Back

Philosophy

September 25, 2018

ஒரு பைத்தியக்காரனின் டைரிக் குறிப்புகள்

SHARE

ஒரு பைத்தியக்காரனின் டைரிக் குறிப்புகள்

மனிதன் உண்மையிலே மகா உத்தமன். நல்லவன். ஆனால் எப்பேர்ப்பட்ட மனித மனத்திலும் ஒரு குரூரம் குடிக்கொண்டிருக்கும். தீயெண்ணம் இருக்கும். உணர்வுகளை கட்டியாளத் தெரிந்தவன் நல்லவனாகிறான்.அவ்வளவுதான்.

மேலும், இந்தப் பேரண்ட பெருவெளியில் வாழும் ஒவ்வொரு சீவராசியும் அதிசயம், அற்புதம். அதுமட்டுமின்றி வாழ்தல் என்பது கலை. வாழ்க்கை என்பது வரம்.இந்த உண்மையை மனிதனல்லாத மற்றெல்லா உயிரினங்களும்
உணர்ந்திருக்கிறன. மனிதன் மட்டும் சரியாக வாழவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ள வில்லை. எப்போதும் மனதில் சலிப்பு, இயலாமை, ஆசை, அழுகை, சோம்பேறித் தனம். சற்றுத் தெளிவாகச் சொன்னால் ஆறாம்
அறிவு என்பது மனித குலத்தின் மாபெரும் சாபம். ஆமாம் எதையும் பகுந்தாய்ந்து சுக துக்கங்களை பிரித்து பார்த்து, சந்தோஷ சமயத்தில் சிரித்து, துக்க காலங்களில் அழுது துயருற்று சோம்புகிறான் மனிதன். கடந்த
கால நினைவுகளை சேமித்து அசை போடவும், அதை எண்ணி வருந்தி அழவும் செய்கிறான். முடிந்து போன ஒரு விசயத்தை எண்ணி மனம் விம்மி அழுகிறான். கிடைக்காததை எண்ணி வருந்துகிறான். பசிக்கிறதெனில், அப்போதைக்கு
தின்பது மட்டுமின்றி அடுத்த வேலைக்கும் எடுத்து வைத்துக் கொள்கிறான். மற்ற ஜீவ ராசிகளை பற்றி சிந்திப்பதில்லை. சுத்த சுய நல விரும்பி. இப்படி எல்லாம் சிந்திக்கிற போது கர்ண கொடூரமாக தெரிகிற மனித
வாழ்க்கை, இயற்கையின் அழகியலை தரிசிக்கிற போது கடவுளின் கொடையாக தோற்றமளிக்கிறது. பசுமை படர் மரம், அதில் கூடு கட்டி கூச்சலிடும் பறவை இனம், தொய்வுறாமல் ஓடும் நீர் நிலைகள், ஓயாமல் வீசிக்
கொண்டிருக்கும் காற்று, தன் பொற்கிரணங்களை பூமியில் படியச்செய்கிற சந்திர சூரியன், எதையும் பொருட்படுத்தாமல் தோகை விரித்து நடம்புரியும் மயில், நேற்று முன்தினம் இரவு பசிக்காக வாங்கிய happy happy
பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து வீசி யெறியப்பட்ட ஒரு பிஸ்கட் துண்டையும் என்னையும் ஞாபகம் வைத்திருந்து நன்றியோடு வாலாட்டும் நாய், நிலைபாடற்றுலவும் மேகத்திரள், தான் குளிக்காத போதும் தன்னை பிறர்
தூற்றி இழி செய்து சிரிக்கிற போதும் தாடி மழிக்காத முகத்தோடு சிரித்த படி தன்னோடு தானே பேசித் திரியும் அந்த வாலிப பிச்சை(பைத்திய) க்காரன், யாரென தெரியாத போதும் கேட்ட வுடன் முடி குத்தும்
கன்னத்தில் முத்தமிட்டு சிரிக்கும் குழந்தை, தூக்கிலிட போவதறியாது தன்னை நோக்கி நீளும் கயிறை தலை தூக்கி பார்க்கும் வேலியோர ஓணான், தன் மடியில் வாய் வைக்கும் கன்றுக்கு காலகட்டி பால் புகட்டும்
சிந்தாமணி(என் வீட்டு பசுவின் பெயர்), கடவுள் மனிதன் யாரையும் மதியாமல், யாருக்கும் பயப்படாமல் எச்சமிட்டு பறந்து கோபுர உச்சியிலமர்ந்து கொஞ்சிக் கொண்டிருக்கும் புறாக் கூட்டம் இவற்றை எல்லாம்
பார்க்கிற போது பூமியே சொர்க்கமயமாகிறது. நான் ஆரம்பத்தில சொன்ன படி வாழ்க்கையும் வாழ்வதும் கலையாகிறது. ஆனால் மனிதனுக்கு இந்த அழகியலை ரசிக்கவும் பார்க்கவும் எங்கு நேரமிருக்கிறது? ஓயாத அலுவல்,
ஓட்டம். எதுவரை வாழப் போகிறோம் என்று தெரியாமலேயே எதிர்காலத்தை பற்றிய பயம். நாளைக்கு இருப்போமா மாட்டோமா என்று தெரியாமலேயே நாளைக்கும் சேர்த்து உழைப்பது. சம்பாதிப்பது. வாழத் தெரியாதவர்கள்.
இப்படி எல்லாம் நான் வருந்துவதோ, துக்கப்படுவதோ கிடையாது. அமைதியாக எதையாவது பற்றி யோசித்தபடி அல்லது ரசித்தபடி உதடு வறண்டு, உள்ளூர கவலையற்று ஆனால் மகிழ்வில்லாத நிலையில் எதற்கும் எப்போதும் அரசல்
புரசல் செய்யாமல் நிதானமாக செயல்படுவேன். என்னிந்த வருத்தமில்லாத நிலையை பார்த்து "ஏன் இப்படி இருக்க.? உனக்கு பயமே இல்லையா.? கடைசில என்ன பண்ண போற.? எப்படி வாழப் போற? இப்படியே இருந்த பின்னாள்
ல சோத்துக்கு என்ன பண்ண போற? " என சிலர் வாய் விட்டே கேட்டிருக்கிறார்கள். எதற்கு பயப்பட வேண்டும்? இன்று சோறு கிடைப்பது போதாதா? நாளை பற்றி எதற்கு யோசிக்க வேண்டும்?
இன்னும் சிலர் "உன்னைப் போலெல்லாம் என்னால இருக்க முடியாது ப்பா" என்று தன் இயலாமையை பகிரங்கமாகச் சொல்லியும் வருந்தி இருக்கிறார்கள். நான் துக்கமற்று இருப்பதே அவர்களுக்கு துக்கமாய்
இருக்கிறது போலும்.மனிதனுக்கு தனக்கு கஷ்டம் இருப்பதை காட்டிலும் தன்னை சார்ந்தவன் சந்தோஷமாய் இருப்பதே துக்கமாகிறது. இவர்கள் இப்படி எல்லாம் வாழ்க்கையை நினைத்து வருந்துவதை பார்த்தால் பாவமாய்
இருக்கிறது எனக்கு. நல்ல படியாக வாழ வேண்டும் என வாழ்க்கையை சூனியமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

#ஒரு_பைத்தியக்காரனின்_டைரிக்_குறிப்புகள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...