Politics
October 15, 2025
அலட்சியம் மற்றும் அதிகாரம்: ஒரு தத்துவச் சிந்தனை
SHARE

அறியாமையும் அலட்சியமும் ஒரு தலைவரின், பொறுப்புணர்வு மிக்க நபரின் மற்றும் உறவில் உள்ள இணையின் மன்னிக்க முடியாத குற்றங்கள் - ஏனெனில் அவை அதிகாரம் மற்றும் அன்பின் ஜனநாயகத் தன்மையை அதன் தார் மீக அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன.
ஒரு தலைவன் "philosopher-king" ஆக இருக்க வேண்டும் - அறிவு, நீதி, நேர்மை ஆகியவற்றின் உருவகமாக இருக்க வேண்டும். அறியாமையில் இருக்கும் தலைவன் - நிழல்களை உண்மை என்று நம்புபவன். அறிவு இல்லாத ஆட்சியாளன் தன் மக்களை இருளில் வழிநடத்துபவன். அரசியல் அறியாமை என்பது தனிநபர் குற்றம் மட்டுமல்ல - அது கூட்டுக் குற்றம், ஏனெனில் மக்கள் முழுவதும் அதன் விளைவுகளை அனுபவிக்கிறார்கள்.
தலைவனின் அறியாமை அவனது ஆட்சியின் மற்றம் கொள்கையின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் ஆகிறது. மேலும், அறியாமையோடு சேர்ந்த அலட்சியம் இன்னும் ஆபத்தானது - தெரிந்திருந்தும் செயல்படாமல் இருப்பது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம். "அறிந்திருந்தும் செயல்படாத அல்லது அறிய வேண்டியதன் தேவையை உணராமல் செயல்படும் தலைவன், அறியாமலே இருப்பவனை விட கொடியவன்" என்பது அரசியல் தத்துவத்தின் அடிப்படை உண்மை.
அதிகாரம் மற்றும் உறவு என்பது, பொறுப்பேற்றல் - தன்னை நம்புவோர்க்கு நன்மை செய்ய வேண்டிய கடமை, தன் சார்ந்தோரின் சமூக, உள, உணர்வு மற்றம் சூழலிய பின்னனி ஆகியவற்றை அறிந்து செயல்படுவது, அவர்களோடு உடன் நிற்பது ஆகும்.
ஆனால் அலட்சியமான தலைவனும் நபரும் இந்த தார்மீக ஒப்பந்தத்தை மீறுகிறார்கள். திருக்குறள் வலியுறுத்துவது போல், "செங்கோல் ஆட்சி" என்பது அறிவு, நீதி, கருணை ஆகியவற்றின் சமநிலை. அறியாமை அல்லது அலட்சியம் இந்த சமநிலையை சீர்குலைக்கிறது, மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறது.
"சமூக ஒப்பந்தம்" கோட்பாட்டின்படி, மக்கள் தங்கள் அதிகாரத்தை தலைவனிடம் ஒப்படைக்கிறார்கள், அவன் அவர்களின் நலனுக்காக செயல்படுவான் என்ற நம்பிக்கையில். அறியாமையில் அல்லது அலட்சியத்தில் செயல்படும் தலைவன் இந்த ஒப்பந்தத்தை மீறுகிறான், தனது legitimacy-யை இழக்கிறான்.
உறவுகளிலும் இதே தத்துவம் பொருந்தும். "நான்-நீ" உறவு கோட்பாட்டின்படி, உண்மையான உறவு என்பது இரு நபர்களும் ஒருவரை ஒருவர் முழுமையாக அறிந்து, அக்கறையுடன் நடத்துவதில் தான் உள்ளது. அறியாமை என்பது மற்றவரை "பொருளாக" பார்ப்பது - அவரின் உணர்வுகள், தேவைகள், கனவுகள் ஆகியவற்றை புறக்கணிப்பது ஆகும்.
உறவில் அலட்சியம் என்பது - நமது பொறுப்பை மறுப்பது, மற்றவரின் சுதந்திரத்தை உணர்வுகளை நசுக்குவது ஆகும். உறவில் அலட்சியம் என்பது moral suicide - நாம் நம்மையே மனிதாபிமானமற்றவர்களாக மாற்றிக் கொண்டு மற்றவர்களை உணர்வு ரீதியாக உருக்குலைக்க செய்யும் மோசமன செயலாகும்.
அரிஸ்டாட்டில் இரண்டு வகை அறியாமைகளை வேறுபடுத்துகிறார்: "அறியாமை காரணமாக செய்யப்படும் தவறு" (mistake due to ignorance) மற்றும் "அறியாமையில் செய்யப்படும் தவறு" (mistake in ignorance). முதலாவது மன்னிக்கத்தக்கது - ஆனால் இரண்டாவது, குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கும்போது அறியாமையில் தொடர்வது, குற்றமானது.
அரசியல் தலைவரின் அறியாமை இன்னும் கடுமையானது - ஏனெனில் அவரது அறியாமை தனிநபரை மட்டும் பாதிக்காது, சமூகம் முழுவதையும் பாதிக்கிறது. உறவில் அறியாமையும் இதுபோலவே - ஒருவரின் அலட்சியம் மற்றொருவரின் வாழ்க்கையை மனதை சிதைக்கிறது.
அறம் என்பது வாழ்வின் அடித்தளம்; அலட்சியம் என்பது அறத்தின் மறுப்பு. அரசியல் தலைவரோ, உறவில் துணையோ, அலட்சியத்தின் மூலம் தனது தார்மீக அதிகாரத்தை இழக்கிறார்.
அறியாமையும் அலட்சியமும் குற்றங்கள் மட்டுமல்ல - அவை தார்மீக தோல்விகள். அரசியலிலோ, உறவுகளிலோ, அதிகாரம் என்பது கொடை அல்ல, பொறுப்பு. தெரிந்துகொள்ளும் கடமை, அக்கறை காட்டும் கடமை, செயல்படும் கடமை - இவை எல்லாம் அதிகாரத்தின் அன்பின் உறவின் அடிப்படை நிபந்தனைகள் மற்றும் கோட்பாடுகள். இவற்றை மீறுபவர் அல்லது செய்யத் தவறுபவர் தனது legitimacy-யை, தனது மனிதாபிமானத்தையே இழப்பதோடு மட்டுமில்லாமல் மன்னிக்க முடியாத குற்றவாளியாகவும் ஆகிறார்.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...