Back

Article

May 22, 2026

உடல் எனும் இறைச்சி மூட்டையும் கவிஞன் எனும் கசாப்புக்காரனும்

SHARE

உடல் எனும் இறைச்சி மூட்டையும் கவிஞன் எனும் கசாப்புக்காரனும்

பாகம் 1: காதலும் காமமும் - ஒரு நாகரிக மோசடி

காதல்... இந்த மூன்றெழுத்து அபத்தத்தை, இந்த மலிவான மாயையை எந்தப் புத்திசாலி அல்லது எந்த வக்கற்ற கோழை முதலில் உருவாக்கினானோ தெரியவில்லை. ஆழமாக, நிர்வாணமான உண்மையின் வெளிச்சத்தில் நின்று யோசித்துப் பாருங்கள். தமக்கான இணையைத் தனது இயல்பான தகுதியால், உடல் வலிமையால் அல்லது ஈர்ப்பால் கவர முடியாத, ஆற்றலற்ற எவனோ அல்லது எவளோ தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் கண்டுபிடித்த ஒரு மிகச் சிறந்த 'Manipulation tool' தான் இந்தக் காதல். பசி, தூக்கம், காமம் — இந்த மூன்றும் தான் இந்தப் பூமியில் ஊர்ந்து செல்லும், நடக்கும், பறக்கும் எந்தவொரு உயிருக்கும் அடிப்படைத் தேவை. மிருகங்களுக்கு இது வெளிப்படையாகத் தெரியும். ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்திடம் கவிதை பாடுவதில்லை. ஒரு நாய் இன்னொரு நாயிடம் பூப்பறித்துக் கொடுப்பதில்லை. அவற்றுக்குத் தேவை இனப்பெருக்கம்; தசை கேட்கும் பசி.

ஆனால், மனிதன் தன்னை ஒரு மேதாவியாக, நாகரிகம் அடைந்த உச்சபட்ச உயிரினமாகக் காட்டிக்கொள்ள இந்த இயற்கையான 'காமம்' என்ற ஒற்றை வார்த்தைக்கு மேல் பூசிய வர்ணஜாலம், சுற்றிய சர்க்கரைப் பாகு தான் காதல். இது ஒரு சுகமான அடிமைத்தனம். ஒரு சௌகரியமான வலை (Comfort zone). மற்றவனை, அல்லது மற்றவளை உணர்ச்சிரீதியாகக் கட்டிப்போட்டு, "நான் உனக்காக உயிரையே கொடுப்பேன்" என்று வார்த்தைகளில் நாடகம் ஆடி, தனக்கான உடல் மற்றும் மனத் தேவையைத் தீர்த்துக்கொள்ள மனித மூளை கண்டுபிடித்த மிகச் சிறந்த திருட்டுத்தனம் இது.

கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக இந்த வெற்று உணர்வை நம்பி, அதற்கு அடிமையாகி, அதுதான் பிரபஞ்சத்தின் உச்சகட்ட உண்மை என்று ஒரு பொய்யை நாம் நிஜமென வாழ்ந்துகொண்டிருக்கிறோம். காதல் என்பதெல்லாம் நாம் பழகிக்கொண்ட, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப் பயன்படும் மிகச் சிறந்த போதை மருந்து. இதை விட்டு வெளியே வந்து, மனித உறவுகளின் ஆணிவேரைப் பிடுங்கிப் பார்த்தால் அங்கே இருப்பது வெறும் சுயநலம், பகட்டு, மற்றும் சதையின் தாகம் மட்டுமே.


பாகம் 2: அழகெனும் வியாபாரம் - கண்ணாடியின் அடிமைகள்

இப்போது அடுத்த போதைக்கு வருவோம். அழகு. #பெண்களுக்கானது, ஆனால் #பெண்களுக்கு_மட்டுமானதில்லை. ஆண்களும் ஜிம்முக்குப் போய் இரும்பைத் தூக்கி உடலை முறுக்குவதிலும், தாடியை ட்ரிம் செய்து விதவிதமான எண்ணெய்களைத் தடவுவதிலும், பிராண்டட் ஆடைகளை அணிந்து தங்களின் 'status'-ஐக் காட்டுவதிலும் இதே இன்செக்யூரிட்டியை (insecurity) சுமந்துகொண்டுதான் திரிகிறார்கள். ஆண்களின் ஈகோ அவர்களின் பணப்பையிலும், தசையிலும் ஒளிந்திருக்கிறது.

