Article
June 7, 2019
கட்டுரை
SHARE

அன்புக்குரிய புருஷிக்கு,
நாம் காதலித்த நாளிலெழுதிய நான்கு கடிதங்களுக்கு பிறகு, கல்யாணம் ஆன பின் உனக்கு எழுதுகிற முதல் கடிதம் இது. நலம் சொல்லி, நலம் விசாரிக்கும் முன் தகவல் தொடர்பின் தொழில் நுட்பம் விண் முட்டி வளர்ந்து
நிற்கிற இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்வதோடல்லாமல் ஐ டி கம்பெனியிலயே வேலையும் செய்து கொண்டு "அன்புக்குரிய அனுப்புதல், பெறுதல்" போட்டு இப்படி கடிதம் எழுதிய என் பைத்தியக் காரத்
தனத்தை நினைத்து சிரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் இலக்கிய விரும்பி என்பது உனக்கு நன்றாக தெரியும். கடிதமும் ஒரு இலக்கியம். சரி இது எல்லாம் உனக்கு பிடிக்காது.
நான் நலம். நீயும் நலமாய் இருக்க வேண்டும். இருப்பாய். உன் மாமனார் மாமியார் பாட்டி நார்த்தரனார் மற்றும் அவள் பெத்த வாண்டு அனைவரும் நலமாய் இருக்க வேண்டுமென்றே ஆசைப் படுகிறேன். அடுத்த வாரம் என்
மாமனார் வீட்டுக்கு மன்னிக்கவும் உன் தங்கையும் என் கொழுந்தியாளுமான தேவதை குடியிருக்கும் வீட்டிற்கு போய் வருவதாக சொல்லி இருந்தாய். தாராளமாய் போய் வா. தேவதையை கேட்டதாகச் சொல். வேண்டுமென்றே உன்னை
கோவப்படுத்த தான் சொன்னேன் என்று தெரிந்தாலும் முகத்தை தூக்கி வைத்திருப்பாயே. தூக்கி இருக்குமுன்னெல்லா கோவங்களையும் வந்து சரி கட்டுகிறேன். வெட்கப்படாதே. வாசி.
வீட்டுப் பரணில் அடுக்கி வைத்திருக்கிற புத்தகங்களை அடிக்கடி தூசி தட்டி வை. படிப்பதனால் முடிந்த மட்டும் முனை மழுங்காமல் படி. இருக்கிற வேலைக்கு இன்னும் ஒரு மாத காலம் வீட்டுப் பக்கம் எட்டிப்
பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். புத்தகங்களை பிரிந்திருப்பது ஏதோ தாயை பிரிந்த பிள்ளையின் தவிப்பாய் இருக்கிறது . உன்னை பிரிந்திருப்பதும் தான். புத்தகங்களோடு உன்னையும் பாத்திரமாய் பார்த்து
கொள்.
(முக்கிய குறிப்பு :புத்தகங்களுக்கு அடுத்து உன்னை வைத்திருப்பதாக எண்ணி அதுகளோடு சக்களத்தி சண்டை எதும் செய்யாதே.உனக்கு முன்னே அவைகளுக்கு நான் வாக்கப்பட்டு விட்டேன். கோபிக்காதே. கோபித்திருந்தால்
நான் வந்து கொஞ்சி சமாதனம் செய்யும் வரை இந்த கோபத்தையும் புத்தகங்களோடு சேர்த்து பத்திரபடுத்தி வை.) ஒரு புத்தகத்தை யாருக்கேனும் வாசிக்க தரும் போது அல்லது தொலைத்து விடுகிற பொழுது என் ஆயுளில் சில
நாட்களை இழந்து விட்டது போல இருக்கிறது. தயவு செய்து புத்தகத்தை தொலைத்து விடாதே. யாருக்கேனும் வாசிக்க தந்தால் மறக்காமல் வாங்கி வை.
நான் புத்தகங்களை ஏன் இப்படி நேசிக்கிறேன் என்று யோசிக்கிறாயா? இல்லை என்றாலும் சொல்கிறேன் கேள். ச்சீ வாசி. எனக்கு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. சகி, ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு
வாழ்க்கை. ஒரு புத்தகத்தை முழுதாய் வாசித்து முடிக்கிற போது நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறேன். இறந்து மீண்டும் புதிதாய் பிறக்கிறேன். ஒவ்வொரு புத்தகமும் என்னொரு வாழ்க்கை.
மேலும், அங்கிருக்கிற புத்தகங்களில் நிறைய இன்னும் நான் வாசிக்க வில்லை. அங்கிருக்கிற வாழ்க்கையை எல்லாம் இன்னும் முழுதாய் நான் வாழவில்லை. சகி போரடிக்கிறேனா? இவ்வளவு தூரம் நீ வாசித்திருக்கவே
மாட்டாய். பரவாயில்லை. என் திருப்திக்கு நான் எழுதுகிறேன். கிழித்து விடாதே சும்மா சொன்னேன். நீ என்னை அலட்சியம் செய்தாலும் என் எழுத்தை அலட்சியம் செய்ய மாட்டாய். வாசித்து கொண்டிருக்கிறாய் என்று
தெரியும். வாசி. பிரியங்கள் சகி. உனக்கு பிடித்த படி சொன்னால் ஐ லவ் யூ டி புருஷி. தயவு செய்து வாரத்திற்கு ஒரு முறையாவது பரணை தூசி தட்டு. புத்தகம் வாழ்வும் தரும் புருஷி. தினமும் கொஞ்சமேனும் வாசி.
அதிகபட்சமாய் ஒரு கவிதையோ கதையோ . இவ்வளவு தூரம் வாசித்ததில் உனக்கு உதடு வறண்டிருக்குமே. நான் அருகில் இல்லையல்லவா. நீயே உள் மடித்து எச்சில் தடவிக் கொள். சகி நான் வாழாத வாழ்க்கைகள் அந்த புத்தக
பரணில் (உன்னிலும்) மிச்சமிருக்கிறது. அவற்றை எல்லாம் தயவு கூர்ந்து பத்திரமாய் பார்த்து கொள். நான் அடுத்த மாதமெல்லாம் ஓடோடி வந்து விடுகிறேன்.
பிரியமுடனும் முத்தங்களுடனும்
உன் பித்தன்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...