Back

Short story

July 11, 2021

கத போலத் தோனும் இது கதயும் இல்ல.

SHARE

கத போலத் தோனும் இது கதயும் இல்ல.

இதை ஏன் இந்தக் கதையின் தலைப்பாக தேர்ந்தேனென்றால் இது இளையராஜா பாடலின் வரி. எனக்கு ராசாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதான். சரி கதைக்கு வருகிறேன். இது என்னைப் பற்றி நானே எழுதும் கதை. தன்னைப் பற்றி தானே எழுதிக் கொள்வது கதையாகவே இருந்தாலும் கதையாகாதில்லையா. அதனாலே "கத போலத் தோனும் இது கதயும் இல்ல" என்று தலைப்பு. இது கதையா கதையில்லையா என்று குழப்பமாயிருக்கிறதில்லையா? எனக்கும் தான். இப்போதெல்லாம் அடிக்கடி எதெதோ எண்ணங்கள் தோன்றுகின்றன. அத்தனையும் அனாவசியமானவை. சல்லிக் காசுக்கு பிரயோசனமில்லாதவை. உறக்கத்தை கெடுத்து மனசை உளைச்சலுக்குள்ளாக்கும் எண்ணங்கள். பிடித்திருந்தவை கூட பிடிக்காமல் போய் விட்டது. எப்போதும் எதன் மீதும் ஒரு நம்பிக்கை இல்லாத தன்மை. அடிக்கடி செத்து போகலாம் போல தோன்றுகிறது. இது போதாதென்று எனக்கு நானே யாரோ கேட்பது போல கேள்விகள் கேட்டு பதில் எழுதுகிறேன். எனக்கு நானே யாரோ ஒரு பெண் எழுதுவது போல கடிதங்கள் கவிதைகள் எழுதுகிறேன். உள்ளிருந்து எதாவது ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரே மண்டகடுப்பு. மனக்குடைச்சல். Dissociative Identity Disorder அல்லது severe and enduring mental disorder என்று எதாவது இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இது எதும் இல்லை என்றால், ஸ்கிசோஃப்ரினியாவாக இருக்கலாம். ஆமாம் நிச்சயம் அதுவாகத்தான் இருக்கும். ஏனெனில் அதன் அறிகுறிகள் எல்லாமே எனக்கு இருக்கின்றன. தனிமையை அதிகம் விரும்புகிறேன். புற உலகில் இருந்து துண்டித்து கொண்டால் தேவலாம் என்று எண்ணுகிறேன்.என்னை நானே பராமரிக்கத் தவறுகிறேன். முகச்சவரம் செய்து கொண்டு வருசமாகிறது. தாடி, காடாய் வளர்ந்திருக்கிறது. இதில் மேலுதட்டை மறைத்து வளர்ந்திருக்கும் மீசை குத்தல் பிடித்திருக்கிறதாம் அவளுக்கு. முத்தம் பண்ணிக் கொள்ளும் போது சொன்னாள். இன்னும், எனக்கு நானே பேசிக் கொள்கிறேன். என் மன உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குகிறேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட யாரேனும் எனக்குப் பிடித்த ஒரு பெண்ணை, மாரழுந்த அணைத்து முத்தம் தரலாம் போலிருக்கிறது. ஆனால் இதை எல்லாம் எப்படி வெளிக்காட்டுவது அல்லது வெளிச்சொல்வது. மேலும், ஒரு உளவியல் ஆய்வாளர் ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்ட நபரைப் பற்றிச் சொல்லும் போது "அந்த நபருடன் தீவிரமாக வாதாட வேண்டாம், ஏனெனில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர் / அவள் வாதத்தின் பின்னணியில் உள்ள பகுத்தறிவை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இவர்களுக்கு நேர்மறையான கவனிப்பு அவசியம். எனவே சிக்கல்களைப் புரிந்து நீங்கள் நடந்து கொள்வது அவசியம்." என்று சொல்லுகிறார். இதையே தான் அவளும் சொன்னாள். நான் எதையும் புரிந்து கொள்வதில்லையாம். என்னோடு பேசி ஜெயிக்க முடியாதாம். அவள் சொன்னதும் இவர் சொல் வதும் பொருந்தி போகுதில்லையா? சரி அப்படியே இருக்கட்டுமே.
