Politics
May 6, 2026
எளிய மக்களின் தீர்ப்பும், முற்போக்காளர்களின் கடமையும்!
SHARE

அன்பற்ற அறிவால் யாருக்கு லாபம்?
எளிய மக்களின் தீர்ப்பும், முற்போக்காளர்களின் கடமையும்!நான் அடிப்படையில் திராவிட, இடதுசாரி சித்தாந்தங்களில் ஆழமான நம்பிக்கை கொண்டவன். திமுகவை ஆதரித்தவன்; இன்றும் எவ்விதத் தயக்கமுமின்றி ஆதரிப்பவன். ஒவ்வொரு தேர்தலிலும் என் குடும்பத்தாரையும், நண்பர்களையும் திமுகவிற்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று முழுவீச்சில் வாதிட்டவன் நான்.
என் அரசியல் பற்றுறுதி எந்தளவுக்குத் தீவிரமானது என்றால், திமுகவை கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்களை எதிர்கொள்ள நான் மிகக் கடுமையான 'டார்க் ஹியூமர்' (Dark Sarcasm) கலந்த அரசியல் பகடியைக் கூடக் கையாண்டிருக்கிறேன். அது அகந்தையினாலோ மமதையினாலோ அல்ல; மாறாக, என் நிலைப்பாட்டின் மீதான தொடர் தாக்குதல்களுக்கு நான் கொடுத்த ஒரு 'சர்காஸ்டிக்' பதிலடி அது. உதாரணமாக, திமுகவின் மதுக்கொள்கையைத் தொடர்ந்து விமர்சித்தவர்களிடம் நான் கோபமாக, “ஆமாம்டா, வரப்போகிற தேர்தலில் நாங்கள் மீண்டும் ஜெயித்தால், எப்படி ‘நான் முதல்வன்’ போன்ற நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தோமோ, அதேபோல ஊர் முழுக்க இலவசமாகச் சாராயம் கொடுப்போம். தமிழ்நாடு முழுவதையும் சுடுகாடாக மாற்றுவோம். சுடுகாடான பிறகு வெட்டியான் வேலைக்கு அதிக டிமாண்ட் வரும் அல்லவா? அதற்கும் ஒரு தகுதித்தேர்வு வைப்போம். குறிப்பிட்ட சாதியினர்தான் வெட்டியான் வேலை செய்ய வேண்டும் என்ற விதியை ஒழித்துக்கட்டி, எல்லா சாதியினரும் வெட்டியான் ஆகலாம் என்று சட்டம் இயற்றி, சுடுகாட்டிலும் சமூகநீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவோம்” என்று ஒருவித ஆக்ரோஷமான சர்காஸத்தோடு வாதிட்டிருக்கிறேன்.
அப்படிப்பட்ட தீவிரமான சித்தாந்தப் பற்றுறுதியும், எதிர்த்தரப்பை மூர்க்கமாக எதிர்கொள்ளும் மனநிலையும் கொண்டிருந்த நான்தான்... வாக்கு எண்ணிக்கை நடந்த அன்று காலை, த.வெ.க பெருவாரியான முன்னிலையில் இருப்பதைப் பார்த்ததும் பயத்தில் உறைந்துபோனேன். எனக்கே வயிறு கலங்கிப்போனது. (உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் பதற்றத்தில் அன்று காலை மட்டுமே இரண்டு முறை கழிவறைக்கு ஓடிவிட்டேன் என்பதுதான் நிஜம்!). நெஞ்சுக்குள் விவரிக்க முடியாத மாபெரும் பயமும், கண்களில் தன்னிச்சையாகக் கண்ணீரும் வந்துவிட்டது.
ஆனால், அந்தப் பயமும், எளிய மக்கள் கொடுத்த அந்தத் தேர்தல் முடிவும் எனக்கு ஒரு மாபெரும் அரசியல் பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. ஒரு சித்தாந்தவாதியாக, மக்கள் அளித்த ஜனநாயகத்தின் தீர்ப்பை நாம் திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும் என்ற பக்குவத்தை எனக்குள் விதைத்தது.
நான் அந்தப் பக்குவத்தை அடைந்துவிட்டாலும், இந்த ஜனநாயக முடிவை இன்னும் ஏற்க மறுத்து, தங்களை ‘முற்போக்காளர்கள்’ என்றும் ‘அறிவுஜீவிகள்’ என்றும் சொல்லிக்கொள்ளும் தரப்பினர் வெளிப்படுத்தும் வன்மமும், வாக்களித்த எளிய மக்களைப் பார்த்து அவர்கள் உமிழும் சாபங்களும் என்னை மிகுந்த அறச்சீற்றத்திற்கு உள்ளாக்குகின்றன.
ஏளனம் விதைத்த அரசியல் எதிர்வினை: அவமானங்களின் கூட்டுப் பெருவெற்றி!
