையும் தன் தத்துவ வலையில முழுசா மடக்கிப் போட்டுட்டாரா?" என்றாள் சிரித்துக்கொண்டே.

"ஏன் அப்படிக் கேக்குறீங்க?"

"இல்ல, விருந்துக்கு வந்ததுல இருந்து உங்க கண்ணு அவனையே சுத்திச் சுத்தி வருது. அவன் வேற யாரோட பேசினாலும் உங்க விரல்கள் புடவைத் தலைப்பைக் கசக்குது. அதான் கேட்டேன்."

என் கள்ளம் பிடிபட்ட அதிர்ச்சியில் நான் தடுமாற, அவள் என் தோளைத் தட்டி, "பயப்படாதீங்க, நான் ஒண்ணும் உங்களைக் குறை சொல்லல. நான் சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்ட்டா இருபது ஆம்பளைங்களுக்கு நடுவுல தினம் தினம் சண்டை போட்டு என் இடத்தைத் தக்க வச்சுக்கிறவ. வாரம் முழுக்க லாஜிக்காவும் அதிகாரத்தோடும் யோசிச்சுச் சூடாகுற என் மூளைக்கு, தனியா ட்ராவல் பண்றது எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவுக்கு அஜித்தோட இந்தக் கட்டற்ற உலகமும் பிடிக்கும்" என்றாள்.

"ஆனா உனக்குப் பொறாமையே வராதா? நீ ரொம்பக் கூலா இருக்கிற மாதிரி அஜித் சொன்னானே?" என்றேன்.

காவியா வாய்விட்டுச் சிரித்தாள். "அவன் கிடக்கிறான் விடுங்க! எனக்குக் காமம் அதிகம்; என் உடம்புக்குத் தேவையானதை நானே கேட்டு வாங்குற தைரியமும் அதிகம். அதனால எனக்கு எமோஷனே கிடையாதுன்னு அவன் கணக்குப் போட்டு வச்சிருக்கான்" என்றவள், தேநீர் கோப்பையைப் பார்த்தபடி சற்றுத் தயங்கி, லேசான சங்கடத்தோடு குரலைத் தழைத்தாள்: "யார்கிட்டயும் சொல்லாதீங்க... போன மாசம் இவன் உங்ககூட இருக்கான்னு தெரிஞ்சே, நடுராத்திரியில எனக்குப் பயங்கர காய்ச்சல்னு பொய் சொல்லி இவனை என் வீட்டுக்கு வரவழைச்சேன். இவன் பதறிப்போய் வந்ததும், ஒண்ணுமே இல்லன்னு சிரிச்சுட்டு இழுத்துப் போட்டுப் படுத்துட்டேன். நினைச்சா இப்பவும் எனக்கே சின்னப்பிள்ளைத்தனமா அசிங்கமாத்தான் இருக்கு... ஆனா அவன்கூட இருக்குறப்போ முழுசா இருப்பேன்; அதுக்காக அவனுக்குள்ள கரைஞ்சு என் அடையாளத்தைத் தொலைச்சிட மாட்டேன்."

சொல்லிவிட்டு, என் தோளில் சாய்ந்து குரலைத் தழைத்துச் சொன்னாள்: "ஆனா ஒண்ணு தெரியுமா? இவன் வாய்க்கு வாய் சுதந்திரம் பேசுறானே தவிர, இவனுக்கும் உள்ளுக்குள்ள ஆம்பள ஈகோ உண்டு.
போன தடவை நான் பெங்களூரு போனப்போ, நம்ம ஒப்பந்தப்படி இவன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டுத்தான் என் பழைய காலேஜ் ஃப்ரெண்ட் கூட ஒரு வார்ம் நைட் தங்கிட்டு வந்தேன்.
ஆனா திரும்பி வந்து அதைப் பத்திச் சாதாரணமா பேசினப்போ கவிஞன் முகம் கருத்துப் போச்சு! எவ்வளவுதான் படிச்சாலும், சுதந்திரம் பேசினாலும் ஆம்பளைங்களுக்குள்ள இருக்குற அந்த ஆதி ஈகோ போகாது பாருங்க. சராசரி ஆம்பளைங்க பொண்ணுங்களைச் சமையலறைக்குள்ள பூட்டுவாங்க; இவனை மாதிரி கவிஞனுங்க பொண்ணோட உடம்பைக் 'கலைப் படைப்பு, கனி, தாய்மடி'ன்னு உவமை போட்டுக் கவிதைக்குள்ள பூட்டி உரிமை கொண்டாடுவாங்க! உடனே என் உடம்பை 'பழம், கொடி'ன்னு வர்ணிச்சு ஒரு கவிதை எழுதி அனுப்புனான். நான் உடனே அவனோட அந்த அழகியல் ஆணாதிக்கத்துலயே குட்டு வைக்கிற மாதிரி பதிலுக்கு இந்தக் கவிதையைத் தட்டிவிட்டேன்:
"என் முலைகளைப் பழங்களென்றும்

என் இடையைக் கொடியென்றும்

உவமை சொல்லிச் சப்பாதே.

இது பசித்திருக்கும் பச்சைத் தசை.

வெட்கம் என்பது

என் தசைகளுக்குத் தெரியாத மொழி.

படுக்கையில்

நீ என்னை ஆள்கிறாய் என்பது

உன்னுடைய அறியாமை.

என் அடிவயிற்றின் நெருப்புக்கு

உன்னை விறகாகப் போடுகிறேன் நான்.

என் எச்சிலும், என் வியர்வையும்,

என் யோனியின் இருளும்

என் சொந்தக் காடுகள்.