அவள் என்றதும் நிறைய தோன்றுகிறது. அவள் அழகி. உண்மையில அவள் அழகில்லை என்றாலும் எனக்கு அவள் தான் பேரழகி. ரூமி வரிகளில் சொன்னால் "எவளும் உனக்கு நிகரில்லை. நீ என் காதலி என்பதால்". ஆமாம் உண்மையில் இங்கு யாரும் யாருக்கும் நிகர் இல்லை. அவரவர்க்கு அவரவரே நிகரில்லை யா? சரி இருக்கட்டும். அவளைப் பற்றி எழுதிய ஒரு கவிதை, மிக அந்தரங்கமானது தான் என்றாலும் சொல்கிறேன். பூக்களில் பொடி செய்து /வாகாய் வனைந்த / மெல்லிய ஆகிருதி /உன்னில் - வழியும் வியர்வைக்கு /தேனின் ஊட்டம். / பார்க்கும் பார்வையில் / ரோஜா முள்ளின் கூர்மை / முலையின் காம்பில் / தாமரை மொட்டின் கூர்மை / திராட்சை கனியின் நீர் மை. / உரலென - நடு சிறுத்து! முத்த எச்சில் நிரப்ப / தொப்புள் குழிகொண்ட / வளைந்த வடிவிடை. / நுங்கின் கண்ணென / சுவை நீர் சுரக்கும் / கருஞ்சிகை அடர்ந்த / சிறு சுனையல்குள். / உறை களைந்த /வீணைத் தண்டென / மீட்டலுக்கு ஆயத்தமாய் / பச்சை நரம்புகள் படர்ந்த நெடுந் தொடை. / ஒட்டி அடுக்கிய - ரெட்டை அரை வட்ட / கடிக்க இனிக்கும் /கனிச்சதை பிருஷ்டம். / தோராயமாக / வாழ்நாள் முழுக்க /ஓயாமல் ஆராய வேண்டிய /ஒப்பரிய பொக்கிசமடி நீ. வாசிப்பது பெண்ணாக இருந்தால் இந்த "நீ" உங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் நான் எல்லா பெண்களையும் காதலிக்கிறேன். ஐ லவ் யூ.
ஒரு முறை எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை. அதன் பின்னணியிலும் உளவியல் காரணமே இருந்திருக்கிறது. ஆனால் அது அப்போது தெரியவில்லை. என்ன சண்டை என்றால் பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கிற ஒரு உடற் செயலில் தொடர்பான சண்டை தான். அவள் எப்போதும் மாதவிடாய் ஆனதை ஆவதை என்னிடம் சொல்லி விடுவாள். அப்படி சொன்னதை நினைவில் வைத்திருக்கிறேனா என்று சோதிக்கிற பொருட்டு ஒரு முறை என்னிடம் கடந்த மாதம் எப்போது நாளானது என்று கேட்டாள். எனக்கு நினைவில் இல்லை. சும்மா வெறுமனே பொய்யாக எதாவது ஒரு தேதியைச் சொல்லி சமாளிப்பதற்கு பதில் மறந்து விட்டேன் என்று உண்மை சொன்னேன். ஆனால் அதற்கு அவள் பட்ட கோவம் இருக்கிறதே. அப்பப்பா. எவ்வளவு சண்டை. அதற்கடுத்த சில நாட்களிலேயே நாளாகிவிட்டது அவளுக்கு. அதன் பிறகு தான் புரிந்தது அவ்வளவு கோவம் ஏன் என்று. Pre-Menstrual Syndrome என்று ஒரு வகையான உளவியல் பிரச்சனை பெண்களுக்கு உண்டு. மாதவிடாய்க்கு முந்தி மன அழுத்தமும் அநாவசிய கோவம் எரிச்சல் எல்லாம் உண்டாகும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தக் கதையை வாசிக்கிற ஆண்களைக் கொஞ்சம் விழிப்படையச் செய்யும் பொறுப்பு இந்தக் கதையின் நாயகனான எனக்கு உள்ளது. அந்தச் சம்பவத்திற்கு பிறகு நான் அவள் நாளாகும் தேதியை என் டைரியில் குறித்து வைத்துக் கொள்வேன். அதன் படி