ஆனால், பெண்கள் தங்களை அழகுபடுத்துவதை ஒரு முழுநேர வேலையாகவே, ஒரு வாழ்நாள் தவமாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான, ஆனால் வெளிப்படையான உண்மை. "நீ அழகாக இருக்கிறாய்" என்ற ஒற்றை வார்த்தைக்காக, ஒரு சில்லறை validation-க்காக அவர்கள் படும் பாடு இருக்கிறதே... ச்சைக்! யாராவது அப்படி ஒரு வார்த்தையை வீசிவிட்டால் போதும், அப்படியே உருகி மெழுகாகி விடுகிறார்கள். "அப்படியா? நெசமாவா? நிஜமாகவா நான் அழகாக இருக்கிறேன்? என் கண்கள் அழகாக இருக்கிறதா? என் சிரிப்பு அழகாக இருக்கிறதா?" என்று கேள்விகளைத் தொடுத்து, தங்களைத்தாங்களே அந்த வார்த்தைப் போதைக்கு ஆளாக்கிக்கொள்கிறார்கள். தன் புகழ் பாட வேண்டும், தன்னை யாராவது ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதும், அதற்காக ஏங்குவதும் ஒரு கோரமான பலவீனம். முட்டாள்தனம்.

பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் மென்மையானவர்கள் தான். அழகானவர்களும் கூட. ஆனால் அந்த அழகை, ஒரு சந்தைப்படுத்தப்பட்ட பொருளாக மாற்றுவது யார்? உங்களை, உங்கள் பாதுகாப்பற்ற உணர்வை வைத்துத்தான் ஏகப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. Fairness cream, lipstick, eyeliner, nail polish, mascara, foundation, லொட்டு, லொசுக்கு, வெங்காயம், பெருங்காயம் என்று உங்கள் முகத்தில் அப்பிக்கொள்ள ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. இது ஒரு வியாபாரம். உங்கள் அகந்தையை வைத்து அவர்கள் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கிறார்கள். உங்கள் மூளைக்குள் "நீ போதவில்லை, நீ இன்னும் சிவப்பாக வேண்டும், உன் உதடு இன்னும் பளபளக்க வேண்டும்" என்று விஷத்தை ஏற்றி, உங்களை ஒரு நுகர்வுப் பொருளாகவே மாற்றிவிட்டார்கள்.


பாகம் 3: கவிஞன் எனும் கசாப்புக்காரன் - என் நிர்வாண வாக்குமூலம்

இங்கேதான் நான் வருகிறேன். என்னையும் என் போன்ற எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் கொஞ்சம் உள்ளே இழுத்துப் போடுவோம். நான் ஒரு எழுத்தாளன். ஒரு வார்த்தை ஜாலக்காரன். சொல்லப்போனால், காகிதத்தில் காமம் வளர்க்கும் ஒரு கசப்பான கசாப்புக்காரன். என்னை நம்பாதீர்கள். என் எழுத்துக்களைக் கண்டு ஏமாறாதீர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து இன்றுவரை, கவிதைக்கான பாடுபொருளாகப் பெண்களை மட்டுமே நாங்கள் வைத்திருக்கிறோம். பெண் இல்லை என்றால் பெரும்பாலான இலக்கியங்கள் இல்லை என்று பெருமையாகச் சொல்வார்கள். ஏன் தெரியுமா? பெண்ணின் உடலை வியாபாரமாக்குவது அவ்வளவு எளிது. உங்கள் பலவீனம் எங்களுக்குத் தெரியும். உங்களை எப்படி வார்த்தைகளால் வீழ்த்துவது, எப்படி மயக்கி மழுப்புவது என்று எங்களுக்குத் தெரியும். என் வண்டியும் அப்படித்தான் ஓடுகிறது.