த.வெ.க-வின் இந்த வெற்றிக்கு, ஆளும் கட்சிகள் மீதான அதிருப்தி (Anti-incumbency), திரைக்கவர்ச்சி (Charisma) எனப் பல பொதுவான காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால், அரசியல் சமூகவியல் (Political Sociology) மற்றும் உளவியல் ரீதியாகப் பார்த்தால், இந்த வெற்றிக்கான உண்மையான ஆணிவேர், தங்களை 'முற்போக்காளர்கள்' என்று கருதிக்கொள்ளும் சமூகம், எளிய மக்களின் மீது வீசிய அகந்தையில்தான் புதைந்திருக்கிறது.
தேர்தல் களம் தொடங்கியதிலிருந்தே, த.வெ.க-வை ஆதரிக்கும் இளைஞர்களையும் விளிம்புநிலை மக்களையும் ‘தற்குறிகள்’ என்றும், ‘அணில்கள்’ என்றும் தொடர்ந்து கேலி செய்தனர். அரசியலில், ஒரு மக்கள் குழுவைத் தொடர்ந்து பொதுவெளியில் அவமானப்படுத்தும்போது, அது ‘கூட்டு உளவியல் எதிர்வினையை’ (Collective Psychological Backfire) உருவாக்கும் என்பது அடிப்படை சமூகவியல் தத்துவம். ஒருவனைத் தொடர்ந்து தற்குறி என்று சொல்லிக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அந்த ஏளனச் சொல்லையே அவர்கள் தங்களை ஒன்றிணைக்கும் அடையாளமாக (Badge of Honor) மாற்றிக் கொள்வார்கள்.
“நாங்கள் அரசியல் அறிவற்ற முட்டாள்கள் என்றே இருக்கட்டும்; அந்த முட்டாள்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் என்ன நடக்கும் என்று பாருங்கள்” என்ற விளிம்புநிலை மக்களின் கூட்டு மனநிலையின் (Collective consciousness) ஆக்ரோஷமான வெளிப்பாடுதான் இந்த வாக்குகள். பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான பணபலம், சாதியக் கட்டமைப்புகள் மற்றும் பாரம்பரிய வாக்கு வங்கிகளை விடவும், 'தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டவர்களின் உளவியல் ரீதியான ஒற்றுமை' ஈடு இணையற்ற அரசியல் ஆயுதம் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
புனித பிம்பங்களின் வீழ்ச்சியும், பாமரர்களின் வடிகாலும்!
த.வெ.க வெற்றிபெற்றுவிட்டது என்றவுடன், “நாடு நாசமாகப் போகிறது, இருண்ட காலம் தொடங்கிவிட்டது” என்று முற்போக்குத் தளம் ஒட்டுமொத்தமாகப் பதறுவதன் பின்னணியில் ஒரு உளவியல் இருக்கிறது. அது சமூகத்தின் மீதான அக்கறையை விட, ‘எங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் தளம், எந்தப் பின்புலமும் இல்லாத எளிய மக்கள் கைக்குச் செல்கிறதே’ என்ற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடுதான்.
அறிவுஜீவிகள் சபிப்பதைப் போல, திமுக ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, நூறு சதவீதம் ‘புனிதமான கட்சி’ அல்ல. அவர்கள் எத்தனையோ சிறப்பான சமூக நீதித் திட்டங்களைக் கொடுத்திருந்தாலும், அதே அதிகார அமைப்பிற்குள் நடந்த ஊழல்களும், அதிகார அத்துமீறல்களும், சமரசங்களும் வரலாற்றில் பதிவாகித்தான் உள்ளன. பாரம்பரியக் கட்சிகளின் வரலாற்றுப் பிழைகளுக்குக் காட்டும் வசதியான ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மறதியை’ (Selective Amnesia), புதியதாக வந்திருக்கும் எளிய மக்கள் மீது காட்ட மறுப்பது அப்பட்டமான அரசியல் நேர்மையின்மை.
கொண்டாட்டங்களில் ஒளிந்துள்ள வர்க்கப் பாகுபாடு (Class Bias)
த.வெ.க தொண்டர்களின் கொண்டாட்டங்கள் அத்துமீறுகின்றன, அவர்கள் வன்முறையாளர்கள், அவர்களுக்குச் சமூகப் பொறுப்பில்லை என்று அறிவுத்தளம் கொந்தளிக்கிறது. சமூகவியல் ரீதியாக இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. இதற்கு முன் பாரம்பரியக் கட்சிகள் வென்றபோதெல்லாம், அவர்களின் தொண்டர்கள் என்ன சலனமில்லாமல் தியானமா செய்துகொண்டிருந்தார்கள்? அவர்களும் அதிகாரத் திமிரில் வன்முறைகளைக் கையில் எடுத்தவர்கள்தான்; பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள்தான்.
