Back

Philosophy

September 22, 2018

ஒரு பைத்தியக்காரனின் டைரி குறிப்புகள்

SHARE

ஒரு பைத்தியக்காரனின் டைரி குறிப்புகள்

தனித்திருத்தல் எத்தனை வலியும் சுகமும் கொண்டிருக்கிறது. இதை எழுத காரணமானதும் தனிமை தான். தனிமை தனிமை தனிமை அதுவே என் வாழ்வின் பிரதான துணை. அதிலும் என்னைச் சுற்றி சில பலர் இருக்கிற போது நான்
எடுத்துக் கொள்கிற அல்லது அந்த சில பலர் கொடுக்கிற தனிமை தான் என்னுடைய வாழ்வின் ஆதாரத் துணை. தனிமையின் துணை தந்த சுகத்தால் யாரையும் துணை நாடாமல் விட்டு விட்டேன். என் கல்லூரி வாழ்க்கையின்
நான்காண்டு முடிகிற இந்தச் சமயத்திலும் எனக்கென ஒரு நண்பனைக் கூட சம்பாதித்துக் கொள்ள வில்லை. வலிக்கிறது. அழுகை கூட வருகிறது. இறுதிப் பொழுதிலும் எனக்கென ஒரு ஜீவனும் இல்லை என்பதை உணரும் இந்த கணம்
உயிர்தண்டில் ஊசியென குத்துகிறது. இது நானாகத் தேடிக் கொண்ட வேதனை தான். என்ன செய்வது. எல்லாம் பிரியத்துக்கு பின் வரப் போகிற பிரிவின் மீதான பயம் தான். எல்லாத்திற்கும் என் மனதொன்றே மூல காரணம்.
அதன் போக்கைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. சுத்த முட்டாள் மனது. நிறைவுறாத் தன்மை உள்ள வரையில் தான் தேடலும் உழைப்பும் தொடரும்.இதனைத் தெரிந்து கொண்டிருந்தும் இந்த மனசு பண்ணுகிற காரியங்களையும்
எண்ணுகிற எண்ணங்களையும் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. இது மட்டும் இல்லை. எதிலும் சட்டென மூழ்கி திளைத்து சுற்றம் மறக்கடித்து சுயம் மறக்கடித்து ஆடி மாதக் காற்றில் வேரோடு விழுகிற மரத்தைப் போல
மல்லாக்க சாய்த்து விடுகிறது. சுகமான வீழ்ச்சி தானெனினும் ஒழுக்கமென்ற ஒன்று வேண்டாமா? கண்ட இடத்தில் எல்லாம் சூடு சுரணை இல்லாமல் காலை வாரி விடுகிறது. மேலும், காணுகிற, பேசுகிற யாரிடமாவது ஒரு
பேரன்பின் ஆதி ஊற்றை எதிர்பார்க்கிறது. எனக்கான, எனக்கு மட்டுமான ஒரு நித்திய ஜீவனை வேண்டி நிற்கிறது. தனக்கென வாழாமல் தன் சுயத்தை முழுதுமாய் கொன்று விட்டு, சதா என்னை எண்ணிக் கொண்டு, என்னையே
பரம்பொருளாய் கருதி என் பின்னே பம்பரமாய் சுழல்கிற ஒரு துணை வேண்டும். இது நடக்கிற காரியமா? சிவ! சிவா! தப்பித் தவறியும் அப்படி பட்ட ஜீவன் கிடைத்து விடக்கூடாது. எத்தனை சுயநலமான ஆசை. ஓர் உயிரின்
ஜீவ சுதந்திரத்தை பறித்து அதை சிறைசெய்யத் துடிக்கிற மோசமான கேவலமான ஆசை. வேண்டாம். தனிமையையே நான் தாலிக் கட்டிக் கொள்கிறேன். அதனோடே சல்லாபித்து கொள்கிறேன். அதனோடே சண்டையிட்டுக் கொள்கிறேன்.
அதனோடே சமாதானப்பட்டும் கொள்கிறேன். தனிமையின் அணைப்பில் இருக்கிற போது நான் நிறைய யோசிக்கிறேன். இந்த சமுதாயத்தையும் என்னையும் ஆழமாய் பகுத்தாய்கிறேன். ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கி நுணுக்கமாய்
ரசிக்கிறேன்.இன்று கூட நிறைய ரசித்தேன். என்னை கடந்து போன ராம கிருஷ்ணா கல்லூரி மாணவி ஒருத்தி பச்சை நிற புடவையில் மூக்கும் முழியுமாக மூக்குத்தியோடு சௌந்தர்யத் தன்மையோடு இருந்தாள்.விழா அரங்கத்தில்
இருந்த சிலர் அடித்துக் கொண்டிருந்தார்கள். சுத்தக் கூமுட்டைகள். சாதியை கட்டிக் கொண்டு வெட்டுக் குத்து பண்ணுகிற முட்டாள்களை போல கல்லூரிக்குள் டிபார்ட்மென்ட் பெயரைச் சொல்லி அடித்து