அவளை ஓரளவு புரிந்து நடந்து கொண்டேன். ஆனால் எவ்வளவு முயன்றும் எனக்கும் அவளுக்குமான உறவைக் காப்பாற்றி தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இது பற்றி கூட ஒரு கவிதை எழுதினேன். "பழுத்து /பாதி காய்ந்து /சருகாகி விட்ட பின்னும் / பாதி தொங்கலாய் / பற்றிக் கொண்டிருக்கிறது / அந்த இலை /கிளையை. / அதற்கு தெரியாது போலும்/ பிரியம் அலை அலையாய் / நுரைத்துப் பொங்க பற்றிக் கொண்டாலும் / உதிரும் காலம் வந்தால் /உதிர்ந்தே தான் ஆக வேண்டும் என்பது." உண்மை தானே. எங்களின் உறவு முறிவுக்கு அவள் நிறைய காரணங்கள் சொன்னாள். இருந்தாலும் அந்தக் காரணங்களையும் அவளின் பிரிவையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு நான் இப்படி அதாவது இந்தக் கதையின் படி ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்டவனானேன். தலையணை முனைகள் எல்லாம் குத்தாமல் குத்தும் அவள் மார்பையே நினைவூட்டித் தொலைத்தன. என்ன செய்வது அவள் பிரிவை ஈடுகட்டத் தான் எனக்கு நானே கவிதை கடிதம் எல்மாம் எழுதத் தொடங்கினேன். ஆனால் அது இப்படியொரு மனநோயாக மன்னிக்கனும் இதை நோய் என்று சொல்வது தவறு. மனநலம் பாதிக்கபடுதல் என்பது நோய் இல்லை. அது எதாவது ஒரு இழப்பின் வலி. அவர்களை நோயாளி என்று சொல்லாதீர்கள். என்னையும் தான். அப்படி கவிதையும் கடிதமும் எழுத தொடங்கி நாளில் தான் தொடங்கியது இப்படியான ஒரு மனப் பிறழ்வு. ஒரு பிரிவின் வலி தாங்காமல் வந்த, இந்த மனப் பிறழ்வினால் இப்போது எல்லா உறவுகளையும் இழந்து என்னையும் இழக்கும் நிலையில் இருக்கிறேன். தற்கொலை எண்ணம் அடிக்கடி தலைத்தூக்குகிறது. இப்படியான தருணங்களில் எனக்கு துணையாக இருந்த ஒரு தோழி இருக்கிறாள். ஆனால் அவளும் இப்போது என்னோடு இல்லை. ஏனென்றால் "உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என் கிட்ட கேளு" என என்னிடம் சொல்லி இருந்தாள். எனக்கு அப்போது எதாவது ஒரு பெண்ணின் உடல் மற்றும் மன நெருக்கம் ரொம்ப வேண்டியதாக இருந்தது. அதனால் "can you spend one night with me" என்று கேட்டேன். என்ன ஏது நான் எப்படி என்று கூட யோசிக்க வில்லை. என்னைய என்ன நெனைச்ச என்று ஓங்கி ஒரு அறைவிட்டாள். அப்போது தான் புரிந்தது ஒரு கதையில் படித்த " பெண்களுக்கும் உடல் வலிமை உள்ளது. ஆனால் அதை அவர்கள் உபயோகிக்கும் சந்தர்பபம் அமையவில்லை" என்ற வரிகளில் இருந்த உண்மை. எவ்வளவு வலி. வலி என்று சொன்னதும் கவிஞர் நேச மித்திரனின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. "மிகவும் வலிக்கிறது. / இன்னொரு கன்னத்தில் /யாராவது அறையுங்களேன் / இந்த வலி மறக்க " - இது தான் அந்தக் கவிதை. ஆனால், நீங்கள் அறை வேண்டாம். அதையே கொஞ்சம் உள்டா செய்து "மிகவும் வலிக்கிறது. / இன்னொரு முறை /யாராவது காதலியுங்களேன் / இந்த வலி மறக்க ". ஏனென்றால் அறையை விட அன்பின் போதாமையே எப்போதும் வலிமிகுந்ததாய் இருக்கிறது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...