உண்மையில், உங்கள் முகம் வெறும் சதையாலும் எலும்பாலும், ரத்த நாளங்களாலும் ஆனது. ஆனால் நான் அதை "நிலா முகம்" என்று கவிதை பாடுவேன். உங்கள் உதடுகள் வெறும் உணவு உண்ணவும், எச்சில் உமிழவும், பேசவும் பயன்படும் தசைகள். ஆனால் நான் அதை "பூ இதழ்" என்பேன். உங்கள் மார்பகங்கள் வெறும் கொழுப்புத் திரட்சிகள் மற்றும் குழந்தைக்குப் பால் கொடுக்க அமைக்கப்பட்ட சுரப்பிகள். ஆனால் நான் என் பேனாவை எடுத்து "கனி காய் முலை" என்று காவியம் பாடுவேன். எண்ணெய்ப் பசையோடு இருக்கும், நாளடைவில் உதிரக்கூடிய உங்கள் முடியை "கருங்கூந்தல் அருவி" என்பேன். வெயிலில் நீங்கள் படும் பாட்டை மறைத்து, அழுக்கும் உப்பும் கலந்த உங்கள் நெற்றி வியர்வையை "பனித்துளி" என்பேன். நடப்பதற்குப் பயன்படும் மாமிசத் திரட்சியான கால்களை "தொட்டச் சறுக்கும் தொடை" என்பேன், இடுப்பெலும்பும் சதையும் சேர்ந்த பகுதியை "தொட்டால் ஒடியும் இடை" என்பேன், செரிமான உறுப்புகளைச் சுமக்கும் பையை "ஆலிழை வயிறு" என்பேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இயற்கையின் கழிவுப் பாதையான, மாதவிடாய் ரத்தத்தைச் சுமக்கும் உங்கள் பிறப்புறுப்பை "நல் அரவின் படம் போலும், வாழைப்பூ போலும் அல்குல்" என்று எழுதி உங்கள் மூளையை மழுங்கடிப்பேன். ஒரு கசாப்புக்காரன் எப்படி ஆட்டைத் துண்டு துண்டாக வெட்டி தொங்கவிடுகிறானோ, அதே போலத்தான் ஒரு கவிஞன் பெண்ணின் உடலை உறுப்பு வாரியாகப் பிரித்து வார்த்தைகளில் வறுத்து எடுக்கிறான்.

நான் இப்படிப் பாடும்போது, நீங்கள் என்ன நினைப்பீர்கள்? "ஆஹா, இவன் நம்மை எவ்வளவு ஆழமாக ரசிக்கிறான்! என் ஆன்மாவைத் தீண்டுகிறான்!" என்று உருகிப்போவீர்கள். நான் எவ்வளவு பெரிய அயோக்கியன் தெரியுமா? நானே என் எழுத்தின் இடையில், "பெண்களே, எதையும் நம்பாதீர், ஆண்களின் வார்த்தை ஜாலங்களில் ஏமாறாதீர்" என்று ஒரு போலி அக்கறையோடு ஒரு வரியை எழுதி வைப்பேன். அதைப் படிக்கும் நீங்களோ, "பாரு, இவன் எவ்வளவு உண்மையானவன், இவன் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறான். இவன் ரொம்ப நல்லவனாத்தான் இருப்பான்" என்று என்னையே நம்ப ஆரம்பித்து விடுவீர்கள்.

இதுதான் என் வெற்றி. நான் வீசும் வார்த்தை வலையில் நீங்கள் விழும் தருணம் அது. Worst fellows! காலத்தால் மாறாத அக்மார்க் முட்டாள்கள். உடை, நடை, தொழில்நுட்பம் என்று எல்லாவற்றிலும் அப்டேட் ஆன நீங்கள், இந்த 'அழகு' என்ற ஒற்றை மமதையில், அந்த மாய வலையில் இருந்து இன்னும் விடுபடவில்லை. என் போன்ற கவிஞர்கள் உங்கள் உடலை ரசிக்கவில்லை, உங்கள் மீதுள்ள காமத்தை, ஆதிக்க உணர்வை கவிதை என்ற போர்வையில் மூடி மறைக்கிறோம் என்பதை நீங்கள் என்று உணர்கிறீர்களோ, அன்றுதான் உங்களுக்கு உண்மையான விடுதலை.


பாகம் 4: சதையின் வீழ்ச்சி - காலம் தின்னும் உடல்

இந்தக் கட்டுரைக்கு எதிராகக் கூட சில ‘பெண்ணியப் பெண் புலிகள்’ அல்லது ‘குட்டைத் தவளைகள்’ சத்தமிடக் கூடும். "என் உடல், என் உரிமை. நான் எனக்காகத் தான் மேக்கப் போடுகிறேன், ஆணுக்காக அல்ல" என்று முழக்கமிடலாம். ஆனால், அவர்களின் ஆழ்மனதிலும், இருட்டறையிலும் இந்த ‘அழகு’ குறித்த ஒரு தீராத ஏக்கம், எதிர்பார்ப்பு, மற்றவர்கள் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஒரு வெறி இருக்கவே செய்கிறது.