உச்சத்தின் கடைசித் துடிப்பில்

உன் முதுகை என் நகங்களால் கீறிவிட்டு,

வேட்டை முடிந்த புலியென

படுக்கையை விட்டு இறங்குவேன் —

என் உடலின் மீது

எந்த ஆணின் பெயரையும்

பச்சை குத்திக்கொள்ளாமல்."

அதைப் படிச்சுட்டு ரெண்டு நாள் என்கிட்ட மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டுத் திரிஞ்சான் நம்மாளு!" என்று சொல்லிக் கலகலவெனச் சிரித்தாள் காவியா.

அப்போது அஜித் சமையலறைக்குள் நுழைந்து, பின்னாலிருந்து காவியாவின் தோளில் சாய்ந்தபடி, "என்ன, ரெண்டு பேரும் சேர்ந்து என்னைப் பத்திப் புறணி பேசுறீங்களா?" என்றான்.

"ஆமாம்டா, உன்னோட மகா தத்துவத்தைத்தான் கிழிச்சுத் தொங்கவிட்டுட்டு இருக்கேன்" என்றாள் காவியா கிண்டலாக.

அஜித் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்து, "பார்த்தியா டி, நான் எவ்வளவு நேர்மையா இருந்தாலும் இவ என்னைக் கடிச்சுக் குதறுறதே வேலையா வச்சிருக்கா. ஒருத்தரை நேசிப்பது அவரைச் சொந்தமாக்கிக்கிறது இல்லன்னு சொன்னா இவளுக்குப் புரிய மாட்டேங்குது" என்றான்.

காவியா சட்டெனத் திரும்பி, தன் கையிலிருந்த தேநீர் கோப்பையை மேடையில் வைத்துவிட்டு அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

"அஜித், என்கிட்ட அந்தப் பல்லவியைப் பாடாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? ஒருத்தரை நேசிப்பது அவரைச் சொந்தமாக்கிக்கிறது இல்லதான், ஒத்துக்குறேன். ஆனா, ஒருத்தியை நேசிக்கிறேன்னு சொல்லிட்டு, அவளோட உணர்வுகளை உன் சௌகரியத்துக்கு ஏத்த மாதிரி மடைமாத்தி விடுறதும் காதல் கிடையாது!"

அஜித்தின் முகத்தில் இருந்த சிரிப்பு சற்றே மாறியது. "நான் யாரோட உணர்வையும் மடைமாத்தல காவியா. நான் என் இயல்பை மட்டும்தான் சொல்றேன்."

"மண்ணாங்கட்டி!" என்றாள் காவியா கூர்மையாக. "உனக்கு உன் தத்துவம் மேல இருக்குற காதல் மனுஷங்க மேல கிடையாதுடா. நீ ரொம்ப நேர்மையானவன் மாதிரி 'நான் முன்னாடியே சொல்லிட்டேன்'னு ஒரு பாதுகாப்புக் கவசத்தை மாட்டிக்கிற. ஒரு பொண்ணு உன்கிட்ட காமத்தோடு வந்தா கொண்டாடுவ; ஆனா அதே பொண்ணு உன் மேல இருக்குற காதல்ல வலிக்குதுன்னு அழுதா, உடனே புத்தர் மாதிரி தத்துவம் பேசி அவ வாயை அடைச்சிடுவ. உனக்குத் தேவைப்படுற சுதந்திரத்தைப் பத்தி யோசிக்கிற அளவுக்கு, உன்னைக் காதலிக்கிறவங்களுக்கு என்ன தேவைப்படுதுன்னு யோசிக்கிற கரிசனம் உன்கிட்ட கம்மி. நான் உன்னைக் காதலிக்கிறேன் அஜித்; ஆனா உன் எல்லாப் பேச்சுக்கும் தலையாட்டுறதுக்காக நான் இங்க வரல!"

அஜித் ஒரு நொடி வார்த்தையின்றி நின்றான். தன்னைத் தோலுரித்துக் காட்டும் ஒருத்தியின் கூர்மையான உண்மைக்கு முன்னால் அவனது தத்துவம் ஆடித்தான் போனது. ஆனால் அவன் கோபப்படவில்லை; மாறாக, அவன் கண்களில் காவியாவின் மீது ஒரு பெருமிதமும் காதலும் பொங்கின. அவள் அருகில் சென்று, அவளது கன்னங்களைத் தன் இரு கைகளால் ஏந்தி நெற்றியில் ஆழமாக முத்தமிட்டான். "என் தப்பை என் முகத்துக்கு நேரா அடிச்சுச் சொல்ற தைரியம் உனக்கு மட்டும்தான் டி இருக்கு. அதுக்காகவே உன்னை ஆயுசுக்கும் காதலிக்கலாம். ஆனா உன்கிட்ட வாயைக் கொடுத்து மீள முடியாது!" என்று சிரித்துக்கொண்டே நகர்ந்தான்.

காவியா என்னைப் பார்த்துக் கண்ணடித்தாள். "பார்த்தீங்களா? கோபம் வரும், ஆனா காட்டிக்க மாட்டான். அவனை இழந்துடுவோமோன்னு எனக்கும் சில நேரம் பயம் வரும்; ஆனா அவனைத் தக்க வச்சுக்கிறதுக்காக என்னையே நான் இழக்கத் தயாரா இல்ல."

அவள் சொல்லிவிட்டுச் சென்ற பிறகு, அந்தப் பெண்ணின் ஆளுமை என்னைப் பிரமிக்க வைத்தது. சற்று நேரத்தில் மொட்டை மாடியின் அமைதியான மூலையில் பிரியாவைச் சந்தித்தேன். அவள் ஒரு பதிப்பகத்தில் உதவி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டே தன் முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவரப் போராடிக்கொண்டிருப்பவள். காவியாவிற்கு முற்றிலும் நேரெதிர் துருவம்.