ஆனால், அதை அளவிடுவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. பாரம்பரியக் கட்சிகளின் தொண்டர்கள் அத்துமீறினால் அது ‘தொண்டர்களின் அரசியல் எழுச்சி’; அதுவே எந்தப் பின்புலமும் இல்லாத எளிய மக்களும் பாமரர்களும் கொண்டாடினால் அது ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று முத்திரை குத்துவதில் ஒரு ஆழமான ‘வர்க்கப் பாகுபாடு’ (Class Bias) ஒளிந்திருக்கிறது.
பாமரத்தனமும் புறக்கணிப்பின் உளவியலும்
இப்போது தெருக்களில் இறங்கிக் கொண்டாடுபவர்கள் பல தசாப்தங்களாக அதிகார மையங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்கள். உளவியல் ரீதியாகப் பார்த்தால், இந்தக் கொண்டாட்டங்கள் அவர்களின் பல ஆண்டு காலப் புறக்கணிப்பின் வடிகால். மேல்தட்டு மக்கள் பேசும் அரசியல் முதிர்ச்சியோ, நாகரீக மொழியோ, கொண்டாட்டத்தின் எல்லைகளோ அந்தப் பாமரர்களுக்குத் தெரியாது.
அந்தப் பாமரத்தனத்தை அறச்சீற்றத்தோடு சபிப்பதை விட, இதுகாலவரை விளிம்புநிலை மக்களை அரசியல் முதிர்ச்சியடையாமல் (Politically Immature) வைத்திருந்த பெருங்கட்சிகளின் தோல்வியாகவே இதை நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்டி நெறிப்படுத்துவதுதான் அறிவார்ந்த செயலே தவிர, எளிய மக்களின் வடிகால்களைப் பார்த்து முகம் சுளிப்பது முற்போக்காகாது.
அன்பில்லாத அறிவு ஆபத்தானது
முற்போக்கு சமூகம் இப்போது செய்ய வேண்டியது என்ன? த.வெ.க தொண்டர்கள் தவறு செய்தால், “திமுக செய்த அதே தவறை நீங்களும் செய்யாதீர்கள். நீங்கள் மாற்று அரசியலுக்காக வந்தவர்கள், பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்று அன்பாகச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அதை விடுத்து, “நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா” என்று வக்கிரமாக ஆனந்தப்படுவது ஆரோக்கியமான அரசியலாகாது.
வரலாறு நமக்கு ஒன்றைக் கற்பித்திருக்கிறது: மனிதநேயம் இல்லாத அறிவும், கருணையற்ற பகுத்தறிவும் சமூகத்திற்கு எவ்விதப் பயனுமளிக்காது. அறிவியலின் மாபெரும் கண்டுபிடிப்பான ஐன்ஸ்டீனின் ஃபார்முலாவை, சக மனிதன் மீதான கருணையின்றிப் பயன்படுத்தியதால்தான் அது அணுகுண்டாக மாறி லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டது. நாம் பார்க்கும் பெரும்பாலான அறிவியல் திரைப்படங்களில் வரும் வில்லன்கள், அறிவே இல்லாத முட்டாள்கள் அல்ல; அவர்கள் உலக மகா அறிவாளிகள். ஆனால், அந்த அறிவை அன்பில்லாமல், சக மனிதர்களை அழிக்கப் பயன்படுத்தியதால்தான் அவர்கள் வில்லன்கள் ஆனார்கள்.
இன்று, தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில், மாற்று முடிவு எடுத்த எளிய மக்களைப் பார்த்து “அனுபவிக்கப் போகிறீர்கள்” என்று சாபமிடும் முற்போக்காளர்களின் மனநிலையும் அந்த வில்லன்களின் மனநிலைக்கு ஒப்பானதாகவே இருக்கிறது.
நம்முன் இருக்கும் கடமை
இந்தச் சமூகம் தடம் மாறுகிறது என நீங்கள் உண்மையாகவே கவலைப்பட்டால், பொறுப்பை நீங்களும் ஏற்க வேண்டும். சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு அநீதிக்கும் நமக்கும் பங்குண்டு.
முற்போக்காளர்களே... தயவுசெய்து எளிய மக்களைச் சபிப்பதைக் கைவிடுங்கள். அவர்களிடம் கருணையோடும், அன்போடும் உரையாடுங்கள். ஒருவேளை அவர்கள் அறியாமையில்தான் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுங்கள். விளிம்புநிலை மனிதனை அரசியல் பாதையில் கைதூக்கி விடப் பயன்படாத எந்த அறிவும் பயனற்றது; அறமற்றது.
மாற்றம் நடக்க வேண்டும்; அது நன்மையாக நடக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டிய கடமை, ஏளனம் செய்பவர்களிடம் இல்லை; எளிய மக்களைக் கரம் பிடித்து அரசியல் கற்பிப்பவர்களின் கைகளில்தான் இருக்கிறது! மாறுவோம். மாற்றுவோம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...