கொண்டிருந்தார்கள்.மிருகப்பிரவிகள். இவர்கள் எப்படித் தான் இந்தியாவைத் தாங்கும் தூணாவர்களோ.? அந்நேரத்தில் அப்துல் கலாம் இருந்திருந்தால் அவர்களைத் தூணென சொல்லியதற்காக தன் நாக்கை அறுத்துக்
கொண்டிருப்பார். பாட்டுக் கச்சேரி பண்ணியதில் அந்த ஜிப்பாகார பையனும் இன்னொரு பெண்ணும் கொஞ்சம் சிறப்பாக பாடினார்கள். கிராமிய நடத்தின் போது மருத்துவக் கல்லூரி மாணவியரில் எனக்கு வலது புறத்தில்
இருந்து இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ ஆடிய மீனாட்சி அம்மன் கொண்டைக்காரி இடுப்பை வளைத்து நெளித்து லாவண்யமாக ஆடினாள். என்ன கொஞ்சம் ஒல்லியாக இருந்தாள். மேலும் என் கல்லூரி பெண்களில் முன்னால் ஆடிய அந்த
குள்ளப் பெண் கருப்பாக இருந்தாலும் கலையாகவும் இருந்தாள். வெகு உற்சாகத்துடனும் குத்தாட்டம் போட்டாள். இறுதியாக பறையாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் ஒருத்திக்கு பல் வரிசை அழகாகவும்
நேர்த்தியாகவும் இருந்தது. அவள் சிரித்தால் அவ்வளவு அழகாக இருந்தது.(இவள்களை எல்லாம் எந்த கைகள் செய்ததோ?!) பறை ஒலியை கேட்டு எல்லாரும் எழுந்து நின்று ஆடினார்கள் .சிலர் உட்கார்ந்து கொண்டே
ஆடினார்கள். எனக்கும் தான் ஆடத் தோன்றியது. எனக்குள் என்னையும் மீறிய ஒரு உள்ளதிர்வை உணர முடிந்ததே தவிர ஆட முடிய வில்லை. ஆடவும் தோன்ற வில்லை. அமைதியாக உட்கார்ந்து பறை இசையை உள்வாங்கி
கொண்டிருந்தேன். இசை எத்தனை சுகமானது. எத்தனை இனிய மருந்து.எவ்வளவு வலிமை உடையது. இசையை படைத்ததற்காக இறைவனை உண்மையிலேயே பாரட்ட வேண்டும். மனிதனையும் தான். இந்த சமயத்தில் ஒரு கவிதைக்கான வித்து கூட
மனதில் விழுந்தது. "தட்டும் பறை சத்தம் எட்டும் திக்கெட்டும்...." இப்படியாக நீளும் அந்தக் கவிதை. வருடா வருடம் நடக்கிற எங்கள் கல்லூரியின் முத்தமிழ் விழா-18 சீரும் சிறப்புமாக முடிந்தது.
கடைசியாக நான்காம் ஆண்டு மாணவர்கள் எல்லாரும் மேடை ஏறி ஆடிக் கொண்டிருந்தார்கள். நான் ஏதோ மனச்சோர்வு காரணமாக ஒதுங்கி உட்கார்ந்திருந்தேன். அப்போது யார் யாரோ யார் யாரையோ வலுக்கட்டாயமாக இழுத்துக்
கொண்டு போய் ஆட வைத்தார்கள். தானும் ஆடினார்கள். ஆனால் என்னை அப்படி வலுக்கட்டாயப் படுத்த யாரையுமே சம்பாதிக்க வில்லை. அழுகையாகத் தான் வந்தது. என்னைத் தேடி வந்த, என் மீது நேச நெருக்கம் காட்டிய
எத்தனையோ (பட்டியல் நீளமானது) உறவுகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து கடுப்பேற்றி ஓட வைத்து விட்டேன்.ஏனென்றால்...... காரணம் சொல்ல மாட்டேன்.ஆனால் ஒன்றே ஒன்று இந்தத் தனிமை நானாக தேடிக் கொண்டது.
சுருங்கச் சொன்னால் இதற்கெல்லாம் காரணம் தனிமை மீதான என்னுடைய காதல். ஒரு வகையான மன நோய். கூடிப் பிரிவதை பற்றிய பயம். ஆனால் அப்படி ஆடாமல் ஒதுங்கி சோர்ந்து உட்கார்ந்திருந்த சமயத்தில் தான் இதை எழுத
தொடங்கினேன். சோகமாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் இப்படித் தான். சுத்த சோகவிரும்பி. சோம்பேறியும் கூட. அதை விட்டொழிக. கடைசியாக மேடை ஏறி ஆடிய எல்லோரும் அழகாக ஆடினார்கள். அதிலும் அந்த தெத்துப்
பல்லி பலே.செம ஆட்டம்.அவள் தான் என் சோகத்திற்கும் இவ்வளவையும் எழுத வைத்த என் தனிமைக்கும் காரணம். அவளுக்கு தனிப்பட முறையில் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி.

#ஒரு_பைத்தியக்காரனின்_டைரிக்_குறிப்புகள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...