"அஜித் உன் கவிதைகளை நிறையப் பாராட்டுவானா பிரியா?" என்று கேட்டேன்.

அவள் குறும்பாகச் சிரித்தாள். "பாராட்டுறதா? போன வாரம் அவர் எழுதின ஒரு கவிதையைப் படிச்சுட்டு, 'உங்க தத்துவப் பீடத்துல இருந்து கீழே இறங்கி மனுஷனா எழுதுங்க அஜித், இதுல உயிரே இல்ல'ன்னு முகத்துக்கு நேரா கிழிச்சுப் போட்டுட்டு வந்தேன்! பதிலுக்கு அவரும் என் கவிதையை வச்சுச் சண்டை போடுவார். 'உன் கவிதையில ஏக்கம் மட்டும்தான் இருக்கு பிரியா, உடம்போட கொண்டாட்டமே இல்ல'ன்னு சொல்லுவார். ஆனா என் காமம் காவியா மாதிரி சத்தமா வெடிக்காது; அதுக்காக எனக்கு ஆசையே இல்லன்னு அர்த்தமா?" என்றவள், தன் கைப்பையிலிருந்து ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துப் பிரித்தாள். அதில் அவளது கையெழுத்தில் இரண்டு கவிதைகள் இருந்தன:

"நீ சென்ற பிறகு

உன் வாசனை தங்கியிருந்த

தலையணையைத் துவைத்துவிட்டேன்.

ஆனால் அதில் முகம் புதைத்துப்

படுத்திருந்த என்னை மட்டும்

இன்னும் துவைக்க முடியவில்லை."

அடுத்த பக்கத்தைப் புரட்டினாள். அதில் இருந்த வரிகள் என்னைத் திடுக்கிட வைத்தன:

"என் மௌனத்தை வெட்கமென்று
தப்புக்கணக்குப் போடாதே.
உன் உதடுகள்
என் கழுத்தில் இறங்கும் முன்பே
என் விரல்கள்
உன் முதுகின் தழும்புகளைத்
தடவித் தீர்த்துவிட்டன.
அமைதியாகப் பெய்யும் மழைதான்
வேர் வரைக்கும் நனைக்கும்."

இவளையா ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண் என்று நினைத்தேன்! அப்போது கீழே இருந்து காவியாவின் உரத்த சிரிப்பு சத்தம் கேட்டது. பிரியாவின் முகம் ஒரு நொடி சுருங்கியது. "சில நேரம் காவியாவைப் பார்த்தா எனக்குப் பொறாமையா இருக்கும் அக்கா. அவங்களால அஜித்தைத் தொட்டுட்டு, அடுத்த நிமிஷமே எதுவுமே நடக்காத மாதிரி சிரிக்க முடியுது. என்னால அப்படி முடியல" என்றாள் தணிந்த குரலில்.

அப்போது அஜித் மொட்டை மாடிப் படிகளில் ஏறி எங்களை நோக்கி வந்தான். கையில் பிரியாவுக்காக எடுத்து வந்த ஸ்வெட்டர் இருந்தது. "பனி அதிகமா இருக்கு என் மயிலிறகே, இதை போட்டுக்கோ... இன்னைக்கு ராத்திரி இங்கயே தங்குறியா?" என்றான் அவள் கன்னத்தை வருடியபடி.
பிரியா அந்த ஸ்வெட்டரை வாங்கிப் போட்டுக்கொண்டாள். பிறகு அவன் கண்களை நேராகப் பார்த்து, தன் விரல்களால் அவன் தாடியை மென்மையாக வருடியபடியே, "இல்ல அஜித். இன்னைக்கு உங்க கவனம் முழுக்க விருந்தாளிங்க மேலயும் இவங்க மேலயும்தான் இருக்கு. அரைகுறை கவனத்தோட நீங்க என்னைத் தொடுறது எனக்குப் பிடிக்காது. புதன்கிழமை சாயங்காலம் நான் வர்றேன்... அன்னைக்கு உங்க போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிட்டுக் காத்திருங்க. நீங்க கேட்ட அந்த அகல் விளக்குல அன்னைக்கு ராத்திரி முழுக்கத் திரி போட்டுச் சுடரேத்திக்கலாம்" என்று அவனுக்கு மட்டுமே புரியும் குரலில் கிசுகிசுத்து, அவன் உதட்டோரத்தில் ஒரு சிறிய முத்தம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.
அவன் போனில் நான் திருட்டுத்தனமாகப் படித்த அந்த 'அகல் விளக்கு'க் கவிதையை அவள் என் கண் முன்னாலேயே இரட்டை அர்த்தத்தில் சொல்லிவிட்டுப் போனது என் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டியது.
அஜித் புன்னகையோடு கீழே இறங்கிப் போனதும், பிரியா தன் தோளில் கிடந்த ஸ்வெட்டரை இறுக்கிப் பிடித்தபடி என் பக்கம் திரும்பினாள்.

"புதன்கிழமை போனை ஆஃப் பண்ணச் சொல்லி கெத்தா அனுப்பிட்டேன் அக்கா... ஆனா அன்னைக்கும் அவர் பாதி நேரம் உங்க நினைப்புலயோ காவியா நினைப்புலயோதான் இருப்பார்னு எனக்குத் தெரியும்" என்றாள் விரக்தியான புன்னகையோடு. "சில நாள் வலி தாங்க முடியாம இவரைப் பார்க்கவே கூடாதுன்னு தோணும்; ஆனா புதன்கிழமை சாயங்காலம் ஆனா என் கால்கள் தானா இங்க வந்துடும். என்னை நானே இழக்குற மாதிரி ஒரு நாள் வந்தா விலகிடணும்னு நினைப்பேன்... ஆனா தெரிஞ்சும் அந்தப் புதன்கிழமைக்காகக் காத்திருக்கிறதுதான் என்னோட பலவீனம்."