நகையாக இருந்தாலும் தங்கம் தங்கம் தான். கட்டியாக இருந்தாலும் தங்கம் தங்கம் தான். அப்படித்தான் ஆணும் பெண்ணும். இன்னும் தெளிவாகச் சொன்னால், கவிதை, உரைநடை இரண்டிலுமே வார்த்தைகள்தான் இருக்கின்றன. பயன்பாட்டு விதம், அளவு, சொற்செறிவு, அர்த்தப் பிரயோகம் மட்டுமே மாறுபடுகிறது. உரைநடைக்கும் கவிதைக்குமான வேறுபாடுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கிறது. இரண்டுமே தசையால் ஆன உடல். புண்ணாகி, நாற்றமடித்து, மண்ணாகிப் போகக்கூடிய ஒரு பயாலஜிக்கல் இயந்திரம் (Biological machine). என்ன, டிசைனிலும், ஃபீச்சர்ஸிலும் (features) கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது, அவ்வளவுதான். உடலை, ஒரு மாமிசப் பிண்டமாக, இயற்கையின் கருவியாக மட்டும் பார்க்கும் எண்ணத்தைப் பெண்கள் முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அழகு என்பது இயல்பில் இருக்கிறது. ஒரு பூ, ஒரு கிளி, மரம், செடி, கொடி, முயல் எதையும் பாருங்கள். அவை இயல்புக்கு மீறி எதையும் தங்களுக்குச் செய்துகொள்வதில்லை. எந்தக் கிளியும் டிசைன் டிசைனாக உடை போட்டு, அரிதாரம் பூசி, அலங்காரம் பண்ணிக்கொள்வதில்லை. எந்த முயலும் தன் உதட்டிற்கு நிறம் தீட்டிக்கொள்வதில்லை. இருந்தாலும் அவை அழகாக இல்லையா? அவற்றைப் பார்த்து நாம் ரசிப்பதில்லையா? அழகு என்பது புறத்தோற்றத்தில் இல்லை. அது ஆத்மாவுக்குள் ஒளிந்துகிடக்கிறது. (இங்கே ஆத்மா என்பது ஏதோ ஆன்மீகக் குப்பையல்ல, உங்கள் சுய அறிவு, உங்கள் அடிப்படை இருப்பு, உங்கள் Character).

புழுவுக்கும் கழுகுக்கும் இரையாகப் போகிற, அல்லது தீயில் வெந்து சாம்பலாகப் போகிற இந்தப் பொய்யுடலைப் போற்றிப் பேணிக் காத்து ஒரு மயிரும் ஆகப்போவதில்லை. "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" என்று திருமூலர் சொன்னால், உடம்பை ஆரோக்கியமாக, திடமாக வையுங்கள், ஜிம்முக்குச் செல்லுங்கள், ஓடுங்கள், வியர்க்க விறுவிறுக்க உழையுங்கள் என்று அர்த்தம். அதைவிட்டுவிட்டு, இப்படி செயற்கையாக அழகுபடுத்தி, கண்ணாடியின் முன் மணிக்கணக்கில் நின்று நேரத்தையும் உழைப்பையும் விரயமாக்காதீர்கள்.


பாகம் 5: கடவுளற்ற மெய்ஞானம் - அன்பெனும் ஆத்மா

நாம் டிசைன் ஆகிவிட்டோம். பரிணாம வளர்ச்சியும், நம் தாய் தந்தையரின் மரபணுக்களும் நம்மைத் தீர்மானித்துவிட்டன. இனி நம் புறத்தோற்றத்தை மாற்றுவதிலும், அதற்காக மனதுக்குள் புழுங்குவதிலும் ஒரு புண்ணியமும் இல்லை. "என் மூக்கு இப்படி கூர்மையாக இருந்திருக்கலாம், முடி இன்னும் அடர்த்தியாக இருந்திருக்கலாம், பற்கள் நேராக இருந்திருக்கலாம், உதடு சிவப்பாக இருந்திருக்கலாம், தோல் இன்னும் கொஞ்சம் வெள்ளையாக இருந்திருக்கலாம், நான் குண்டாக இருந்திருக்கலாம், ஒல்லியாக இருந்திருக்கலாம், உயரமாக இருந்திருக்கலாம், மார்பகங்கள் பெருசாக இருந்திருக்கலாம், இடுப்பு சின்னதாக இருந்திருக்கலாம், கன்னம் குழி விழுந்திருக்கலாம்..." என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி ஏங்கித் தவிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