விருந்தின் முடிவில் அஜித் எங்கள் மூவரையும் தன் நண்பர்களுக்கு முன்னால் நிறுத்தி, "இவங்கதான் என் வாழ்க்கையில எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க" என்று பெருமையாக அறிமுகப்படுத்தினான்.

அப்போதுதான் எனக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது — அஜித் ஏன் எங்கள் மூவருக்கும் ஒரு பொக்கிஷமாகத் தெரிகிறான் என்று! அவன் எங்கள் யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை; ஆனால் அவனுக்குள்ளேயே இருந்த வெவ்வேறு பக்கங்களை எங்கள் மூவரிடமும் வெவ்வேறு விதமாகத் திறந்து காட்டியிருக்கிறான். பிரியாவின் மென்மையான கவித்துவத்திற்கு இணையான ரசிகனாகவும், காவியாவின் பெருங்காமத்திற்கும் அறிவுசார் சவால்களுக்கும் ஈடுகொடுக்கும் தோழனாகவும், என் தீவிரமான வேட்கைக்குள் கரையும் காதலனாகவும் அவனால் ஒரே நேரத்தில் இருக்க முடிந்தது.

எனக்கு மூச்சு முட்டியது. பிரியாவைப் போலப் பிரிவின் வலியைக் கவிதையாக வடிகட்டிவிட்டுத் தன் எல்லையைக் காப்பாற்றிக்கொள்ளவும் எனக்குத் தெரியவில்லை; காவியாவைப் போலத் தன் பெருங்காமத்தையும் சுதந்திரத்தையும் கொண்டாடிக்கொண்டே, அவனுக்குள் கரைந்துபோகாமல் கரையிலேயே நிற்கவும் என்னால் முடியவில்லை.

உடலைக் கொடுத்த இடத்திலேயே உயிரையும் மொத்த எதிர்காலத்தையும் அடமானம் வைத்துவிட்டு, ஒருவனுக்குள் என் மொத்த உலகத்தையும் தேடிய என் காதல் மட்டும் அங்கே கோமாளித்தனமாகத் தனித்து நின்றது.

அந்த விருந்துக்குப் பிறகு நான் அவனிடமிருந்து விலகிவிடத்தான் நினைத்தேன். பத்து நாட்கள் அவனைப் பார்க்கப் போகாமல், அவன் அழைத்தாலும் போனை எடுக்காமல் என் ஹாஸ்டல் அறையிலேயே முடங்கிக் கிடந்தேன். ஆனால் பத்தாவது நாள் நள்ளிரவில், வாடிய கனகாம்பரப் பூ ஒன்றையும் என் ஹேர்பின்னையும் உள்ளங்கையில் வைத்துப் புகைப்படம் எடுத்து, கூடவே ஒரு கவிதையை எனக்கு அனுப்பியிருந்தான்:

"நீ விட்டுச் சென்ற
கனகாம்பரச் சருகும்
தலையணை அடியில் கிடக்கும்
உன் ஒற்றை ஹேர்பின்னும்
ராத்திரி முழுக்க என்னைத்
தூங்க விடாமல் சண்டை போடுகின்றன.
போதும் உன் ஊடல், வந்து சேர்ந்திடு என் கள்ளச்சியே —
உன் மூக்குத்திப் பளபளப்பில்லாமல்
இருண்டு கிடக்கிறது என் அறை."

அவ்வளவுதான். பத்து நாட்களாக நான் கட்டிவைத்திருந்த வைராக்கியம் அந்த ஒற்றைக் கவிதையில் உடைந்து நொறுங்கியது; மறுநாள் காலையிலேயே அவன் வாசலில் போய் நின்றேன்.

ஆனால் அந்த மயக்கம் நீடிக்கவில்லை. கடந்த மாதம் ஒரு முடிவோடு அவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன்:

"அஜித், எனக்கு இந்த ஏற்பாடு சரிப்பட்டு வராது. மனசளவில் எனக்கு ஒரு பாதுகாப்பு வேணும். நீ மத்த பொண்ணுங்களோட நேரம் செலவழிக்கிறேன்னு நினைக்கும்போதே மனசுக்கு ரொம்ப வலிக்குது."

அவன் கனிவாகப் பேசினான்: "புரியுது டி. ஆனா என்னால என் இயல்பை மாத்திக்க முடியாது. நாம ரெண்டு பேரும் வேற வேற கரைகள் டி. நீ வழக்கம் போல எனக்கானவனா மட்டும் நான் கரை ஒதுங்கணும்னு நினைக்கிற. ஆனா நான் ஓடிக்கிட்டே இருக்குற நதி. என்னால ஒரே இடத்துல தேங்கி நிற்க முடியாது."

"அப்போ நம்ம உறவை இதோட முடிச்சுக்க வேண்டியதுதானா?"

அவன் உடனே பதில் சொல்லவில்லை. ஜன்னலோரம் திரும்பி நின்றவனின் தோள்கள் தளர்ந்தன. என் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து, என் இரண்டு கைகளையும் தன் முகத்தோடு சேர்த்து அழுத்திக்கொண்டான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

"நீ இல்லாம இந்த அறை வெறிச்சோடிப் போயிடும் டி. உன் சிரிப்பும், உன் கோபமும், உன் உடம்போட சூடும் இல்லாம என்னால சாதாரணமா இருந்துட முடியாது" என்றான் உடைந்த குரலில்.

"அப்போ ஏன் அஜித் என்னோட மட்டுமே இருக்க மாட்டேங்கிற?" என்று அவன் தலையைக் கோதியபடி அழுதேன்.

அவன் நிமிர்ந்து என் கண்களைப் பார்த்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தவன், வார்த்தை வராமல் பாதியிலேயே நிறுத்திவிட்டுத் தலையைக் குனிந்தான். "தெரியல டி... சில நேரம் நான் வாழுற இந்த முறையே தப்போன்னு எனக்கே தோணுது. எல்லார்கிட்டயும் உண்மையா இருக்கேன்னு சொல்லிக்கிட்டு... கடைசியில என்னை நேசிக்கிறவங்களை எல்லாரையுமே காயப்படுத்திட்டு இருக்கேனோன்னு..." என்று தடுமாறி நிறுத்தினான். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "ஆனா எனக்கு மட்டுமே சொந்தமா இருன்னு ஒரு வட்டத்துக்குள்ள என்னைப் பூட்டினா எனக்கு மூச்சு முட்டுது டி. என்னையே நான் கொன்னுட்டு உன்கூட வாழ்ந்தா, கொஞ்ச நாள்லயே உன் மேலயே எனக்கு வெறுப்பு வந்துடும். என் கூட இருந்து நீ தினம் தினம் உடைஞ்சு போறதைப் பார்க்கவும் எனக்குத் தெம்பில்ல. உனக்கு நிம்மதி கிடைக்கும்னா... நீ என்னை விட்டுப் போயிடு டி" என்றான்.
அன்று இரவு நான் அழுதுகொண்டே அவனது மார்பில் படுத்திருந்தபோது, என் கூந்தலை வருடியபடியே என்னை வழியனுப்புவதற்காகவே ஒரு கவிதையைச் சொன்னான்:
"உன் மார்பில்
நேசப் பால் குடித்த
உன் மூத்த மகன் நானடி சகி.
உன் காம்பில் பட்ட எச்சிலில்
காமத்தோடு நிறைய காதலும் குழந்தைமையும்
ஈரமாய் இருந்ததென்பதை நினைவு கொள்.
உன் முலைக் காம்பு சப்பிய உதடுகள்
இப்போது அந்தக் கணத்தின்
தாய்மை கனத்துத் தொங்கும்
நினைவின் மடியூட்டிக் கொண்டிருக்கின்றன தங்கமே.
நீ பிரிந்தாலும் வருத்தமில்லை —
நினைவின் முலை என்றும் வற்றாமல்
எனக்காகச் சுரந்து கொண்டேதானிருக்கும்.
நீ தாராளமாகப் போகலாம்.
போ."

என் மார்பில் முகம் புதைத்து 'நான் உன் மூத்த மகனடி சகி' என்று குழந்தையாகக் கொஞ்சிவிட்டு, அடுத்த வரியிலேயே 'உன் நினைவின் முலை எனக்குப் போதும், நீ தாராளமாகப் போகலாம் போ' என்று வழியனுப்பும் இந்த மனிதனை நான் என்ன செய்வது?

அந்த நொடியில் எனக்குள் இரக்கமும் ஆத்திரமும் ஒன்றோடொன்று மோதின. ஒரு பக்கம், என் மார்பில் பால் குடித்ததாகச் சொன்ன என் மூத்த பிள்ளையை இன்னொருத்தி மடியில் படுக்க விட எந்தத் தாய்க்காவது மனசு வருமா என்று என் அடிவயிறு துடித்தது. ஆனால் மறுபக்கம், அவனது அந்தக் கவிதைக்குள் ஒளிந்திருந்த சூழ்ச்சியான ஆண் புத்தி என் முகத்தில் அறைந்தது — அன்று அவனது பெண்ணியக் கவிதையைத் திருத்தும்போது நான் எதைச் சொன்னேனோ, இன்றைக்கு அதையே என் கழுத்தை அறுக்கும் ஆயுதமாக மாற்றிவிட்டான்! என் மார்பைக் கலைப் படைப்பாகவும், காதலின் ஊற்றாகவும் கொண்டாடியவன், இப்போது உறவை முறிக்கும் நேரத்தில் அதைத் 'தாய்மடியாக' மாற்றிவிட்டான். என்னைத் தாயாக்கிவிட்டால், தான் எந்தப் பொறுப்புமில்லாத குழந்தையாக மாறிப் பால் குடித்துவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா? தாய் என்றால் கோபப்படக் கூடாது, உரிமை கேட்கக் கூடாது, எல்லாவற்றையும் மன்னித்து வழிவிட வேண்டும்! பெண் விடுதலை பேசிய ஒருவனே, தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள என்னைத் தாய்மை என்ற புனிதக் கூண்டுக்குள் அடைத்து வெளியே அனுப்புகிறான்! அவனுக்குச் சுரப்பதற்கு என் 'நினைவின் முலை' மட்டுமே போதும்; ஆனால் உயிரும் சதையுமான எனக்கு அவனல்லவா வேண்டும்!
அன்று என் ஹாஸ்டல் அறைக்குத் திரும்பியதும், என் நாட்குறிப்பின் கடைசிப் பக்கத்தில் இரத்தம் கசிய இப்படி எழுதினேன்:

"மின்னல்களை ஒடித்து வந்து
நமக்கான விளக்குகளில் சுடராக்கினாய்;
எண்ணத்தின் விரலால்கூடத் தீண்டிவிட முடியாத
புதியதொரு உலகைப் படைத்துப் பரிசாக்கினாய் எனக்கு.
இதையெல்லாம் செய்த நீ —
யாரொருவராலும் தயாரிக்க முடியாத துக்கத்தைத் தயாரித்து,
நம் நினைவுகளையே முள்ளாகவும் ஆணியாகவும் மாற்றி,
காதலின் சிலுவையில் என்னைத்
துடிக்கத் துடிக்க அறைந்துவிட்டுப்
போகச் சொல்வது சரியா?"