உடல் ஒரு மாயை. அதை எவ்வளவு பொத்திப் பொத்திப் பேணிக் காத்தாலும், காலம் அதைச் சீரழிக்கும். அதுதான் இயற்கையின் மாறாத சட்டம். தோல் சுருங்கும். பற்களும் முடியும் கொட்டிப் போகும். நான் கவிதையில் வர்ணித்த அந்த முலைகள் தளர்ந்து தொங்கும். கைகளெல்லாம் நடுங்கும். நடை தளரும். பார்வையின் கூர்மை மங்கும். ஆண்மை, பெண்மை இரண்டுமே ஒரு கட்டத்தில் மழுங்கிப்போகும். உணர்ச்சிகள் செத்துப்போகும். அப்புறம் எதற்கு இந்த வீண் ஏக்கமும், அலங்காரச் செய்கைகளும்? முப்பது வயது வரை இருக்கும் இந்த மாமிசக் கவர்ச்சிக்கு ஏன் இவ்வளவு பில்டப்?

முன் சொன்னதைப்போல், அழகு என்பது ஆத்மபூர்வமானது. பிடித்த ஒரு பொருள், அன்புக்குரிய ஒரு மனிதர், மனதுக்கு எப்போதும் அழகாகவே தெரிவார். ஒரு தாய் கருப்பாக இருந்தாலும், சிவப்பாக இருந்தாலும், முகம் கோணலாக இருந்தாலும் பிள்ளைக்கு அவள்தான் உலக அழகி. உடன்பிறப்புகளும் அப்படித்தான். தன் புற அமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் பிறக்கும்முன் முடிவு செய்ய முடியாது.

ஆக, அன்பால் அழகு பெறுவோம். பிடித்தவர்கள் ஆவோம். புறத்தோற்றப் புகழ்ச்சிகளைக் கடப்போம். ஒருவன் உங்கள் தோலை நேசித்தால், தோல் சுருங்கும் போது அவன் காதலும் சுருங்கிப் போகும். உங்கள் மார்பகங்களை நேசித்தால், அவை தளரும்போது அவன் காதலும் தளர்ந்து போகும். உங்கள் குணத்தை நேசித்தால் மட்டுமே அது உங்கள் மரணம் வரை நீடிக்கும்.

அன்பு மாறாது. அழகு மாறும் என்பதை அடிக்கடி நினைப்போம். கடவுள் என்றொரு கற்பனை இங்கே தேவையில்லை. அந்த மாயையை விட்டொழியுங்கள். அன்பே அழகு. அன்பே யாவும். அன்பு மட்டுமே நிர்வாணமான உண்மை. மற்றவை எல்லாம் வெறும் வியாபாரம்.


முடிவுரை

கடைசியாக ஒரு தடவை சொல்லிக்கொள்கிறேன்... யாராச்சும், அது நானாகவே இருந்தாலும் சரி, கவிதையாகவே கிறுக்கிக்கொண்டு வந்து உங்கள் முன் நின்றாலும் சரி, உங்களை "நீ ரொம்ப அழகா இருக்க" என்று சொன்னால், "அப்படியா, சரி.. போய் வேலையப் பாரு" என்று கடந்து வந்துவிடுங்கள்.

அதை விட்டுவிட்டு, "அப்படியா? என்ன அழகா இருக்கு? எவ்வளவு அழகா இருக்கு?" என்று உருகி நின்றீர்கள் என்றால்... நீங்கள் அவுட். உங்கள் மூளை அவுட். உங்கள் சுதந்திரம் அவுட். நீங்கள் இன்னொருவனின் கவிதைக்கோ, காமத்திற்கோ அடிமையாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதுல நோ டவுட்.

விழித்துக்கொள்ளுங்கள். வார்த்தைகளின் போதையில் இருந்து விடுபடுங்கள். நான் விரிக்கும் கவிதை வலைகளையும், முதலாளித்துவம் விரிக்கும் அழகுசாதன வலைகளையும் அறுத்தெறியுங்கள்.

#வாழிய_பெண்குலம். #வாழிய_சுயஅறிவு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...