ஆனால் அந்த உரையாடலுக்குப் பிறகான கடந்த ஒரு மாதத்தில், எங்கள் அறைக்குள் இருந்த காற்று நஞ்சாக மாறியது. அவனை விட்டுப் போகவும் முடியாமல், அவனை நம்பவும் முடியாமல் வார நாட்களில்கூட முன்னறிவிப்பின்றி அவன் அறைக்கு வரத் தொடங்கினேன். வந்ததும் அவனோடு பேசாமல், குளியலறையில் காவியாவின் உதட்டுச்சாயம் இடமாறியிருக்கிறதா என்றும், படுக்கை விரிப்பில் பிரியாவின் கூந்தல் இழை கிடக்கிறதா என்றும் பைத்தியம் போலத் தேடுவேன். அவன் லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவனது முதுகையே வெறித்துப் பார்த்தபடி மணிக்கணக்கில் ஊமையாக உட்கார்ந்திருப்பேன்.
முதலில் என் கைகளைப் பிடித்துச் சமாதானப்படுத்த முயன்றவன், நாட்கள் செல்லச் செல்ல என் பெருமூச்சுகளையும், என் கண்களில் வழியும் விசாரணையையும் எதிர்கொள்ள முடியாமல் திணறினான். என் வலி அவனுக்குத் தீராத குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது; அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பிக்க, தற்காப்புக்காகத் தன் தத்துவத்திற்குள் பதுங்கி என் வலியை சாதாரணமானதாகக் குறைத்து மதிப்பிடத் தொடங்கினான். அதன் உச்சகட்டம்தான் நேற்று சனிக்கிழமை இரவு அவன் தன் நண்பனிடம் போனில் பேசியது!

இன்று காலை படுக்கையில் என்னைக் கட்டிக்கொண்டு தூங்கியவனை எழுப்ப மனமில்லாமல், சமையலறைக்கு வந்து அவனுக்காக ஆப்பிள் நறுக்கிக்கொண்டிருந்தேன். உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று காலையில் நான் எடுத்திருந்த முடிவு, அவனது அணைப்பில் மீண்டும் கரைந்துபோயிருந்தது. தூக்கம் கலைந்து எழுந்து வந்தவன், பின்னால் நின்று என் இடுப்பை வளைத்துப் பிடித்து, என் கழுத்தில் முகம் புதைத்தபடி, "இன்னைக்கு நாள் முழுக்க இந்த நொடியில மட்டும் மனசைப் பதிய வச்சு வாழலாம் டி" என்றான்.

ஏதோ காதல் சொட்டச் சொட்டப் பேசுவதாக நினைத்துத்தான் அவன் அதைச் சொன்னான்; ஆனால் எனக்கோ, நேற்று இரவு அவன் நண்பனிடம் "கொஞ்ச நாள் போனா பழகிடுவா, இல்லன்னா அவளே கிளம்பிடுவா" என்று பேசியது நினைவுக்கு வந்தது. கையிலிருந்த கத்தியின் பிடியை இறுக்கிக்கொண்டே கேட்டேன்:

"அஜித், எனக்கு ஒண்ணு தெளிவுபடுத்து. நீ என்னை எந்த அளவுக்குக் காதலிக்கிற?"

அவனிடமிருந்து வழக்கமான அதே நேர்மையான பதில் வந்தது: "நான் உன்னை நேசிக்கிறேன் டி. ஆனா என்னோட அளவுகோலின்படி. என்னால ஒரே நேரத்துல பல பேரைக் காதலிக்க முடியும். அதுதான் என் இயல்பு."

"அப்போ நான் உனக்கு ஸ்பெஷல் இல்லையா?"

அவன் என் கையைப் பிடித்தான். "ஸ்பெஷல்தான். ஆனா நீ மட்டும்தான் ஸ்பெஷல்னு இல்ல. பிரியாவும் ஸ்பெஷல். காவியாவும் ஸ்பெஷல். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்துக்காக."

எந்த உணர்ச்சியும் இல்லாமல் தகவலைச் சொல்வது போன்ற அந்தக் குரல்! எல்லாரையும் ஒரே தட்டில் வைக்கும் அந்த அசால்ட்டான சமத்துவம்!

"அஜித், எனக்குப் பங்குபோடாத காதல் வேணும். நீ எனக்கு மட்டுமானவனா இருக்க முடியுமா?"

அவன் முகத்தில் ஒரு வாடிய புன்னகை. "முடியாது டி. அது என் உண்மையான சுபாவம் கிடையாது. உனக்குக் கூண்டுக்குள்ள அடைஞ்சு கிடக்குற பறவைதான் வேணும் டி. ஆனா நான் வானம் முழுக்கப் பறக்குறவன். உனக்காக மட்டுமே கூடுகட்டி உட்காருற ஆள் எவனாவது கிடைப்பான், அவனைத் தேடிக்கோ. அதுக்கு நீ எல்லா வகையிலும் தகுதியானவ."

தன்னைப் பற்றி இவ்வளவு தெளிவாகப் பேசுகிறானே என்று முதலில் வியந்தேன்; ஆனால் அந்தத் தெளிவு மற்றவர்களின் கழுத்தை அறுக்கும் கத்தி என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது.

"ஆனா உன்னை விட்டுட்டுப் போக எனக்கு மனசு வரலையே" என்றபோது என் குரல் உடைந்து கண்ணீர் வழிந்தது.

அவன் உடனே என் அருகில் வந்து, என் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் கட்டை விரலால் மென்மையாகத் துடைத்தான். "இங்க பாரு டி... நீ அழுறதைப் பார்க்க எனக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா இந்த முரண்பாட்டை நாம ஏத்துக்கிட்டுத்தான் வாழணும். வலி இருக்கும், ஆனா அதுல ஒரு உண்மை இருக்கும்."

நான் விசும்பிக்கொண்டே, "நேத்து ராத்திரி உன் ஃப்ரெண்ட்கிட்ட போன்ல என்ன சொன்ன? நான் அழுறது உனக்கு வெறும் பழக்கதோஷமா? உன் சுவத்துல ஒட்டியிருக்குற ஷோபா படம் மாதிரி, நானும் உன் கவிதைக்குத் தீனி போடுற வெறும் காட்சிப் பொருள்தானா?" என்று கேட்டேன்.

கடந்த ஒரு மாதமாக என் கண்ணீரை எதிர்கொண்ட சோர்வும் சலிப்பும் அவன் முகத்தில் சட்டெனப் படர்ந்தன.

"சும்மா நாடகமாடாத டி. நாம அமைச்சுக்கிட்ட இந்த ஏற்பாடு நல்லாத்தானே போயிட்டு இருக்கு. அப்புறம் ஏன் ஒவ்வொரு தடவையும் இதையே எடுத்துப் பேசிச் சிக்கலாக்குற?"

"நான் நாடகமாடுறேனா?" என் குரல் உயர்ந்தது.

"ஆமாம் டி. நீயும் மத்த எல்லாப் பொண்ணுங்களையும் மாதிரி என்னைய உனக்கு மட்டுமே சொந்தமாக்கிக்க நினைக்காத. நாம இதை இன்னும் பக்குவமா கையாளலாம்."

'மத்த எல்லாப் பொண்ணுங்களையும் மாதிரி' — என் மொத்தக் காதலையும் தவிப்பையும் ஒரே வார்த்தையில் அற்பமாகச் சுருக்கிய அந்த ஆணவம் என்னைச் சுட்டெரித்தது!

"அஜித், கவிதையில மட்டும் பெண் விடுதலை பத்திப் பெருசா எழுதுவ. ஆனா என் உணர்வுகளைக் கொஞ்சம்கூட மதிக்காம, உன் சௌகரியத்துக்காகத்தானே இந்தச் சுதந்திர வேஷம் போடுற?"

முதல் முறையாக அவன் முகம் சிவந்தது. "நான் ஒண்ணும் வேஷம் போடல! நான் உன்கிட்ட முதல் நாள்ல இருந்தே எதையாவது மறைச்சேனா? பொய்யான வாக்குறுதி கொடுத்தேனா? இந்தக் கணத்துல நான் உன்னை முழுமையா காதலிக்கிறேன். ஆனா எதிர்காலத்துக்கு என்னால எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. உன்னால ஏத்துக்க முடியலன்னா நீ தாராளமா என்னை விட்டுப் போயிடு டி. நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனா உனக்காக நான் மாறவும் மாட்டேன்!"

"ஆனா நான் உனக்காக என்னையே இழந்துட்டேனே அஜித்..." என்றேன் நடுங்கும் குரலில்.

அந்தப் பிடிவாதமான நிதானம்! தன் நேர்மையை மட்டுமே கேடயமாகப் பிடித்துக்கொண்டு, சக மனுஷியின் வலியைத் துச்சமாக மிதிக்கும் அந்த வறட்டுத் தத்துவம்! சமையலறை மேடையில் சாய்ந்தபடி, கடைசியாகக் கேட்டேன்:

"நீ என்னைக் காதலிக்கிறியா இல்லையா?"

"காதலிக்கிறேன். ஆனா உன் நிபந்தனைகளின்படி இல்ல; என் நிபந்தனைகளின்படி."

அந்த வார்த்தையைக் கேட்டதும் என் உடல் நடுங்கத் தொடங்கியது. ஆப்பிள் நறுக்கிக்கொண்டிருந்த என் வலது கையிலிருந்த கத்தி சமையலறை மேடையில் உரசிச் சத்தமிட்டது.

அஜித்தின் பார்வை என் நடுங்கும் கையின் மீது விழுந்தது. அவன் கண்களில் சட்டெனக் கோபம் மறைந்து பழைய கனிவு திரும்பியது. "கத்தியை கீழே வை டி... பாரு, உன் கை எப்படின்னு நடுங்குது" என்றபடியே என் அருகில் வந்தவன், என் வலது மணிக்கட்டைப் பிடித்து மென்மையாகக் கீழே இறக்கி, சமையலறை மேடையின் மீது கத்தியை வைக்கச் செய்தான்.

நான் விரல்களைத் தளர்த்திக் கத்தியை விட்டதும், அது சமையலறை மேடையின் விளிம்பிலேயே என் வலது உள்ளங்கைக்கு நேர் கீழே கிடந்தது. நான் சமாதானமாகிவிட்டேன் என்று நினைத்தவன், என் மணிக்கட்டை விட்டுவிட்டுத் தன் இரண்டு கைகளாலும் என் கன்னங்களை ஏந்தித் தன் பக்கம் இழுத்தான். அவனது உடலின் பழக்கப்பட்ட ஏலக்காய் வாசனையும் வெப்பமும் என்னைச் சூழ்ந்தன.
முதல் நாள் ஷோபாவின் படத்திற்குப் பக்கத்தில் நின்றபோது என் கோபத்தை முத்தத்தால் அடைத்தது போலவே, இப்போதும் என் அழுகையைத் தன் உதடுகளால் மூடிவிடலாம் என்ற அதே கிறக்கமான புன்னகையோடு, "கோபப்படாத என் கள்ளச்சி..." என்று என் கழுத்துவளைவில் முத்தமிட்டுக்கொண்டே என் உதட்டைக் கவ்வினான்.
அவன் உதடுகள் என் உதட்டை உரசிய அந்தக் கணத்தில், காலையில் இந்த உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று நான் எடுத்திருந்த வைராக்கியம் அவனது தீண்டலில் மீண்டும் கரைந்துபோவதை உணர்ந்து எனக்குள் ஒரு பயங்கரமான திகில் பரவியது — 'இப்போதும் என் கேள்வியைத் தன் முத்தத்தாலேயே மூடப் பார்க்கிறான்! இந்த முத்தத்திற்கு நான் மீண்டும் பணிந்துபோனால், இனி என் ஆயுளுக்கும் என் சுயத்தை இழந்துவிட்டு இவனைப் பங்குபோட்டுக்கொண்டேதான் கிடப்பேன்!'
அப்போது கத்தி எங்கள் இருவரின் நெஞ்சிலும்தான் இறங்கியது. என் நெஞ்சில் அவனது உண்மை கத்திபோல் இறங்கியது; அவன் நெஞ்சில் என் கையிலிருந்த கத்தியே இறங்கியது.

அவனை விட்டு விலகிப் போகவும் முடியாமல், மீண்டும் ஒருமுறை அவனிடம் தோற்று என்னை இழப்பதையும் தாங்க முடியாத ஆத்திரத்திலும் உடைமை வெறியிலும் — அவன் தன் இரு கைகளால் என் முகத்தை ஏந்தி என் உதட்டைக் கவ்வியபடியே இருந்தான்; மேடையின் விளிம்பில் கிடந்த கத்தியை மீண்டும் எடுத்த நான், அவனுடைய இடது மார்பில் முழு பலத்தோடு செருகினேன்.
என் உதட்டின் மேல் விழுந்த அவனது முத்தம், ஒரு சூடான இரத்தத் துளியாய் மாறியது. கண்கள் அதிர்ச்சியில் விரிய, உதட்டில் உறைந்த அதே கிறக்கமான புன்னகையோடு என்னைப் பார்த்தவன், மார்பைப் பிடித்துக்கொண்டு சமையலறையிலிருந்து தள்ளாடியபடியே படுக்கையறைக்கு வந்து விழுந்தான். அவன் உயிர் பிரிந்த அந்தக் கடைசி நொடியிலும், சுவரில் ஒட்டியிருந்த ஷோபாவின் படங்கள் எங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன.
இப்போது இவனைப் பார்க்கும்போது எனக்குப் புரிகிறது — இவன் யாரையும் ஏமாற்றவில்லை. முதல் நாளிலிருந்து கடைசி மூச்சு வரை தன் கொள்கையில் நேர்மையாகத்தான் இருந்தான். ஆனால் கவிதைகளில் பெண் விடுதலை பேசிய இவனுக்கு, பொய் சொல்லாமல் இருப்பது மட்டுமே காதலின் முழுமையான அறம் என்று தோன்றியதே தவிர, உயிரும் சதையுமாகப் பக்கத்தில் நின்ற ஒருத்தியின் மனத்தவிப்பிற்குப் பொறுப்பேற்கத் தெரியவில்லை.
என்றாலும் நான் செய்ததற்கு அது எந்தவிதமான மன்னிப்பும் கிடையாது. அவனுடைய உணர்ச்சிப் பொறுப்பின்மை எங்கள் உறவை அழித்தது; ஆனால் என்னுடைய உடைமை வெறி ஒரு மனிதனின் உயிரையே அழித்துவிட்டது. 'இந்தக் கணத்தில் மட்டுமே வாழ்வோம்' என்று சொன்னவனை, இந்தக் கணத்திலேயே நிரந்தரமாக உறைய வைத்துவிட்டேன். மேஜையின் மீது கிடக்கும் அவனது போன் மீண்டும் அதிர்ந்துகொண்டிருக்கிறது — திரையில் பிரியாவின் பெயரோ காவியாவின் பெயரோ மிளிரலாம். ஆனால் இனி அவன் அந்த அழைப்பை எடுக்கப்போவதில்லை; வேறு எந்தப் பெண்ணையும் முத்தமிடப் போவதில்லை; இப்போது அவன் நிரந்தரமாக எனக்கு மட்டுமானவன் என்று என் மனம் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் இந்தக் குரூரமான அமைதிதான் என் காதலா?
உயிரற்ற அவனது முகத்தையும், சுவரில் உறைந்திருக்கும் ஷோபாவின் படத்தையும் மாறி மாறிப் பார்க்கிறேன். இளவயதிலேயே ஷோபாவின் உயிர் பிரிந்ததற்குப் பின்னால் என்ன உண்மை இருந்ததோ எனக்குத் தெரியாது; அவளுடைய துயரத்தை அறியாமல் என் குற்றத்திற்குச் சான்றாக அவளைப் பயன்படுத்திக்கொள்ளவும் எனக்கு உரிமையில்லை. ஆனால், காதலின் வலி தாளாமல் அவள் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டதாக அஜித் சொன்ன கதைதான் இப்போது என் காதுக்குள் ஒலிக்கிறது. அஜித்தின் கதையில் வந்த அந்த ஷோபா தன்னைத்தானே கொலை செய்துகொண்டாள்.
நான் — அவனைக் கொலை செய்தேன்.

முற்றும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...